அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

2. காதற் கனல்

இறைவனைத் தொழுது வணங்கி வழிபடும் முறைகள் பல உண்டு. கைகூப்பித் தொழுதல், தொழுத கை தலைமேல் ஏறக் கூப்பி வணங்குதல், பஞ்சாங்க நமஸ்காரம். சாஷ்டாங்க நமஸ்காரம் என்பவை அவற்றில் சில. தொண்டர்கள் அழுதும் தொழுதும் புனலால் திருமஞ்சனம் செய்தும் அருச்சித்தும் அலங்காரம் பண்ணியும் பல வகையில் இறைவனிடம் ஈடுபடுவார்கள். இவ்வாறு செய்யும் வழிபாட்டு முறைகளில் எளிதாக இருப்பது கைகூப்பி வணங்குதல்.

தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி

என்று கைகூப்பித் தொழுவதை மணிவாசகர் எடுத்துரைப்பார். கைகளை இணைத்துக் கூப்பி நின்று மனம் ஒன்றி நினைப்பவர் களுக்கு அவன் அருள் பாலிப்பான்; அவர்களுக்குக் காட்சி யளித்து அருள் செய்வான்.

தொழற்கு அங்கை துன்னி நின்றார்க்குத்
தோன்றி அருள வல்லானும்.

இறைவனிடத்தில் பக்தி கொண்டு மலர் தூவி வழிபடுவர்களிடம் உள்ள பேரன்பைக் காதல் என்றும் சொல்வதுண்டு.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி

என்று சொல்வார்கள். அந்தக் காதலும் காமத்தைப் போன்றது தான். இறைவனுடைய காதலை உடையவர்களுக்கு வேறு எந்த உணர்வும் இராது. அது ஒரு வகைக் கனல். அது உள்ளத்தில் தோன்றிவிட்டால் கனலைப் போல எழுந்து மற்ற உணர்வுகளையெல்லாம் அழித்துவிட்டு மீதூர்ந்து நிற்கும்

தம்முடைய கரங்களில் பல வகை வண்ணமும் மணமும் கொண்ட மலர்களைக் கொண்டு இறைவன் கழலைத் தொழுபவர்கள் உள்ளத்தில் அந்தப் பக்திக் கனல் சுடர்விட்டு எரியும். கையிலே தண்மையான மலரை ஏந்தி இறைவனை அருச்சிப் பவர்கள் கருத்தில் அந்தப் பக்திக் கனல் மூண்டு, பொய்யான எண்ணங்களையும் ஆசையையும் எரித்துச் சுடர்விட்டு நிற்கும். அத்தகைய காதல் தீயை உள்ளத்தில் வைத்து அது கனலாக நின்று எரிய வழிபடுபவர்களுக்கு முன்னால் இறைவன் வந்து நிற்பான்,

கழற்கு அங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்ற நின்றானும்.

“தானம் குலம் கல்வி” முதலிய பத்தையும் எரித்துத் போக்கிப் பசி என்னும் தீ எழுந்து வருத்தும் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன் பால் கொண்ட காதல் என்னும் தீ உள்ளத்தில் கொழுந்து விட்டு எரியுமானால் அங்கே உள்ள மற்றத் தீய எண்ணங்கள் யாவும் அந்தக் கனலில் எரிந்து சாம்பலாகிப் போய்விடும். அந்தக் காதல் ஒன்றே தனிச்சுடராக நின்று ஒளிரும். அவர்களுக்குப் பரஞ்சுடராகிய ஆண்டவன் தன் திருக்கோலத்தைக் காட்டியருளுவான்.

அன்பர்களின் உள்ளத்தில் எழும் பக்திக்கனலை உகந்து அருள்புரியும் அப்பெருமான் தன் திருமுடியில் தண்மையான கங்கையை வைத்துள்ளான். கங்கையென்னும் நீர்மகளைத் தன் அழகிய சடாபாரத்தில் மறைத்து வைத்திருக்கிறான். உமாதேவி கண்டால் ஊடல் கொள்வாள் என்ற எண்ணமோ?

குழற் கங்கையாளை உன் வைத்துக்
கோலச் சடைக் கரந்தானும்.

கங்கையென்னும் மகளுக்கும் கூந்தல் உண்டு, கருமணல் ஆற்றில் விரவியிருக்கும். அது கூந்தலைப் போலக் காட்சி தரும். அன்றிப் பெண் உருவத்தில் இறைவன் திருமுடியில் உள்ள கங்காதேவிக்கும் கூந்தல் இருக்கத்தான் இருக்கும். அத்தகைய கூந்தல் உடையவளைத் தன் சடாபாரத்தில் மறைத்து வைத் திருக்கிறான் இறைவன்.

திருமுடியிலே குளிர்ந்த கங்கையை வைத்துள்ள பெருமான் தன் திருக்கரத்திலே வெம்மையான அக்கினியை ஏந்திக் கொண்டு கோலம் காட்டுகிறான். ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட பொருள்கள் பல அவனிடத்தில் வேறுபாடின்றி விளங்குகின்றன. தண்மையான பொருளாகவும் வெம்மையான பொருளாகவும் இருப்பவன் அவன். அவனிடம் இப்படி மாறுபட்ட பொருள்கள் தெய்வத் தன்மை பெற்று விளங்குகின்றன. திருமுடியில் உள்ள தண்மையான கங்கையும் திருக்கரத்தி லுள்ள வெம்மையான அழலும் இந்த உண்மையைப் புலப் படுத்துகின்றன.

அழற்கு அங்கை ஏந்த வல்லானும்.

இவ்வாறு காட்சி அளிக்கும் பெருமானாகத் திருவாரூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் காண்கிறார் அப்பர் சுவாமிகள்.

குழற்கங்கையானை உள் வைத்துக்
கோலச் சடைக் கரந்தானும்
அழற்கங்கை ஏந்த வல்லானும்
ஆரூர் அமர்ந்த அம்மானே.

இயல்பாக மாறான தன்மையுள்ள பொருள்கள் இறைவனைச் சார்ந்த பிறகு யாவும் சிவமயமாகின்றன. உலகியலில் ஈடுபட்டு வெவ்வேறு நுகர்ச்சிகளைப் பெறும் பொறிகளும் கணத்துக்குக் கணம் எங்கெங்கோ ஓடித் திரியும் மனமும் இறைவனுடைய தொடர்பு பெற்றுவிட்டால் யாவும் இறைமயமான உணர்விலே ஒன்றி நிற்கும். இதைப் பசுகரணங்கள் பதி கரணங்களாக மாறுவது என்று சாத்திரங்கள் கூறும்.

ஆரூரில் எழுந்தருளியிருக்கும் தனித்தலைவனாகிய எம்பெரு மானிடத்தில் ஈடுபட்ட பொறிகளும் மனமும் தம் இயல்புகள் மாறி யாவும் அவனுடைய தொடர்பினால் அவன் மயமாக நின்று இன்ப வாழ்க்கையைப் பெறத் துணையாக நிற்கும். பிறரைப் பலவிதமாக அலைத்துத் துன்புறுத்தும் பேயை வசப்படுத்திவிட்டால், பிறகு அது நாம் இட்ட ஏவல்களை யெல்லாம் அவ்வாறு உடம்பாலும் செய்யும் என்று சொல்வார்கள். உள்ளத்தாலும் இறைவனை வழிபடும் அன்பர்களுக்கு, முன்பு உலகியலில் அவர்களை ஈர்த்து அலைத்த பொறிகளும் மனமும் அடங்கி அவர் ஏவல் வழி நிற்கும். ஆரூர் அமர்ந்த அம்மான் இத்தகைய அற்புதத்தை அடியார்களிடம் நிகழும்படி செய்ய வல்லவன். இவற்றையெல்லாம் எண்ணி இன்புறும்படி பாடுகிறார் திருநாவுக்கரசர்.

தொழற்கு அங்கை துன்னிநின் றார்க்குத்
தோன்றி அருளவல் லானும்
கழற்கு அங்கை பன்மலர் கொண்டு
காதல் கனற்றநின் றானும்
குழற்கங்கை யாளைஉன் வைத்துக்
கோலச் சடைக்கரந் தானும் அழற்கு
அங்கை ஏந்தவல் லானும்
ஆரூர் அமர்ந்தஅம் மானே.

திருவாரூரில் எழுந்தருளிய தலைவனாகிய சிவபெருமான் தொழும் பொருட்டுத் தம் அழகிய கைகளை இணைத்து நின்று அன்பு செய்ய வல்லவர்களுக்குத் தன் தோற்றத்தைக் காட்டி அருள வல்லவனும், தன் திருவடியை அருச்சிக்கும் பொருட்டு வடிவாலும் வண்ணத்தாலும் நறுமணத்தாலும் பல வகையாக உள்ள மலர்களைக் கையிற் கொண்டு, உள்ளத்திலே இடை யறாத பக்திக்கனல் பிற மாசுகளை எரித்து நின்று கொழுந்துவிட நிற்பவர்களின்முன் கோலம் காட்டி நின்றவனும், தன் அழகிய சடாபாரத்தில் கூந்தலையுடைய கங்காதேவியை உள்ளே வைத்து மறைத்திருப்பவனும், காலைத் தன் அழகிய உள்ளங் கையில் ஏந்த வல்லவனும் ஆவான்.

[தொழுதல் கையின் செயல். அங்கை – அழகிய கை, கைக்குத் தானம் செய்வது அழகு; ‘என் செயலாவதுயாதொன் றும் இல்லை. எல்லாம் நின் செயலே’ என்பதைக் காட்டச் செயலிழந்து கையை இணைத்துக் கூப்பி நிற்பது எல்லாவற்றையும் விட அழகு. அதனால் தொழுவார். கைகள் அழகிய கைகள் ஆயின. கழற்கு-திருவடியை அருச்சிப்பதற்கு, அங்கையில் பல மலரைக் கொண்டு. காதல்- பிறவற்றிலே உள்ளம் செல்லாமல் இறைவனையே எண்ணி நிற்கும் இயல்பு. கனற்ற-எரிய, பக்தி யென்னும் உணர்வு எழுந்தவர் உள்ளத்தில் காமம் முதலிய மாசுகள் அழிந்து விடும், நெருப்பிலே எல்லாம் வெந்து ஒழிய அதுமட்டும் கொழுந்துவிட்டு நிற்பது போல; பக்தியுணர்வு ஓங்கி நின்றால் பிற மாசுகளெல்லாம் அழிந்தொழியும். நின்றான் – அவ்வாறுள்ள பக்திக் கனலை உடையவர்முன் எழுந்தருளிக் கோலம் காட்டி நின்றவன்.

உள்வைத்து – சடைக்குள்ளே வைத்து. கோலம் – அழகு அழற்கு-அழலை; உருபுமயக்கம். அழலை அங்கையில் ஏந்த வல்லான்; அங்கை – உள்ளங்கை; அழகிய கை எனலும் ஆம். ஆரூர்அமர்ந்த அம்மான்; எழுவாய். ஆவான் என்று ஒருசொல்லை வருவித்துக் கூட்டி முடிக்க. அம்மானே: ஏகாரம், அசைநிலை; தேற்றமும் ஆம். ஆரூரில் அமர்ந்தான் என்றது தியாகராசப் பெருமான் இருந்த கோலத்தில் எழுந்தருளியிருப்பதை ..எண்ணி.]

இறைவன் அடியவர்களுக்கு முன்வந்து காட்சியளிப் பவன் என்பதும், மாறுபட்ட பொருள்களையும் இணைத்து வைக்கும் ஆற்றலுள்ளவன் என்பதும் இந்தத் திருப்பாட்டால் புலனாகின்றன.

இது நான்காம் திருமுறையில் 4-ஆம் திருப்பதிகத்தில் உள்ள ஏழாவது பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *