அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

9. அகந்தையைப் போக்கும் திருவடி

ராவணன் தன்னுடைய விமானமாகிய தேர்மீது வானத்தில் பறந்து வந்தான். உலகெங்கும் சுற்றி வந்த போது அவனுடைய தேர் திருக்கைலாயத்தின் மீது செல்லும் அதைக் கடந்து செல்ல முடியாமல் நின்றுவிட்டது. அப்போது தேரை ஓட்டிய பாகன், “இந்தக் கைலாயத்தின் மீது உன் தேர் செல்லாது. நீ எல்லா இடங்களிலும் பறந்து சென்றாய். ஏழுலகத்தையும் கடந்து செல்லும் அதி வீர பராக்கிரமம் உடையவன் நீ. என்றாலும் அந்த வீரம் இந்த இடத்தில் செல்லாது. உன்னுடைய வீரத்தை மற்ற இடங்களில் காட்டலாம். இங்கே அது பயன் தராது. அதை விட்டுவிடு. இதை உணராமல் நீ விரைந்து செல்ல எண்ணுவது முறை அன்று. எல்லா இடங்களையும்போல இதை நினைக்கக்கூடாது” என்று சொன்னான்.

இராவணன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தேர்ப்பாகனுக்கு உண்டான அறிவு அவனுக்கு உண்டாக வில்லை. அவனுடைய மிடுக்குத் தளரவில்லை. அவன் பாகனை கோபித்துக் கொண்டான். “என் ஆணையின்படி செய்வது தானே உன் கடமை? இந்த இடமும் பிரபஞ்சத்தில் அடங் கினதுதானே? இதைக் கடந்து போகாமல் இருந்தால் என் பெருமை என்ன ஆகும்?” என்று கோபித்தான்.

முடுகிய தேர் செலாது கயிலாய மீது
கருதேல்; உன் வீரம் ஒழிநீ;
முடுகுவது அன்று தன்மம்; என நின்று
பாகன் மொழிவானை நன்று முனியா
விடு விடு என்று சென்று விரைவுற்று.

தேர்ப்பாகன் அவன் சொல்லுக்கு இணங்கி அதைச் செலுத்த முயன்றான். தேர் அந்த இடத்தை விட்டுச் சிறிதளவும் நகரவில்லை. “நான் என் செய்வேன்! இந்த இடத்துக்கு மேல் தேர் அசையவில்லையே! இதிலிருந்து இந்த இடம் நம் ஆற்றலுக்கு அடங்கியதன்று என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்கு மேல் விடாமல் திரும்பிச் செல்வதே நன்று” என்று தேர்ப்பாகன் சொன்னான்.

இராவணனுடைய கோபம் அதிகமாயிற்று. “நீ கையாலாகாதவன், இந்த இடம் என்ன அப்படிக் கடக்க முடியாத இடம்? இதை நான் ஒருகை பார்க்கிறேன்” என்று கோபத்தோடு விமானத்தினின்றும் இறங்கினான். விடுவிடுவென்று கைலாயத்தின் அடிக்குச் சென்றான். “என்னுடைய கையால் இந்த மலையைப் பந்து போலத் தூக்கி எறிந்து விடுகிறேன், பார்” என்று வீறு பேசிக்கொண்டு சென்றான். இரண்டு கைகளால் அதை எடுக்க முயன்றான். முடியவில்லை. நாலு கைகளால் பெயர்க்கலுற்றான். கைலைமலை அணுவளவும் அசையவில்லை. எட்டுக் கைகளால் முயன்று தூக்கலானான், அப்போதும் அந்த மலையை ஒன்றும் செய்ய முடியவில்லை. தன்னுடைய இருபது கைகளையும் மலையின் அடியிலே கொடுத்துத் தூக்க முயன்றான். மலை சிறிது அசைந்தது போல் இருந்தது. “நம்முடைய வலிமைக்கு முன் இது எம்மாத்திரம்?” என்று எண்ணினான். கைலை சிறிது இடம் கொடுக்கவே தன் கைகள் இருபதையும் அதன் அடியில் புகுத்தித் தூக்க எண்ணினான். இருபது கைகளும் கைலைமலையின் அடியிலே புகுந்தன. ‘இதோ ஒரு கணத்தில் இதைத் தூக்கி எறிந்து விடுகிறேன்’ என்ற மிடுக்கு இராவணனுக்கு உண்டாயிற்று. ”இந்த மலை நெகிழ்ந்து விட்டது. இதன் அடியில் கைகளைப் புகுத்தி விட்டேன். இனி இதோ ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விடுகிறேன்” என்று எண்ணித் தூக்க முயன்றான்.

கைலைமலையின் மேல் பரமசிவனும் பார்வதியும் எழுந் தருளியிருந்தார்கள். அப்போது அம்பிகைக்கு இறைவன் மேல் சற்றே ஊடல் உண்டாயிற்று. அவன் முகத்தைப் பாராமல் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் இராவணன் அந்த மலையின் அடியில் கை கொடுத்துத் தூக்க முயன்றபோது அது அசைந்தது. அதைக் கண்டு நடுங் கிய அம்பிகை ஓடிப்போய் இறைவனைத் தழுவிக்கொண்டாள். பொல்லாத அரக்கன் அகந்தையால் செய்த காரியம் அம்பிகையின் ஊடலைப் போக்க வழி செய்தது. அதற்காகவே இறைவன் இராவணன் செயலைத் தடுக்காமல் இருந்தான். பொல்லாதவர்களின் தீய செயல்களிலும் நல்லதைப் பெறுவார்கள், அருளுடைய பெரியோர்கள் என்ற உண்மை இதனால் தெரிய வருகிறது.

சிறிதளவு சும்மா இருந்த இறைவன், உமாதேவி அஞ்சி ஓடி வந்து தன்னை அணைத்துக் கொண்டவுடன் புன்முறுவல் பூத்தான். அம்பிகையின் ஊடல் தீர்ந்து விட்டது. இனி இராவணனுடைய அகந்தையைப் போக்க வேண்டும்.

தன் கால் விரல் ஒன்றைச் சிறிதே அழுத்தி ஊன்றினான் எம்பெருமான். ”இதோ, இந்த மலை அசைந்து எழும்புகிறது. இதைத் தூக்கி எறிந்து விடுவோம்” என்ற தருக்கினோடு இருந்த இராவணன் கைகள் இருபதும் மலையின் அடியில் இருந்தன. எம்பெருமான் தன் கால் விரலால் அழுத்திய உடனே கைலை மலை மீண்டும் நிலத்தில் பதிந்து தன் பழைய நிலையை அடைந்தது. ‘இதை இனி எடுத்து எறிதல் எளிது’ என்று எண்ணியிருந்த இராவணனுடைய கைகள் இருபதும் அதன் கீழே சிக்கிக்கொண்டன. மலையின் பாரம் அந்தக் கைகளை நசுக்கின. தன் வலிமையை எல்லாம் கூட்டிக் கைகளை எடுக்கப் பார்த்தான். மலையை எடுக்காமல் போனாலும் போகட்டும் என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று.

அப்போது எப்படியாவது கைகளை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்று தன் தலைகளால் முட்டினான். தோள்களால் உந்தினான். அவைகளும் மலையின் கீழ் அகப்பட்டு நெரிந்தன; நெடுநெடுவென்று நசுங்கின. ஓ என்று ஓலமிட்டான் இரா வணன்; பிறகு இறைவனைப் பாடி விடுதலை பெற்றான்,

அவன் கை மலையை எடுத்தபோது அவன் வலிமையையும் அகந்தையையும் அடியோடு ஒழியும்படி செய்தது இறைவனுடைய திருவடி விரல். விரலே பேராற்றலையும் அகந்தையையும் போக்கிவிடும் என்றால் அந்தத் திருவடி எவ்வளவு ஆற்றலுடையதாக இருக்கும்!

இராவணனுக்குப் பத்துத் தலை இருப்பது போல நமக்கும் ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் இருக்கின்றன. ஆணவத்தில் சிக்குண்ட நாம் இந்தக் கருவிகளை நல்ல நெறியிலே பயன்படுத்துவதில்லை. இராவணனுடைய ஆற்றலையும் அகந்தையையும் அழித்த விரலையுடைய திருவடியை நினைத்தால் நம்முடைய இந்திரியங்களின் ஆற்றல் அடங்கும்; ஆணவம் அழியும். இந்திரிய வசப்பட்டு மயங்கி, ஆணவத்தால் அலைப்புண்டு, இறைவன் அருளைப்பெற முடியாமல், பிறந்தும் இறந்தும் அல்லற்படுகிறோம் நாம். நம் இந்திரியங்கள் நம்மைத் தம் வசமாக்கி இழுத்துச் செல்கின்றன. ஆணவ மலம் நம்மை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறது.

இறைவனுடைய கால்விரல் ஒன்றே பத்துத்தலை இராவணனுடைய ஆற்றலையும் ஆணவத்தையும் அழித்தது என்றால், அந்தத் திருவடியையே பாதுகாப்பாகக் கொண்டால் நம்முடைய இந்திரியங்களும் மலங்களும் நம்மை என்ன செய்ய முடியும்? அந்த அரக்கனுடைய பத்து முடிகளையும் இருபது தோள்களையும் இற்று விழச் செய்தது இறைவனுடைய திருவடியின் ஒரே விரல். அவனுடைய பாதம் இரண்டையும் பற்றிக் கொண்டால் எந்தப் பகையும் நம்மை அணுகாது. பாசம் கழன்றுவிடும். ஆணவம் அழிந்துவிடும்.

‘இதை உணர்ந்து அவனுடைய திருவடியை இடையறாது என் மனம் தியானித்துக் கொண்டிருக்கிறது’ என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார்.

அரக்கன் வரை உற்று எடுக்க
முடி தோள்
நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம்
நினைவுற்றது என்றன் மனனே.

பெருவரமும் பேராற்றலும் திக்கு விசயம் செய்து வென்ற செருக்கும் மிடுக்குமுடைய இராவணனுடைய ஆற்றலையும் அகந்தையையும் கால்விரல் ஒன்றே போக்கியது என்பதை உணர்ந்து, அந்தத் திருவடியையே பணிந்து பற்றி மனத்தால் தியானம் பண்ணினால் நம் உயிருக்குப் பகையாகிய எந்த ஆற்றலும் நம்மிடம் பயன்படாதொழியும் என்ற உறுதிப்பாட்டுடன் பாடுகிறார் அப்பர் சுவாமிகள்.

கடுகிய தேர்செ லாதுகயி லாயமீது கரு
தேல்உன் வீரம் ஒழிநீ;
முடுகுவது அன்றுதன்மம் எனநின்று
பாகன்மொழி வானைநன்று முனியா,
விடுவிடு என்று சென்று விரைவுற் றரக்கன்வரை
உற்றெடுக்க, முடிதோள்
நெடுநெடு இற்று வீழவிரல் உற்ற பாதம்நினை
வுற்ற தென்றன் மனனே.

வேகமாக வானத்தின் மீது சென்ற இராவணனுடைய தேர் மேலே செல்லாமல் நிற்க, ‘இந்தத் தேர் கைலாயத்தின் மீது செல்லாது. இதைக் கடக்கக் கருதாதே; உன் வீரத்தை நீ ஒழிவாயாக; இதற்கு மேலும் விரைந்து செல்ல எண்ணுவது முறை அன்று’ என்று தேரை நிறுத்திப் பாகன் சொல்ல, அவ்வாறு சொன்னவனுடைய அறிவுரையைக் கேளாமல் அவனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டு, “இதை நான் எடுத்து வீசுகிறேன் பார்” என்று அகங்காரத்தோடு விடுவிடுவென்று வேகமாகச் சென்று அவன் அந்தக் கைலையின் கீழே சென்று அதை எடுக்க முயன்ற போது, அவனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெடுநெடு என்று நசுங்கி வலியிழந்து இற்றுப்போய் விழும்படியாகச் செய்த விரலை உடைய இறைவனுடைய திருவடிகளை அடியேனுடைய மனம் என்றும் நினைந்து தியானித்தது.

[கடுகிய-வானத்தில் வேகமாகச் சென்ற. ‘கடுகிய என்பது முதல் ‘தன்மம்’ என்பது வரையில் உள்ளது தேர்ப்பாகனது அறிவுரை,

‘கடுகிய தேர் கயிலாய மீது செலாது; (அவ்வாறு செய்யக்) கருதேல்; உன் வீரம் ஒழி; நீ முடுகுவது தன்மம் அன்று என்று கூட்டுக. நன்று- கடுமையாக. முனியா-கோபித்து. விடுவிடு என்றது வேகத்தைக் குறிக்கும் குறிப்பு. விரைவுற்றுச் சென்று. நெடுநெடு என்றது ஒலிக்குறிப்பு. வீழும்படியாக விரலைக் கொண்ட பாதம். ‘ஒரு விரலே இந்தப் பெரிய செயலைச் செய்யுமெனின் இரண்டு திருவடிகளையும் பற்றிக் கொண்ட அடியேனை இந்திரியங்கள் என் செய்யும்? ஆணவம் என் செய்யும்?’ என்பது குறிப்பு.)

இறைவன் திருவடிகளைத் தியானம் செய்து பற்றிக் கொண்டவர்களுக்கு இந்திரியங்களாலும் ஆணவத்தாலும் தீங்கு வராது என்பது கருத்து.

இது நான்காம் திருமுறையில் பதினான்காம் பதிகத்தில் உள்ள பதினோராவது திருப்பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *