
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
1. அச்சம் இல்லை
மனிதன் அறிவுப்பலம் உடையவனே அன்றி உடற் பலம் இல்லாதவன். யானை, காண்டாமிருகம், சிங்கம் முதலிய விலங்குகள் மனிதனை விட அதிக உடல் வலிமை உடையவை. ஆனாலும் அவை மனிதனால் அடக்கப்பெற்று அவன் ஏவும்படி யெல்லாம் செய்கின்றன.
மனிதர்கள் யாவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. உடல் வலிமையிலும் சரி, அறிவுத் திறத்திலும் சரி, ஒருவருக்கொருவர் வேறுபட்டே இருக்கிறார்கள். பலம் இல்லாதவன் பலம் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு அவர்களால் நலம் பெறுகிறான். அறிவில் தாழ்ந்தவன் அறிவுடையவர்களைச் சேர்ந்து விளக்கம் அடைகிறான்.
சார்பினால் வலிமைபெறும் தந்திரத்தை மனிதன் கற்றுக் கொண்டிருக்கிறன். அவனால் மிக வேகமாக ஓட முடியாது. ஆனால் வேகமாக ஓடும் குதிரையின்மேல் ஏறி வேகமாகச் செல்கிறான். ஐம்பெரும் பூதங்களையே தன் அறிவு வன்மையினால் செயற்படுத்திப் பெரிய செயல்களைச் செய்கிறான்.
தன்னுடைய அறிவுவன்மையால் மனிதன் செய்து வரும் அற்புதங்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. அவனால் பறக்க முடியாது. ஆனாலும் ஆகாய விமானத்தை அறிவுத் திறத்தினால் அமைத்துக் கொண்டு பறக்கிறான். கடல் மூழ்கிக் கப்பலில் ஏறிக் கடலின் ஆழத்தில் பயணம் செய்கி றான். இயல்பாகத் தன்னால் செய்ய முடியாமல் இருப்பினும் மற்றவற்றை இயக்கி வியக்கத்தக்க செயல்களைச் செய்கிறான்.
இவ்வாறு தன்னினும் ஆற்றல் மிக்க பொருள்களைச் செய்ல்படுத்தக் கற்றுக் கொண்டதனால் பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கிறான். மண்ணை வசப்படுத்தினவனை விட நீரை வசப்படுத்தினவன் அதிக ஆற்றல் பெறுகிறான். இப்படியே பஞ்சபூதங்களையும் வசப்படுத்தியவன் பேராற்றல் பெற்றுப் பல பல செயற்கரும் செயல்களைச் செய்கிறான்.
உலகில் உள்ள பஞ்ச பூதங்களை வசப்படுத்துவதனால் இவ்வளவு அரிய செயல்களைச் செய்யும் ஆற்றல் பெற்றவன், மிக்க வலிமை பெறுகிறான். எல்லாப் பொருள்களையும் தன்வசப் படுத்தி ஆளும் வகை தெரிந்த மனிதன் உலகில் மற்ற எல்லாப் பிராணிகளைவிடவும் சிறந்தவனாக விளங்குகிறான்- சாமான்ய மனிதனைவிட அறிவு மிக்கவன் அந்த அறிவாற்ற லால் அவனை விடச் சிறந்த செயல்களைச் செய்ய முடிகிறது.
இப்படிப் பூதங்களையும் பிற பொருள்களையும் வசப்படுத்தி அற்புதங்களை ஆற்றும் மனிதன் இவற்றை விடப் பெரிய அற்புதத்தைச் செய்யும் இயல்பும் பெற்றிருக்கிறான். ஆனால் அந்தத் துறையில் பெரும்பாலோர் ஈடுபடுவதில்லை.
எல்லாப் பொருள்களையும்விடச் சிறந்த பொருள் எதுவோ அதற்குப் பரம்பொருள் என்று பெயர். பரப்பிரமம், கடவுள் தெய்வம் என்று பொதுவகையாகவும், சிவபெருமான் திருமால், அன்னை பராசக்தி, முருகன் என்று சிறப்பு வகையாகவும் அந்தப் பரம்பொருளைக் கூறுவார்கள்.
