அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

23. கண்ணிடை மணியர்

விரிந்த உலகத்தில் மனிதர்கள் உலாவுகிறார்கள். அவர்கள் வாழ்கின்ற வீடுகள் பல விதமாக இருக்கின்றன. சிலர் குடிசைகளில் வாழ்கிறார்கள். சிலர் சற்றே பெரிய கூரை வீடுகளில் வாழ்கிறார்கள். ஓட்டுவில்லை வீட்டில் வாழ்வாரும், மாடி வீட்டில் வாழ்வாரும், பங்களாவில் வாழ்வாரும் இருக்கிறார்கள். அவரவர் செல்வ வளத்துக்கு ஏற்றபடி அவரவர் தமக்குரிய இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த இடங்களெல்லாம் உடம்பு வாழும் இல்லங்கள்.

ஆனால் உயிரே ஒரு குடிசையில்தான் வாழ்கிறது. எவ்வளவு பெரிய வள வாழ்வுடையவரானாலும், பெரிய திருமாளிகையில் வாழ்பவரானாலும் அவருடைய உயிர் என்னவோ ஒரு குடிசையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடிசையின் சுவர்கள் பார்ப்பதற்குக் கொஞ்சம் அழகாக இருக்கலாம். ஆனால் உள்ளே எல்லாம் ஊழல், பிரித்துப் பார்த்தால் அழுக்கும் மாமிசமும் இரத்தமும் நரம்புகளுமே இருக்கும். அந்தக் குடிசைக்குத்தான் உடம்பு என்று பெயர். உடம்புக் குள்ளே உள்ளவற்றைச் சற்றே நினைத்துப் பாருங்கள். வாந்தி யெடுக்கத்தான் வரும்.

இந்த உடம்பு தோலால் போர்த்திருக்கிறது. அது போதாதென்று அழகான ஆடைகளையும் அணிகலன்களையும் புனைந்து இதற்கு அழகு செய்கிறோம்.

கொஞ்சம் அழகாக இருக்கிறவர்கள் நிலைக் கண்ணாடியில் தம் உருவத்தைப் பார்த்துத் தாமே மகிழ்ந்து போவார்கள். அழகிய பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. அவர்களுக்காகவே கண்ணாடி படைக்கப்பட்டிருக்கிறது போலத் தோன்றுகிறது. அடிக்கடி கண்ணாடியில் தம் முகத்தைப் பார்த்துக் கொண்டு வண்ணப் பொடி பூசித் திலகம் வைத்தும் கொண்டு மகிழ்கிறார்கள். எவ்வளவு அலங்காரம் செய்தாலும் இந்த உடம்பு ஆபாசம் நிறைந்த கொட்டில்தான்.

ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலை
ஊன்பொதிந்த
காற்றுத் துருத்தியைச் சோறிடும்
தோற்பையை

என்று இதை வருணிக்கிறார் பட்டினத்தார்.

இந்தக் குடிசையைப் பெரிதாக எண்ணி மதித்து, உலக இன்பங்களைத் துய்த்து மகிழ்ச்சி அடைகிறோம். உடம்பிலுள்ள பஞ்சேந்திரியங்களுக்கும் இரை தேடுவதையே நம் தொழிலாகக் கொண்டு வாழ்வு முழுவதும் கழிக்கிறோம். இந்த உடம்பிலே அதிக மோகம் கொண்டு நிற்கிறோம்.

மண்ணிடைக் குரம்பை தன்னை
மதித்து நீர் மையல் எய்தில்.

இவ்வாறு உடம்பின் மேல் பற்று வைத்து மயங்கி வாழ்கிறோம். இந்த உடம்பு எப்போதும் நிலையாக இருக்குமோ? நம் கண்முன்னாலேயே இது தளர்ச்சி அடைகிறது. தசைகள் சுருங்குகின்றன. மடிப்புகள் விழுகின்றன. மயிர் நரைத்துப் போகிறது. நரை, திரை, மூப்பு என்பவை இந்த உடம்பு வளர்ந்து பிறகு தளரும் போது உண்டாகின்றவை. ஒரு நாள் இந்த உடம்பை விட்டு உயிர் பிரிந்து விடுகிறது.

உயிர் போகும்போது யமன் வந்து இதைக் கொண்டு போவான், “நான் அருமையாகப் பாதுகாத்து வைத்திருக்கிற உடம்பு இது; இன்னும் சிறிது காலம் இதில் வாழ்கிறேன். பிறகு நீ வரலாம்” என்றால் அவன் போவானோ? “கோடி பொன் கொடுக்கிறேன்; சிறிது நேரம் பொறுத்துக்கொள். நான் இறந்து போனால் என் சொத்தைப் பற்றி என் மக்களும் பிறரும் சண்டை போட்டுக்கொள்வார்கள். அவ்வாறு செய்யாமல் அவர்களுக்கு ஏற்ற பங்குகள் இன்னவை என்று சொல்லிவிட்டு வருகிறேன். அதுவரையில் சிறிது நேரம் பொறுத்திரு” என்றால் அவன் இருப்பானா? நரம் உயிர் விடும் காலம் இன்னதென்று நமக்குத் தெரியாது. அவனிடந்தான் அந்தக் கணக்கு இருக்கிறது. அந்தக் காலக் கணக்கில் கண நேரமும் அவன் தவறமாட்டான். பலத்தாலோ பணத்தாலோ அறிவாலோ பெரியவர் என்று தாட்சணியம் பார்க்கமாட்டான். ”உனக்குக் கோடி பொன் தருகிறேன். சற்றுப் பொறுத்திரு” என்றால் பொறுத்திருக்கமாட்டான்.

கோடி பொன் அளிப்பன்; இன்றே
கோடிர்: ஓர் மாத்தி ரைக்குள்
ஊடிய கிளைக்குஓர் வார்த்தை
உரைத்து அடை குவன்என் றாலும்
தேடிய கால தூதர்
சிமிழ்த்தல் விட்டு அடைவு ரேசொல்”

என்பது குசேலோபாக்கியானம்.

வானத்தில் யமலோகத்தில் வாழும் எமன், அவரவர்க்கு அடைத்த வாழ்நாள் முடிந்ததை அறிந்து தன் கடமையை ஆற்ற வருவான். எதற்கும் அஞ்சாமல் எதற்கும் தடைப்படாமல் தன் கடமையை ஆற்றுவதால் அவனுக்குத் தருமராசன் என்று பெயர் வந்தது, அவன் வந்து நம் உயிரை எடுத்துச் செல்ல விரும்பினால் அவனை யாராலும் விலக்க முடியாது

“மாற்றரும் கூற்றம்” என்று தொல்காப்பியம் சொல்கிறது.

விண்ணிடைத் தரும ராசன்
வேண்டினால் விலக்குவார் ஆர்?

இப்படி யமனால் உயிர் கொண்டு போகப் பெற்றால் அது யமலோகத்தில் நின்று விடுவதன்று. சுவர்க்க நரகங்களில் இன்பதுன்பங்களை அநுபவித்து மீட்டும் இந்த உலகத்தில் பிறக்கத்தான் வேண்டும். இப்படியே பிறப்பும் இறப்பும் அலை யலையாகத் தொடர்ந்து கொண்டே வரும்.

இப்படி உள்ள அவல நிலையை மாற்றுவது எப்படி? காலன் கைப்படாமல், இறப்பும் பிறப்பும் அற்ற இன்ப வாழ்வைப் பெறுவது எப்படி?

இறைவனுடைய திருவருள் கிடைக்குமானால் காலனுக்கு அஞ்ச வேண்டுவதில்லை. அவன் காலகாலன். அவன் அருளைப் பெறவேண்டுமானால், இந்தத் தேகத்தையும் உலக வாழ்வையும் பெரியனவாக எண்ணி மையல் கொள்ளாமல் அவனிடம் அன்பு வைத்து வழிபட வேண்டும்.

பக்தர்கள் அப்படிச் செய்கிறார்கள். பக்திச் சுவையையுடைய பாடல்களைப் பண்ணோடு பாடுகிறார்கள். பக்தி மேலீட்டால் ஆடுகிறார்கள். ‘பரமானந்தம் மேற்கொள விம்மி விம்மி’ நடிக்கிறார்கள். அத்தகைய பக்தர்களை யமவாதனையினின்றும் காப்பாற்றுவான் இறைவன்.

நம் கண்ணில் மணி இருக்கிறது. அதனால்தான் பார்க் கிறோம். உலகத்தைப் பார்த்தும் நம் உடம்பைப் பார்த்தும் மகிழ்கிறோம். அந்த மணியே இறைவனாக இருந்தால் எப்படி இருக்கும்? எங்கும் இறைவனையே பார்க்கலாம். நீலக் கண்ணாடியை அணிவர்களுக்கு எல்லாம் நீலமயமாகத் தோன்றுகிறது. கண்ணிலுள்ள மணியே இறைவன் மயமாக இருந்தால் பார்க்கும் பொருள்களில் எல்லாம் அவனுடைய தோற்றமே தோன்றும். பக்தர்களுக்குக் கண்ணினுள் மணியாக நின்று பிரபஞ்சம் முழுதும் தன் மயமாக இருப்பதை அவன் காட்டுவான்.

பண்ணிசைச் சுவைகள் பாடி
ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண்ணிடை மணியர் போலும்
கடவூர் வீரட்டனாரே!

தமக்கு அருள் தந்து ஆட்கொண்ட எம்பெருமானை இவ்வாறு பாடுகிறார் அப்பர். திருக்கடவூர், காலனை இறைவன் சங்காரம் செய்ததை நினைப்பூட்டும் தலம்: அட்ட வீரட்டங்களுள் அது ஒன்று, இறைவன் செய்த வீரச் செயல்களுள் ஒன்றாகிய கால சங்கார க்ஷேத்திரம் அது என்று புராணம் சொல்கிறது.

அந்தத் தலத்தை அடைந்தவுடன் யமனுடைய நினைவு அப்பர் சுவாமிகளுக்கு வருகிறது. அவனுடைய கொடுமையினின்றும் நீங்கி இன்ப வாழ்வடைவதற்கு இறைவரையே கண்ணினுள் மணியாகக் கொண்டு வாழ்கிறார்கள் பக்தர்கள் என்ற எண்ணம் தோன்றியது. அப்பரே அப்படி வாழ்கிறவர். அதைப் படர்க்கையிலே வைத்துச் சொல்கிறார்.

மண்ணிடைக் குரம்பை தன்னை
மதித்துநீர் மையல் எய்தில்
விண்ணிடைத் தரும ராசன்
வேண்டினால் விலக்கு வார்ஆர்?
பண்ணிடைச் சுவைகள் பாடி
ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண்ணிடை மணியர் போலும்
கடவூர்வீ ரட்ட னாரே.

உலக மக்களே, இந்த உலகத்தில் நாம் வாழும் குடிசை போன்ற உடம்பைப் பெரிதாக மதித்து நீங்கள் இதன்பால் மயக்கம் அடைந்து நின்றால், வானிலிருந்து யமராசன் வந்து நம் உயிரை எடுத்துச் செல்ல விரும்பினால் அவனை விலக்கும் ஆற்றல் உடையவர்கள் யார்? (ஆகவே அவனுடைய கொடுமையை நீக்க வேண்டில் பக்தர்களாக வேண்டும். பக்தர்கள் எப்படி இருப்பார்கள்? பல வகையான பண்களோடு பல வகைச் சுவைகளையுடைய இறைவர் புகழ் சொல்லும் பாடல்களைப் பாடி, தம்மை மறந்து ஆடும் பக்தர்களுக்கு அந்தப் பெருமான் என்றும் கண்ணுக்குள் இருக்கும் மணியாக இருந்து எங்கும் தம் உருவையே காட்டுவார், திருக்கடவூர் வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கிறவர். (ஆகவே அவரை வழிபடுங்கள்.)

மக்களுக்கு அறிவுரை சொல்லும் முறையில் இந்தப் பாசுரத்தைப் பாடுகிறார் அப்பர்.

[மண் – நிலவுலகம். குரம்பை என்றது குடிசை போன்ற உடம்பை; உவம ஆகுபெயர்; “பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை” என்று ஒளவையார் பாடுவார். மதித்து-உயர்ந்த பண்டமாக வைத்து எண்ணி, மையல் – மோகத்தால் உண்டான மயக்கம். விண்ணிடை – வானத்திலுள்ள யமலோகத்தில் வாழும். வேண்டினால்- உயிரை உடம்பினின்றும் பிரித்துக் கொண்டு போக விரும்பினால். ஆர்: யாரும் இல்லை என்ற எதிர்மறைப் பொருள் தரும் வினா.

பண் – இராகங்கள். பண்ணிடை – பண்ணுக்கு இடமாகிய சுவைகள் – சுவையுள்ள பாடல்கள்; ஆகுபெயர், பாடுவதும் பிறகு பக்தி மிகுதியினால் ஆடுவதும் அன்பர்களுக்கு இயல்பு.

படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குறப்
பாடியா டிக்குதித்து”

என்று இந்த இயல்பைத் தாயுமானவர் சொல்கிறார்.

கண்ணிடை மணி – கண்ணுக்குள் பார்ப்பதற்குரியதாக அமைந்த மணி. இறைவரே மணியாக ஆகிவிடுவாராம். அப்போது எங்கும் அவரையே காணும் நிலை வரும். போலும்: அசை. வீரட்டனார் கண்ணிடை மணியர் என்று கூட்டுக.]

‘அவ்வாறு நீங்களும் பண்ணினால் தருமராசனுடைய கொடுமைக்கு ஆளாக வேண்டாம்’ என்பது குறிப்பு.

நான்காம் திருமுறையில் 31-ஆம் பதிகத்தில் உள்ள இரண்டாவது பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *