
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
24. களைகண் காணேன்
மனிதன் வாழும் போது ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்றை அவாவுகிறான். பசிக்கும்போது உணவையும் உறக்கம் வரும்போது படுக்கையையும் தேடுகிறான். காம உணர்ச்சி வரும்போது பெண்ணையும் வறுமை வாட்டும் போது செல்வத்தையும் நோயால் நலிவுறும்போது மருந்தையும் தேடுகிறான். இவை அவ்வப்போது தேவையானவை.
வாழ்க்கையில் நெடுநாள் வைத்துப் பயன்படுத்தும் பொருள்களையும் அவன் நாடி முயன்று பெறுகிறான். வாழ்தற்கு வீடு வேண்டும்; அதைக் கட்டிக் கொள்கிறான். உணவுப் பொருள் பெற நிலம் வேண்டும்; அதை வாங்கி உழுகிறான். பிற்கால வாழ்க்கையில் வருந்தாமல் வாழ முன் கூட்டியே வைப்பு நிதியைச் சேமித்துக் கொள்கிறான்.
நெடுநாள் பயன்படும் பொருள்களைச் சேமிப்பதற்கு அதிக முயற்சி வேண்டும். பெருந்தொகையை ஈட்டி வைத்துக் கொண்டால் அது நெடுநாளைக்குப் பயன்படும். அதற்கும் பெருமுயற்சி செய்ய வேண்டும். இந்தப் பிறவியில் எய்ப்பு வரும்போது சிரமப்படாமல் வாழ ‘இன்ஷ்யூரன்ஸ்’ செய்து கொள்கிறோம்.
இந்த உடம்பு வாழும் வாழ்க்கை ஒரு காலவரையறைக்கு உட்பட்டது. இந்த உடம்பு போய்விட்டால், இப்போதுள்ள வாழ்க்கை முடிவடைகிறது.
ஆனால் உயிரின் வாழ்க்கை இதோடு முடிவடைவ தில்லை, உயிரின் வாழ்க்கை என்பது மிகப் பெரிய நெடுங்கதை. அதில் இந்தப் பிறப்பு ஓர் அத்தியாயம். இதற்கு முன் எத்தனை அத்தியாயங்கள் இருந்தனவோ, நாம் அறியோம். இனியும் : எத்தனை அத்தியாயங்கள் இருக்கும் என்ற அறிவும் நமக்கு இல்லை. எத்தனை பிறவி எடுத்தாலும் உடம்பும் வாழ்க்கை முறையும் மாறுமேயன்றி உயிர் மாறுவதில்லை. அது நித்தியமானது. ஒவ்வோர் உடம்பாகக் குடிபுகுந்து வாழ்ந்து மறுபடி வேறுடம்புக்குப் போகிறது.
இந்த உடம்பைப் பாதுகாப்பதற்கு நாம் பல பொருள்களைப் பற்றி நிற்கிறோம். உணவு, உடை, வீடு முதலிய பலவற்றிலே பற்றுக் கொண்டு அவற்றை நாடிச் செல்கிறோம்; முயன்று பெறுகிறோம். பல காலம் பயன்படும் பொருளாகிய பெருஞ் செல்வம், வீடு, நிலம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு வாழ்கிறோம். மாதம் மாதம் சம்பளம் வாங்குகிறவனை விடப் பெருந்தொகையைச் சேமித்துக் கொண்டவன் வாழ்வு சிறப்படைகிறது. அவ்வப்போது உழைத்துச் சம்பாதித்து உணவுப் பொருள்களைப் பெறுகிறவனை விட நிலமுள்ளவன் தனக்கு வேண்டிய உணவுப் பொருள்களைப் பெற்று நன்றாக வாழ்கிறான்.
நமக்குப் பயன்படும் பொருளை நாம் காப்பாற்றி வைத்துக் கொள்கிறோம், அதில் பற்று வைத்துப் பேணி வருகிறோம். உடம்பின் சுகத்துக்காகவும் அறம் செய்யவும் மனைவியிடம் பற்று வைக்கிறோம். அவ்வப்பொழுது சந்தித்துப் பழகும் மனிதர்களிடம் வைக்கும் பற்றை விட நெடுங்காலம் நம்முடன் வாழும் மனைவியிடமும் மைந்தரிடமும் நெருங்கிய உறவினரிடமும் பற்றுக்கொண்டு பழகுகிறோம். அறிவுடை யவன் நெடுங்காலம் பயன்படும் பொருள்களில் பற்று வைத் ப் பாதுகாப்பான்.
உடம்பு வாழும் வாழ்க்கையில் நெடுங்காலத்துக்குரிய பொருள்களை ஈட்டி அவற்றைப் பற்றிக் கொண்டு பேணுபவர்கள் அறிவாளிகள் என்றால், உயிர் வாழும் நெடுவாழ்க்கைக்குப் பயன்படும் பொருளைச் சேமித்துக் கொண்டவர்கள் பின்னும் பெரிய அறிவாளிகள், அத்தகைய நீண்ட பற்றைப் பற்றிக் கொள்வதனால் எந்தப் பிறவி எடுத்தாலும் பயன் உண்டாகும்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு“
என்று திருவள்ளுவர் சொல்கிறார். இறைவனைப் பற்றிக் கொள்ளும் பற்று உயிருக்கே நலம் தருவது; எந்தப் பிறவி எடுத்தாலும் உடன் வந்து துணையாக இருப்பது. அதனால் தான்,
”புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா நின்அடி
என்மனத்தே, வழுவா திருக்க வரம்தர வேண்டும்“
என்று திருநாவுக்கரசர் வேண்டுகிறார்.
மற்றொரு பாட்டில், ‘அவ்வாறு பற்றைப் பற்றிக் கொள்ளாமல் வீண் வாழ்க்கை வாழ்ந்தேன். என் முயற்சிகள் யாவும் பயனற்றனவாக உள்ளன. பாழுக்கே நீர் இறைத்தேன்?’ என்று சொல்கிறார். அந்தப் பாட்டை இப்போது பார்க்கலாம்.
நெடுங்காலம் பயன்படும் பொருள் இது என்று உணர்ந்து கொண்டவன் அதன்மேல் பற்று வைத்து அதைப் பெறவே முயல்வான். ஒரு கணமும் வீண் போகாமல் அதையே எண்ணி எப்படியேனும் அதை அடைந்துவிட வேண்டும் என்ற தீவிர உணர்வோடு இருப்பான். ‘அத்தகைய பெரும்பற்று ஏதும் இல்லாமல் நான் வாழ்க்கையை வீண் போக்கினேன்’ என்று தம்முடைய பழைய வாழ்க்கையை எண்ணி இரங்குகிறார் அப்பர் சுவாமிகள்.
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
பாழுக்கே நீர் இறைத்தேன்.
சமண சமயத்தில் புகுந்து பல காலம் இருந்து பிறகு மீண்டும் சைவரானவர் நாவுக்கரசர். இறைவனைப் பற்றிக் கொள்ளும் பற்று உறுதியாக ஆரம்பத்திலே இருந்தால் இந்த மாற்றம் வந்திராது, ‘அத்தகைய பற்று இல்லாமையால் என் முயற்சிகளையெல்லாம் பயனற்ற வகையில் போக்கினேன். விளையும் நிலத்துக்கு இறைத்த நீரும் நம் உழைப்பும் பயனைத் தரும். நிலத்தில் விளைச்சல் உண்டாகும். பாழ் நிலத்துக்கு இறைத்தால் நீரும் பாழாகும்; முயற்சியும் பாழாகும். அப்படித்தான் நான் வாழ்ந்தேன். கருவி கரணங்கள் நன்றாக அமைந்திருந்தாலும் அவற்றைக் கொண்டு இறைவன் மேல் பற்று வைத்துப் பக்தி செய்யாமல் போனேன்’ என்று விளக்கிக் கொள்ளும்படி பாடுகிறார்.
‘பல காலம் கழித்து இப்போது எனக்கு அறிவு வந்திருக்கிறது. நூல்களாலும் நல்லோர் உபதேசங்களாலும் திருத்தமான வாழ்வு வாழ்வதற்கு வழி இருக்கிறது. உத்தமர்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டும் தாமே ஆராய்ந்தும் இதுதான் நன்னெறி என்று உணர்ந்து வாழ்வார்கள். மத்தீமர்கள் தம் முயற்சி சிறிதாக இருந்தாலும் பிறர் நலம் பெறுவதைக் கண்டு அப்படியே தாமும் வாழ வேண்டும் என்று எண்ணி, அதற்குரிய வழிகளை நல்லாரை நாடிக் கேட்டு அதன்படி ஒழுகுவார்கள். அதமர்களோ நூலையும் ஓதாமல் நல்லோர் உரைகளையும் கேளாமல் வாழ்வார்கள். அவர்கள் துன்பப்படும் போதுதான், இதற்குரிய பரிகாரத்தைத் தேட வேண்டுமே என்று நினைப்பார்கள். கயவர்கள் துன்பத்தை அநுபவிக்கும்போதுதான் தம் கயமையை உணர்ந்து திருந்த. முயல்வார்கள். பட்டறியும் தன்மை உடையவர்கள் அவர்கள் அவர்களைப்போல் நானும் இருந்தேன். “பட்டறி, கெட்ட பத்தெட்டு இறுத்தறி” என்ற பழமொழியை என்னளவில் அநுபவத்தில் இப்போது உணர்கிறேன்.’
உற்றலால் கயவர் தேறார்
என்னும் கட்டுரையோடு ஒத்தேன்.
‘நான் எப்படி இருக்கிறேன்? சாக்கடையில் விழுந்து எழுந்தவனைப் போல அல்லவா இருக்கிறேன்? இதை நினைக்கும் போது எனக்கே நாணமாக இருக்கிறது. என்னால் என்ன செய்ய முடியும்?’
ஏற்றுளேன்? என்செய்கேன் யான்?
‘இத்தனை காலம் வாழ்ந்தும் மேலும் மேலும் பல துன்பங்களை அனுபவிக்கிறேனேயன்றி அறிய வேண்டியதை அறிந்து கொள்ளவில்லை. சிறிதளவேனும் ஞான நெறியைக் கற்கவில்லை. அஞ்ஞான நெறியிலே நின்று அவதிப்படுகிறேன்’.
இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்.
‘இத்தகைய நிலையினின்றும் நீங்க எண்ணினாலும் அதற்குரிய உறுதி என்னிடம் இல்லை. உண்மையை உணரா இருக்கும் எனக்கு வேறு யாரேனும் உறுதுணையாக இருந்து இந்தத் துன்பத்தினின்றும் மீட்டால் நான் உய்வேன். அப்படி என் துன்பத்தை நீக்கும் களைகண்ணாக யாரையும் நான் அறிந்து கொள்ளவில்லை. இப்போது அதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் தேவரீரிடம் முறையிட வந்திருக்கிறேன். முறையிடுகிறேன்.’
களைகண் காணேன்; கடவூர் வீரட்டனீரே!
‘பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டு அவன் அருளைப் பெற முயலும் வாழ்வே பயனுள்ள வாழ்வு. அல்லாத வாழ்வில் எந்த முயற்சி செய்தாலும் அவ்வளவும் பாழுக்கு நீர் இறைத்தாற் போல வீணாகிவிடும். அநுபவத்தில் உலகியற் பற்றினால் துன்பமே விளையும் என்று உணர்ந்த பிறகாவது இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும். அவனுடைய அருளால் ஞானம் அடையும் வரையில் நம் துன்பங்கள் போகா. எல்லாத் துன்பங்களும் நீக்குவதற்குரிய பெருந்துணைவனாக இருப்பவன் இறைவன்தான்’ என்ற கருத்துக்கள் இந்தத் திருப்பாட்டால் உணரக் கிடக்கின்றன.
பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
பாழுக்கே நீர் இறைத்தேன்;
உற்றலால் கயவர் தேறார்
என்னும்கட் டுரையோ டொத்தேன்;
எற்றுளேன்! என்செய் கேன்நான்!
இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்; களைகண் காணேன்;
கடவூர்வீ ரட்ட னீரே.
திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, பற்ற வேண்டிய பொருளைப் பற்றிக் கொள்ளும் பற்று இல்லாத வாழ்க்கை வாழ்ந்து, பாழ்நிலத்துக்கு நீர் இறைப்பாரைப் போலப் பயனற்ற செயல்களிலே ஈடுபட்டேன்; இழி குணம் உடையவர்கள் அநுபவத்தில் துன்புற்றலன்றித் தெளிவு பெற மாட்டார்கள் என்று பெரியோர் சொல்லும் நல்லுரையோடு பொருத்திப் பார்க்கும்படி உள்ளேன். நான் எப்படி இருக்கிறேன்! என்ன செய்வேன்! துன்பங்களால் நலிவுற்றுச் சிறிதளவும் மெய்யறிவைத் தெரிந்து கொள்ளவில்லையே! என் துன்பத்தைத் தீர்க்கும் துணையைக் காணவில்லை. (தேவரீரை வந்து அடைந்தேன்.)
[பற்று என்றது உலகப்பற்றைக் குறியாமல் பேரின்ப வாழ்க்கைக்குப் பயன்படும் பற்றைக் குறித்தது. அது, ‘நின் சரணல்லால் சரண் இல்லை’ என்று இறைவனைப் பற்றிக் கொண்டு நிற்பது.
‘பாழுக்கே நீர் இறைத்தல்’ என்பது பழமொழி. முயற்சி யெல்லாம் பயனின்றி ஒழியும்படி வாழ்ந்தேன் என்பது கருத்து. ‘பட்டாலன்றிக் கயவர்கள் தெளிவு பெற மாட்டார்கள்’ என்பது பழமொழியின் பொருள். ‘பட்டால் தெரியும் பார்ப்பானுக்கு’ என்பது போன்ற பழமொழி அது. எற்று – எப்படி; எதற்காக என்று பொருள் கொள்ளலும் ஆம். களைகண் – துன்பத்தை நீக்கும் துணை.]
நான்காம் திருமுறையில் 31-ஆம் பதிகத்தில் வரும் 8-ஆவது பாட்டு இது.