அந்த மேலான பொருளோடு தம்முடைய முயற்சியால் தொடர்பு பெற்றவர்கள் எல்லாவற்றையும் விடப் பெரிய அற்புதத்தைச் செய்ய வல்லவராகிறார்கள்,
எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும் இந்த வாழ்வின் இறுதியில் இறந்து போகிறார்கள். அற்புதங்களைச் சாதித்த விஞ்ஞானியும் மரணத்தை வெல்ல முடிவதில்லை. மர ணத்தை எண்ணும்போது யாவருமே அஞ்சுகிறார்கள்.
பணத்தைப் பெற்றவன் வறுமைக்கு அஞ்சுவதில்லை. அறிவை உடையவன் அறியாமைக்கு அஞ்சுவதில்லை. உடல் வலிமையை உடையவன் மெலிவுடையவர்களுக்கு அஞ்சுவதில்லை. ஆனால் இத்தனை பேர்களும் மரணத்துக்கு அஞ்சுவார்கள்,
“சாதலின் இன்னாத தில்லை“
என்பது வள்ளுவர் வாக்கு.
அந்த மரணத்தையும் வெல்லும் ஆற்றலை மனிதன் பெறலாம். அதற்குரிய உபாயத்தை அறிந்து செயல் செய்தால் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறலாம்.
இந்த உடம்போடே என்றும் வாழ்வது மரணம் இலாப் பெருவாழ்வு ஆகாது. இனிப் பிறந்து இறந்து வாழ்வதை எவன் போக்கிக் கொள்கிறானோ அவனே மரணம் இலாப் பெரு வாழ்வை அடைகிறான். அத்தகையவன் இந்த உடம்பை விட்ட பிறகு இனி என்றும் பிறவாத மேல்நிலையை அடைகிறான். மற்றவர்களே மீண்டும் பிறக்கிறார்கள்; ‘பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார்கள்.’
மரணபயம் இல்லாமல் வாழ முடியுமா ?
“மரணப்ர மாதம் நமக்கு இல்லையாம்”
என்பது அருணகிரியார் திகுவாக்கு. உடம்பைப் பெற்றவன் மரணம் அடைவது இயற்கை. அவ்வாறு இந்த உடம்பை நீத்து மரணம் அடைந்த உயிர் இனிப் பிறவாத தன்மையை எய்தினால் மரணமிலாப் பெரு வாழ்வில் என்றும் நிலைத்து நின்று இன்பம் அடைகிறது.
அவ்வாறுள்ள நிலைமையை அடைந்தவர்கள் மரணத்துக்கு அஞ்சுவதில்லை.
“சந்ததமும் வேதமொழி யாதொன்று
பற்றினது தான்வந்து முற்று மெனலால்
சகமீ திருந்தாலும் மரணம்உண் டென்பதைச்
சதாநிஷ்டர் நினைவ தில்லை“
என்று தாயுமானவர் சொல்கிறார். மரணத்திற்கே அஞ்சாதவர்கள் வேறு எதற்கு அஞ்சுவார்கள்?
அச்சம் இல்லாத அந்த நிலையைப் பெற்றவர்கள் யார்? யார் பிறப்பு இறப்பின்றி உள்ளானோ அந்தப் பரம் பொருளின் சார்பு பெற்று, அவனோடு ஒட்டி உறவாடி இணைந்து, அருள் வலிமை பெற்றவர்கள் எதற்கும் அஞ்சாத நிலையை அடைவார்கள்.
அப்பர் சுவாமிகள் அவ்வாறு அச்சத்தைத் தவிர்த்த பெரு வீரர். மரணம் இல்லாதவனைச் சார்ந்தமையால் அந்த வீரம் அவருக்கு உண்டாயிற்று. அதை அவர் சொல்கிறார்.
திருவதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தில் சிவ பெருமானை வழிபட்டு அவனுடைய அருள் வலிமையைப் பெற்றவர் அவர்; அவனுடைய தமர்களாகிய அடியார் கூட்டத்தில் ஒருவராகி விட்டவர். ஆகவே, அவர் எதற்கும் அஞ்சாத திண்ணிய நெஞ்சம் உடையவரானார். அவர் சொல்வதைக் கேட்கலாம்.
“நாம் ஒப்பற்ற ஒருவருடைய தமருள் ஒருவராகி விட்டோம். ஆதலால் நாம் எதற்கும் அஞ்சமாட்டோம். நாம் அஞ்சும்படி இனி வரப் போகிறது யாதும் இல்லை” என்கிறார். “மரணம் வருமே! அதற்கு அஞ்ச மாட்டீர்களோ?” என்று கேட்டால், “நாம் அஞ்சும்படி வரப் போகிறது யாதும் இல்லை” என்று மிடுக்கோடு சொல்கிறார்.
“அந்த ஒருவர் யார்?” என்று நாம் கேட்கிறோம்
“சொல்கிறோம். நிதானமாகக் கேளுங்கள். நீங்களும் அவரை அடைந்து இந்த நிலையை அடையலாம். அதனால் விளக்கமாக அங்க அடையாளங்களுடன் அவரைப் பற்றிச் சொல்கிறோம். கேளுங்கள்” என்கிறார்.
“இப்படி யார் சொல்லப் போகிறார்கள்? தயை செய்து சொல்லுங்கள்; கேட்கலாம்” என்கிறோம்.
‘அவர் நீங்கள் கண்டு தரிசிக்கும் படியான திருக் கோலத்தோடு எழுந்தருளியிருக்கிறார். அந்தக் கோலத்தைச் சொல்லட்டுமா?”
“சொல்லுங்கள். கேட்டுப் பயன் பெறுகிறோம்” என்று பவ்யமாகச் சொல்கிறோம்.
அவர் விளக்கமாகச் சொல்லப் புகுகிறார்.
செல்வர்கள் மார்பில் சந்தனம் பூசிக்கொள்வார்கள். அவர் திருநீற்றையே வெண்மையான சந்தனக் குழம்பாகப் பூசி யிருக்கிறார்.
சுண்ணவெண் சந்தனச் சாந்தும்.
அவரை இனம் கண்டு கொள்வது எளிது. அவர் தம் திரு முடிமேல் சுடர்விடும் சந்திரனைச் சூடியிருக்கிறார். அரிய இரத்தினங்களைச் செல்வர்கள் சூளாமணியாக அணிவார்கள். அந்தச் செல்வரோ சுடர்த் திங்கட் சூளாமணியை உடையவர்.
சுடர்த்திங்கட் சூளா மணியும்.
எல்லாரும் பட்டும் பீதாம்பரமும்அணிவார்கள். அவற்றை யெல்லாம் மற்றச் செல்வர்கள் உடுக்கட்டும் என்று வழங்கி விட்டு அவர் தோலையே தம் உடையாகப் புனைந்திருக்கிறார். இடையில் யாளைத் தோலையும் மேலே புலித் தோலையும் உடையாக உடையவர் அவர்.
வண்ண உரிவை உடையும்.
இந்தத் தோல்களைக் கொண்டு, “இவர் என்ன, இப்படிக் தோலாண்டியாக இருக்கிறாரே! இவருக்கு வேறு உடை இல்லையா? ஒருகால் தம்முடைய அழகற்ற உருவத்தை மறைக்க இவற்றைப் பயன்படுத்துகிறாரோ?” என்று எண்ணக் கூடாது. அவர் வண்ணம் பவள வண்ணம், பார்க்கப் பார்க்க எழில் மிகுந்து வளர்ந்து தோன்றும் பவள நிறம் அது.
வளரும் பவள நிறமும்.
மற்றச் செல்வர்களைப் போல அவரும் வாகனத்தில் வருவார். மற்றவர்கள் குதிரையும் யானையும் வர்களமாகச் கொண்டு வருவார்கள். அவர் காளை மாட்டையே தம் வாகனமாகக் கொண்டவர்; தருமத்தையே விடையாகக் கொண்டு ஊர்பவர். அது மிக்க பெருமையையும், வலிமையையும் உடையது; அவரை நம்பினவர்களுக்கு அரணாக நிற்பது.
அண்ணல் அரண் முரண் ஏறும்.
அவர் அணியும் அணிகலன் எது தெரியுமா? பொன்னும் நவமணிகளும் பிறர் பூணக் கொடுத்துவிட்டு நஞ்சுமிழும் நாகத்தையே தம் திருமார்பில் அணிந்திருக்கிறார், படையும் நடுங்கும் பாம்பு அவர் திருமார்பில் அடங்கி ஒடுங்கி அணி கலனாகப் பளபளக்கிறது.
அகலம் வளாய அரவும்.
இத்தகைய பெருமானே அடியவர்களுக்கு அருள் செய்யும் பொருட்டுக் கெடில ஆற்றின் கரையில் திருவதிகையில் எழுந்தருளியிருக்கிறார். திண்ணிய நல்ல கெடிலப் புனலைத் தமக்குரிய அபிடேக நீராகக் கொண்டவர் அவர்.
திண்ணன் கெடிலப் புனலும் உடையார்,
“அத்தகைய பெருமானுக்கு உறவானவர் யாம், ஆதலால் நாம் அஞ்சும் பொருள் யாதும் இல்லை. இனிமேல் அஞ்சும்படி வரத்தக்க பொருள் ஒன்றும் இல்லை” என்று உறுதியோடு சொல்கிறார்.
உடையார் ஒருவர் தமர்காம்:
அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை.
உலகிலுள்ள வலிய பொருள்களின் சார்பு பெற்றவர்கள் பலவற்றுக்கு அஞ்சுவதில்லை. எல்லாம் வல்ல எம்பெருமானுடைய துணையைப் பெற்றவர்களுக்கு நிகழ்காலத்திலும் அச்சம் இல்லை; வரும் காலத்திலும் அச்சம் இராது. அவர்கள் அஞ்சும் படி வரத்தக்கது யாதுமே இல்லை.
இந்தத் திண்ணிய நிலை எல்லோருக்கும் வருமா? அதற்குரிய வகையில் முயன்றால் நிச்சயமாக வரும்.
சுண்ணவெண் சந்தனச் சாந்தும்
சுடர்த்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை உடையும்
வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண்முரண் ஏறும்
அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலும்
உடையார் ஒருவர் தமர்நாம்:
அஞ்சுவதி யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை.
திருநீறாகிய வெண்மையான சந்தனப்பூச்சையும், ஒளியை யுடைய சந்திரனாகிய முடியில் அணியும் மணியையும், நிறம் பெற்ற தோலாகிய உடையையும்,பார்க்கப் பார்க்கப் புதியதாகத் தோற்றி வளரும் பவளத் திருமேனியையும், பெருமையையும் அன்பர்களுக்குப் பாதுகாப்பாகிய இயல்பையும் வலிமையையும் உடைய இடப வாகனத்தையும், திருமார்பில் அணிகலனாகத் தோன்றும் பாம்பையும், திண்மையும் நன்மையும் உடைய கெடில ஆற்றையும் உடையவராகிய சிவபெருமானுடைய அடியார் யாம்; ஆதலால் நாம் அஞ்சும் பொருள் வாது ஒன்றும் இல்லை; இனி அஞ்சும்படி வரப்போவது யாதொன்றும் இல்லை.”
[சுண்ணம் – திருநீறு; சூர்ணம் என்பதன் திரிபு. சந்தனச் சரந்தும் – சந்தனம் போலப் பூசும் பூச்சும்; சாந்து – பூசப்படும் பொருள். சூளாமணி-முடியில் அணியும் மணி; சூடாமணி என்பதன் திரிபு. யானைத் தோலும் புலித்தோலும் வெவ்வேறு வண்ணம் உடையன. உரிவை – தோல். சிவபெருமானுடைய திருமேனி ஒரு காலைக்கொருகால் அழகுமிக்குத் தோன்றுதலால், ‘வளரும் பவள நிறமும்’ என்றார். அண்ணல் – பெருமை, அரண், பாதுகாப்பு.முரண் – வலிமை. அகலம் – திருமார்பு.வளாய் – சேர்ந்த கெடிலத்திற்குத் திண்மை கரையாலும் நன்மை புனலாலும் அமைந்தன. தமர் – அடியார்; பத்திமையால் உறவு பூண்டவர்.
அஞ்சவதியாதொன்றும்: அஞ்சுவது என்பதிலுள்ள குற்று கரம் யகரம் வரத் திரிந்து குற்றியலிகரம் ஆயிற்று. இது வரைக்கும் அஞ்சும்படி உள்ள ஏதும் இல்லை; இனிமேலும் வரத் தக்கதில்லை என்றார். முக்காலங்களிலும் அச்சமே அறியாத வாழ்வு அவர் வாழ்வு.]
இறைவன் அடியார்களுக்கு எதனாலும் அச்சம் இல்லை என்பது கருத்து.
நான்காம் திருமுறையில் இரண்டாவது திருப்பதிகத்தில் வரும் முதற்பாட்டு இது.



