அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

19. ஊடலும் ஆடலும்

பகீரதன் யார் யாரையோ நோக்கித் தவம் புரிந்தும் கங்கையைக் கொண்டுவர முடியவில்லை. கங்கையையே வேண்டித் தவம் புரிந்தான். “நான் இறங்கி வந்தால் என்னைத் தாங்குவார் யார்?” என்று இறுமாப்புடன் அவள் சொன்னாள். பிறகு பகீரதன் இறைவனை நோக்கித் தவம் புரிந்தான். இறைவன் கங்கையை ஏற்றுக் கொள்வதாக அருள் பாலித்தான். மறுபடியும் கங்கையை நோக்கித் தவம் செய்து அவளை இறங்கி வரும்படி வேண்டினான். கங்கையோ மிக்க செருக் கோடு, ‘விண்ணுக் கடங்காமல், வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல்’ அலைகளை வீசிக்கொண்டு வந்தாள். இறைவன் கங்கையைத் தன் ஒரு சடையில் ஒரு துளியைப் போல ஏற்று அடக்கினான். மறுபடியும் பகீரதன் தவம் புரியக் கங்கையை வெளியிலே ஓடுமாறு விட்டு அவனுடைய முன்னோர்களின் எலும்பிலே பாயச் செய்தான். அதனால் அவர்கள் நற்கதியை அடைந்தார்கள்.

கங்கை ஆரவாரத்தோடு வந்தபோது அவளை இறைவன் தன் சடையில் ஏற்றுச் சூடினான்.

சூடினார் கங்கையாளை.

அவள் வந்த ஆரவாரத்தை உமாதேவி கேட்டாள். தன்னுடைய கொழுநன் தலையின் மேலே ஒருத்தி வந்து அமர்ந்து கொண்டதையும், அவளை அவன் தலையால் தாங்குவதையும் அறிந்த அன்னைக்குக் கோபம் வந்துவிட்டது. யாரோ ஒருத்தியை இவர் நம்மை அறியாமல் தலையாலே தாங்குகிறாரே!’ என்று ஊடல் கொண்டாள்.

சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கையாளும்.

இறைவன் எம்பெருமாட்டி ஊடல் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டான். அதைப் போக்குவது எப்படி என்று யோசித்தான். பெண்களுக்கு ஆடல் பாடல்களில் ஆர்வம் அதிகம். ஆகவே அம்பிகையின் ஊடலை நீக்க வேண்டி வாய்திறந்து சாம வேதத்தைப் பாடினான். அவன் எப்போதும் சாம வேதத்தைப் பாடிக் கொண்டே இருப்பவன். “சாம வேத கீதர்” என்று அவனைச் சொல்வார்கள். இப்போது அம்பிகை மின் காதில் நன்றாக விழும்படியாகச் சாமவேதத்தைப் பாடினான்.

ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்.

அதோடு நிற்கவில்லை. ஆடுவதென்றால் அண்ணலுக்கு மிகவும் விருப்பம். பாடிக் கொண்டே தாளம் போட்டான் அந்தத் தாளத்துக்கு ஏற்ப நடனம் ஆடினான்.

பாடிய பாணியாலே
ஆடினார்.

பாடும் போதே இறைவியின் கோபத்தில் பாதி போய் விட்டது. அவன் தாளம் போட்டு ஆடத் தொடங்கவே பெருமாட்டியின் ஊடல் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிற்று. அவளும் தாளம் போடத் தொடங்கி விட்டாள் ஐயன் நடன மிடும்போது அம்மை தாளம் கொட்டுவது வழக்கம். தன்னை அறியாமலே கைகள் தாளம் கொட்ட கண்கள் ஐயனுடைய திரு நடனத்தைக் கண்டு களிக்க கங்கை சடையில் இருப்பதை மறந்தாள்; சினத்தை விட்டாள்.

இப்படிச் செய்தான் இறைவன் என்பதைத் திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பாடும்போது சொல்கிறார் அப்பர் சுவாமிகள். கெடிலத்தை ஒரு பக்க எல்லையாக உடைய திருவதிகை வீரட்டானத்துப் பெருமான் கங்கையைச் சூடி, அதனால் ஊடல் கொண்ட உமை மங்கைக்காக் ஆடி, அமைதியை உண்டாக்கினான்.

சூடினார் கங்கை யாளைச்
சூடிய துழனி கேட்டு அங்கு
ஊடினாள் நங்கை யாளும்;
ஊடலை ஒழிக்க வேண்டிப்
பாடினார் சாம வேதம்;
பாடிய பாணி யாலே
ஆடினார், கெடில வேலி
அதிகைவீ ரட்ட னாரே.

கெடில நதியை ஒரு பக்க எல்லையாகக் கொண்ட திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளிய சிவபெருமானார் கங்கா தேவியைத் தம் சடையில் அணிந்தார்; அப்படி அணிந்த போது அம்பிகை ஊடல் கொண்டாள்; அந்த ஊடலைப் போக்குவதை விரும்பி, சாம வேதம் பாடினார்; அப்படிப் பாடும்போது தாளம் போட்டுப் பாட, அந்தத் தாளத்துக் கேற்ப நடனம் ஆடினார். (அம்பிகையின் ஊடல் தீர்ந்தது.)

[சூடினார் – தலையில் அணிந்தார். ஆரவாரத்தோடு வந்தாலும் இறைவன் அவளுடைய முழக்கத்தை அடக்கி ஒரு மலரைத் தலையில் அணிவதுபோல அணிந்தார். துழனி-ஓசை. அங்கு-அப்பொழுது. நங்கையாள் – உமாதேவி, கங்கையாள் கூடினாள்; அது கண்டு நங்கையாள் ஊடினாள்; நங்கையாளும்? உம்மை, அசை. பாணியால்-தாளத்துக்கு ஏற்றபடி கெடிலம் கெடிலம் என்னும் ஆறு. வேலி-எல்லை, அதிகை வீரட்டனார்: எழுவாய். ஏகாரங்கள், அசை.]

நான்காம் திருமுறையில் 27ஆம் திருப்பதிகத்தில் வரும். இரண்டாவது பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *