
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
5. மனத்தே வைத்தேன்
நாம் நம் மனத்தில் எத்தனையோ ஆசைகளை வைத்திருக்கிறோம். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்கள் அதில் நிரம்பியுள்ளன. குப்பை போன்ற இந்தத் தீய குணங்கள் நிரம்பிய குப்பைத் தொட்டியாக இருக்கிறது, நம் மனம். குப்பை நிறைந்த இடத்தை யார் அணுகுவார்கள்? அதில் மேலும் மேலும் குப்பையைத் தான் கொட்டுவார்கள். அந்தக் குப்பைத் தொட்டியில் நல்ல பொருள் ஏதும் இருக்க இடம் இல்லை.
பிறருக்கு நம்மிடத்தில் உள்ளதைக் கொடுப்பது நல்ல பண்பு. நல்லவர்களுக்கு நம் வீட்டில் இடம் கொடுத்துத் தங்கச் செய்வதால் அவர்களுடைய ஆசி நமக்குக் கிடைக்கும். அப்படியின்றி உள்ளதை ஒளித்து வைத்துக்கொண்டு யாரேனும் ஏதாவது கேட்டால் இல்லையென்னும் வஞ்சகர்கள் உள்ளம் உலோபம் நிரம்பியது. அத்தகைய வஞ்ச நெஞ்சத்தில் நல்ல பொருள் இராது. எங்கும் இருக்கும் இறைவன் அவர்களு டைய நெஞ்சத்தில் இருந்தாலும் அவர்கள் காணமுடியாதபடி ஒளிந்து நிற்பான்; அவர்கள் உள்ளத்தில் இருந்துகொண்டே அவர்களுக்கு அரியவனாக இருப்பான்.
கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானை.
அவ்வாறு இன்றித் தம்மிடம் உள்ளவற்றை ஈபவர்கள் தாராள புத்தி உள்ளவர்கள். அத்தகையவர்கள், “இன்னும் கொடுக்க நம்மிடம் பொருள் இல்லையே!” என்று வருந்துவார்கள். “நம்மிடம் கொடுப்பதற்கு இன்னும் என்ன இருக்கிறது?” என்று எண்ணி எண்ணிக் கிடைத்ததைக் கொடுப்பார்கள். அவர்களை,
“ உள்ளி உள்ளஎல் லாம்உவந்து ஈயும் அவ்
வள்ளியோர்“
என்று கம்பர் பாடுவார். அவ்வாறு ஒளித்து வைக்காமல் கொடுக்க எண்ணும் உள்ளம் விரிந்த உள்ளம். அங்கே இறைவன் தங்கி விரவி நிற்பான்.
கரவார்பால் விரவாடும் பெருமானை.
இவ்வாறு உள்ள பெருமான் யார்? அவனை அடையாளம் காட்டுகிறார் அப்பர் சுவாமிகள். அவன் தர்மத்தையே இடப வாகனமாகக் கொண்டு ஏறி அடியார்களுக்கு அருள் செய்ய வருகிறவன்; எல்லாம் அறிந்த வித்தகன். தர்மம் இறைவனால் காப்பாற்றப்படுகிறது. தன்னை ஓம்பிப் பேணும் அவ்விறைவனுக்குத் தானே வாகனமாக அந்தத் தர்மம் இருக்கிறது. தன்னைத் தாங்கிப் போற்றும் பெருமானைத் தான் வாகனமாக இருந்து தாங்குகிறது. அதன்மேல் அவன் ஊர்ந்து வருகிறான்.
விடை ஏறும் வித்தகனை.
விடையாகிய எருது வயல்களை உழுது பயிரிட உதவி செய்கிறது. அதனால் நெல் விளைகிறது. அவ்வாறு விளைந்த நெல்லை மனிதர்கள் உண்ண வழங்கிவிட்டுத் தான் எஞ்சிய வைக் கோலைத் தின்கிறது.
“உழுதநோன் பகடு அழிதின் றங்கு“
என்று பரோபகாரிகளுக்கு உவமை கூறுவர். தம்மிடம் உள்ளவற்றைப் பிறருக்கு அளித்து எஞ்சியதை நுகரும் பெருந்தகையாளரைப் போல இருக்கிறது அந்த இடபம், கரவார்பால் விரவாடும் பெருமான், தன் ஆற்றலைக் கரவாமல் பிறர் பயன்படுத்திக் கொள்ளும்படி செய்யும் விடையையே வாகனமாகப் பெற்றிருக்கிறான்.
