அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

21. நீறுடை அழகர்

இது திருச்செம்பொன் பள்ளி என்னும் திருத்தலம்; இப்போது செம்பொனார் கோயில் என்று வழங்கும். பள்ளி-கோயில் அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமானை அப்பர் சுவாமிகளோடு சென்று தரிசிக்கலாம். அவர் எம்பெருமானை அடையாளம் காட்டி நம்மை ஆட்கொள்வார்.

நேரே வந்து பாருங்கள். எம்பெருமானுடைய திருமுடி தெரிகிறதா? அதை உற்றுப் பாருங்கள். இறைவருடைய சடாபாரத்தில் கங்காநதி இருப்பது தெரிகிறதா? பகீரதனுக்காக அதை அவர் தாங்கிப் புறத்தே போகவிட்டார். தவம் செய்பவர்களுடைய முயற்சிக்கு இரங்கி அருள் பாலிக்கும் பெருங்கருணையாளர் அவர். கங்கையாற்றைக் காணும் போது அவர் அகங்காரத்தை அடக்கிப் பிறருக்கு உபகாரம் பண்ணும் நிலையில் நம்மை வைத்தருளுவார் என்ற எண்ணம் நமக்கு எழ வேண்டும்.

ஆறுடைச் சபையர் போலும்.

எல்லாருக்கும் தனுகரண புவன போகங்களை வழங்கும் வள்ளல் அவர். எல்லா உயிர்களிடத்திலும் அருள் கொண்டவர் என்றாலும் தமக்கு இவற்றைத் தந்திருக்கிறாரே என்பதை நன்றியறிவுடன் நினைத்து அன்பு செய்யும் அடியவர்களிடத்தில் அவர் அதிக அன்பு பாராட்டுவார். தன்னையே சுற்றிச் சுற்றி வரும் இளங் குழந்தையை எடுத்துக் கொஞ்சி முத்தமிடும் தாய் போல நெருங்கிய அன்பர்களிடத்தில் மிகுதியான அன்பைப் பொழிவார்.

அன்பருக்கு அன்பர் போலும்.

அவருடைய அருளே பராசக்தியின் வடிவம். அவர் பாதி அம்பிகை பாதியாகக் கொண்டு கோலம் காட்டும் பெருமான் அவர். அவர் எவ்வளவு அளவுடையவரோ, அவ்வளவு அளவில் அவருடைய அருள் நிரம்பி நிற்கும் உமாதேவியை ஒரு பாதியாகப் பங்கில் வைத்த திருமேனியை உடையவர் அவர். அந்தக் கோலம் அவர் முழுக்க முழுக்க அருள்வடிவானவர் என்பதைக் காட்டும்.

கூறுடை மெய்யர் போலும்.

‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்’ என்பது பழமொழி. பாம்பு என்று சொன்னாலே நமக்கு அச்சம் உண்டாகிறது. நேரில் பார்த்தால் நடுங்குகிறோம். நம் பக்கத்தில் வந்து விட்டால் ஓடிப் போகிறோம். ஆனால் அவரோ கொலை செய்யும் பாம்பை அணிகலனாகப் பூண்டிருக்கிறார். அரையில் அரை ஞாணாகக் கட்டியிருக்கிறார். நஞ்சு கக்கும் பாம்பு அவரிடத்தில் அடங்கி ஒடுங்கி அவருக்கு அணிகலனாக இருக்கிறது. நம் முடைய இந்திரியங்களென்னும் ஐந்து தலைகளையுடைய பாம்பு நம் மனம். இது அவா என்னும் நஞ்சைக் கக்குகிறது. அதனால் மேலும் மேலும் பிறந்தும் உழன்றும் இறந்தும் வருகிறோம். இந்த மனத்தையும் ஐம்பொறிகளையும் அவரோடு இணைத்து விட்டால்; அவருடைய வழிபாட்டில் ஈடுபடச் செய்துவிட்டால், இந்த ஐந்து தலை நாகம் நம்மை ஒன்றும் செய்யாமல் நமக்கு அடங்கி ஒடுங்கி நிற்கும். இதை அச்சத்துடன் பற்றிக்கொண்டு வாழும் நிலை மாறி, நம் விருப்பம் போல இது செயற்படும்.

கோள் அரவு அரையார் போலும்

அவருடைய திருமேனியைப் பாருங்கள். முழுதும் திருநீறு பூசியிருக்கிறார். அவருடைய செம்பவளத் திருமேனியில் அந்த நீறு படர்ந்து அழகை மிகுதிப்படுத்துகிறது. பெண்கள் தங்கள் முகத்துக்கு மணமுடைய பொடி பூசி அழகு செய்து கொள் கிறார்கள். இறைவருக்கு இந்தத் திருநீறே அழகு செய்கிறது.

நீறுடை அழகர் போலும்,

இத்தகைய பெருமானைத்தான் இந்தத் திருச்செம்பொன் பள்ளியில் தரிசிக்கிறோம். இந்தத் தலமே இறைவர் அருளான எங்கும் மலரும் மணமும் நிரம்பிப் பொலிகிறது. கடற்கரையை அடுத்துள்ளமையால் அங்கங்கே நெய்தல் மலர்கள் மலர்த்து மணம் கமழ்கின்றன.

நெய்தலே கமழும் நீர்மை.

நிலவளம் பெற்றிருந்தால் அங்கே வயல்கள் மிகுதியாக இருக்கும். நீர் வளத்தால் உழவர்கள் உழது பயிரிடுவார்கள். சேறு நிரம்பிய வயல்களிலிருந்துதானே நமக்குச் சோறு விளைகிறது? இந்தத் திருத்தலத்தில் வயலுக்குக் குறைவில்லை. அங்கே சேற்றுக்குக் குறைவில்லை. அதனால் சோற்றுக்கும் குறைவில்லை.

சேறுடைய வயல்களில் தாமரை மலர்கள் மலர்த்திருக்கின்றன. சேற்றிலே வளர்ந்து மலர்வதனால் தாமரைக்குப் பங்கஜம் என்ற பெயர் வந்தது. இந்தத் திருத்தலத்தில் வயல்களின் ஓரக் கால்களில் தாமரை மலர்கள் வரிசை வரிசையாகப் பூத்திருக்கின்றன. இறைவருடைய அணிமையைப் பெற்ற அன்பர்களின் முகம் போலப் பொலிகின்றன அவை.

இத்தகைய கமலங்களைப் பெற்ற வளவயல்களும், பூம் பொய்கைகளும் இந்தத் தலத்தைச் சுற்றி எல்லை காட்டிக் கொண்டு விளங்குகின்றன.

சேறுடைக் கமல வேலித்
திருச்செம்பொன் பள்ளி யாரே!

நெய்தல் நிலத்துக்குரியது நெய்தல் மலர், மருத நிலத்துக்குரியது தாமரை. இங்கே இரண்டு வகை நிலங்களும் இருப் பதனால் நெய்தலையும் தாமரையையும் ஒருங்கே பார்க்கிறோம். நெய்தல் மலர் சிறப்பான மலர் அன்று. மலர்களுக்குள் தாமரையே சிறந்தது. “பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை” என்று அப்பரே பாடுவரர். ஆனால் இங்கே இறைவர் இடத்தில் நெய்தலும் மலர்ந்து விளக்கம் பெற்று நிற்கிறது. தாமரையும் மலர்ந்து பொலிவுற நிற்கிறது.இறைவரைச் சார்ந்தால் இழிந்தவர்களாக இருந்தவர்களும் உயர்ந்தவர்களாக இருந்தவர்களும் ஒரே நிலையைப் பெற்று விளக்கம் பெறுவார்கள். நெய்தலும் தாமரையும் ஒரே இடத்தில் மலர்ந்து விளங்கும் காட்சி இதை நினைப்பூட்டுகிறது. சாக்கடையானாலும் யமுனையானாலும் கங்கையிலே சங்கமம் ஆன பிறகு எல்லாமே கங்கையாகி விடுகின்றன அல்லவா? இறைவனுடைய திரு முடியிலுள்ள கங்கைக்கே அத்தகைய சிறப்பு இருக்கும் போது கருணையே வடிவான இறைவரிடத்தில் அந்த இயல்பு இருப்பது ஒரு வியப்பா?

இப்படியெல்லாம் நினைந்து எம்பெருமானுடைய திரு வருட் சிறப்பை உணர்ந்து உருகும்படி பாடுகிறார், அப்பர் சுவாமிகள்.

ஆறுடைச் சடையர் போலும்,
அன்பருக்கு அன்பர் போலும்,
கூறுடை மெய்யர் போலும்,
கோள் அரவு அரையர் போலும்,
நீறுடை அழகர் போலும்,
நெய்தலே கமழும் நீர்மைச்
சேறுடைக் கமல வேலித்
திருச்செம்பொன் பள்ளி யாரே.

நெய்தல் மலரே எங்கும் மணம் வீசும் இயல்பையுடைய சேற்றைத் தமக்குப் பிறப்பிடமாகக் கொண்ட தாமரைகளை யுடைய வயல்களையும் குளங்களையும் எல்லையாகப் பெற்ற திருச் செம்பொன் பள்ளியிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் கங்கையாகிய ஆற்றைத் தம் சடாபாரத்தில் கொண்டவர்; மெய்யன்பர்களிடம் தனியான அன்பு காட்டுபவர்; ஒரு கூற்றை உமாதேவிக்கு அளித்து விட்டு மற்றொரு கூற்றைத் தமக்காகக் கொண்ட திருமேனியை உடையவர்; கொலை செய்யும் தன்மை யையுடைய பாம்பைத் திருவரையில் நாணாகவும் கோவண மாகவும் அணிந்தவர்; திருநீற்றைப் பூசி அதனால் அழகு மிக்குத் தோன்றும் அழகர்.

[ஆறு – கங்கையாறு, கூறு-உமாதேவிக்கு அளித்த ஒரு கூறு ஒழிந்த மற்றைக் கூறு; வலப்பாகம். கோள் – கொலை. அரையில் நாணாகவும் கோவணமாகவும் பாம்பை அணிந்தவர். இயல்பாகவே அழகர்; அவரைச் சேர்ந்து நீறும் அழகு பெறுகிறது: அந்த நீற்றால் அவர் மேனியும் அழகு மிக்குத் தோன்றுகிறது. நெய்தலே: ஏகாரம், பிரிநிலை; அசையுமாம். நீர்மை – இயல்பு. நீர்மைச் சேறு-நீரின் தன்மையோடு இணைந்த சேறு என்றும் பொருள் கொள்ளலாம். சேறுடை – சேற்றைத் தான் தோற்றும் இடமாக உடைய; இது கமலத்துக்கு அடை, வேலி – எல்லை. திருச்செம்பொன் பள்ளியை அணுகும் போதே நெய்தல் மணம் கமழும். அப்பால் கமல மலர்கள் காட்சி அளிக்கும். ஊருக்குள் சென்று திருக்கோயிலில் புகுந்தால் இறைவர் ஆறுடைச் சடையராகவும், அன்பருக்கு அன்பராகவும், கூறுடை மெய்யராகவும், கோளரவரையராகவும், நீறுடையழகராகவும் தரிசனம் தருவார். சடை, மெய், அரை, திருமேனியழகு ஆகி யவை அவர் திருக்கோலத்தை இனம் காட்டுபவை. அன்பருக்கு அன்பு வைக்கும் திறம் அவர் கருணையைக் காட்டுவது.

போலும் என வருபவை யாவும் அசைகள், நெய்தலே, செம்பொன்பள்ளியாரே; ஏகாரங்கள் அசை. திருச் செம்பொன் பள்ளியார்: எழுவாய்.]

இது நான்காம் திரு முறையில் 29-ஆம் திருப்பதிகத்தில் ஐந்தாவது பாட்டாக அமைந்தது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *