
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
11. மன ஆலயம்
திருவாரூர்த் திருக்கோயிலில் அரநெறி என்று தனியே ஒரு சந்நிதி உண்டு. திருவாரூர் அரநெறி என்று அதைச் சொல்வார்கள். அப்பர் சுவாமிகள் அந்தச் சந்நிதி சென்று தரிசனம் செய்தார். சிவ பெருமான் பல தலங்களில் எழுந் தருளியுள்ளார். என்றாலும் அவருக்கு உகந்த சிறத்த ஆலயம் ஒன்று உண்டு. அது இன்ன தென்று சொல்ல வருகிறார் திருநாவுக்கரசர்.
ஆருர் அரநெறியாரை அடையாளம் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். அவரை அணுகும் போதே அவர் திருமுடியின் மேல் அணிந்துள்ள பிறை அவரை இனம் கண்டு கொள்ளச் செய்கிறது. அது வெள்ளை வெளேரென்று பால் போன்ற நிலாவை வீசுகிறது. அதையே அவர் குறுங்கண்ணியைப் போல் திருமுடிமேல் அணிந்திருக்கிறார். கண்ணி யென்பது அரசர்களும் தலைவர்களும் அடையாளமாகச் சூடும் சிறுமாலை. இறைவர் குளிர்ந்த வெள்ளைப் பிறையையே கண்ணியாகப் புனைந்துள்ளார்.
மார்பில் அணிவது மாலை. இறைவர் கொன்றை மாலையை அணிந்திருக்கிறார். அது பொன்னிறமாகிய பசுமஞ்சள் நிறத்தோடு ஒளிர்கிறது. இந்த அடையாளத்தை முதலில் சொல்கிறார்.
பாலை நகு பனி வெண்மதி பைங்கொன்றை
மாலையும் கண்ணியும் ஆவனல்
[பாலைப் போல விளங்கும் குளிர்ச்சியையுடைய வெள்ளைப் பிறையும் மஞ்சள் நிறம் பெற்ற கொன்றையும் கண்ணியாகவும் மாலையாகவும் அவருக்கு ஆவன.
நகு: உவம உருபு; பாலின் வெண்ணிறத்தைப் பழித்து அதனினும் வெண்மையாகத் தோற்றும் மதி என்றும் பொருள் கொள்ளலாம். வெண்மதி கண்ணியாகவும், கொன்றை மாலை யாகவும் ஆவன என்று எதிர் நிரல் நிறையாகக் கொள்ள வேண்டும். பசுமை மஞ்சள் நிறத்துக்கும் ஆதலின் பைங் கொன்றை என்றார், பசும்பொன் என்பது போல.]
அடியார்கள் அந்தப் பெருமானை வணங்குகிறார்கள்,அப் பெருமானுடைய செம்மையான திருவடிகளைக் காலையில் எழுந்தவுடன் தொழுகிறார்கள்; தமக்குரிய பணிகளை யெல்லாம் செய்துவிட்டுப் படுக்கப் போவதற்கு முன் இரவில் அப்பெருமானைக் கைதொழுகிறார்கள்.
ஒரு நாளின் இரண்டு எல்லைகள் காலையும் மாலையும். இடையிலே எந்தப் பணிகள் ஆற்றினாலும் நாளின் தொடக்கமாகிய காலையிலும் இறுதியாகிய மாலையிலும் ஆரூர் அரநெறியாரைக் கைதொழுது வாழ்கிறார்கள், அடியார்கள். உள் மனத்தில் இறைவருடைய நினைவு இருந்தால்தான் காலையில் எழுந்தவுடன் அவரை நினைக்க இயலும். அத்தகைய தொண்டர்கள், எத்தொழிலைச் செய்தாலும் அடிமனத்தில் இறைவருடைய நினைவே தங்கி நிற்கும்; தொழிலொழிந்த மாலையில் மேலே மிதந்து வரும். அந்த நினைவோடே உறங்கச் செல்வார்கள். அந்தப் பழக்கத்தால் காலையில் உறக்கம் நீங்கி எழுந்தவுடன் அந்த நினைவு தோன்றும்.
பல பல பணிகளில் ஈடுபட்டு அவற்றில் மனத்தைச் செலுத்தி உலகியலில் அகப்பட்டு உழல்பவர்களுக்கு இவ்வாறு இருத்தல் இயலாத காரியம். இறைவர் சேவடியை மனம் என்னும் கோயிலுக்குள் இருத்தி வைப்பவர்களுக்கு இது சாத்தியம். திருக்கோயிலுக்குள் எழுந்தருளியிருப்பது போல அடியவர்களின் நெஞ்சமாகிய கோயிலுக்குள் இறைவர் நிலையாக நிற்கிறார்.
பணிகள் ஒழிந்து பிற நினைவின்றி இருக்கும்போது அப்பெருமானுடைய காட்சி அகக்கண்ணிலே தோன்றும்.
புதையலிலே கிடைத்த பொன்னை வீட்டினுள் பாதுகாத்து வைத்திருப்பவன் காலையில் எழுந்தவுடன் அதைப் பார்ப்பான். பிறகு புறத்தே சென்று தன் தொழிலைக் கவனித்துவிட்டு வீட் டுக்கு வந்து உறங்கச் செல்லும் போதும் அதை ஒரு முறை பார்த்து மகிழ்வான். வெளியில் பணிகளை ஆற்றும் போதும் அவன் அகமனத்தில் அதன் நினைவு இருந்து கொண்டே இருக்கும். கண்ணினால் பார்த்துக் கையினால் எடுத்து மகிழ்வது காலையிலும் மாலையிலும் ஆனாலும், அவனுக்கு எப்போதும் அந்த நினைவே இருக்கும்.
மற்றோர் உதாரணத்தைப் பார்க்கலாம். பெரிய குடும்பத்தில் சுற்றத்தார் பலரோடு ஒரு பெண் வாழ்கிறாள். அவளுக்கு எப்போதும் ஏதாவது வேலை இருந்துகொண்டே இருக்கும். தன் கணவனை அவள் இரவிலேதான் சந்திக்க முடியும். அவள் படுக்கப் போகும்போது அவனைக் காதலுடன் விழியால் கண்டு இன்புறுகிறாள். அவன் உறங்கிய பிறகே உறங்குகிறாள். விடியற்காலையில் அவன் எழுவதற்கு முன்னே எழுந்து விடுகிறாள்.
”பின்தூங்கி முன் எழும் பேதை“
என்று திருவள்ளுவர் சொல்வது போல இருப்பவள் அவள். அப்படி எழும்போது தன் கணவன் முகத்தைக் கண்டு மகிழ்ந்து பின் தன் வேலையைக் கவனிக்க முனைகிறாள்.
தன் கணவனை இரவிலே கண்டு இன்புற்று விடியற்காலத்தில் அவன் முகத்தைத் தரிசித்துத் தன் பணிகளைச் செய்யப் புகும் அவளுக்கு இடையிலே எப்போதும் அவனுடைய காட்சி அகமனத்தில் இருந்து கொண்டே இருக்கும்.
அடியவர்களும் இறைவரை மெய்யினால் தொழும் நேரம் காலையும் மாலையுமே என்றாலும் அவர்கள் எக்காலத்திலும் அவர் திருவடிகளையே உள்ளத்தே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
சேவடி காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே,
ஆலயத்தில் பிறர் புகுந்து தரிசனம் செய்யும்படி அது திறந்திருந்தாலும், இரவிலும் வேறு சில நேரங்களிலும் அது சாத்தியிருந்தாலும் அந்த ஆலயத்தில் எப்போதும் எழுந் தருளியிருக்கிறார் இறைவர். சில அதிகாரிகள் தம்மைப் பிறர் காணவரும் நேரம் இதுவென்று வரையறை செய்துகொண்டு அந்த நேரத்தில் மட்டும் அலுவலத்துக்கு வந்து காட்சி கொடுப்பார்கள். அவ்வாறின்றி எந்த நேரத்திலும் தன் அவையையே பணி நிலையம் ஆக்கிக்கொண்டு யார் எப்போது வந்தாலும் குறை நிறைகளைக் கேட்கும் செங்கோல் அரசனைப் போல அரநெறியார் இருக்கிறார். அவர் திருக்கோயில் கொண்டிருக்கும் அரநெறியிலே எல்லாச் சமயங்களிலும் அவரைத் தரிசனம் செய்ய முடியாது. ஆனால் அந்த அரநெறியாருக்கு மற்றோர் ஆலயம் இருக்கிறது. அதுதான் ‘காலையும் மாலையும் கை தொழுவார் மனம்’. அந்த ஆலயத்தில் அவர் எப்போதும் காட்சி தருவார். அத்தகைய ஆலயத்தை உடையவர்கள் அவரைச் சதா கண்டு கொண்டிருப்பார்கள். அந்த மனக் கோயிலே அவருக்கு எல்லாக் கோயில்களிலும் சிறந்த ஆலயம். மனம் என்னும் கருப்பக்கிருகத்தில் இறைவரை நிலைபெறச் செய்த பெருங்கோயில் அடியாருடைய திருமேனி, “நினைப்பவர் மனம் கோயிலாக் கொள்பவன்” என்று பிறிதோரிடத்தில் அப்பர் சுவாமிகள் பாடுவார்.
பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையும் கண்ணியும் ஆவன ; சேவடி
காலையும் மாலையும் கைதொழு வார்மனம்
ஆலயம்,ஆரூர் அரநெறி யார்க்கே.
திருவாரூர் அரநெறியில் எழுந்தருளியிருக்கும் மகா தேவருக்குப் பாலைப் போன்ற குளிர்ந்த வெண்மையான பிறையும், மஞ்சள் நிறம் பெற்ற கொன்றையும் கண்ணியும் மாலையுமாக விளங்குவன; அவருடைய செம்மையான திருவடிகளைக் காலையில் எழுந்தவுடனும் மாலையில் உறங்குவதற்குமுன்னும் கை தொழுது தியானிப்பவர் மனமே சிறந்த ஆலயம் ஆகும்.
[பால் நிலவுக்கு உவமை, கண்ணி -அடையாள மாலை; “கண்ணி கார் நறுங் கொன்றை” என்பது அகநானூறு. கையினால் தொழுவது காலையிலும் மாலையிலும் ஆனாலும் மனம் எந்த நேரமும் அவரையே நினைக்கும். கை தொழும்பொழுது அதனைப் பிறரும் பார்க்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் நினைப்பதை அந்த நிலையை உணர்ந்தவர்களே தெளிவார்கள். அப்பர் சுவாமிகள் அந்த நிலையில் நிற்பவர்; ஆகவே தம்மை யொத்த அன்பர்களின் இயல்பையும் உணர்ந்தவர். ஏகாரம், ஈற்றசை.
இவ்வாறு உறங்குவதற்கு முன்னும் கைதொழுது, விழிக்கும் பொழுதும் கை தொழுது வாழும் அடியவர்கள் நீண்ட உறக்கமாகிய மரணம் நேரும் போது இறைவருடைய நினைவோடே இருப்பார்கள். அவர்கள் பிறக்க நேர்ந்தால் அப்போதும் அந்த நினைவு அவர்களிடம் தொடர்ந்து வரும்.
“உறங்கு வதுபோலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“
என்பது குறள்.]
நான்காம் திருமுறையில் பதினேழாம் திருப்பதிகத்தில் எட்டாவது பாட்டாக விளங்குவது இது.



