அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

8. கைவிட முடியுமா?

நம்முடைய மனத்தில் எத்தனையோ ஆசைகள் இருக்கின்றன. சில ஆசைகள் அடிக்கடி கிளர்ந்து எழுகின்றன. சில ஆசைகள் உள்மனத்தே அடங்கியிருக்கின்றன. அந்த ஆசைகள் எப்போதாவது வெளிப்படும். உறங்கும்போது, அவை எழுந்து கனவிலே தலை நீட்டுகின்றன. நாம் எதற்காக ஏங்குகிறோமோ, அது கனவில் வந்து நிற்கும். எதிலே அதிகமாகப் பயின்று மனத்தைப் பதித்து வாழ்கிறோமோ, அதுவும் நம் கனவிலே வந்து எதிர்ப்படும். நனவிலே நல்ல எண்ணங்களை நினைத்துக் கொண்டிருந்தாலும் கனவிலே தீய எண்ணங்களும் அநுபவங்களும் மேலே மிதந்து வந்து நிற்கின்றன. ஆழமாக ஒன்றை நினைத்திருந்தால் அது நனவிலும் கனவிலும் வரும்.

பெரும்பாலும் நனவில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் கனவில் வரும் நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பே இருப்பதில்லை. நனவில் கோவையாக எண்ணம் இடுகிறோம். கனவில் அப்படி இருப்பதில்லை. மலைமேல் நடப்பதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும்போது திடீரென்று அந்தக் காட்சி மாறி ஆற்றங்கரையில் இருப்பதாகத் தோன்றும். கை நிறையப் பொன்னை வைத்திருக்கும் காட்சி தோன்றும்; உடனே ஒரு பாம்பு நம் முன் படம் எடுத்து ஆடுவது போன்ற காட்சி வரும். தொடர்பற்ற சிறு சிறு நிகழ்ச்சிகளே பெரும்பாலும் கனவில் வரும். நனவிலும் கனவிலும் ஒரு குறிப்பிட்ட எண்ணம் தோன்றுமாயின் அந்த எண்ணம் நம் உள்ளத்திலும் அடிமனத்திலும் வேரூன்றி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

காம வயப்பட்டவர்கள் நனவிலே அந்த உணர்ச்சியோடு இருப்பார்கள். கனவிலே மங்கையரோடு கூடி மகிழ்வார்கள். அவர்களுடைய உள்ளத்தில் அந்த உணர்ச்சி பதிந்து நிற்கிறது என்பதற்கு இது அடையாளம்.

இறைவனிடம் ஈடுபட்டு அவன் சரண் அல்லால் சரண் இல்லை என்று நம்பி மனத்தாலே இறுகப் பற்றிய மெய்யன்பர்களுக்கு நனவிலும் அந்தப் பிடிப்புத் தளராமல் இருக்கும்; கனவிலும் அந்த உணர்வு எழும். மற்றவர்கள் ஜாக்கிராவஸ்தையில் இறைவனைப் பாடியும் தொழுதும் வழிபட்டு நின் றாலும், கனவில் அந்தக் காட்சிகள் வராமல் காமம், குரோதம் ஆகிய பேய்கள் தலையெடுத்துக் கூத்தாடும்.

அப்பர் சுவாமிகள் நனவிலும் கனவிலும் இறைவனையே எண்ணி வாழ்கிறவர். அவன்பால் கொண்ட காதல் அவர் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி நிற்கிறது. துயிலும் பொழுதும் அந்த உணர்வு மாறுவதில்லை. அப்போதும் அவளையே காண்கிறார். இறைவனிடம் காதல் கொண்டு எப்போதும் அவனையே நினைந்து வாழும் மங்கையாகத் தம்மை ஆக்கிக் கொண்ட இந்த அநுபவத்தைச் சொல்கிறார்.

இறைவன் எல்லோருக்கும் நலம் பாலிப்பவன். தன்னைச் சரணாக அடைந்தவர்கள் எத்தகையவர்களானாலும் அவருடைய மனத்தினுள்ளே நின்று நிலைபெற்றுக் காட்சி தருபவன். அவனையன்றிப் பாசத்தினின்றும் துன்பங்களினின்றும் விடுதலை பெற்று வாழ்வது அரிது.

மண்ணுலகத்தில் பொருந்தி வாழும் மக்கள் அவனைத் தியானித்து வாழ்வார்களானால் அவன் அவர்களுக்குப் பிறப்பு இறப்புக்களினின்றும் விடுதலை அளித்துப் பெறற்கரும் பேற்றை வழங்குவான். அந்த வீடு பேறு வேறு அன்று, அவனே அந்தப் பேரானந்தமாக விளங்குகிறான்,

மண் பொருந்தி வாழ்பவர்க்கும்
வீடுபேறாய் நின்றான்.

வேதம் ஓதி வேள்வி புரிந்து தூய்மையே வடிவாக நிற்கும் வேதியர்கள் வேதத்தின் பொருளாகவும் வேள்வியின் பயனாகவும் இருப்பவன் இறைவனே என்று உணர்ந்தவர்கள்.

எத்தனை வேதம் ஓதினாலும் வேள்விகளைச் செய்தாலும் இறைவனிடம் அன்பு பெறாதவர்கள் வீட்டைப் பெறுவதில்லை. தாருகாவனத்து முனிவர்கள் வேதம் ஓதி வேள்விகளைப் புரிந்தார்கள். ஆனால் ஆண்டவனிடம் பக்தி செய்யவில்லை. அவனுடைய திருவருள் இல்லாமலே வேதமும் வேள்வியுமே அவர்களுக்கு இறுதியிலா இன்பத்தை நல்கும் என்று இருந்தார்கள். ஆண்டவன் அவர்கள் அகந்தையைப் போக்கி உண்மையை உணர்த்தினான், அவர்கள் வேதம் ஓதும் வேதியர்களாக இருந்தார்கள்; ஆனால் மெய்ப்பொருள் இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை. மெய்யை உணரும் அகத்தூய்மை அவர்களிடம் இல்லை. அதனால் அவர்கள் வீடு பெற முடியவில்லை.

ஆனால் வேதம் ஓதி வேள்வி புரிந்து இறைவனாகிய மெய்ப்பொருளை உணர்ந்து அன்பு செய்து மனம் தூய்மையான வேதியர்களுக்கு அவன் வீடுபேறாய் நிற்பான். முடிந்த முடிபாக அடையவேண்டிய பொருள் அவனே என்பதை நன்கு உணர்ந்து தெளிந்து பக்திநெறியிலே நிற்பவர்கள் அவர்கள்.

மாதீர்த்த வேதியர்க்கும்
வீடுபேறாய் நின்றானை.

வானத்தில் பதவிகளை வகிக்கும் தேவர்கள் மக்கள் தம்மை வணங்கி நலம் பெறுவனாதல் தாமே உயர்ந்தவர்கள் என்றும் தம்மினும் சிறந்த பொருள் யாது ஒன்றும் இல்லையென்றும் எண்ணி இறுமாந்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இடுக்கண் வரும்போது, தம் வலிமையின்மையை உணர்வார்கள். அசுரர்களின் கை ஓங்கித் தேவர்கள் நலியும்போது அந்தத் தேவர்களுக்குத் தாம் எல்லாம் வல்லவர்கள் என்று எண்ணிய எண்ணம் தவறு என்பது புலனாகும். அப்போது தம்மினும் பெரிய பரம்பொருளாகிய இறைவனிடம் ஓடிவந்து ஓலமிடுவார்கள். இறைவன் அவர்களுக்கு அபயம் தந்து அவர்களுக்கு வந்த இடுக்கண்களை நீக்குவான். அப்போதுதான் இறைவன் ஒருவனே இடும்பைகளினின்றும் தம்மை விடுவிப்பவன் என்ற உணர்வு தோன்றும். பதவி மோகமும் வளவாழ்வில் உண்டாகிய அகந்தையும் அப்போது அடங்கி, “இவை யாவும் எம் மாத்திரம்! இறைவன் துணை இல்லாவிட்டால் நம்முடைய வாழ்வு நில்லாது” என்று உணர்வார்கள். அத்தகையவர்களுக் குத் துன்பத்தினின்றும் அவர்களை விடுவிக்கும் பெரும்பேறாய்? இருக்கிறான் இறைவன்.

விண் பொருந்து தேவர்க்கும்
வீடுபேறாய் நின்றானை.

மண்ணவர்க்கும் புனிதமான வேதியர்க்கும் தேவர்க்கும் வீடுபேறாய் நின்றனைப் பற்றிக் கொண்டவள் அப்பராகிய நாயகி; அவன் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று ஆராக் காதலோடு தரிசனம் செய்து இன்புறுகிறவள்.

திருப்பழனம் என்னும் திருத்தலத்துக்கு வந்தாள் நாவுக்கரசு நாயகி, அங்கே அடியவர்கள் இறைவனைப் பாடி ஆடிக் களித்துக் கொண்டிருந்தார்கள்; பண்ணைப் பொருத்தமாக இசைத்து இறைவனுடைய இசையைப் பாடினார்கள். அவனைத் தரிசித்து அப்பருடைய கண்கள் களித்தன. கருத்தில் இன்பம் பொங்கியது. அகத்தின் அந்தரங்கத்திலே அவனுடைய திருவுருவம் பதிந்தது.

பண் பொருந்த இசைபாடும்
பழனம் சேர் அப்பனை.

பிறகு எப்போதும் அவனுடைய நினைவுதான். எங்கே பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் அவனுடைய கோலமே தோன்றியது, எந்தப் பணி செய்தாலும் மனத்தில் அந்தக் கோலம் சுருதிபோட்டுக் கொண்டிருந்தது. இசைவாணர்கள் எந்த ராகம் பாடினாலும், ஆரோகண அவரோகணகதியில் இசைத்தாலும், கீர்த்தனங்களைப் பாடினாலும் எல்லாம் சுருதி யோடே ஒட்டிவரும். அது மாறினால் அபஸ்வரம் வந்துவிடும். மூக்கால் முனகி ராகம் பாடினாலும் வாக்கால் வெளிப்படப் பாட்டை இசைத்தாலும் எல்லாம் சுருதியோடு இழைந்தே நிற்கும். அவ்வாறே அப்பருடைய உடம்பு எத்தொழிலைச் செய்தாலும் எவ்விடத்தில் இருந்தாலும் எந்தக் காலமாக இருந்தாலும் அவருடைய உள்ளத்தில் இறைவனுடைய நினைவு நீங்காமல் நின்றது.

பண்பொருத்தும் இசையிலே சுருதி என்றும் நில்லாமல் தொடர்ந்து இசைக்க வேண்டும். வாய்ப்பாட்டுக்காரர் பாடினாலும், பக்கவாத்தியக்காரர்கள் தனி ஆவர்த்தனம் வாசித்தாலும், யாவரும் சிறிது நேரம் சும்மா இருந்தாலும் அந்தச் சுருதி நில்லாமல் இசைத்துக் கொண்டே இருக்கும்.

திருநாவுக்கரசு நாயகிக்கு எத்தொழிலைச் செய்தாலும் ஏத வஸ்தைப்பட்டாலும் எவ்விடத்தும் எக்காலத்தும் இறையுணர்வாகிய சுருதி நிற்பதே இல்லை. அவள் கண்களை மூடி உறங்கும் பொழுதும் அது இடைவிடாமல் இருக்கும்.

என்
கண் பொருந்தும் போதத்தும்
கைவிட நான் கடவேனோ?

இறையுணர்வு ஒருவருக்கு உண்டாவது மிக அருமை. அது உண்டாகி வலிமை பெறப் பெற மற்ற உணர்வுகள் மெல்ல மெல்ல நழுவிவிடும். அந்த உணர்வே மீதூர்ந்து நிற்கும். அதன் முழு வலிமையையும் உடையவர்கள் பின்பு அதை விட நினைத்தாலும் விட முடியாது.

கெட்ட பழக்கம் உடையவர்கள் கூட இப்படித்தான் இருக்கிறார்கள். குடிக்கப் பழகிக் கொண்டவன் மனிதனாகையினால் அவன் அதனால் உண்டாகும் தீங்குகளை நன்கு உணர்கிறான். பழியும் பாவமும் வந்து சேர்வது அவனுக்குத் தெரிகிறது ஆனாலும் அந்தப் பழக்கம் அவனை இறுகப் பற்றிக்கொண்டு அவன் விட நினைத்தாலும் விடுவதில்லை. நல்ல பழக்கமும் இப்படியே இருக்கும். உறங்கும் போதாவது இறைவனை மறந்து உறங்கலாம் என்று நினைத்தாலும், இறையுணர்வில் ஊறியவர்களுக்கு அவ்வாறு செய்ய இயலாது.

நற்ற வாஉனை நான்ம றக்கினும்
சொல்லும்நா நமச்சி வாயவே

என்ற சுந்தரர் திருவாக்கு இந்தப் பழக்கத்தின் வலிமையைக் காட்டுகிறது. நாவுக்கரசு நாயகிக்கு இது தெரிகிறது. “நான் உறங்கும்போது கூட என் அப்பனை விட்டுவிடும் வலிமை எனக்கு உண்டா?” என்கிறாள். ‘கடவேனோ’ என்ற சொல் இந்த இயல்பை உணர்த்துகிறது.

மண்பொருந்தி வாழ்பவர்க்கும்
மாதீர்த்த வேதியர்க்கும்
விண்பொருந்து தேவர்க்கும்
வீடுபேறாய் நின்றானைப்
பண்பொருந்த இசைபாடும்
பழளப்சேர் அப்பனைஎன்
கண்பெருந்தும் போதத்தும்
கைவிடநாள் கடவேனோ?

நிலவுலகத்தில் பொருந்தி வாழும் மக்களுக்கும் பெரிய தூய்மையை உடைய வேதியர்களுக்கும் வானுலகத்திலே பொருந்தி வாழும் தேவர்களுக்கும் முறையே பாசத்தினின்றும் துன்பத்தினின்றும் விடுதலை பெற்று அடையும் இன்பப் பேற்றின் வடிவாக நிலைபெற்று நிற்கும் பெருமானும் பண்கள் பொருந்தப் பக்தர்கள் இசைப் பாடல்களைப் பாடி இறைவனை ஏத்தும் திருப்பழனம் என்னும் திருத்தலத்தை அடைந்து நித்திய வாசம் செய்யும் பரமபிதாவுமாகிய சிவ பெருமானை அடியேன் கண்கள் பொருந்தி உறங்கும் போதும் விட்டு விட்டு மறந்து நிற்க வலிமையுள்ளனவா?

[மண் – மண்ணுலகம். பொருந்தி-இணைந்து. மா தீர்த்தம்- மிக்க புனிதம்; உள்ளத்தே உண்மையுணர்வாலும் புறத்தே நீரில் மூழ்குவதாலும் பெற்ற தூய்மை.

புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

என்றபடி இருவகைத் தூய்மையையும் பெற்றவர்களாதலின், “மாதீர்த்த வேதியர்’ என்றார்.

நிலவுலகத்தில் வாழ்பவர்களுக்கும் வேதியர்களுக்கும் வீடு போகிய முத்தியாக இருப்பவன் இறைவன். தேவர்களுக்கு அவர்கள் அடையும் இன்னல்களினின்றும் விடுதலை பெறும் சரணாலயமாக இருப்பவன். வீடுபேறு என்பதற்கு விடுதலை பெறுதல் என்பது பொருள். உலக மக்கள் இறைவனை வழிபட்டு முத்தி அடைவார்கள். தேவர்கள் மக்களாகப் பிறந்து வழிபட்டுத் தான் அதை அடைய வேண்டும். ஆகவே அவர்களுக்குரிய வீடுபேருவது, அவர்கள் தம் இன்னல்களினின்றும் விடுபட்டு நிற்கும் நிலை.

இசை – இசைப் பாடல். பண்ணும் பாடலும் பொருந்தி நிற்க, அன்பர்கள் ஆண்டவனைப் பாடுகிறார்கள்.

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்

என்று பாடுவார் திருவள்ளுவர்.

அத்தகைய திருப்பழனத்தில் இறைவன் திருவுள்ளம் உகந்து சேர்ந்து நித்திய வாசம் செய்கிறான். அவன் யாவர்க்கும் அப்பனாக இருப்பவன். ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு தந்தை இருப்பார். அவர்கள் உடம்புக்குத் தந்தைகள். இறைவனோ உயிருக்கே தந்தையாக இருப்பவன். அவனைப் பரமபிதா என்று கூறுவார்கள். விழித்திருக்கும்பொழுது எண்ணியிருப்பது பெரிது அன்று. கண்களை மூடி உறக்கத்தில் ஆழும்போதும் உணர்வு மறவாமல் இருப்பது அரிது. அந்த

அந்த அரிய அநுபவம் மெய்யன்பர்களுக்குக் கிட்டும். ‘உறங்கும் பொழுதும் நான் விட எண்ணி னாலும் விடமுடியாதபடி ஒட்டிக் கிடக்கிறது, அந்த உறவு’ என்கிறார் அப்பர். கடவேனோ என்பது கடமைப்படுவேனோ என்ற பொருள் தராமல், ஆற்றல் உடையவனாக இருப்பேனோ என்ற பொருளைத் தந்தது.

இறப்பதனுக்கு என்கடவேன்

என்ற திருவாசகத்தில் கடவேன் என்பது என்ன செய்யும் வலிமையுடையேன் என்று பொருள் கொள்ள நிற்பது போல நின்றது இது.

கைவிடல் என்பது கையின் செயலைக் குறிக்காமல் விடல் என்னும் பொருட்டாய் நின்றது. ஓகாரம், எதிர்மறை; கைவிடும் ஆற்றல் இல்லேன் என்னும் பொருள் தந்தது. ]

நான்காம் திருமுறையில் 5-ஆம் திருப்பதிகத்தில் உள்ள ஐந்தாம் திருப்பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *