அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

4. எம்பெருமான் அழகைக் கண்ட பெண்

அந்தப் பெண் ஒருநாள் திருக்கழிப்பாலை என்ற தலத்துக்குச் சென்றாள். அங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் தரிசித்தாள். ஒரு முறை கண்டதோடு நிற்கவில்லை; பன்முறையும் கண்டு கண்டு அவனுடைய திருவுருவத்தைக் கண் வழியே வாங்கித் தன் காதல் உள்ளத்தில் புதைத்துக் கொண்டாள். இப்போது அவள் தன் கண்களை மூடினால் அவள் உளக் கண்ணில் சிவபெருமானுடைய எழில் உருவம் நிற்கிறது.

அவள் ஊர் வந்து சேர்ந்தாள். அதுவரையில் பெண்களுக்குரிய இயல்பின்படி எதை எதையோ பேசிக்கொண்டிருந்தாள்; இப்போது அவள் பேச்சே அடியோடு மாறிவிட்டது. எப்போதும் சிவபெருமானைப் பற்றியே பேசினாள். எதைக் கண்டாலும் அவளுக்கு அவனுடைய நினைவே எழுந்தது.

அவள் தன் முன்னை நிலையினின்றும் மாறுபட்டிருப்பதை அவள் தாய் பார்த்தாள். எப்போதும் அவள் கழிப்பாலைப் பெருமானைப் பற்றிப் பேசுவதையே கேட்டாள்.

“உன் மகள் என்ன, ஒரு விதமாக இருக்கிறாள்? மற்றப் பெண்களைப் போல அவள் பேசவில்லையே! என்ன காரணம்?” என்று அயல் வீட்டுக்காரி அந்தத் தாயிடம் கேட்டாள்.

“நானுந்தான் கவனிக்கிறேன். அவள் பேச்செல்லாம் மாறி விட்டது. அவள் தன்னுடைய அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து பேசினால் கிளி கொஞ்சும். இப்போதும் அந்த இனிமைக்குக் குறைவில்லை. ஆனால் பேச்செல்லாம் கழிப் பாலைப் பெருமானைப் பற்றியே பேசுகிறாள்.

“அவள் வானவர்களுக்கெல்லாம் நல் வாழ்வைத் தானம் செய்கிறவனே” என்று சொன்னதை நான் கேட்டேன். இந்த இளம் பெண்ணுக்கு எம்பெருமானைப் பற்றிய புகழ் எப்படித் தெரிந்தது?

வன்பவன வாய் திறந்து வானவர்க்கும்
தானவனே என்கின்றாளால்.

“அதுமட்டுமா? அவள் அவனைத் தரிசித்து அவன் உருவத்தைத் தன் உள்ளத்தில் படம் பிடித்தல்லவா வைத்திருக்கிறாள் அவளுக்கு அவன் தோளை அணைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது போலும்! அந்தத் தோள்களின் திண்மையைப் பாராட்டுகிறாள். பவளம் போலச் செக்கச் செவேலென்ற திருத்தோளில் பெருமான் தன் சின்னமாகிய திருநீற்றைப் பூசியிருக்கிறான். அந்த வெண்ணீற்றையும் அதை அணிந்த தோள்களையும் சொல்லிச் சொல்லிப் பூரித்துப் போகிறாள்.”

சின பவளத் திண்தோள்மேல் சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன் என்கின்றாளால்.

ஆம்! சிவப்பான திண்ணிய தோளில் வெண்மையான நீறு விளங்குகிறது. அதைக் கூர்ந்து கவனித்திருக்கிறாள். திருநீற்றுப் பூச்சினூடே அவனுடைய செவ்வண்ணத் திருமேனியைக் கண்டு களித்திருக்கிறாள்.’

“அவன் பெண்களுக்கு இனியவன் என்பதையும் அல்லவா அறிந்திருக்கிறாள்? அவன் பவள மேகலையை அணிந்த உமா தேவியோடு எழுந்தருளியிருப்பதைக் கண்டிருக்கிறாள். தனக்கும் அப்படி ஒரு நிலை கிடைக்குமா என்ற ஏக்கம் அவள் உள்ளத்தில் எழுந்திருக்க வேண்டும்.

அன பவள மேகலையோடு.

“ஆனாலும் அவன் யாவருக்கும் எளியவன் அல்லன் என்பதையும் உணர்ந்திருக்கிறாள். ஐம்பூதங்களுக்கும் அப்பாலே, ஐம்பொறிகளுக்கும் அப்பாலே, மனத்துக்கும் அப்பாலே, மனத்துக்கும் எட்டாத அப்பாலைக்கும் அப்பாலே இருப்பவன் அவன் என்பதையும் உணர்ந்து சொல்கிறாள்.

பவளமேகலை அணிந்த உமா தேவியோடு இருக்கிறான் என்ற போது தனக்கும் அந்த நிலை கிடைக்கலாம் என்ற எண்ணம் எழுகிறது. ஆனால் அடுத்த கணமே அவன் எல்லாவற்றையும் கடந்து அப்பால் இருப்பவன் என்ற எண்ணம் வரவே பெருமூச் செறிகிறாள்.

அன பவள மேகலையோடு
அப்பாலைக்கு அப்பாலன் என்கின்றானால்.

“இப்படியெல்லாம் வருணிக்கிறாளே; இந்த வருணனை களுக்கு உரியவன் யார் என்று யோசித்துப் பார்த்தேன். எல்லாம் சிவபெருமானுடைய அடையாளங்களாக இருக்கின்றன. இந்த அடையாளங்களோடு விளங்கும் அப்பெரு மானைப் பற்றிச் சொல்கிறாளே; இவளுக்கு இவை எப்படித் தெரிந்தன?’ என்று ஆராய்ந்தேன். “முன்பெல்லாம் இப்படிப் பேசவில்லையே! இப்போது திடீரென்று இந்த மாற்றம் ஏன் வந்தது. என்று யோசித்தேன் உண்மையை உணர்ந்தேன்.”

“எதை உணர்ந்தாய்?”

“இவள் தன் தோழிமாரோடு திருக்கழிப்பாலைக்குப் போனாள். வேடிக்கையாகப் போய் அங்குள்ள காட்சிகளையெல்லாம் கண்டு வரட்டுமே என்று அவள் போவதற்கு இசைந்தேன். போய் வந்த பிறகு அவள் இந்த ஊரில் இருப்பவளாகவே தோன்றவில்லை. இன்னும் திருக்கழிப்பாலையில் சிவபெருமான் திருமுன் நின்று அவனைக் கண்ட கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பவளைப் போலவே பேசுகிறாள். திருக் கழிப்பாலையில் கடல் இருக்கிறது. அங்கே பவளங்களை அலைகள் மோதிக்கொண்டு வந்து கரையில் சிந்துகின்றன. அவற்றை அவள் பார்க்கவில்லை. கருணைக் கடலாகிய சிவ பெருமானை மட்டும் பார்த்திருக்கிறாள். கடலில் உள்ள பவளத்தைப் பார்க்கவில்லை. சிவபெருமானுடைய பவளத் திருத்தோளைப் பார்த்திருக்கிறாள். அதனால்தான் இப்படிப் பேசுகிறாள். திருக்கழிப்பாலைச் சிவபெருமானைக் கண்டிருக்க வேண்டும். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது.”

கனபவளம் சிந்தும் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ?

இவ்வாறு ஒரு பெண்ணைப் பெற்ற தாய் சொல்வதாக அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.

வனபவள வாய்திறந்து வானவர்க்கும்
தானவனே என்கின் றாளால்;
சினபவளத் திண்தோள் மேல் சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன் என்கின் றாளால்;
அளபவள் மேகலையோடு அப்பாலைக்கு
அப்பாலான் எள்கின் றாளால்;
கனபவளம் சிந்தும் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ?

[இந்தப் பெண் தன் அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து, தேவர்களுக்கெல்லாம் அவரவர்களுக்குரிய பதவிகளையும் போகங்களையும் தானம் செய்பவனே என்கின்றாள்; தன்னுடைய திண்ணிய தோள்களின் மேல் தனக்குரிய அடையாளமாகச் சேர்ந்து விளங்குகின்ற வெண்மையான திரு நீற்றை உடையவன் என்கின்றாள்; இன்னவாறு உள்ளவ ளென்று அறிய முடியாத அத்தகைய, பவளமேகலையை அணிந்த உமாதேவியோடு அப்பாலைக்கும் அப்பாலாக இருப்பவன் என்கின்றாள்; கனமான பவளங்களை அலைகள் கொண்டு வந்து கரையிலே சிந்தும் திருக்கழிப்பாலையைச் சேர்ந்து நித்தியவாசம் செய்யும் சிவபெருமானைத் தரிசித்தாளோ?

னபவளம்- அழகையுடைய பவளம்; செவ்வண்ணத்தை யுடைய பவளம் எனலும் ஆம் அவள் வாயைத் திறக்கும் போதே அதன் வண்ண எழில் தெரிகிறது. பிறகு சொல்லினிமை தோன்றுகிறது. தானவன் – தானம் செய்பவன்; இறைவன் மும் மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் உரிய பதவிகளை அளித்துத்தம் தொழில்களை ஆற்றும்படி செய்பவன். சின்னம் என்பது சினம் என்று நின்றது. அது வெண்ணீற்றுக்கு அடை. சினப் பவளம் என்பது எதுகை நோக்கிச் சினபவளம் என வந்தது.

இறைவன் வீரம் செறிந்த தோளையுடையவன்; அதனால் திண்டோளாயிற்று. அவன் வீரத்தைப் புலப்படுத்தும் எட்டுத் தலங்கள் அட்ட வீரட்டானங்கள். பெண்களுக்கு ஆடவரின் ஆண்மைக்கு இடமாகிய தோளின்மேல் விருப்பம் உண்டாவது இயல்பு; “மங்கையர்கள், தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்” என்பது நளவெண்பா. செந்நிறமுள்ள திருத் தோளில் சேர்ந்தமையால் திருநீறு பின்னும் விட்டு விளங்குகிறது. அன – அன்ன; நெஞ்சறி சுட்டு; இத்தகையவளென்று – சொல்ல இயலாமல் உணர்ச்சியினால் உணரப்படுபவளாதலின் இவ்வாறு சொன்னாள் பவள மேகலை – பவளத்தாலான மேகலையை அணிந்த உமாதேவி; அன்மொழித்தொகை, பவளம் சிந்தும் கழிப்பாலையில் உள்ளவளாதலின் பவள மேகலை அணிவது எளிதாயிற்று. அப்பாலைக்கு கருத்துக்கும் எட்டாத அத்தகைய பகுதிகளுக்கும்; அப்பாலைக்கும் என்ற உம்மை தொக்கது. கன பவளம் — நன்கு முதிர்ந்து திரண்டு கனம் பெற்ற பவளம். சிந்தும் -எளிதிலே கிடைக்கும்படி கரையிலே சிந்தும். மகளிர் அணிகலமாக அணியும் பவளம் எளிதிலே கிடைக்கும் இடத்தை அடைந்தாளேனும் அந்தப் பெண்ணுக்கு அதன்மேல் ஆசை தோன்றாமல் எம்பெருமான் மேல் காதல் பிறந்தது என்பது குறிப்பு.

கண்ணாற் கண்டு உள்ளத்திலே பதித்ததை வாய் அடிக்கடி சொல்வது மனித இயல்பு. வயிறு நிறை உண்டாருக்கு ஏப்பம் வருவது போலக் கருத்து நிறைய உண்டாருக்கு இப்படிப் பேச்சு வரும்.]

அப்பர் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நான்காம் திருமுறையில் ஆரும் திருப்பதிகத்தில் உள்ள முதல் பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *