அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

13. என்ன குறை உடையேன்?

அன்பர்கள் இறைவனை முக்கரணங்களினாலும் வழிபடுவார்கள்; அவனுடைய திருவடியையே தம்முடைய லட்சிய மாகக் கொண்டு வாழ்வார்கள். தாமரை மலரைப் போன்ற அவனுடைய திருவடிகளைத் தொழுவார்கள்; இது உடம்பின் செயல். அவனுடைய புகழைப் பலபடியாகப் பாடி இன்புறு வார்கள்; இது வாக்கின் செயல்.

பூங்கழல் தொழுதும் பரவியும்.

அவனுடைய திருவடியை எப்போதும் அவர்கள் தம் மனத்தில் பதித்துக் கொண்டிருப்பார்கள். அந்த மனத்தில் வேறு எண்ணம் ஏதும் இராது. புண்ணியமெல்லாம் திரண்ட உருவமாக உள்ளவனும் எல்லாவற்றிலும் புனிதமான வடிவம் உள்ளவனும் ஆகிய அவனை உள்ளத்தில் வைப்பதை விடப் புண்ணியச் செயல் வேறில்லை. அந்தப் புண்ணியனை உள்ளத்தில் வைத்தால் பாவமே அங்கே சாராது. புனிதம் மிக்க அவனைத் தியானிக்கும் உள்ளத்தில் மாசே தலை காட்டாது. கங்கை பாயும் இடத்தில் அழுக்குச் சேராதது போல அவனை எண்ணியிருக்கும் மனத்தில் புனிதமற்ற எந்த நினைவும் எழாது.

அவனுடைய பொலிவு பெற்ற திருவடி தம் உள்ளத்தே இருக்கப் பெற்றவர், அப்பர் சுவாமிகள். அதனினும் பெரிய பேறு வேறு என்ன இருக்கிறது?

புண்ணியா, புனிதா, உன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்.

தங்கக் குவியலைத் தம் அகத்தில் வைத்துள்ளவர்களுக்கு வறுமையால் துன்பம் வராது, வாழ்க்கைக்கு வேண்டிய வளங்களையெல்லாம் அவர்கள் பெறலாம். பிறர் வீடு, உடை, அணிகலன், உணவு முதலியவற்றால் குறையுடையவர் களானாலும், அவர்களுக்கு அத்தகைய குறை யாதும் இராது. “பொருளி லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு” என்பது குறள். பொருள் இருந்தால் உலக வாழ்க்கை வளம் பெற்று விளங்கும்.

பரம்பொருளையே தம் அகத்தில் வைத்தவர்களுக்கு எந்தப் பெருங்குறையும் இராது. பணம் படைத்தவர்கள் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தாலும் இறுதியில் எல்லாவற்றையும் விட்டு விட்டு இறந்து போகத்தான் வேண்டும். பணம் மரணத்தைப் போக்க வல்லதன்று. பொருளுடையார்க்குப் பிறப்பு இறப்பு என்னும் துன்பங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா?

ஆனால் பரம்பொருளை அகத்தே வைத்தவர்களுக்கு இந்த உலக வாழ்விலே துன்பம் இராதது மட்டும் அன்று; இந்தப் பிறவிக்குப் பின் மீண்டும் பிறந்து இறந்து திரியும் துன்பமே இல்லாமல் போய்விடும். அவர்களுக்கு எந்தக் குறையும் வராது.

இம்மை யேதரும் சோறும் கூறையும்;
ஏத்த லாம்; இடர் கெடலுமாம்;
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே

என்று சுந்தரர் பாடுவார். ஆகவே, இறைவனுடைய பொற் கழலாகிய வைப்பு நிதியை அகத்திலே வைத்தவர்களுக்கு ஒரு குறையும் இராது.

உன் பொற் கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்;
என்ன குறை உடையேன்?

என்று பெருமிதத்தோடு பாடுகிறார், அப்பர் சுவாமிகள். குறைவிலா நிறைவாகிய இறைவன் திருவடியை நிதியம் போல உள்ளத்தே ஈட்டி வைத்தவர் அவர். ஆகவே குறையேதும் இல்லாத நிறைவையுடைய வாழ்வை அவர் பெற்றார்.

திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைத் தரிசித்த பொழுது அவருக்கு இந்தப் பெருமித உணர்வு தோன்றியது. இறைவன் எழுந்தருளியிருப்பதனால் திருவாரூர் வளம் பெற்று விளங்குகிறது. அப்பர் காலத்தில் இருந்த திருவாரூர் அப்படி இருந்தது.

அந்த ஊருக்குச் சென்றவர்கள் இனிய கனிகளை அருந்தி இன்புறலாம்; பசியாறலாம். எங்கே பார்த்தாலும் தோப்புகளும் பூம்பொழில்களும் நிறைந்திருக்கின்றன. மரங்களுக்குள் மிக ஓங்கி வளர்ந்திருக்கும் தென்ன மரங்கள் அந்த ஊரில் நிலவளத்துக்கு அடையாளமாக இருக்கின்றன.

ஓங்கு தெங்கு.

தன் மட்டைகளை விரித்துக் கொண்டு காண்பதற்கு அழகாகக் கமுக மரங்கள் நிற்கின்றன…

இலையார் கமுகு.

அங்கங்கே வாழைத் தோட்டங்கள் உள்ளன. இன்னும் அவற்றின் குலைகள் முதிர்ச்சி பெறவில்லை. ஆகையால் அவை வெட்டப்படாமல் நிற்கின்றன. அவை குலை முதிர்ந்தவை அல்ல; இளவாழை,

இள வாழை.

தெங்கும் கமுகும் வாழையும் ஒருபால் வளர, பின்னும் ஒரு பால் மாமரங்கள் தழைத்துக் கனியீன்று நிற்கின்றன. ஒருபால் மாதுள மரங்கள் கொத்துக் கொத்தாகப் பழங்களை ஈன்று விளங்குகின்றன. இந்த மரங்கள் ஒருவர் முயன்று பறிக்க வேண்டாதபடி பல பழங்களைத் தாமே சிதறுகின்றன. முயற்சி இல்லாமலே எளிதில் பெற்று உண்ணும் வகையில் அவை உள்ளன. இறைவன் திருவருள் மலிந்த இடத்தில் வருத்த மில்லாமலே எல்லாப் பயன்களும் எளிதில் கிடைக்கும் என்பதை அவை காட்டிக்கொண்டு நிற்கின்றன.

மாவொடு மாதுளம் பல
தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே!

திருவாரூரின் நிலவளத்தை இந்தக் காட்சி காட்டுகின்றது. அந்த ஊரில் வாழ்வாருக்குக் கனிகளால் குறைவில்லை. அங்குள்ள இறைவனை நினைப்பாருக்கு எதனாலும் குறைவில்லை.

பூங்கழல் தொழுதும் பரவியும்
புண்ணியா புனிதாஉன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்;
என்ன குறைஉடையேன்?
ஓங்கு தெங்கு இலை யார்கமுகுஇள
வாழை மாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறும்
திருவாரூர் அம்மானே!

உயர்ந்து ஓங்கி வளரும் தென்னையும், இலைகள் நிரம்பிய கமுக மரங்களும், இளவாழை மரங்களும், மாமரங்களும், மாதுள மரங்களும் பல வேறு சுவையுள்ள இனிய கனிகளை உதிர்க்கும் திருவாரூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, நின்னுடைய தாமரைமலர் போன்ற திருவடியை உடம்பால் வணங்கியும் வாயால் புகழ்ந்தும் என் உள்ளமாகிய இவ்விடத்தில் இருக்கும் பேறு பெற்றேன்; இனி யான் என்ன குறையை உடையேன்?

[பூங்கழல் – கழலை உடைய தாமரை மலரைப் போன்ற திருவடி; கழல்: ஆகுபெயர்; பூவேலை செய்யப் பெற்ற கழலை அணிந்த திருவடி எனலும் ஆம்.

தொழுவது கையின் செயலானாலும் இங்கே பொதுவாக உடம்பால் வணங்குவதைக் குறித்தது; உபலட்சணத்தால் வணங்குதலையும் கொள்ளலாம். பரவுதல்- புகழுதல். இது வாக் கின் செயல். புண்ணியன்-அடியவர்கள் செய்த புண்ணியமே வடிவாக உள்ளவன்; புண்ணிய மூர்த்தி என்பது வழக்கு – புனிதா-தூய்மையான பொருள்கள் யாவற்றினும் தூயவனே; தன்னைச் சார்ந்த பொருள்களுக்கெல்லாம் புனிதத்தை அருளும். தூயவன் அவன், பொற்கழல் – பொன்னாலாகிய கழலை அணிந்த திருவடி; பொலிவு பெற்ற திருவடி என்பதும் ஆம்; அப்போது அது அடையடுத்த ஆகுபெயர். ஈங்கு என்றது மனத்தை; இது நெஞ்சறி சுட்டு. இறைவன் உள்ளத்தில் இருப்பதைவிடப் பெரிய பேறு இன்மையின், ‘இருக்கப் பெற்றேன்’ என்றார். என்ன-எத்தகைய, மாவொடு: ஒடு,எண் ஒடு,அதனைத் தெங்கு முதலியவற்றோடும் கூட்டுக. பல தீங்கனி -பல இனிய கனிகளை; பலா என்பது குறுகி நின்றதெனக் கொண்டு பலாமரத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்; சிதறும் – உதிரச் செய்யும்.அம்மான்- தலைவன், இறைவன்.

இறைவன் வாழும் திருவாரூரில் வளம் நிரம்பியிருக்கிறது. அவன் வாழும் உள்ளத்திலும் குறைவிலா நிறைவு இருக்கிறது. ஏ:விளி.]

நான்காம் திருமுறையில் 20-ஆம் திருப்பகத்தில் உள்ள நாலாவது பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *