
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
7. மங்கையோடிருக்கும் யோகி
இறைவனுடைய அடியவர்கள் எல்லார்க்கும் இனியவர்களாக இருப்பார்கள்; இறைவனை எண்ணி எண்ணி உருகுவார்கள். நாமாக இறைவன் திருமுன் நின்றால் நமக்கு உருக்கம் உண்டாவதில்லை. ஆனால் அன்பர்கள் அங்கே உருகி அழுதால் அப்போது நமக்கு உருக்கம் உண்டாகிறது. இது மனித இயல்பு. வெயில் காயும் போது நாம் வீதியிலே நடக்கிறோம். அதன் வெம்மை நம்மைத் துன்புறுத்துவதில்லை. ஆனால் வெயிலினால் சூடு ஏறிய மணலில் நடந்தால் நம் கால் சுடுகிறது. நடக்க முடிவதில்லை. வெயிலினால் உண்டாகாத உறைப்பு அதை ஏற்ற மணலால் உண்டாகிறது. அவ்வாறே இறைவன் திருமுன் நாம் மட்டும் இருந்தால் உண்டாகாத உருக்கம் அடியவர்கள் உருகி நிற்கும் போது நமக்கும் உண்டாகிறது.
ஆகவே, நாம் இறைவன் முன் சென்று தனியே வணங்குவதை விட அடியார் குழுவோடு சென்று வணங்கினால் அவர்களுடைய சார்பினால் நம்மிடமும் பக்தி உணர்ச்சி எழும். ‘அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டால், இன்ப நிலை தானேவந்து எய்தும் பராபரமே” என்பர் தாயுமானவர்.
இறைவனைத் தொழுவதை விட அடியாரைத் தொழுவதனால் இந்த நலம் கிடைப்பது காரணமாக அடியார்களைப் பலர் நாடித் தொழுவார்கள். பழங்காலத்தில் திருஞான சம்பந்தரோடும் திருநாவுக்கரசரோடும் கூட்டம் கூட்டமாகத் தொண்டர்கள் சென்றார்கள் என்று பெரியபுராணத்தால் தெரிய வருகிறது. ஆகவே உண்மையான அடியார்களைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு பல நல்லவர்கள், இறைவன் அருளைப் பெற ஆசை கொண்டவர்கள், இருப்பார்கள்; அவர்களைத் தொழுவார்கள் காலில் விழுந்து தொழுது எழுவார்கள்.
குழுவினர் தொழுது எழும் அடியர்.
அத்தகைய அடியார்கள் தூய சிந்தையும் மொழியும் செயலும் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பாவங்கள் அண்டுவதில்லை. அப்படி ஏதேனும் பாவம் அவரைப் பற்றி அலைக்காமல் விடமாட்டேன் என்று வந்தாலும் அதை இறைவன் உடனே போக்கிவிடுவான்.
அடியர் மேல்வினை தழுவின கழுவுவர்.
மற்றவர்களைப் பாவங்கள் வந்து தாக்கி அலைத்துக் கொடுமைப்படுத்தும். அடியவர்களையோ, எப்படியாவது இவர்களைக் கெடுத்து விடவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டு மெல்ல வந்து தழுவுமாம். அப்படித் தழுவ வரும் போது அவற்றைப் போக்கிவிடுவான் ஆண்டவன். உடம்பிலே உள்ள உறுப்புக் குறை போலவும்,நோய் போலவும் பாவங்கள் பிற ரோடு ஒட்டி இணைந்து நிற்கின்றன. அடியவர்களை அவை நெருங்க அஞ்சுகின்றன. அப்படி நெருங்கினாலும் அலைப்பவை போலச் செல்லாமல் தழுவுபவை போல வந்து இணைய முயல்கின்றன. அவற்றை இறைவன் போக்கிவிடுவான்.
இவ்வாறு அடியாரை அணுகும் பாவங்களைக் கழுவும் பெருமான் எப்படி இருக்கிறான்? செக்கச் செவேலென்று பவள வண்ணம் பெற்று விளங்குகிறான்.
பவள மேனியர்.
தன் அடியாருக்கு வரும் இடர்ப்பாடுகளைப் போக்க அவன் என்றும் ஆயத்தனாக இருக்கிறான். அதற்கு அடையாளமாகத் தன் திருக்கரங்களில் படைக்கலன்களை வைத்திருக்கிறான்.
மழுவினர்.
அவனை எதிர்த்து நின்றவர்கள் யாரும் வென்றதில்லை, அசுரர்கள் மட்டும் அல்ல. கர்மமே முக்தியை அளிக்கும் என்று சிறிதும் பக்தியில்லாமல் இருந்த தாருகாவனத்து முனிவர்கள் தீய யாகம் செய்து பல பொருள்களை உண்டாக்கி இறைவனை அழிக்க ஏவினர். அவன் அவற்றால் எந்த இன்னலும் அடையவில்லை. அப்படி வந்தவற்றை யெல்லாம் எளிதில் திருக்கரத்தில் வாங்கி ஏந்திக்கொண்டான். தமக்குப் பூமாலை போட வரும்போது சிலர் அதைக் கழுத்தில் போடுவதற்கு முன்பே கையில் வாங்கிக் கொள்வார்கள். சங்கரா சாரிய சுவாமிகள் இவ்வாறு செய்வதைப் பார்த்திருக்கலாம். இறைவனோ தன்னை மோதவரும் பொருள்களை யெல்லாம் அவ்வாறு வாங்கி வைத்துக் கொண்டான். அப்படி வந்த வற்றில் ஒன்று மான்குட்டி. மான் குட்டியானாலும் மந்திர வலிமையினால் சிங்கக் குட்டி போல வீறி எழுந்து வந்தது. அதை இறைவன் ஏற்றுத் தன் திருக்கரத்தில் ஏந்திக் கொண்டான். இப்போது அது மானுக்குரிய இயல்போடு அங்கே இருக்கிறது. ஆண்டவனை அடைந்தவர்கள் கோப தாபம் நீங்கி இருப்பார்கள் என்பதைக் காட்டிக் கொண்டு அது விளங்குகிறது.
மான் மறிக் கையர்
சிவபெருமான் தவத்திருக் கோலத்தோடு இருப்பவன். அவனை யோகேசுவரன் என்று சொல்வார்கள். சடையும் தோலாடையும் அவனைத் தவக்கோலம் உடையவனாகக் காட்டுகின்றன. யோகியாக இருக்கும் அவன் துறவியா? அல்லது மணந்து கொண்டு பிறகு அந்த மனைவியைத் துறந்து வந்தவனா? அப்படிஇல்லை. இன்றும் அவன் ஒரு மங்கையோடு, உமாதேவியோடு இணைந்தே வாழ்கிறான்.
“மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை“
என்று பாடுவார் சுந்தரர். மங்கையோடு சேர்ந்திருந்தாலும் அவனுடைய யோகத்துக்குக் குறை உண்டாகவில்லை. அவனை அறிந்தவர்கள் அவனை யோகியாகவே போற்றுகிறார்கள்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சாரதா தேவியை மணந்து கொண்டார். திருமணத்தால் கணவன் மனைவியராக இருந்தாலும் அவர்களிடையே உடலுறவு இல்லை. மங்கையோடிருந்தே யோகு செய்த பெருமான் அவர். மனிதர்களிலேயே இப்படி இருப்பது சாத்தியமானால், இறைவன் இருப்பதில் என்ன ஆச்சரியம்? மங்கையரிடையே வாழ்ந்தாலும் தவவாழ்வு வாழமுடியும் என்பதை அவன் காட்டுகிறான். பதினாறாயிரம் கோபிமாரோடு வாழ்ந்தாலும் கண்ணன் பிரம்மசாரியாகவே இருந்தான்.
இப்படி உள்ள பெருமானைத் திருக்கடிலநதிக் கரையிலுள்ள திருவதிகை வீரட்டானத்தில் தரிசித்து அவனருளுக்கு ஆட்பட்டவர் அப்பர் சுவாமிகள். அந்தக் கெடில வாணனைப் பற்றி இப்படியெல்லாம் பாடுகிறார்.
குழுவினர் தொழுதுஎழும் அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர்; பவள மேனியர்;
மழுவினர்: மான்மறிக் கையர்; மங்கையைக்
கெழுவின யோகினர், கெடில வாணரே.
கெடிலநதிக் கரையில் திருவதிகை வீரட்டானத்தில் நித்திய வாசம் செய்யும் எம்பெருமான், நல்லவர்களின் கூட்டம் அடியில் விழுந்து வணங்கி எழும் பெருமை பெற்ற தம் அடியார்களின் மேல் வந்து தழுவினவைகளாகிய பாவங்களைப் போக்குபவர்; பவளம் போன்ற செவ்வண்ணத் திரு மேனியை உடையவர்; திருக்கரத்தில் மழுவை ஏந்தினவர்: மான்குட்டியை உடையவர்; மங்கையாகிய உமா தேவியைப் பொருந்தி நின்ற யோகத்தை உடையவர்.
[குழுவினர் – அடியார்களை வழிபட்டுப் பக்தியுணர்வைப் பெறலாம் என்று வரும் கூட்டத்தினர். தொழுது என்பது பெரும்பாலும் கையால் தொழுவதைக் குறித்தாலும், இங்கே. கீழ் விழுந்து அடி தொழுவதைக் குறித்தது; எழும் என்ற குறிப்பினால் இதனை உணரலாம். தழுவினவாகிய வினைகளை. கழுவுவர்- எளிதிற் போக்குவார். மான்மறி – மான்குட்டி. கெழுவின – பொருந்திய; இணைந்த கெடிலவாணர் என்று ஆற்றை மட்டும் சொன்னாலும் அந்த நதிக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டானப் பெருமானையே அது குறித்து நின்றது. ஏகாரம்: ஈற்றசை.]
நான்காந் திருமுறையில் பத்தாவது பதிகத்தில் வரும் ஐந்தாவது திருப்பாட்டு இது.