அவன் நள்ளிரவில் நட்டம் ஆடுகிறவன். உயிர்களெல்லாம் உழைத்துக் களைத்து உறங்கும் அந்த வேளையில், அந்த உயிர்கள் கவலைகளை மறந்து உறங்குவதைக் கண்டு மகிழ்ந்து அவன் ஆடுகிறான். குழந்தைகளுக்கு உணவளித்து உறங்கப் பண்ணிய பிறகு தான் தூங்காமல் தன் குழந்தைகள் உறங்கும் அமைதியைக் கண்டு மகிழும் தாய் போல அவன் இருக்கிறான்.
அவன் ஆடும்போது அவன் அணிந்துள்ள ஆபரணமாகிய பாம்புகள் ஆடுகின்றன. அவனுடைய சடைகள் தொங்கி ஆடுகின்றன. தன் கையில் அனலை ஏந்திக்கொண்டு அவன் ஆடுகிறான். எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துவது அனல்.
அதனை அவன் கையில் வைத்திருக்கிறான். அதனோடு அவன் ஆடுகிறான்.
அரவு ஆடச் சடை தாழ
அங்கையினில் அனல் ஏந்தி
இரவு ஆடும் பெருமானை.
இரவில் அவன் ஆடும்போது அவன் கையில் அனல் சுடர்விடுகிறது. ஆதலின் அந்த நள்ளிருளிலும் அவன் ஆடுவது நன்றாகத் தெரிகிறது. “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே” என்பது திருவாசகம்.
இரவிலே அனல் ஏந்தி ஆடும் பெருமானை அப்பர் சுவாமிகள் தம் உள்ளத்தே வைத்துக்கொண்டாராம். நம்முடைய மனத்தில் இருள் செறிந்து கிடக்கிறது; அறியாமை என்னும் இருள் அடர்ந்திருக்கிறது. இருள் செறிந்த இடத்தில் எந்தப் பொருளும் தெரியாது. அறியாமை இருள் செறிந்த நம் மனத்திற்கு மெய்ப்பொருள் இன்னதென்று தெரியாது. அங்கே ஒளி புகுந்தால்தான் பொருளின் நிலை கண்டு தெளிவு பிறக்கும்.
அப்பர் சுவாமிகள் இரவில் அனல் ஏந்தி ஆடும் – பெருமானைத் தம் மனத்தில் வைத்துக் கொண்டார். மற்றவர் மனத்தில் சிறைப்பட்டுக் கிடப்பவனைப் போல் உள்ள பெருமான் அன்பர்கள் உள்ளத்தில் தனக்கு வாய்ப்பான இடம் கிடைத்ததே என்று மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடுகிறான். அவன் அனலேந்தி ஆடுவதனால் அவ்விடத்தில் இருள் இருப்பதில்லை. குப்பைகள் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. குப்பைத் தொட்டியில் நெருப்பைப் போட்டால் அது குப்பையை எரித்து விட்டுச் சுடர்விடும். நாமோ குப்பைத் தொட்டியில் மேலும் குப்பைகளைக் கொட்டுகிறோம். அப்பர் சுவாமிகளைப் போன்றவர்களோ அனலேந்தும் பெருமானை வைக்கிறார்கள். குப்பைக்குத் தீ வைத்தது போல அந்தச் செயல் அமைகிறது. அனலேந்தும் பெருமானை வைத்த மனம் மாசு நீங்கித் தூய்மை பெறுகிறது. கள்ளியும் முள்ளியும் முள்மரமும் படர்ந்த காட்டிலே தீயை வைத்தால் எல்லாம் எரிந்து போக, அவ்விடம் சுத்தமாகிவிடுகிறது. செறிவான காட்டிலே பயிர் செய்ய விரும்புகிறவர்கள் அந்தக் காட்டை எரித்துவிட்டு உணவுப் பயிரை விளைவிப்பார்கள். கரவாடும் வன்னெஞ்சர் மனம் அந்தக் காடு போன்றது. பிறர் பறிக்க முடியாமல் முள் அடர்ந்த ஈச்சமரக் காடு போன்றது என்று கூடச் சொல்லலாம்.
இறைவனை உள்ளத்தே வைத்தவர் திருதாவுக்கரசர்.
இரவாடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே!
அதனால் அவர் மனத்தில் குப்பை இல்லை. சுத்த வெளி யாகிவிட்ட அங்கே ஆண்டவன் களிக் கூத்தாடுகிறான். குப்பைக் காடாக இருந்த அந்த உள்ளம் இப்போது இறைவன் ஆடும் நடன அரங்கு ஆகிவிட்டது.
கரவாடும் வன்னெஞ்சர்க்கு அரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடைஏறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ அங்கையினில் அனல்ஏந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே!
தம்மிடம் உள்ளதைப் பிறருக்கு ஈய விருப்பமின்றி ஒளிந்தலைச் செய்யும் வன்மையான நெஞ்சை உடையவர்களுக்கு அறிவதற்கு அரியவனும், அவ்வாறு கரக்காமல் உள்ளதை வழங்கும் உத்தமர்களிடம் விரவுதலைச் செய்யும் பெருமானும்; இடபத்தில் ஏறிவரும் சர்வக்ஞனும், தான் அணிந்த பாம்புகள் ஆடவும் சடை தொங்கி ஆடவும் அகங்கையில் அனலை ஏந் திக் கொண்டு நள்ளிரவில் நடனம் செய்யும் பெருமானுமாகிய சிவபிரானை என் மனத்துள் வைத்தேன். (இனி எனக்கு யாதொரு குறையும் இல்லை.)
[கரவு-ஒளித்தல், ஆடும்-செய்யும், “கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்” என்று பிறிதோரிடத்தில் பாடுவார் திருநாவுக்கரசர். பிறருடைய வறுமை கண்டு நெஞ்சம் இளகுதல் நல்லோர் இயல்பு. கொடிய வறுமையால் அல்லற்படுவோரை நேரே கண்டும், அவர் கேட்ட போது கொடாமல் உள்ளதைக் கரந்து நிற்பவர் மனம் இரக்கமில்லாத மனம். அதனால் அவர்களை வள்னெஞ்சர் என்றார். விரவு ஆடும் – விரவுதலைச் செய்யும்; அவர்களோடு கலசி அருள் பாலிக்கும். விடை-இடபம். வித்தகன் – சகல கலைகளையும் உணர்ந்த சர்வக்ஞன். அங்கை-உள்ளங்கை; அழகிய கை. என்றும் கொள்ளலாம். இருட்டில் ஆடுவான், அந்த நேரத்தில் வருவார் தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்படி அனல் ஏந்தி ஆடுகிறான். இரவில் ஆடும்.
தம் மனத்தே வேறு எதையும் வைக்காமல் பெருமானையே வைத்து, வறியவன் பெற்ற செல்வத்தைப் போலவும் மலடி பெற்ற மகவைப் போலவும் பாதுகாக்கிறவர் அப்பரடிகள். பெருமானையே என்ற பிரிநிலை ஏகாரம் தொக்கது. வைத்தேனே: ஏகாரம், ஈற்றசை.
இறைவனை என் மனத்தில் வைத்துக் கொண்டமையால் எனக்கு ஒரு குறையும் இல்லை என்பது குறிப்பு. எண்ணினேன், நினைத்தேன் என்று சொல்லாமல் வைத்தேனே என்றார், அந்தப் பெருமானைப் பெருஞ்செல்வமாக வைத்துப் போற்றுதலை எண்ணி. வைப்பு என்பது சேமித்து வைக்கும் பொருளுக்குப் பெயர். பொருளைச் சேமித்து வைத்தவருக்கு அதனை ஈட்ட இயலாத எய்ப்பு வரும்போது ஈட்டி வைத்த செல்வம் உதவும். அதனால் அதனை எய்ப்பினில் வைப்பு என்று: சொல்வது மரபு. இறைவனை மனத்தில் வைப்பாகக் கொண்டிருத்தலால் எய்ப்பு வந்தாலும், அல்லற்படாமல் அந்த வைப்புப் பயன்படும் என்பது குறிப்பு. “எய்ப்பென்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே” (பெரியாழ்வார் திருமொழி) என்பது போன்றது இது. ]
தேவாரத்தில் நான்காம் திருமுறையில் ஏழாம். திருப்பதிகத்தில் உள்ள முதற்பாட்டு இது.



