
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
27. நீதியார்
சிவபெருமான் தம் சடையில் மற்றவர் சூடாதவற்றைச் சூடியிருக்கிறார். அழகும் சிறப்பும் உள்ள பொருள்களைப் பிறர் அணியும்படி வழங்கிவிட்டு மற்றவர் அணியக் கூசுகின்றவற்றை அவர் அணிந்திருக்கிறார். தியாகிகள் இப்படித்தான் செய்வார்கள். சுயநலக்காரர்கள் நல்லவற்றை யெல்லாம் தாங்கள் எடுத்துக் கொண்டு அல்லாதவற்றை மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்க வருவார்கள். “அழுகல் பழம் ஐயருக்கு” என்ற பழமொழி இந்தக் கருத்தைத் தெரிவிக் கிறது.
இறைவர் கார்காலத்தில் மலரும் கொன்றை மாலையைச் சூடியிருக்கிறார், அதோடு கதிர் வீசும் பிறையையும் அணிந்துள்ளார். அரவுகளையும் புனைந்திருக்கிறார். அரவும் மதியும் ஒன்றற்கு ஒன்று பகையாக உள்ளவை, அவை இறைவருடைய சடையில் பகை உணர்ச்சி இன்றிச் சேர்ந்திருக்கின்றன. இறைவரிடம் ஈடுபட்டவர்கள் பகைத்தன்மை இல்லாமல் ஒன்றி யிருப்பார்கள் என்ற உண்மையை அந்தச் சேர்த்தி புலப்படுத்துகிறது. அங்கே கங்கையையும் வைத்திருக்கிறார். இவ்வாறு பலவற்றையும் ஒன்றுபடுத்தி வைக்கும் நீதியை உடையவர் எம் பெருமான்.
காருடைக் கொள்றை மாலை
கதிர் மதி அரவினோடு
நீருடைச் சடையுள் வைத்த
நீதியார்.
அவர் இடபவாகனத்தை உடையவர். தருமமே விடையாக நின்று அவரைத் தாங்குகிறது. அது யாரையேனும் எதிர்த்துப் பொருமானால் அந்தப் போர் நியாயத்தை நிலைநாட்டும் போராகவே இருக்கும்.
நீதி ஆய
போருடை விடை ஒன்று ஏற
வல்லவர்.
இத்தகைய எம்பெருமான் திருவிடைமருதூரைத் தம்முடைய வாசத்தலமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். அந்தத் தலம் காவிரியாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. அங்கே நிலவளமும் நீர்வளமும் சிறந்திருப்பதால் அங்கங்கே பொய்கைகளில், தாமரை மலர்கள் நன்றாக மலர்ந்து அழகு தோன்ற ஓங்கி நிற்கும். இறைவர் எழுந்தளியிருக்கும் திருத்தலத்தில் வளர்கிறோம் என்ற உணர்ச்சியினால் அப்படி மலர்கின்றனவோ? அடியார்கள் இறைவரைத் தரிசித்து முகம் மலர நிற்பார்கள். அந்தக் காட்சியை இந்தத் தாமரை மலர்கள் நினைவுறுத்துகின்றன.
ஏருடைக் கமலம் ஓங்கும்
இடைமருது இடம் கொண்டாரே,
இறைவருடைய திருவருள் இருந்தால் நீதியும் நேர்மையும் நிலவும். நீதியுடனும் நேர்மையுடனும் உள்ள அன்பர்கள் வாழும் ஊரில் நல்ல மழை பொழியும், பொய்கைகள் நிரம்பிப் பொலியும், அவற்றில் தாமரை மலர்கள் பூத்துத் தலை நிமிர்ந்து விளங்கும். இந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும் படி, திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் மகாலிங்கத்தைப் பாடுகிறார் அப்பர் சுவாமிகள்.
காருடைக் கொன்றை மாலை
கதிர்மதி அரவி னோடு
நீருடைச் சடையுள் வைத்த
நீதியார், நீதி ஆய
போருடை விடைஒன்று ஏற
வல்லவர்; பொன்னித் தென்பால்
ஏருடைக் கமலம் ஓங்கும்
இடைமருது இடம்கொண் டாரே,
கார் காலத்தைத் தான் மலரும் பருவமாக உடைய கொன்றை மலர்களால் ஆன மாலையையும், கதிர் வீசும் மதியையும், பாம்போடு சேர்த்து, கங்கை நீரை உடைய தம் சடையுள் வைத்த நீதி வடிவமாக உள்ளவர், நியாயமான போர் செய்தலை உடைய இடப வாகனம் ஒன்றின்மீது ஏறும் வன்மையை உடையவர், காவிரியாற்றின் தென்கரையில், தாமரை மலர்கள் மலர்ந்து அழகையுடைய உயர்ந்து விளங்கும் திருவிடைமருதூரைத் தம் இடமாகக் கொண்டு நித்தியவாசம் செய்கிறார்.
[கார் காலத்தில் கொன்றை மலரும்; “கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த், தாரன், மாலையன், மலைந்த கண்ணியன்” (அகநானூறு, கடவுள் வாழ்த்து). ‘கொன்றை மாலைக் கதிர்மதி’ என்பது ஒரு பாடம், அதற்கு, ‘கொன்றையையும் மாலையிலே தோன்றும் கதிரையுடைய பிறையையும்’ என்று பொருள் கொள்ளவேண்டும், நீர் என்றது கங்கையை நீதி நியதியுமாம். தருமதேவதை தீயவை செய்தாரை ஒறுக்கும், ஆகவே, ‘நீதியாய போருடை விடை’ என்றார். அறப் போர் என்று இதைச் சொல்வார்கள். எல்லோரும் தருமத்தை வாகனமாகக் கொள்ள இயலாது. தருமத்தை இறைவர் பாதுகாத்துத் தாங்குகிறார். அதனால் அது அவருக்கு வாகனமாக இருந்து தாங்குகிறது.
திருமாலே இடபமாக இருப்பதுண்டு. திருமால் உலகில் திருவவதாரம் செய்து பொல்லாதவர்களை அழித்து நியாயத்தை நிலைநாட்டினார். ஆதலின் இங்கே விடையென்றது திருமாலாகிய இடபத்தை என்றும் கொள்ளலாம். ஏர்-அழகு; எழுச்சியும் ஆம். ‘பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை” என்பது அப்பர் திருவாக்கு, இறைவர் பிறர் அணியாத சாதாரண மலராகிய கொன்றையை அணிந்திருந்தாலும் அவர் இருக்கும் இடத்தில் பூவினுட் சிறந்த தாமரைகள் மலர்ந்து விளங்குகின்றன.ஏ : ஈற்றசை.
நீதியார், வல்லவர். இடைமருது இடம் கொண்டார் என்று ஆற்றொழுக்காக முடித்துப் பொருள் செய்க.]
நான்காம் திருமுறையில் 35-ஆம் பதிகத்தில் மூன்றாவது பாட்டாக உள்ளது இது.



