
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
12. அஞ்சுடராய் நின்றான்
இறைவனை எண்ணி வாழும் அன்பர்கள் உடம்பாலும் உள்ளத்தாலும் தூயவர்களாக இருப்பார்கள். அவர்கள் நெஞ்சில் வஞ்சனை என்பது சிறிதும் இராது. உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசும் வஞ்சனையுள்ளவர்கள் தொழுதால் அவர்களுக்கு இறைவன் தன் உருவத்தைக் காட்டமாட்டான்; அவர்கள் எவ்வளவு தவம் செய்தாலும் தலதரிசனம் செய்து வழிபட்டாலும் மக்களை வஞ்சிக்கும் எண்ணம் உள்ளவரைக்கும் அவர்களை அணுக மாட்டான்.
வஞ்சனையார் ஆர்பாடும் சாராத மைந்தனை.
(மைந்தன் – வலிமை உடையவன்.)
இப்படிச் சொன்னதனால், வஞ்சனை இல்லாத தூய நெஞ்சுடைய அன்பர்களிடத்தில் அவன் சார்ந்து அருள் புரிவான் என்பது தெளிவாகிறது. “உள்ளொன்று வைத்துப் புறம்பு ஒன்று பேசுவார் உறவுகல வாமை வேண்டும்” என்று அருட் பிரகாச வள்ளலார் வேண்டுவார்.
அந்தப் பெருமான் யாவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நள்ளிரவில் நடனம் புரிவான். உயிர்களெல்லாம் அமைதியோடு உறங்கும் இருளில் அவன் உறங்காமல் களிக்கூத்தாடுவான். தன் மனத்தே அவனை வைத்துத் தியானம் செய்யும் மெய்யன்பர்கள் இரவிலும் உறங்காமல் விழித்திருப்பார்கள். தனித்திரு, பசித்திரு, விழித்திரு என்று தவம் செய்யும் முறையைக் கூறுவார்கள். பெரிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, யாவரும் உறங்கும் வேளையில் தன் கணவனை நாடிச் சென்று அணைந்து இன்புறுவது போல, தவம் செய்யும் யோகியர்கள் விழித்திருந்து நள்ளிரவில் அவனுடைய தரிசனத்தைப் பெறுவார்கள். அப்போது ஆடல் உகந்த பெருமானுடைய காட்சி அவர்களுக்குக் கிடைக்கும்.
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை.
அவனுடைய தொண்டர்கள் எப்போதும் அவனை எண்ணுவார்கள். இருந்தாலும் அவர்கள் உள்ளத்திலும் சில சமயங்களில் வாசனா மலத்தால் மயக்கம் உண்டாகும்; அறியாமை என்னும் இருள் தலைநீட்டும். அப்போது இறைவன் அவர்களுக்கு அருள் செய்ய முந்துவான்; தண்ணிய நிலவொளியை வீசச் செய்வான்; அவன் திருமுடியில் உள்ள நிலாவின் ஒளி அந்தத் தொண்டர்களின் உள்ளத்தே ஒளிரச் செய்வான்.
தன் தொண்டர் நெஞ்சு இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து.
எப்போதும் அவனையே நினைத்து, அவனுடைய சுடர் வண்ணத் திருமேனியையே தியானித்து நெஞ்சில் ஒளி படர நிற்பவர்கள் தொண்டர்கள். எப்படியாவது இவர்களைத் தன் மாய வலையில் அகப்படுத்த வேண்டும் என்று அஞ்ஞானம் வந்து சூழும். அதற்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும்; அது உடனே உள்ளே புகுந்து விடும். நம்முடைய மனத்தில் அறியாமையே குடிபுகுந்து அரசாட்சி செய்கிறது. அன்பர்கள் நெஞ்சில் அது குடிபுக முடியாமல் திணறி நிற்கும். சற்றே அன்பர்கள் சோர்வாக இருந்தால் அந்தச் சமயம் பார்த்து அது உள்ளே புகுந்து விடும்.
அப்பொழுது தன் தொண்டர்களைப் பாதுகாக்க முன்வருவான் இறைவன்; தண்ணிய நிலவொளி வீசும்படி செய்வான்; தன் உருவத்தைக் காட்டத் தொடங்கி அதற்கு அடையாள மாக நிலாவைப் பாரிக்கச் செய்வான்; பிறகு தானே அழகிய சுடராக உள்ளே புகுந்து நிற்பான். சூரியன் வானத்திலே தோன்றுவதற்கு முன் அருணோதயம் ஆவது போல முதலில் நிலா ஒளியைக் காட்டுவான்; பிறகு கதிரவன் தோன்றுவது போலத் தானே அழகிய சுடராய் வந்து நிலையாக நிற்பான் அவனுடைய கருணை அது.
தாகம் தணியத் தண்ணீர் கொடுத்துப் பிறகு பசி தீர உணவளிப்பது போலே, தன் தொண்டர் நெஞ்சில் இருள் படரும் பொழுது முதலில் நிலா ஒளியைக் காட்டி அப்பால் செஞ்சுடர்ச் சோதியாக எழுந்தருளி வந்து நிற்பான்.
இத்தகைய இயல்புடைய பெருமானை அப்பர் சுவாமிகள் திருவாரூரில் தரிசித்தார்.
நிலாப் பாரித்து
அஞ்சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே.
அஞ்ஞானம் என்னும் இருளை நீக்கி மெய்ஞ்ஞானம் என்னும் ஒளியைப் புகுத்திப் பின் தேஜோமய விக்கிரகமாக அன்பர்கள் உள்ளத்தில் நின்று அருளாட்சி செய்கிறவன் சிவ பெருமான். இதை அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.
வஞ்சனையார் ஆர்பாடும் நில்லாத மைந்தனைத்
துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்
நெஞ்சுஇருள் கூரும் பொழுது நிலாப்பாரித்து
அஞ்சுடராய் நின்றானை நான்கண்டது ஆரூரே.
உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் வஞ்சனை நெஞ்ச முடையவர் எவ்வகையில் வல்லவராக இருந்தாலும் அவர்கள் யாரிடத்தும் நில்லாமல் உள்ள அருள் வலிமை பெற்ற பெருமானும், யாவரும் உறங்கும் நள்ளிருளில் நடனம் செய்தலை மனம் உகந்து மேற்கொண்டவனும், தன்னுடைய தொண்டர்களின் நெஞ்சில் அஞ்ஞானம் என்னும் இருள் மிகுதி யாகும் பொழுது அங்கே தண்ணிய நிலாவொளியைப் பரப்பிப் பிறகு அழகிய சுடர்வடிவமாகக் கோலம் காட்டி நிலையாக நிற்கும் பெருமானுமாகிய சிவபிரானை நான் கண்ட இடம் திருவாரூர் ஆகும்.
[‘நெஞ்சை ஒளித்தொரு வஞ்சகம் இல்லை’ ஆதலின் நெஞ்சில் வஞ்சனை உடையார் புறத்தே அது இல்லாது போலக் காட்டுவார். அத்தகைய வேடதாரிகளிடத்தில் இறைவன் சேரமாட்டான்.
ஆர்பாடும் – யாரிடத்தும். சாராத – அடைந்து அருள் புரியாத. மைந்தனை – வலிமையுடையவனை; இளைய திருவுருவம் உடையவனை என்றும் கொள்ளலாம். துஞ்சு – உறங்கும். யாவரும் உறங்கும் இருள், நள்ளிருள். அப்போது நடனமிடுதல் இறைவனுக்கு உகப்பானது; “நள்ளிருளில் நட்டம் பயின் றாடும் நாதனே” என்பது திருவாசகம். இருள் என்றது அறியாமையை. கூரும்பொழுது-மெல்லப் புகுந்து மிகுந்து வரும் சமயத்தில், நிலாப் பாரித்து – நிலவைப் பரப்பி; தன்னுடைய தண்மையான அருளைப் பரப்புவதைக் குறித்தது. அஞ்சுடராய்- அழகிய சுடராய். வெம்மையுடையது கதிரவன் என்னும் சுடர்; அக்கினியும் அத்தகையதே; சந்திரனோ தேய்தலும் மறைவதும் உடையவன். இறைவனோ இவை யாவும் இல்லாமல் எல்லாச் சுடர்களுக்கும் மேலாக விளங்கும் சுடர். அதனால் அவனைப் பரஞ்சுடர் என்பார்கள். நின்றானை – அகலாமல் நிலைத்து நின்றவனை. கண்டது – கண்டு அவன் இயல்பை அறிந்து கொண்ட இடம், ஏகாரம், ஈற்றசை.]
இந்தப் பாசுரம் நான்காம் திருமுறையில் 19-ஆம் பதி கத்தில் எட்டாவது திருப்பாட்டாக உள்ளது.



