அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

18. அயர்த்துப் போனேன்

மக்களைப் பிணிக்கும் நோய்களில் மிகவும் வலியது காமம் என்னும் நோய். பெருந்தவம் செய்த விசுவாமித்திரர் முதலியவர்களும் அந்த நோய்க்கு ஆளாகி அதுகாறும் செய்த தவத்தைக் குலைத்துக் கொண்டிருக்கிறார்கள். உடல் வலிமை உள்ள ஒருவனுக்கு நோய் வந்தால் அந்த நோய் அவனுடைய வலிமையைப் போக்கி மெலிவை உண்டாக்குவது போல, திண்மையான நெஞ்சுடையவர்களும் காம நோயின் வாய்ப் பட்டால் மனத்திண்மை குறைந்து அல்லற்படுகிறார்கள். காம நோயை அண்டாமல் செய்து, அது தலைகாட்டினால் அதை அழிக்கும் ஆற்றல் பெற்றவர்களின் உள்ளத்தில் இறைவன் தன் அருள் தோன்ற வந்து நிற்பான்.

அப்பர் சுவாமிகள் இந்த நோயால் அலைக்கப்பட்டதாகச் சொல்கிறார். அவர் இளமைக் காலத்தில் அப்படி இருந்திருக்கலாம். இறைவனுடைய அருளைப் பெற்ற காலத்திலும் அந்தப் பழைய வாழ்க்கையை நினைந்து இரங்குகிறார். ‘நான் காமம் என்னும் வெம்மையான நோயைக் கழிக்காமல் இருந் தேனே!’ என்கிறார்.

கழித்திலேன் காம வெந்நோய்.

சுற்றத்தார் என்றும் நண்பர்கள் என்றும் எண்ணி அவர்கள்பாலும், நமக்கு இனிய பொருள்களென்று இந்திரிய சுகத்தைத் தரும் பொருள்களின் பாலும் பற்று வைத்து அவற்றினிடம் ஆசை கொண்டு அந்தப் பாசத்தால் துன்புற்றாராம். அதை ஒழிக்கவில்லையாம்.

காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்.

புறக்கண்ணைக் கொண்டு உலகத்திலுள்ள பொருள்களைப் பார்த்து மகிழ்ந்தும், அவற்றைப் பெற வேண்டுமென்று ஆசைப்பட்டும், அவற்றைப் பெற முயன்றும், அவற்றால் வரும் நிலையற்ற இன்பத்திலே மயங்கியும் நாம் வாழ்கிறோம். இந்த ஊனக் கண்ணால் பார்க்கும் பார்வையன்றி ஞானக் கண்ணால் பார்க்கும் பார்வை நமக்கு இல்லை.

முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்,
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்

என்று திருமூலர் பாடுவார். அந்த அகக் கண் நமக்கு மூடிக் கிடக்கிறது. ஞானம் என்னும் இமையைத் திறந்து அகக் கண்ணால் பார்க்கும் ஞானப் பார்வையை நாம் பெறவில்லை. அப்பர் சுவாமிகளும் அப்படி இருந்ததாகச் சொல்கிறார்.

ஊன் கண் நோக்கி,
உணர்வு எனும் இமை திறந்து
விழித்திலேன்.

‘ஊனக் கண்ணினால் நோக்கினேனே அன்றி உணர்வாகிய ஞானக் கண்ணால் நோக்கவில்லை’ என்கிறார். ஞானக்கண்ணால் பார்க்கிறவர்களுக்கு எல்லாம் இறைவன் மயமாகத் தோன்றும்.

நாம் அறிவென்னும் செம்மையின்றி அறியாமை யென்னும் வெளிறு தோன்ற நிற்கிறோம். இதனால் தக்கது இன்னது, தகாதது இன்னது என்று பகுத்து அறியும் ஆற்றல் இல்லாமல் போகிறோம்; அதனால் மேலும் மேலும் பாவங்களை ஈட்டுகிறோம்.

நல்ல வியாபாரிகள் சரக்குக் கொள்ளப் போனால் அவற்றின் தரத்தை ஆராய்ந்து நல்லவற்றையே தேர்ந்தெடுப்பார்கள். வியாபார நுட்பம் அறியாதவர்கள் வியாபாரம் செய்யப் புகுந்தால் கண்ட கண்ட சரக்குகளையெல்லால் வாங்குவார்கள், நாம் நம் அறியாமை தோன்றும்படி பாவம் என்னும் சரக்கையே ஈட்டிக்கொள்கிறோம். அறிவு இருந்தால், “இது தகாதது; இது தக்கது” என்று தேர்ந்து தக்கதை ஈட்டிக் கொள்ளலாம். அறிவில்லாத வெளிறு படைத்த நாமோ பாவத்தையே ஈட்டி மூட்டை கட்டிக்கொள்கிறோம். அவ்வாறு செய்வதனால் நாம் அறியாமையை உடையவர்கள் என்பதை அறிஞர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

வெளிறு தோன்ற வினை எனும்
சரக்குக் கொண்டேன்.

நாம் சொல்ல வேண்டியதை அப்பர் சுவாமிகள் சொல்லிக் கொள்கிறார்.

இந்தப் பிறவி எடுப்பது நாம் முன் செய்த வினைகளை அநுபவித்துப் போக்கிக் கொள்வதற்காக, ஆற்றில் நீராடப் போகிறவர்கள் நீரில் மூழ்கித் தம் உடம்பிலுள்ள அழுக்கைப் போக்கிக் கொள்வார்கள். எருமையோ ஆற்றின் ஓரக்காலில் உள்ள சேற்றிலே விழுந்து புரண்டு அழுக்கை ஏற்றிக் கொள்ளும். அறிஞர்கள் ஆற்றில் நீர் ஓடும் இடத்துக்குச் சென்று குள்ளக் குளிர நீராடித் தூய்மை பெறுவார்கள்.

வினையை அனுபவித்துத் தீர்த்துக் கொள்ளும்படி இந்தப் பிறவியை இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிறான். நாமோ பழைய வினையை அநுபவித்துத் தீர்த்துக் கொண்டே புதிய வினையைச் சேர்த்துக்கொள்கிறோம். பழைய வினைக்குப் பிராரப்தம் என்று பெயர். தாம் ஈட்டும் புதிய வினைக்கு ஆகாம்யம் என்று பெயர். பிராரப்தத்தைக் கழித்துக் கொள்வதோடு நில்லாமல் ஆகாம்யத்தைக் கூட்டிக் கொள்கிறோம். இது அறியாமையின் விளைவு.

வெளிறு தோன்ற
வினை எனும் சரக்குக் கொண்டேன்.

வினைகளை அழிக்கும் பரிகாரங்களை நாம் நாடுவதில்லை.இப் போது அநுபவிக்கும் வினைப்பயனோடு நின்றுவிட்டால் இனிப் பிறவி வாராது.”வினைப் போகமே இந்தத் தேகம் கண்டாய்” என்று பட்டினத்தார் சொல்கிறார்.

ஒருவனுடைய மகன் வியாபாரம் செய்யப் புகுந்து அறியா மையினால் கடன் வாங்கிச் சுமத்திக் கொள்கிறான். கருணையுடைய தகப்பன் அவனுக்குப் பொருளைத் தந்து, “கடனை யெல்லாம் போக்கி விட்டுச் சாமர்த்தியமாக வியாபாரம் செய்து பொருளை ஈட்டு” என்று சொல்கிறான். அறிவற்ற அந்த பிள்ளை தந்தை தந்த பொருளைக் கொண்டு பழைய கடன்களைக் கொடுத்து மீண்டாலும், மறுபடியும் தன் அறியாமையால் புதிய கடன்களை வாங்கி இன்னலடைகிறான். இறைவன் தமக்கு இந்தப் பிறவியை அளித்து, தனு கரண புவன போகங்களை வழங்கி, பழைய வினையைப் போக்கிக்கொண்டு வினையற்றவனாக வா என்று அனுப்புகிறான். நாமோ பழைய வினையை அனுபவித்துக் கழித்துக் கொண்டிருக்கும் போதே புதிய வினைகளைச் சேர்த்துக் கொள்கிறோம்; வினைகளை அழிக்காமல் இருக்கிறேம்.

வினை எனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன்.

பொருளெல்லாம் அழிந்துக் கடனில் மூழ்கித் தத்தளிக்கும் போது, “இனி என்ன செய்வது?” என்று அயர்ந்து நிற்கிறோம். கடன் சுமையினின்றும் நீங்க வழி தெரியாமல் அலமந்து செயலொழிந்து அயர்ந்து வாடுகிறோம்.

அழித்திலேன்; அயர்த்துப் போனேன்;
அதிகை வீரட்டனீரே.

திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை நோக்கி இப்படி முறையிட்டுக் கொள்கிறார் அப்பர் சுவாமிகள்.

‘எனக்கு அகக்கண் அளித்திருக்கிறாய். ஆனால் அந்தக் கண் மூடியே கிடக்கிறது. இமையைத் திறந்து அகக் கண்ணால் பார்க்கும் ஆற்றல் எனக்கு இல்லாமல் போயிற்று. ஞானம் வந்தால் அகக் கண்ணின் இமை மூடிக் கிடக்காமல் திறக்கும்; மெய்ஞ்ஞானப் பார்வை உண்டாகும். அவ்வாறு இல்லாமல் அயர்த்துப் போய் நிற்கிறேன்’ என்று இரங்குகிறார் திருநாவுக்கரசர்.

கழித்திலேன் காம வெந்நோய்;
காதன்மை என்னும் பாசம்
ஒழித்திலேன்; ஊன்கண் நோக்கி
உணர்வுஎனும் விழிதி றந்து
விழித்திலேன்; வெளிறு தோன்ற
விளைஎனும் சரக்குக் கொண்டேன்;
அழித்திலேன், அயர்த்துப் போனேன்:
அதிகைவீ ரட்ட னீரே.

திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளிய எம்பெருமானே, காமம் என்னும் கொடிய நோயை நான் விடவில்லை; ஆசை என்னும் பாசத்தை ஒழித்து விடவில்லை; ஞானம் என்னும் அகக் கண்ணின் இமையைத் திறந்து விழித்துப் பார்க்கவில்லை; அறியாமை தோன்றும்படி புதிய வினைகளாகிய சரக்கை ஈட்டிக் கொண்டேன்; அவற்றை அழித்தேன் இல்லை.இப்போது எந்த வழியும் தெரியாமல் செயலொழிந்து அயர்ந்து போய் நிற்கிறேன்,

[வெந்நோய்-போக்கலாகாக் கொடுமையை உடைய நோய்; அசாத்திய வியாதி என்பர். காதன்மை- ஆசையாகிய தன்மை. பாசம் – பற்று. ஊண்கண் – உடலிலுள்ள புறக்கண். உணர்வு – ஞானம். இமை – ஞானக் கண்ணின் இமை ; முதலுக்குரிய செயலைச் சினைக்குரியதாகச் சொல்வது மரபு; “என் கை இளைத்ததோ?” என்று சொல்வது போலவும், ‘தலைக்கு ஒரு காசு பெற்றார்’ என்று சொல்வது போலவும் அமைந்தது இது. விழித்திலேன் – உண்முக விழிப்பைப் பெற்றிலேன். வெளிறு – ஒன்றும் இல்லாத வெறுமை; இங்கே அறியாமை; அறியாமை தோன்ற அதனால் விழிப்பைப் பெறவில்லை என்றும் கொள்ளலாம். வினை-ஆகாம்யம். வினையை அழித்திலேன் என்று பின்னும் வினையைக் கூட்டிப் பொருள் கொள்க. அயர்ந்து என்பதே அயர்த்து என்று வந்தது; ஒன்றும் செய்ய இயலாமல் ஓய்ந்து போய் நிற்கும் நிலை அது. வீரட்டனீரே: வீரட்டனார் என்பதன் முன்னலை ;ஏ,விளியுருபு.

காமநோய் வராமல் காத்து எதனிடத்தும் பற்று வையாமல் உண்முகக் கண்ணாகிய ஞானத்தைப் பெற்று அறியாமையைப் போக்கி வினைகளை நீக்கினால் இறைவன் திருவருளால் பேரின்பப் பெருவாழ்வு கிடைக்கும். இங்கே எதிர்மறையாக உள்ளவற்றை உடன்பாடாக்கினால் இந்தக் கருத்துத் தோன்றும்.]

நான்காம் திருமுறையில் 26-ஆம் திருப்பதிகத்தில் ஏழாவது திருப்பாட்டாக உள்ளது இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *