
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
17. ‘அலந்து போனேன்’
இந்த உடம்பு தோல் போர்த்து நின்று பளபளக்கிறது. அழகான உடம்பைப் பார்த்தால் நாம் அந்த அழகில் ஈடுபடுகிறோம். அழகானவர்கள் தம்முடைய உடம்பைப் பார்த்துத் தாமே பெருமை அடைவதுண்டு. உள்ளே ஊனும் குருதியும் எலும்பும் வைத்து அவை தெரியாமல் தோலால் மூடியிருக்கும் பண்டம் இந்த உடம்பு. இது பல காலம் நில்லாதது. இதில் உள்ள உறுப்புக்களும் உடம்போடே அழியக் கூடியவை. பொய்யான தோலினால் செறித்து வைத்திருக்கப்பட்ட இந்தச் சரீரம் நோய் வாய்ப்படும்போது பக்கம் பக்கமாக அழுகி வீழ்ந்து விடும். அப்படி அழிந்து போகும் உடலில் எவ்வளவு நாள் வாழ முடியும்? இந்த உடம்பில் வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? எந்தச் சமயத்தில் இடிந்து விழுமோ என்று அஞ்சும் படி சிதைந்துள்ள வீட்டில் நிலையாக வாழ முடியுமா? இந்த மெய்யில், உடம்பில் வாழ்வதை நாம் விரும்புகிறோம். ஞானிகள் இதைப் பொல்லாப் புலைமலிந்த கூடென்று அருவருப்படைவார்கள். ‘இந்தத் தேகத்தை உடையவனாய் நான் வாழ மாட்டேன்’ என்று அப்பர் சுவாமிகள் சொல்கிறார்.
பொய்யினால் மிடைத்த போர்வை
புரை புரை அழுகி வீழ
மெய்யனாய் வாழமாட்டேன்.
சிலகாலம் வாழ்ந்தாலும் அந்தக் காலத்திலாவது நன்மை உண்டாகிறதா? நமக்கு உறுதி பயக்கும் எதையாவது நாம் செய்ய விரும்பினால் நம் உடம்பிலுள்ள ஐம்பொறிகளும் அந்த விருப்பம் கைகூடாமல் நம்மை எங்கெங்கோ இழுத்துச் சென்று விடுகின்றன. பூஜை செய்ய எண்ணி உட்கார்ந்தால் நம்முடைய இந்திரியங்களும் உறுப்புக்களும் அதிலே ஒன்றாமல் தம் போக்கிலே போய்க் கொண்டிருக்கின்றன.
“கைஒன்று செய்ய விழிஒன்று நாடக்
கருத்து ஒன்று எண்ண
பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்
புலால்கமழும்
மெய்ஒன்று சாரச் செவிஒன்று கேட்க
விரும்புமியான்
செய்கின்ற பூசைஎவ் வாறுகொள்
வாய்வினை தீர்த்தவனே?”
என்று பட்டினத்துப் பிள்ளையார் பாடுகிறார். அப்படி நாம் ஒரு லட்சியத்தைப் பெற எண்ணி முயன்றால் ஐம்பொறிகளும் மாறாகத் தொழிற்படுகின்றன.
வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்.
அந்த ஐம்பொறிகளைக் கொண்டே நாம் நம் லட்சியத்தை பாடுபட வேண்டும். இறைவன் திருவுருவைக் காணக் கண்ணும் அவன் புகழைக் கேட்கச் செவியும் வேண்டும். அவனை வணங்க உடம்பு நம் விருப்பப்படி வளைந்து வர வேண்டும். கருவி கரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கிச் சென்றால் லட்சியத்தை அடைவது எப்படி?
இந்த நிலையில் அல்லற்பட்ட அப்பர் இறைவனுடைய சிவந்த தாமரை போன்ற செம்மையான திருவடிகளைத் தரிசிக்க ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறக் கருவி கரணங்கள் ஒத்துழைக்க வேண்டாமா? அவை ஏறுக்கு மாறாக இருந்தால் இறைவனை எப்படி வழிபடுவது? பொறிகளின் திரு விளையாடல்களினூடே சிக்கித் தவிக்கும் போது இறைவனைத் தரிசிப்பது எப்படி? புகழ்வது எப்படி? அவன் திருக்கோயிலை வலம் வருவது எப்படி? பூஜை புரிவது எப்படி? தியானம். செய்வது எப்படி? ஒன்றும் செய்ய முடியாது.
இந்த ஐவர்களின் போராட்டத்தைப் போக்க என்ன செய்வது? அறிவினாலும் ஆற்றலாலும் மிக்கவர்கள் உலகில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் அவர்களும் இந்த ஐவரால் அலைக்கப்பட்டு உழல்கிறார்கள். அப்படியானால் என்ன செய்வது? இறைவன் திருவடியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் ஒரு காலைக்கு ஒரு கால் மிகுதியாகி வந்தது.
கடைசியில் யாருடைய சேவடியைக் காண ஆசைப்பட்டாரோ அவரிடத்திலே முறையிட்டுக் கொள்வதே சரி என்று தீர்மானித்தார். “ஐயனே, உன் திருவடியைக் காணும் பொருட்டு நான் செயலிழந்து அலந்து போய்விட்டேன். அதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, தான் என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று புலம்பினார்.
பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை
அழுகி வீழ மெய்யனாய் வாழ மாட்டேன்;
வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார்;
செய்யதா மரைகள் அன்ன சேவடி இரண்டும்
காண்பான் ஐய, நான் அலந்து போனேன்,
அதிகைவீ ரட்ட னீரே.
ஐயனே, அதிகைவீரட்டத்தில் எழுந்தருளிய பெருமானே, நிலையாமை யென்னும் பொய்யினால் செறிந்த உடம்பின் தோலாகிய போர்வை, பக்கம் பக்கமாக அழுகி வீழும் படியாக, இந்த உடம்பை உடையவனாய் வாழும் ஆற்றல் இல்லேன்; நான் எதை வேண்டுகின்றேனோ அந்த ஒன்றை இந்த உடம்பிலுள்ள ஐம்பொறிகள் விரும்புவதில்லை. சிவந்த தாமரைகளைப் போன்ற நின் செம்மையான திருவடிகள் இரண்டையும் தரிசனம் செய்வதற்கு நான் துன்புற்றுச் செயலிழந்து போனேன்.
[மிடைந்த – செறிந்த; முடைந்த எனலும் ஆம். போர்வை என்றது தோலை. புரை – பக்கம். மெய்யனாய் – உடம்பை உடையவனாய். மாட்டேன் – ஆற்றல் இல்லேன். ஐவர்-ஐம் பொறிகள்; தொகைக் குறிப்புச் சொல்; உயர்திணையாகச் சொன்னது இழிவுக் குறிப்பு. செய்ய தாமரை-செந்தாமரை; வயல்களில் அலரும் தாமரை என்றும் கொள்ளலாம். காண்பான் – காணும்பொருட்டு. அலத்தல்-துன்புற்று ஏங்கி நிற்றல். வீரட்டனார் என்பதன் முன்னிலை விரட்டனீர் என்பது, ஏ-விளி யுருபு.]
இந்திரியங்களின் போக்கிலே செல்பவர்களுக்கு இறைவன் திருவருள் கிட்டாது என்ற கருத்து இதனால் புலப்படுகிறது.
நான்காம் திருமுறையில் 26-ஆம் திருப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாட்டு இது.



