
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
14. அனைத்திலும் இலயம்
திருநாவுக்கரசர் தில்லைக்குச் சென்றார். அங்கே திருச் சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானைத் தரிசித்தார்.”நீ இங்கே எதற்கு வந்தாய்?” என்று இறைவன் கேட்பது போலத் தோன்றியது. அவனுடைய திருக்கரத்தின் குறிப்பு இதுபோலும் என்று அவர் எண்ணினார். அந்த வினாவுக்கு விடை சொல்வது போல ஒரு திருப்பாடலைச் சொல்கிறார்.
‘இறைவனே, என்னிடம் ஒருவர் இருக்கிறார். அவர் என்னோடு ஒட்டி வாழ்கிறார். தாம் போகும் வழியெல்லாம் என்னை இழுத்தடிக்கிறார். நல்ல வழிகளில் ஈர்த்துச் சென்றால் எனக்குத் துன்பம் இல்லை. அவரோ மாட்சியில்லாத புன்னெறிகளில் திகைப்படையும்படி என்னை இழுத்துச் சென்று, தம் விரும்பம் கைகூடியவரைப் போல முழக்கம் செய்கிறார். ‘நீ என்னை மடக்கிவிட்டுப் போகவா பார்க்கிறாய்? உன்னை அப்படிப் போக விடுவேனா? மேட்டிலும் பள்ளத்திலும், காட்டிலும் புதரிலும், அழுக்கான இடங்களிலும், நாற்றமுள்ள பிரதேசங்களிலும் உன்னை இழுத்துச் சென்று கதற அடிக்கிறேன், பார்’ என்ற நினைவோடு செயல் செய்வாரைப் போல அவர் என்னை அலைக்கழிக்கிறார். நான் அவருடைய கைக்குள் அகப்பட்டுத் தடுமாறுகிறேன். நான் என்செய்வேன்!”
மனத்தினார் திகைத்து நாளும்
மாண்பு அலா நெறிகள் மேலே
கனைப்பரால்; என்செய்கேனோ?
“இந்தத் தொல்லையினின்றும் நீங்கி உய்வேனோ என்ற ஏக்கம் எனக்கு உண்டாகிவிட்டது. உலகிலுள்ள யாரிடமாவது சார்ந்து எனக்குப் பகையாக நிற்கும் அவரை அடக்கியாளலாம் என்று எண்ணி யார் யாரையோ நாடிப் போனேன். அப்படிப் போன இடங்களிலெல்லாம் அவர்களும் பேயைப் போல அந்த மனத்தினார் பற்றி அலைக்க அவரோடு சேர்ந்து ஆட்டம் போடுகிறார்கள். பைத்தியம் பிடித்தவன் வேறொரு பைத்தியக்காரனோடு சேர்ந்தால் என்ன ஆகும்? இரண்டு பைத்தியங்களும் சேர்ந்து கொண்டு பின்னும் ஆட்டம் போடும்; அமளி துமளிப்படுத்தும். அப்போதுதான் ஓர் உண்மையை அறிந்து கொண்டேன். நம்மைப் போலவே மக்கள் யாவரும் மனத்தினாருடைய ஆட்சியிலேதான் அடங்கி உழல்கிறார்கள் என்பது தெரிந்தது. அப்படியானால் எங்கே சென்றால் இந்த மனம் என்னும் பேயை அடக்கி வழிப்படுத்த முடியும் என்று யோசித்துப் பார்த்தேன். அந்த யோசனையைச் செய்வதற்காவது மனத்தினார் இடம் கொடுத்தாரே; அதைப் போற்ற வேண்டும்.”
“பிறகு இங்கே எப்படி வந்தாய்?” என்று இறைவன் கேட்பது போன்ற தோற்றம் உண்டாயிற்று.
‘உன்னைப் பற்றிக் கேள்வியுற்றேன். எவ்வளவு கொடுமையுடையவனாக இருந்தாலும் உன்னை அடைந்தால் நன்மை உண்டாகும் என்று தெரிந்து கொண்டேன்.’
“எவ்வாறு தெரிந்து கொண்டாய்?”
“தேவர்கள் அமுது பெறப் பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விடம் தோன்றியதாம். அப்போது எல்லோரும் மயங்கி விழுந்தார்கள். உன்னை எண்ணி அரற்றினார்களாம். அவர்களிடம் கருணை பூண்டு அந்த நஞ்சத்தை வாங்கி உண்டு உன் நெஞ்சிலே நிறுத்திக் கொண்டாயாம். இப்போது அந்த நஞ்சு யாரும் காண உன் கழுத்தில் இருந்து ஒளிர்கிறது. அந்த நீல கண்டத்தை அன்பர்கள் வாழ்த்திப் புகழ்கிறார்கள். ‘அக்கறை, மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே’ என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். அந்த நஞ்சத்தைப் போன்றுள்ள என் நெஞ்சத்தை உன்னை அடைந்து சமர்ப்பித்து விட்டால் அதுவும் தன் தீய இயல்பு மாறி நல்லதாகி விடும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.”
“அதன் பிறகு என்ன செய்தாய்?”
“நஞ்சணி கண்டத்தான் எங்கே இருக்கிறான் என்று ஆராய்ந்தேன். நல்லவர் பலரைக் கேட்டேன். உன் விலாசம் தெரிந்தது. நீ தில்லையிலே எழுந்தருளியிருக்கிறாய் என்று அறிந்து கொண்டேன். இந்தத் தலத்துக்குள் நுழையும் பேரதே இதன் பெருமையை உணர முடிந்தது.”
“எப்படி?”
“இந்த எல்லைக்குள் அடியெடுத்து வைத்தேன். என் காதில் இனிய வேத கானம் கேட்டது. சிறிது நேரம் நின்று கவனித்தேன். சிறிதளவு போதும் அந்த வேத ஒலி நிற்காமல் முழங்கியது. துன்பத்தாலும் நோயாலும் வருந்துவாருடைய கூக்குரலையும், உண்மையல்லாத பொருள்களைப் பற்றிப் பேசும் ஆரவாரப் பேச்சையும், அகந்தையின் விளைவான பேச்சையுமே கேட்ட என் செவிகளுக்கு அந்த வேத ஒலி நோய்க்கு மருந்துபோல உதவியது. மற்றக் குரல்களையெல்லாம் மறந்து அந்த வேத ஒலியிலே ஈடுபட்டேன். ஆ ! இறைவன் சீர் பாடும் இசையல்லவா இது என்றுணர்ந்து மகிழ்ந்தேன். நல்ல இடத்துக்கு வந்துவிட்டோம் என்ற ஆறுதல் பிறந்தது.”
“அங்கேயே நின்று வேத ஒலியைக் கேட்டுக் கொண்டே இருந்தாயோ?”
“ஊரின் புறத்திலே வந்தபோதே இந்த இனிய கானம் கேட்கிறதே! ‘நம்மை அலைத்துக் குலைத்த திருவாளர் மனத்தினார் இப்போது தம்முடைய சேஷ்டைகளைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார் போலத் தோன்றுகிறதே!’ என்று உணர்ந்து மகிழ்ந்தேன். ‘எல்லையை அணுகும்போதே இந்த நன்மை கிடைக்குமானால் தில்லையுட் புகுந்தால் எத்துணை இன்பம் கிடைக்கும்! ஆகவே இதுவே நாம் புகல் புகவேண்டிய இடம்’ என்று தெளிந்தேன். தில்லைக்குள் புகுந்தேன். நின் நடன அரங்காகிய திருச்சிற்றம்பலத்துக்கு வந்து தரிசித்தேன்.”
“தரிசித்த பிறகு மீண்டும் புறப்பட்டு உன் இடத்துக்குச் செல்லலாமே!”
“ருசிகண்ட பூனை உறியை எட்டி எட்டித் தாவும் என்பார்கள். மனத்தினார் அடங்குவாரா என்று ஏங்கிக் கிடந்த எனக்கு அவர் தம் குறும்புகளை அடக்கிக் கொள்வதை உணர்ந்தபோது, இதை விட்டுப் போக எண்ணம் தோன்றுமா? இங்கே வந்தபிறகு உண்டான அமைதியை இழந்து விட முடியுமா? அது மட்டும் அன்று. பெரியவர்கள் ஒன்று சொன்னார்கள், உன்னுடைய ஆடலின் பெருமையைச் சொன்னார்கள். நீ எப்போதும் தாள அமைதியோடு நடனம் செய்வதால்தான் உலகமே நடைபெறுகிறது என்று கூறினார்கள். அந்த உண்மையை உணரவேண்டும் என்ற உறுதி எனக்கு உண்டாயிற்று.”
”தாளத்திற்கும் உலகம் நடப்பதற்கும் என்ன தொடர்பு?”
“உடம்பில் இதயம் துடிக்கிறது. நீ அங்கேயும் இருந்து நடனமிடுகிறாய், உன்னுடைய ஆடல் நிற்குமாயின் இதயத் துடிப்பும் நின்றுவிடும். உலகில் உள்ள உயிர்க் கூட்டங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீ இலயத்துக்கு ஏற்றபடி ஆடுவதனால்தான் அவை இயங்குகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்னும் பஞ்ச கிருத்தியங்களையும் நடத்தும் தலைவன் என்பதை உன் நடனமே காட்டுகிறது. நீ நடனம் ஒழிந்தால் உயிர்களின் இயக்கம் நின்றுவிடும். இங்கே நான் காணும் இலயமே எல்லா உயிர்களிடத்திலும் இதயத் துடிப்பையும் இரத்த ஓட்டத்தையும் கருவி கரணங்கள் தொழிற்படுவதையும் நடத்துகிறது. நின் ஆடலும், அதன் இலயமும் நின்றால் எல்லாரும் செயலொழிந்து போவார்கள். உலகமே பிணக்காடு ஆகிவிடும். உடம்புக்குள் உயிர் இருந்து அதை நடத்துகிறது. ஆனால் உயிருக்குள்ளும் உயிராக இருந்து நீ தானே எல்லாவற்றையும் இயக்குகிறாய்? உன்னுடைய ஆடலின் தாளம் சீராக அமைந்திருக்கிறது. தப்புத்தாளம் போடுவதில்லை. அதனால் உலகம் ஒரு வரையறைக்குள் நின்று செயற்படுகிறது. கதிரவன் உரிய நேரத்தில் தோன்றி மறைகிறான், சந்திரன் தன் நியதிப்படி ஒளி விடுகிறான். தீயானது தன் தொழிலைச் செய்கிறது. பஞ்ச பூதங்களும் இந்த இலயந்தினால் இயங்குகின்றன. உலகமே முறையாகச் சுழல்கிறது. நவக்கிரகங்கள் இயங்குகின்றன. தேவர்கள் தமக்குரிய கடமைகளை ஆற்றி வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மூலசக்தியாக உன்னுடைய ஆடலின் இலயம் இருக்கிறது. அது நின்றால் யாவும் ஒடுங்குதலாகிய இலயத்தைத்தான் அடையும். அனைத்துப் பொருளிலும் உன் னுடைய ஆடலின் இலயம் எதிர் ஒலிக்கிறது. அதைத் தெரிந்து கொள்வதற்காக அடியனேன் இங்கே வந்து உன்னைத் தரிசித்தேன்.”
இப்படியெல்லாம் விரித்துப் பொருள் செய்யும் வண்ணம் அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.
மளத்தினார் திகைத்து காளும்
மாண்பலா நெறிகள் மேலே
களைப்பரால்; என்செய் கேனோ!
கறைஅணி கண்டத் தானே;
தினைத்தனை வேதம் குன்றாத்
தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்தும்நின் இலயம் காண்பான்
அடியனேன் வந்த வாறே.
அடியேனுடைய மனமானது இன்னது செய்தால் நல்லது என்பதை உணராமல் மயங்கி நாள்தோறும் பெருமையல்லாத புன்னெறிகளின் மேல் என்னை இழுத்துச் சென்று முழங்குகிறது: அடியேன் இந்த அல்லலினின்றும் தப்பிப் பிழைக்க என்ன செய்வேன்! ஆலகால விடமாகிய கறுப்பை அணிந்த நீலகண்டப் பெருமானே, தினையளவு போது கூட இடையீடின்றி வேத ஒலி குறையாமல் கேட்கும் தில்லை நகருள் திருச்சிற்றம்பலத்திலே, அண்டசராசரங்கள் எல்லாவற்றிலும் ஊடே நின்று இயக்கும் நின் திருவடிச் சதியின் பெருமையைக் காணும்பொருட்டே அடியேன் வந்தது.
[மனத்தினார்: ஆர், இகழ்ச்சிக் குறிப்பு. திகைத்து-நெறி தெரியாது மயங்கி மாண்பு அலா நெறிகள் – பேரின்பத்தை அடையும் மாட்சிக்கு ஒவ்வாத வழிகள். கனைப்பர்- இழுத்துச் சென்று முழங்குவர்; எனக்கே வெற்றி என்று ஐய பேரிகை கொட்டுவது போல முழங்குவர். ஆல்: அசை. என் செய் கேன் இந்த அல்லலைப் போக்க எந்த உபாயத்தை மேற் கொள்வேன். ஓ : அசை. கறை – ஆலகால நஞ்சத்தின் கறுப்பு;
“கறைமிட றணியலும் அணிந்தன்று” என்பது புறநானூறு. தினைத்தனை – சிறிது பொழுதேனும்; தினை என்பது மிகச் சிறிய அளவைக் குறிக்கும் சொல். தினையளவும் குறையாமல் வேதங்களைச் சாங்கோபாங்கமாக ஓதும் தில்லை என்றும் பொருள் கொள்ளலாம். தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் வாழும் இடமாதலின் வேதம் குன்றாமல் ஒலித்தது. தில்லை, தலத்தின் பெயர்; சிற்றம்பலம், நடராசப் பெருமான் ஆடும் அரங்கின் திருநாமம். அனைத்தும் எல்லாப் பொருள்களிலும்.. இயயம் தாளம். காண்பான்-காண்பதற்காக. வந்தவாறு காண்பான் என்று கூட்டுக. வந்தவாறே: ஏகாரம், ஈற்றசை.]
இறைவனுடைய திருநடனத்தால் உலகமெல்லாம் இயங்குகிறது என்பது கருத்து.
இந்தப் பாசுரம் நான்காம் திருமுறையில் 23-ஆம் திருப்பதிகத்தில் 8-ஆவது திருப்பாட்டாக அமைந்துள்ளது.



