
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
28. நினைக்குமாறு நினைத்தல்
திருநாவுக்கரசர் அறியாமையால் சமண சமயத்தைச் சார்ந்து அங்கே ஆசார்ய புருஷராக அமர்ந்திருந்தார். பிறகு இறைவன் திருவருளால் மீட்டும் சைவ சமயத்தை வந்து அடைந்தார். பரம்பரையாக வந்த சிவநெறியை விட்டுப் புறச் சமயத்திற்குச் சென்ற பிழையை நினைந்து நினைந்து வருந்தினார். அந்த எண்ணம் அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. சிவபெருமானுக்கு அடிமை என்ற முத்திரையை மாறாத வகையில் பெறவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. “எம்பெருமானே, என்மேல் உன் இலச்சினையையும் சூலக் குறியையும் பொறித்தல் வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். இறைவன் அப்படியே செய்தான். அதன் பின்னும் அவருக்கு மனநிறைவு உண்டாகவில்லை. “காலன் வந்து என் உயிரைப் பிரித்துக்கொண்டு போவதற்கு முன் உன் திருவடி தீட்சையை நான் பெறும்படி அருள்புரிய வேண்டும். இல்லையெனின் தன்னை நம்பினவனை நட்டாற்றில் விட்டுவிட்டான் என்ற பழி உன்னை வந்து சேரும்” என்று முறையிட்டார்.
“கோவாய் முடுகி அடுதிறற் கூற்றம் குமைப்பதன்முன்
பூவார் அடிச்சுவடு என்மேற் பொறித்துவை; போகவிடில் மூவா முழுப்பழி மூளும்கண் டாய்; முழங் கும்தழற்கைத் தேவா, திருச்சத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே“
என்று விண்ணப்பித்தார். மெய்யடியாருக்கு இரங்கியருளும் சிவபெருமான் நல்லூர் என்னும் தலத்தில் அவர் தலைமேல் திருவடி வைத்துத் திருவடி தீட்சை செய்தருளினான். அதனால் பேருவகை அடைந்தார்.
“நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்
நல்லூர்எம் பெருமானார் நல்ல வாறே“
என்று பாடினார். ‘இனி எம்பெருமான் என்னைக் கைவிடமாட்டான். நான் தவறினாலும் என்னைப் புறம்போகாமல் ஈர்த்து ஆட்கொள்வான். அவனுடைய திருவருள் உறைப்பினால் காலனால் உண்டாகும் துன்பமும் என்னை அணுகாது’ என்ற உறுதி அவருக்கு உண்டாயிற்று. அதனால் அவர் ஒரு வகை யான பெருமிதத்தை அடைந்தார்.
திருநெய்த்தானம் என்ற திருத்தலத்துக்குச் சென்று இறைவனைப் பாடினார். அப்போது இந்தப் பெருமித உணர்ச்சி அந்தப் பாடலில் வெளிப்பட்டது. ‘இறைவன் தன் திருவடியை என்மேல் வைத்து ஆட்கொண்டான். அந்தத் திருவடி காலனை வீழும்படி உதைத்த பேராற்றலை உடையது. அதன் துணை எனக்கு இருப்பதனால் எனக்கு இனி யாதோர் அச்சமும் இல்லை’ என்று பாடுகிறார்.
“எனக்குக் கிடைத்த பேறு எத்தகையது தெரியுமா? காலனை வீழும்படி மோதிய திருவடி அது; அந்த வீரச் செயலுக்கு அடையாளமாகக் கழலை அணிந்தது. எம்பெருமான் அந்தத் திருவடியை மட்டும் என்மேல் வைக்கவில்லை. தன் திருவடிகள் இரண்டையும் என்மேலே வைத்தான். கழலடி இரண்டும் வந்து மேலனவாக இருக்கும் பெரும் பேற்றை யான் பெற்றேன்.”
காலனை வீழ்ச் செற்ற
கழல் அடி இரண்டும் வந்து என்
மேலவாய் இருக்கப்பெற்றேன்.
“இதற்கு முன்பெல்லாம் என் மனம் எங்கெங்கோ ஓடித் திரிந்தது. எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய பொல்லாங்கையும் புறச் சமயப் படுகுழியில் விழுந்து ஏறமாட்டாமல் தவித்த தவிப்பையும், அதனால் உண்டான கவலைகளையும் எண்ணி எண்ணி ஏங்கினேன். இப்பொழுது அந்த எண்ணங்கள் இருக்குமிடம் தெரியாமல் ஓடி மறைந்தன. இறைவன் திருவடியை நான் முடியாகச் சூட்டிக் கொண்ட பிறகு பிரபஞ்சத்தையே ஆளும் மன்னனுக்குள்ள பெருமிதத்தோடு இருக்கிறேன்,”
இவ்வாறு எண்ணமிட்ட அப்பர் சுவாமிகள் இறைவனை நோக்கியே சொல்கிறார். “நீலமணியைப் பதித்து வைத்தாற் போல, ஆலகால நஞ்சைக் கண்டத்தில் வைத்திருக்கும் திருக்கழுத்தையுடைய பெருமானே, மேன்மையுடன் தோன்றுகின்ற அழகையுடையது திருநெய்த்தானம் என்னும் தலம், அங்கே மரங்கள் அடர்ந்து தழைகள் செறிந்து குளிர்ந்திருக்கும் பொழில்கள் உள்ளன. அவற்றினிடையே உள்ள திருக்கோயிலில் நீ எழுந்தருளியிருக்கிறாய். பிறர் கண்டாலே அஞ்சுகின்ற நஞ்சை நீ அழகு பெற்ற நீலமணியைப் போலக் கண்டத்தில் தரித்திருக்கிறாய். உள்னை நான் எப்படி நினைக்க வேண்டுமோ அப்படி இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.”
மேதகத் தோன்றுகின்ற கோல நெய்த்தானம்
என்னும் குளிர் பொழிற் கோயில் மேய நீலம்
வைத்தனைய கண்ட,
நினைக்குமா நினைக்கின்றேனே.
“முன்பு உன்னை நினைக்கும் போதெல்லாம் வேறு நினைவுகள் வந்து குறுக்கிடும். மனம் சலனம் உள்ளதாக இருந்தமையால் உன் திருவுருவத்தைத் தெளிவாக உள்ளத்தே நிறுத்த முடியவில்லை. உன் திருவடி தீட்சை பெற்ற பிறகு என் மனம் எங்கும் அலைவதில்லை. ஓடும் வண்டிக்குப் ‘பிரேக்’ போட்டது மாதிரி நின்றுவிட்டது. அங்கே உன்னுடைய வடிவமே தெரி கின்றது. ஒரு குளத்தில் அலைகள் இல்லாமல் இருந்தால் தரையில் யானை இருந்தாலும் அதன் பிரதி பிம்பம் தெளிவாகத் தெரியும். வானம் தெரியும். கதிரவன் தெரிவான். அருகில் நிற்கும் மரங்களெல்லாம் தெளிவாகத் தெரியும். என் மனம் உன்னுடைய திருவடி தீட்சைக்குப் பிறகு அலையடங்கிய குளம்போல இருக்கிறது. இதில் எங்கும் உன்னுடைய காட்சியே தெரிகின்றது. உன்னை ஒரு முகமாக நினைக்கும் ஆற்றல் எனக்கு உண்டாகிவிட்டது” என்று சொல்கிறார் அப்பர்.
காலனை வீழச் செற்ற
கழல்அடி இரண்டும் வந்துஎன்
மேலவாய் இருக்கப் பெற்றேன்;
மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தானம் என்னும்
குளிர்பொழிற் கோயில் மேய
நீலம்வைத் தனைய கண்ட,
நினைக்குமா நினைக்கின் றேனே.
மேன்மை உண்டாகத் தோற்றப் பொலிவுடன் இருக் கின்ற அழகையுடைய திருநெய்த்தானம் என்னும், குளிர்ந்த பொழில்களையுடைய திருக்கோயிலில் நித்தியவாசம் செய்யும், நீலமணியைப் பதித்து வைத்தாற் போன்ற திருக்கழுத்தை யுடைய எம்பெருமானே, காலனை வீழும்படி அடர்த்த நின் னுடைய கழலை அணிந்த திருவடிகள் இரண்டும் நின் அருளால் தாமே வந்து என்மேல் உள்ளனவாக இருப்பதற்குரிய பெரும் பேற்றை அடியேன் பெற்றேன். (இனி எனக்கு எந்தக் கவலை யும் இல்லை.)
[கழல்-வீரகண்டை, அதை ஒரு காலில் அணிவது வழக்கம், இறைவன் திருவடிகள் இரண்டும் பல பராக்கிரமச் செயல்களைச் செய்தன வாதலின் கழல்களை அணிந்தன. வந்து அடியேன் முயன்று தம்மை அடையாவண்ணம் அவை தாமே வந்து. என் மேலவாய்-என் தலை மேல் உள்ளனவாக. இருக்கப் பெற்றேன்-இருக்கும் பேற்றை அடைந்தேன். மேதக-மேன்மை தக; மேன்மை உண்டாகும்படி. தோன்றுகின்ற கோலத்தையுடைய கோயில், பொழிற்கோயில். கோலம்-அழகு. நெய்த்தானம் என்பது தலத்துக்கும் பெயர்; கோயிலுக்கும் பெயர். சில இடங்களில் இரண்டும் வெவ்வேறாக இருக்கும். மேய- விரும்பித்தங்கிய, நீலம்-நீலமணி; கருங்குவளை மலர் என்பதுமாம்; “குவளைக் களத்தம்பலவன்” (33) என்பது திருக்கோவையார். வைத்தனைய – வைத்தாலனைய. நினைக்குமா -நினைக்குமாறு; ஈறு கெட்டது.]
இது நான்காம் திருமுறையில் 37-ஆம் திருப்பதிகத்தில் வரும் முதற்செய்யுள்.
முற்றும்.
★ ★ ★



