அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

22. இறைவர் அமைத்துள்ள நியதி

சிவபெருமான் அகில லோகத்தில் உள்ளவர்களையும் பாதுகாத்தருள்பவர். விண்ணில் உள்ளவர்கள் யாவரும் தம்மை தோக்கித் தவம் செய்பவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பவர்கள். ஆனாலும் அவர்களுக்கு இறைவருடைய திருவருள் இல்லாவிட்டால் வாழ முடியாது. சிறிய வங்கியிலுள்ளார் பலருக்குப் பணம் கொடுத்தாலும் அவர்கள் பெரிய வங்கியிலிருந்து பணம் பெறுவார்கள். அதுபோலத் தேவர்கள் எம்பெருமானை விரும்பி அதனால் தம் பதவியைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

விண்ணினை விரும்ப வைத்தார்.

தேவர்களுக்கு உலகத்தில் நடைபெறும் வேள்விகளில் அவியுணவு கிடைக்கும். அவ்வாறு அவர்கள் அவியுணவு பெறும்படி உலகில் உள்ளவர்களை வேள்வி செய்யும்படியாக அருள் செய்பவர் சிவபெருமான்,

வேள்வியை வேட்க வைத்தார்.

இசை வல்லுநர்கள் பண்ணையும் பாட்டையும் பாடினாலும் அவற்றால் மிக்க இன்பம் அடைபவர் அல்லர் அவர். தம்முடைய புகழைப் பாடும் பாடல்களாக இருந்தாலும் பாடுபவர் மனம் ஒன்றி அவரை எண்ணிப் பாடினால் அப்போதுதான் அவர் திருவுள்ளம் மிக்க உவப்பை அடையும். பாட்டுக்காகவும் பண்ணுக்காகவும் பாடுகிறவர்கள் வெறும் கலைஞர்கள். அத்தகைய பாடல்களைப் பக்தர்கள் பாடும் பொழுது அவர்கள் பாட்டின் பொருளாகிய இறைவருடைய நினைவோடே பாடுவார்கள்; பலகாலும் பயின்று பாடுவார்கள் அவர்கள் பாட்டைக் கேட்டுத் திருவுள்ளம் உவப்பவர் சிவ பெருமான். அவர்கள் மேலும் மேலும் பாடும்படி அவர்களுக்கு வேண்டிய ஆற்றலைக் கொடுப்பார்.

பத்தர்கள் பயில வைத்தார்.

திருமால் சிவனடியார்களில் ஒருவர்; மகாபலியினிடம் வேண்டினார்; அவன் வாமனராகச் சென்று மூன்றடி மண் கொடுக்க இசைந்தவுடன் வாமனராக இருந்த வடிவத்தை மாற்றிக் கொண்டு நீண்டுயர்ந்த திரிவிக்கிரமாவதாரத்தை எடுத்தரர்; பிறகு மண்ணினைக் காலால் தாவி அளந்தார். அவ்வாறு செய்து மாவலியின் கொடுமையை அழிக்கும்படி யாகத் திருமாலுக்கு ஆற்றலை அளித்தவர் சிவபெருமானே.

மண்ணினைத் தாவ நீண்ட
மாலினுக்கு அருளும் வைத்தார்.

வேறு யாருக்கும் இல்லாத அங்க அடையாளங்களை உடையவர் அவர். மற்றவர்கள் யாவரும் இரண்டு கண்களோடு இருக்க, அவர் தம் நெற்றியில் ஞானக் கண்ணை உடையவராக விளங்குகிறார்.

கண்ணினை நெற்றி வைத்தார்.

திருக்கழிப்பாலை என்னும் தலத்துக்குச் சென்று வழிபட்ட போது இந்த எண்ணங்களெல்லாம் அப்பர் சுவாமிகளுக்குத் தோன்றின. திருக்கழிப்பாலை கடற்கரையில் உள்ள தலம். அந்தக் கடற்கரையில் எழுந்தருளியுள்ளவராகிய சிவபெருமான் இவற்றைச் செய்தருளினார்.

கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

இறைவருடைய திருவருளினால் தேவர்கள் வாழ்கிறார்கள். அதனால் அவர்கள் இறைவரை விரும்பி வழிபடுகிறார்கள். உலகத்திலுள்ளவர்கள் வேள்விகளைச் செய்து தேவர்களுக்கு உணவு வழங்கும்படி ஒரு நியதியை அவரே வகுத்திருக்கிறார். பண்ணும் பாட்டும் உலகிலுள்ளார் பாடும்படி வைத்துப் பக்தர்கள் தம் புகழைப் பண்ணோடு பாடும் படியான நியதியையும் அவர் அமைத்திருக்கிறார். தேவர்களுக்கு அருள்வது போலத் திருமாலுக்கும் அருள்புரிந்து அவரால் சில தீயவர்கள் அழியும்படியாகச் செய்திருக்கிறார். ஞானக் கண் படைத்த அப்பெருமான் இன்னாருக்கு இன்னபடி அருள் புரிந்து செயல்பட வைக்க வேண்டும் என்று திருவுள்ளங்கொண்டு அவ்வாறே கருத்துக்களை எல்லாவற்றையும் நிகழ்த்துகிறார். இந்தக் அப்பர் சுவாமிகள் திருப்பாட்டுத் தெரிவிக்கிறது.

விண்ணினை விரும்ப வைத்தார்,
வேள்வியை வேட்க வைத்தார்,
பண்ணினைப் பாட வைத்தார்.
பத்தர்கள் பயில வைத்தார்,
மண்ணினைத் தாவ நீண்ட
மாலினுக்கு அருளும் வைத்தார்,
கண்ணினை நெற்றி வைத்தார்,
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

திருக்கழிப்பாலைக் கடற்கரையில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இறைவர், தேவலோகத்திலுள்ளவர்கள் தம்மை விரும்பி வேண்டியவற்றைப் பெறும்படி வைத்தார்; உலகத்திலுள்ள அந்தணர்கள் தேவர்களுக்கு அவியுணவு வழங்கி வேள்வியைச் செய்யும்படி வைத்தார்; பல வகையான பண்களைப் பாடும் படியாகத் தோற்றிவைத்தார்; அந்தப் பாடல்களைப் பக்தர்கள் பலகாலும் பாடும்படி வைத்தார்; உலகைத் தாவி அளப்பதற்காக நீண்ட வடிவம் எடுத்த திருமாலுக்கு அருளை வைத்தார்; தம்முடைய நெற்றியிலே ஒரு கண்ணை வைத்தார்.

தேவர்கள், அந்தணர்கள், பக்தர்கள், திருமால் ஆகியவர் என்ற நியதியைகளுக்கு இன்ன இன்னபடி செய்க இறைவர் தம் ஆணையால் அமைத்து வைத்ததைச் சொல்வது. இந்தப் பாட்டு.

[விண்- வானுலகத்திலுள்ள தேவர்கள்; ஆகு பெயர் வேட்க- வேள்வி செய்யும் உரிமையுடையவர்கள் அதனைச் செய்யும்படி. பண் – இராகம். பயில – பலகாலும் சொல்லிப் புகழ. அருளும்: உம்மை, எச்சவும்மை; அவருக்கு ஒரு பதவியைக் கொடுத்ததோடு மண்ணினைத் தாவும் ஆற்றலையும் கொடுத்தார் என்றபடி.

நெற்றி- நெற்றியில். சேர்ப்பு – கடற்கரை; சேர்ப்பனார் – கடற்கரைக்குத் தலைவர். ஏகாரம், ஈற்றசை.]

நான்காம் திருமுறையில் 30-ஆவது திருப்பதிகத்தில் உள்ள இரண்டாவது திருப்பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *