
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
6. இது தான் இவர்க்கு இயல்போ?
சிவபெருமானிடம் அன்பு கொண்டவர்கள் அவனைப் பல படியாகப் புகழ்ந்து துதிப்பார்கள்; தம்முடைய குறைகளைச் சொல்லி இரங்குவார்கள்; சில சமயங்களில் மிகவும் நெருக்கமாக நின்று ஏசுவது போலப் பேசுவார்கள். இவை யாவும் பக்தி உணர்வால் உண்டாகும் விசித்திரங்கள். சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனோடு தோழமை கொண்டு இப்படி அடிக்கடி பாடுவார். மற்றவர்களும் சில சமயங்களில் இப்படிப் பாடுவதுண்டு. அப்பர் சுவாமிகள் அவ்வாறு பாடுவார், சில இடங்களில்.
வளமான வாழ்க்கை உடையவர்கள் தம்மை அணிகளாலும் ஆடை வகைகளாலும் அலங்கரித்துக் கொள்வார்கள். சிவபிரான் எத்தகையவர்? மார்பு நிறையச் சந்தனம் பூசிக் கொள்கிறாரா? எல்லோருடைய உடம்பும் தேய்ந்து மாய்ந்து எரிந்த வெள்ளைப் பொடியை அவர் பூசிக் கொள்கிறார். நல்ல வண்ணமும் மணமும் உடைய பொடியைச் செல்வர்கள் பூசிக் கொள்வது போலத் தேயும் வெண் பொடியைப் பூசிக் கொள்கிறார். அதில் என்ன அழகு இருக்கிறது? அதுமட்டுமா? நெற்றியிலே அழகும் மணமும் உள்ள சந்தனப் பொட்டை இட்டுக் கொள்வது வள வாழ்வுடையவர்களின் வழக்கம். அவரோ பிறைச் சந்திரனை நுதலில் திலகமாக வைத்துள்ளார். திலகம் இட்டால் நடு நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். அவர் அதையும் சரியாக இட்டுக் கொள்ளாமல் நெற்றியின் மேலே பதித்துக் கொண்டிருக்கிறார். அது ஓர் அழகா?
தேய் பொடி வெள்ளை பூசி அதன்மேல் ஓர் திங்கள்
திலகம் பதித்த நுதலர்.
நெற்றி இருக்கட்டும். அவர் கழுத்தைப் பார்க்கலாம். நவமணி மாலைகளையும் முத்துமாலைகளையும் கழுத்தில் அணியும் செல்வர்களைப் பார்த்திருக்கிறோம். அவரோ நஞ்சைக் கழுத்தில் வைத்திருக்கிறார். கடலிலே முத்தும் பவளமும் தோன்றுகின்றனவே; அவற்றை அணியக் கூடாது? அந்த நஞ்சைக் கண்டாலே பயமாக இருக்கிறது. அதன் ஒளியே வெப்பத்தைத் தருகிறது; காயும் கதிரை வீசுகிறது. அதுவும் கடலில் தோன் றியதுதான். இதுதானா அவருக்கு அங்கே கிடைத்தது?
காய் கதிர் வேலை நீல ஒளிமா மிடற்றர்.
அதுதான் போகட்டும், செல்வர்கள் பெரிய மாளிகைகளைக் கட்டிக் கொண்டு வாழ்வார்கள், அவர் நினைத்தால் ஒரு பெரிய அரண்மனையையே கட்டிக் கொள்ளலாம். ஆனால் அவர் எங்கே வாழ்கிறார்? பிணங்களை சுட்டுக் கரியாக்கும் சுடுகாட்டில் வாழ்கிறார்.
கரிகாடர்.
இரண்டு கால்களிலும் நல்ல சிலம்புகளை அணிந்து அழகாக நடனமிடலாம். அவர் ஒரு காலில் வீரக்கழலைக் கட்டிக் கொண்டு இருக்கிறார். அவர் பல வீரச்செயல்களைப் புரிந்தவராம். அந்தச் செயல்களை நினைத்தாலே பயமாக இருக்கிறது. அவருடன் மூங்கிலைப் போன்ற அழகிய தோளையுடைய உமாதேவி இருக்கிறாள். அவள் எப்படித்தான் அவருடன் காலம் கடத்துகிறாளோ தெரியவில்லை.ஒரு சமயம் கஜாசுரன் என்பவன் யானை உருவத்தில் வந்தான். அவனை அழிக்க புகுந்தார். பக்கத்தில் அந்த மெல்லியல் இருக்கிறாளே, அவள் அஞ்சுவாள். ஆகையால் அவளை அந்தப்புரத்தில் வைத்து விட்டு அந்த யானையை அழித்திருக்கலாமே! அவர் என் செய்தார் தெரியுமா? அந்தத் தேவி பார்த்து அஞ்சும்படி அவள் பக்கத்தில் இருக்கும்பொழுதே தம் கையிலுள் மழுவை வீசி அந்த யானையைக் கொன்றார். அதோடு நின்றாரா? அதை உரித்து அந்தத் தோலைப் போர்த்துக் கொண்டார். பூவேலை செய்த பட்டும் பீதாம்பரமும் அவருக்குக் கிடைக்க வில்லையா? யானையைக் கொன்றது போகட்டும். இரத்தம் சிந்தும் அதன் தோலைப் போர்த்துக் கொள்ள வேண்டுமா? அது பார்க்க எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது!
கால் ஓர் கழலர் ;
வேயுடன் ஆடு தோளியவள் விம்ம வெய்ய மழு
வீசி வேழ உரி போர்த்து.
இந்த லட்சணத்தோடு அவர் ஆடுகிறார். ஆடும்போது அவருடைய திருமேனியில் அழகான பொருள் ஒன்றேனும் தோற்றுகிறதா? அவர்தாம் ஆடுகிறாரே; அவருடைய தேவியாகிய உமாதேவி அதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். “இந்தக்கோலத்தோடு நீங்கள் ஆட வேண்டாம். நல்ல கோலம் புனைந்து ஆடுங்கள்” என்று அவள் சொல்லக் கூடாதோ? அவளும் அந்த ஆட்டத்தைக் கண்டு மகிழ்கிறாள் போலும்! ஏ! இது என்ன அழகு?
கணவர் அப்படி இருந்தால் அவரைத் திருத்தி நல்லபடி அணிகளை அணிந்து கொள்ளும்படி செய்யக் கூடாதோ? அவர் ஆடுகிறார். அவள் கண்டு களிக்கிறாள். இதுதான் இந்தத் தம்பதிகளுக்கு இயல்போ? நன்றாக இருக்கிறது இந்தக் கோலமும் ஆட்டமும்! அதைப் பார்த்து நாலு பேர் சிரிப்பார்களே என்று அவளாவது எண்ணித் தடுக்கவில்லை. “நான் ஆடுகிறேன். நீ பார்த்து மகிழ்” என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் போலும்! இவர்கள் இயல்பே இதுதானோ?
ஏ இவர் ஆடுமாறும் இவள் காணுமாறும் !
இதுதான் இவர்க்கு ஓர் இயல்பே ?
தம் கணவர் அணியும் ஆடையும் பூண்டு அழகுடன் விளங்க அவர் அருகில் தாமும் அணிகளோடும் ஆடைகளோடும் அலங்காரமாக நின்று களிப்பது உலகப்பெண்களின் இயல்பு. ஆனால் இந்தக் கணவன் மனைவியரின் இயல்பே வேறாக, பார்த்தால் வேடிக்கையாக, பரிகாசத்துக்கு உரியதாக. இருக்கிறது. நல்ல ஆட்டம் !
தேய்பொடி வெள்ளை பூசிஅதன் மேல்ஓர் திங்கள்
திலகம் பதித்த நுதலர்.
காய்கதிர் வேலை நீலஒளி மாமிடற்றர், கரி
காடர், காலொர் கழலர்,
வேயுடன் ஆடு தோளியவள் விம்ம வெய்யமழு
வீசி வேழஉரி போர்த்து
ஏ! இவர் ஆடு மாறும் இவள் காணு மாறும் இது
தான் இவர்க்குஓர் இயல்பே !
தேய்ந்த வெள்ளையாகிய பொடியைப் பூசிச்சந்திரனாகிய திலகத்தைத் தம் நெற்றியின் மேலே பதித்திருக்கிறவராய் கடலில் தோன்றிய வெம்மை வீசுசின்ற விடத்தின் நீல ஒளியை உடைய கரிய கழுத்தை உடையவராய், பிணங்கள் கரியாகும் சுடுகாட்டில் வசிப்பவராய், காலில் ஒற்றைக் கழலை உடையவராய், மூங்கிலோடு ஒப்புச் சொல்லும் தோளையுடைய உமாதேவி அஞ்சி விம்மும்படியாகத் தம் மழுவாயுதத்தை வீசி யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்துக் கொண்டு இவர் ஆடும் விதமும் அதை இந்த உமாதேவி காணும் விதமும் ஏ! என்ன பரிகாசத்துக்குரியனவாக உள்ளன! இதுதான் இந்த இருவர்களுக்கும் உரிய இயல்பு போலும்! (அவர் பைத்தியத்தைப் போல ஆடுகிறார்; இவள் மற்றொரு பைத்தியத்தைப் போல அந்த ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டு நிற்கிறாள்!)
[கட்டி தட்டாமல் தேய்ந்தது போல இருத்தலின் தேய் பொடி என்றார். பொடி வெள்ளை – வெள்ளைப் பொடி; முன்பின் மாறி நின்றன. நெற்றியிலே திருநீறு பூசியதை இங்கே குறித் தார்; பின்னே திலகத்தைச் சொல்வதனால் அவ்வாறு கொள்ள வேண்டும். காய் கதிர் நீல ஒளி, வேலை நீல ஒளி ; நீலம் -நீல நிறம் பெற்ற ஆலகால விடத்தின் நிறம். மாமிடற்றர் – நஞ்சை உண்டதனால் கரியதாகத் தோற்றும் கழுத்தை உடையவர்; மா- கரிய, கரிகாடு-உடம்பெல்லாம் சுட்டுக் கரியாகும் காடு ; சுடு காடு. வேய் உடன் ஆடு-வேயை ஒப்பாக உடன் சொல்லும். அவருடைய தோற்றத்துக்கும் அவளுடைய அழகுக்கும் பொருத்தம் இல்லை என்பது குறிப்பு. தோளி அவள் : அவள், பகுதிப்பொருள் விகுதி. விம்ம-அச்சத்தால் நடுங்கிப் புலம்ப. வீசி-யானையைக் கொன்று; அதன் உரியைப் போர்த்து என்று இசையெச்சத்தால் வேண்டிய சொற்களைப் பெய்து பொருள் கொள்ள வேண்டும். ஏ : பரிகாசக் குறிப்ப. ஆடுமாறும் காணு மாறும் எத்தகைய பரிகாசத்துக்குரியவை என்று கொள்க. என்னே என்ற சொல்லை அவாய் நிலையால் கொண்டு பொருள் செய்ய வேண்டும். இயல்பே – இயல்பா; ஏகாரம், வினா.
இறைவன் யாவரும் இறந்துபட்ட மயானத்துச் சாம்பலைப் பூசிக் கொண்டு நிற்பது, அவன் நித்தியன் என்பதைக் காட்டுவது. அவன் நெற்றியின்மேல் உள்ள சந்திரன் திலகம் இட்டது போலத் தேயாமல் வளராமல் இருப்பதனால் அவனைச் சார்ந்தவர்கள் இடரின்றி வாழ்வதைக் குறிக்கும். திலகம் என்பது எந்த வடிவத்திலும் இருக்கும்; சிலர் பிறைச் சந்திரனைப் போலச் சந்தனத்தை இட்டுக் கொள்வது வழக்கம். தேவர் களெல்லாம் அஞ்சி மயங்கும்படி செய்த நஞ்சை உண்டதனால் இறைவன் எதனாலும் இறவாதவன் என்பதும். கருணையினால் பிறர் இடர்ப்பாடுகளை நீக்குபவன் என்பதும் புலனாகும். அவன் பல வீரச் செயல்களைப் புரிந்ததற்கு அடையாளமாகக் கழலை அணிந்திருக்கிறான். அந்தச் செயல்கள் யாவும் தேவரும் பிறரும் பெற்ற இன்னல்களைப் போக்குவதற்காகச் செய்தருளியவை. கஜாசுரனை அழித்து அவன் தோலைப் போர்த்தது, தன் அடியார்களுக்கு வரும் இன்னலைப் போக்கி அருள் புரிவதை அன்பர்கள் என்றும் நினைக்கும்படியான அடையாளமாகக் கொண்டபடி.
இவ்வாறுள்ள அருட்கோலத்தையும் அருட்செயல்களையும் எள்ளல் குறிப்புத் தொனிக்கும்படி பாடினார் அப்பர் சுவாமிகள். பக்தியால் உண்டான நெருக்கத்தால் இவ்வாறு பாடி னார்.]
நான்காம் திருமுறையில் எட்டாம் திருப்பதிகத்தில் மூன்றாவது திருப்பாட்டாக அமைந்தது இது.



