அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

26. ஆவி வாழும் குடில்

ஒரு தகப்பனார் தம்முடைய மகனுக்கு ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்து அதில் அவனை வாழும்படி வைத்தார். அந்த வீடு சிறிய கூரை வீடு. அதற்கு இரண்டு தூண்களை நட்டு அவற்றின் மேல் அமைத்தார். இரண்டு பக்கங்களில் இரண்டு சார்புகளை அமைத்தார். பல கழிகளை வரிசையாகப் பரப்பி வைத்துக் கட்டினார். அவற்றின் மேல் வைக்கோலை வேய்ந்தார். சுற்றிச் சூழ நீரால் குழைத்த சுவரை வைத்தார். அதற்கு உள்ளே புகுவதற்கு ஒரு வாசலும் புறக்கடையில் ஒரு வாசலும் வைத்தார். அவை அந்தக் குடிசைக்கு ஏற்றவையாக அமைந்தன.

அந்தக் குடிலுக்கு ஏழ சாளரங்களை அமைத்தார். அதன் எழிலைப் பார்த்துத் தன் மகன், ‘இது நன்றாயிருக்கிறது’ என்று அதனிடம் விருப்பம் உண்டாகும்படி செய்தார். பிறகு அந்தக் குடிலில் தம் மகனைக் குடிபுகும்படி செய்தார்.

இப்படிச் சொன்னால் யாரோ ஒருவருடைய கதை போலத் தோற்றுகிறது. உண்மையில் ஒவ்வொரு மனிதனையும் இப்படி அமைத்திருக்கிறார், திருமறைக்காட்டில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான்,

அவர் கட்டிக்கொடுத்த வீடு உடம்புதான். இந்த உடம்பு நடக்கும் குடிசையாக இருக்கிறது. அது ஓர் அதிசயம். ரெயில்வேக்களில் எல்லா வசதிகளும் பொருத்திப் பல காலம் தங்கும்படி சில வண்டிகளை அமைப்பார்கள். அவ்வாறே இந்தக் குடிசை இருக்கிறது.

உலாவும் குடிசையாகிய இதற்கு இரண்டு கால்கள் இருக்கின்றன. அவையே ஓரிடத்தில் இருக்கவும் பிறகு வேண்டும் போது நகர்ந்து செல்லவும் அமைந்த சக்கரங்களைப் போலப் பயன்படுகின்றன.

கால் கொடுத்து.

இந்தக் குடிசையில் இரண்டு பக்கமும் இரண்டு சார்புகளைப் போலக் கைகள் இருக்கின்றன. குடிசை இயங்குவது ஆச்சரியம். இந்தக் கைகளை வேண்டும் போது மேலே தூக்கலாம்; வேண்டாத போது தாழ்த்திக் கொள்ளலாம். சில வீடுகளில் பக்கவாட்டில் சில அமைப்புகள் இருக்கும். அவற்றை வேண்டும் போது மேலே சென்று விரிந்து நிற்பதற்கும் வேண்டாத போது மடக்கிக் கொள்வதற்கும் ஏற்றபடி பொறிகளை அமைத்திருப்பார்கள். குடையை விரிப்பது போலவும் சுருக்குவது போலவும் அவற்றின் செயல்முறை இருக்கும். மறைக் காடனார் அமைத்த குடிலில் இருபக்கத்திலும் உள்ள அமைப்பும் இப்படியே இருக்கும். வேண்டும்போது உயர்த்தலாம்; நீட்டலாம்; வேண்டாதபோது இறக்கித் தாழ்த்திக் கொள்ளலாம்.

இரு கை ஏற்றி

இந்தக் குடிசையில் பல கழிகள் இருக்கின்றன. அவற்றுக்கு எலும்புகள் என்று பெயர். குடிசையில் எல்லாப் பாகங்களிலும் இந்தக் கழிகள் இருக்கும். கூரையில் இருக்கும்; வாசலில் இருக்கும்; படலில் இருக்கும்.

கழி நிரைத்து.

இந்தக் குடிசையின் சுவர்களில் தண்ணீரை விட்டுக் குழைத்த மண்ணை அப்பியிருக்கிறார். அதன் மேலே மெல்லிய தாக அழகிய பூச்சைப் பூசிப் பளபளக்கச் செய்திருக்கிறார். இறைச்சி என்பதே மேய்ந்த பொருள்; குருதியே நீர்; தோலே மேல் பூச்சு.

இறைச்சி மேய்ந்து
தோல் படுத்து உதிர நீரால்
சுவர் எடுத்து.

இந்தக் குடிசையில் உணவை உட்செலுத்தும் வாய் ஒரு வாசல். கழிக்க வேண்டியதைப் புறத்தே கழிக்கும் எருவாய் மற்றொரு வாசல். இந்த இரண்டையும் எப்படி வைக்க வேண்டுமோ அப்படிப் பொருத்தமாக வைத்திருக்கிறார்.

இரண்டு வாசல்
ஏல்வுடைத்தா அமைத்து.

இந்தக் குடிசையில் இரண்டு வாசல்களையல்லாமல் ஏழு சாளரங்கள் உண்டு. அவை கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று. இவை எல்லாம் சேர்ந்து நவத்துவாரங்கள் உள்ள குடிசை இது.

இத்தகைய குடிசையைக் கட்டித் தந்து இதிலே வாழ வேண்டும் என்ற ஆசையை மக்களுக்குக் கொடுத்திருக்கிறார் ‘இது இத்தனை சிறியதாக இருக்கிறதே! நன்றாக இல்லையே! இந்த அழுக்கு நிறைந்த இடத்தில் இனிமையாக வாழ முடியுமா?’ என்று எண்ணாமல், இது ஏதோ கிடைத்தற்கரிய அருமையான மாளிகை என்று எண்ணி இதில் வாழ்கிறோம். ஆவியாகிய நாம் இதில் வாழும்படி மறைக்காடனார் வைத்திருக்கிறார்.

மால் கொடுத்து ஆவி வைத்தார்.
மாமறைக்காடனாரே.

இது குறையுடையதென்றும், அழுக்கு நிறைந்ததென்றும், நிலையாததென்றும் நாம் நினைப்பதில்லை. மரணம் என்னும் பெருங்காற்று வீசினால் இந்தக் குடிசை நிலைகெட்டுச் சிதறி வீழும்; உள்ளே இருப்பவராகிய உயிர் வேறு குடிசையைத் தேடிப் போய் விடுவார். இவற்றை எண்ணாமல் இந்த உடம்பே சதம் என்று எண்ணி இதைப் பேணிப் பாதுகாத்து வைத்துக் கொள்கிறோம். உயிர் என்றும் புகுந்து இன்புற்று வாழும் நிலையான வீடு ஒன்று உண்டு என்பதை அறிந்து கொள்வதில்லை. அப்படி ஒன்று இருக்கிறதென்று பெரியவர்கள் சொன்னால் அதை நம்புவதில்லை.

ஞானம் பெற்றவர்கள் இந்த உடம்பாகிய வீடு நிலையாதது என்பதை உணர்ந்து நிலையான வீடாகிய முத்தியைப் பெற முயல்வார்கள். இறைவன் திருவருளால் அத்தகைய நெறியில் நிற்கும் நல்லறிவு அவர்களுக்கு உண்டாகும்.

ஒருபூ தரும் அறி யாத்தனி வீட்டில்உரை
உணர்வு அற்று
இருபூத வீட்டில் இராமல்என்றான்

என்று அருணகிரியார் பாடுகிறார். அந்தத் தனி வீட்டிலே புகும் முயற்சியே பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் என்று வெவ்வேறு வகையாக இருக்கும்.

மெய்யறிவுடையவர்கள், ‘இந்த ஆபாசக் கொட்டிலில் இருக்க வேண்டியிருக்கிறதே!’ என்ற அருவருப்போடிருப்பார்கள். “அருவருக்கும் உலக வாழ்வு” என்று குமரகுருபரர் பாடுகிறார், ஆனால் பெரும்பாலோர் இந்த உடம்பிலே மோகம் கொண்டு, இதனால் பெறும் சிற்றின்பமே இன்பம் எனக் கொண்டு வாழ்கிறார்கள். முன் வினைக்கு ஏற்றபடி இந்த உடம்பைக் கொடுத்த மறைக்காடனாருக்கு இதில் வாழ்ந்து, இதன் குறைபாடுகளை நன்கு அறிந்து, நிலையான வீட்டில் வாழ வேண்டும் என்று முயன்று, அதை அடையச் செய்ய வேண்டும் என்பதே திருவுள்ளம். ஆனால் இந்த உடம்பாகிய குடிசையின் இழிவை எண்ணாமல் உயிரானது இதிலே ஆசை வைத்து மயங்கி வாழ்கிறது. இறைவர் செய்யும் திருவிளையாடல் இது.

கால்கொடுத்து இருகை ஏற்றிக்
கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல்படுத்து உதிர நீரால்
சுவர்எடுத்து இரண்டு வாசல்
ஏல்வுடைத் தாஅ மைத்துஅங்கு
ஏழுசா லேகம் பண்ணி
மால்கொடுத்து ஆவி வைத்தார்
மாமறைக் காட னாரே.

பெருமையையுடைய திருமறைக்காட்டில் எழுந்தருளிய சிவபெருமான், குடிசையைத் தாங்கும் தூண்களைப் போல இரண்டு கால்களைக் கொடுத்து, இருபக்கத்திலும் இரண்டு சார்புகளைப் போல இரண்டு கைகளை மேலே ஏற்றி வைத்து, எங்கும் கழிகளைப் போல எலும்புகளை வரிசை வரிசையாகப் பொருத்தி, ஊனென்னும் கீற்றல் வேய்ந்து, மேலே தோல் பூச்சைப் பூசி, இரத்தம் என்னும் நீரினால் குழைத்துச் சுவர்களாகிய உடம்பின் உறுப்புக்களை அமைத்து, வாய், மலங் கழிக்கும் இடமாகிய இரண்டு வாசல்களைப் பொருத்தமுடை யனவாக அமைத்து, அந்தக் குடிசையில் கண் இraண்டு, காதுகள் இரண்டு, நாசித்துளை இரண்டு, சிறுநீர் கழிக்கும் உறுப்பு ஒன்று ஆகிய ஏழு சாளரங்களை வைத்து, இந்தக் குடிசையில் வாழவேண்டுமென்ற ஆசையைக் கொடுத்து இதனுள் உயிரை வைத்தார்.

[குடிசையைக் கட்டும் முறையில் சொல்லாமல் முன் பின்னாக வைத்தார் செய்யுளாதலின். பொருள் தொடர்பு அமையும்படி, ‘உதிர நீரால் சுவர் எடுத்து, கால் கொடுத்து, இரு கை ஏற்றி, இரண்டு வாசல் ஏல்வுடைத்தா அமைத்து, ஏழு சாலேகம் பண்ணி, இறைச்சி மேய்ந்து ஆவி வைத்தார், என்று அந்வயம் செய்து கொள்ளவேண்டும்.

கால்-உடம்பிலுள்ள கால், கம்பம், கை-கரம், வீட்டில் இரு பக்கங்களிலுள்ள சார்பு கழி-எலும்பு, குச்சிகள். நிரைத்து- வரிசையாக வைத்து. இறைச்சியாகிய கூரை. வேய்ந்து என்பது மேய்ந்து என்று மருவியது; வழக்குச் சொல். தோல் படுத்து. தோலை விரித்தமைந்து. இரண்டு வாசல்-முன்வாசல் பின் வாசல்; வாயும் குதமும்.ஏல்வு – பொருத்தம். உடைத்தா ஒருமை பன்மை மயக்கம். அமைத்தலுக்கு அடையாக்கினால் அம் மயக்கம் இல்லை.சாலேகம் – சாளரம். மால்-ஆசை, விருப்பம். ஆவி – உயிர். ஏகாரம், ஈற்றசை. முற்றும் உருவகமாக இல்லாமல் ஏகதேச உருவகமாக அமைந்த பாட்டு இது.]

நான்காம் திருமுறையில் 33-ஆம் பதிகத்தில் உள்ள நான்காவது திருப்பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *