அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

16. திருவடிக் காட்சி

இறைவனுடைய திருவடியைத் தரிசித்து இன்புற்ற அடியவர்கள் பக்தியில் முறுகி நின்று அந்தத் திருவடியை நேரிலே கண்டு மகிழ வேண்டும். என்ற பேரார்வத்தைப் பெறுவார்கள். வெளியிலே இறைவனுடைய திருவடியைப் பலகாலும் தரிசித்துப் பின்பு அகத்திலே அந்தத் திருவடியை வைத்துத் தியானிப்பார்கள். அப்பால் அந்தத் திருவடியை உண்மையான வடிவத்திலே காணவேண்டும் என்று ஏங்கி நிற்பார்கள்.

திருவடியை அதன் இயல்பான வடிவத்திலே கண்டவர்கள் அதன் அழகிலே ஈடுபட்டு எப்போதும் அதைக் காணுவதிலே லயித்துப் போய்விடுவார்கள். இந்த லயம் தமக்கு வரவேண்டுமென்று அப்பர் சுவாமிகள் திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்.

நல்லவர்கள் விரும்பும் பொருள் அவன். இவ்வுலகில் எத்தனை போக போக்கியங்கள் இருந்தாலும் அவை நிலையானவை அல்ல என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அடியவர்கள். ஆகவே அவற்றில் மனம் வையாமல் இறைவனுடைய திருவடி தரிசனத்தையே தம் லட்சியமாகக் கொண்டு சாதனை செய்து வருவார்கள். தன்னை உணரப் புகுந்தவர் களுக்கெல்லாம், காணவேண்டும் என்ற விருப்பத்தை உண்டாக்குகிறவன் அவன்.

நம்பளே!

அடியவர்களுக்கு அவனே தலைவன்; தன் அருளாட்சியில் அவர்களை ஈடுபடுத்தி ஆளும் வேந்தன்.

எங்கள் கோவே!

தன்னை உணர்வாருக்கும் உணராதாருக்கும் அவனே எல்லாம் வழங்கும் நாயகனாக இருக்கிறான். உலகிலுள்ள நாயகர்கள் சில காலம் தம் தலைமைப் பதவியில் இருப்பார்கள்; பிறகு மாறி விடுவார்கள். இந்திரன் முதலிய தேவர்களும் அத்தகையவர்களே. என்றும் மாறாமல் எல்லாருக்கும் நாதனாக இருப்பவன் அவனே.

நாதனே!

எல்லாப் பொருள்களுக்கும் ஆதி காரணனாய், யாவருக்கும் முதல்வனாய், தனித் தலைமை தாங்குபவன் அவன்.

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு

என்பது முதற் குறள். ஆதிமூர்த்தியாக என்றும் அவன் இருக்கிறான். யாவரும் மறைந்தாலும் எல்லாவற்றையும் தோற்று விக்கும் ஆதிப் பரம்பொருளாகிய அவன் மறைவதில்லை.

ஆதி மூர்த்தி!

அவன் என்றும் அடியவர்கள் பங்கில் இருந்து நலம் செய்கிறவன்; அவர்களுடைய முயற்சிகளையெல்லாம் நிறைவுறச் செய்து அவர்களுக்குப் பரமோபகாரியாக விளங்குபவன்.

பங்கனே!

அவன் யோகியைப் போன்ற கோலம் பூண்டவன். யோகி யர்களுக்கெல்லாம் மேலான யோகியாக இருப்பவன்.

பரம யோகி!

இவற்றையெல்லாம் நினைந்து வழிபடுகிறார்கள் அன்பர்கள்; பலகாலும் இப்படிச் சொல்லி மனம் உருகி நிற்கிறார்கள்; ஒவ்வொரு நாளும் எது செய்தாலும் செய்யாவிட்டாலும் இவ்வாறு அவன் இயல்பை எண்ணி வாயாரப் புகழ்வதை நிறுத்த மாட்டார்கள்,

என்றென்றே பரவி நாளும்.

அவன் சிவந்த பொன்னைப் போலக் காட்சி அளிப்பான்; பவளக் குன்று போன்ற திருக்கோலத்துடன் ஒளிர்வான். அந்த இயல்புகளைச் சொல்லி அவனை விளித்துத் துதித்து மகிழ்வார்கள் அடியவர்கள்.

செம்பொனே! பவளக்குன்றே!

அவனை விட உயிர்களுக்கு அன்பன் வேறு இல்லை. உயிர்களிடத்தில் வைத்த பேரன்பினால் அவன் தனு கரண புவன போகங்களை வழங்கியிருக்கிறான்.

அன்பனே!

அந்தப் பெருமானுடைய திருவடியைக் காணவேண்டு மென்று ஏங்கித் தவித்து நிற்பார்கள் மெய்யன்பர்கள்..

திகழ் மலர்ப் பாதம் காண்பான்
அன்பனே! அலந்து போனேன்.

ஒவ்வொரு நாளும் வாயினால் அவனுடைய திருநாமங்களைச் சொல்லிச் சொல்லி உருகுவதும், அவனுடைய திருவடிகளை உண்முகத்தே தரிசித்து, இறுதியிலே அவற்றோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்று ஏங்குவதும் அடியவர்கள் இயல்பு.

இதை அப்பர் சுவாமிகள் திருவாக்கால் உணர்ந்து கொள்கிறோம்.

நம்பனே, எங்கள் கோவே,
நாதனே, ஆதி மூர்த்தி,
பங்கனே, பரம யோகி என்றென்றே பரவி நாளும்,
செம்பொனே, பவளக் குன்றே,
திகழ்மலர்ப் பாதம் காண்பான் அன்பனே, அலந்து போனேன்;
அதிகைவீ ரட்ட னீரே!


செம்பொன்னைப் போலவும் பவளக் குன்றத்தைப் போலவும் கோலம் காட்டும் பெருமானே, அடியவர்களிடத்தில் பேரன்பு உடையவனே, திருவதிகை வீரட்டானத்தில் எழுந் தருளியிருக்கும் கடவுளே, உன்னை, ‘விருப்பம் உடையவனே, எங்களை அருளாட்சியில் வைத்துப் பாதுகாக்கும் மன்னனே, எல்லோருக்கும் நாயகனாக உள்ளவனே, எல்லாருக்கும் முதல்வனாக உள்ள மூர்த்தியே, அடியார் பங்கிலே இருந்து பாதுகாப்பவனே, எல்லா யோகியரையும் விட மேலான யோகியாக உள்ளவனே’ என்று பலகாலும் சொல்லிச் சொல்லித் துதித்து, காட்சியைக் ஒவ்வொரு நாளும் உன்னுடைய திருவடிக் காணும் பொருட்டு ஏங்கிப் போனேன். (என் ஏக்கத்தைத் தீர்த்துத் திருவடியைத் தரிசிக்கும்படி அருள் புரிய வேண்டும்.)

[நம்பு – விருப்பம்; அடியார்பால் விருப்பம் உடையவன், அடியாரால் விரும்பப்படுகிறவன் என்று இருவகையில் நம்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம். கோ-அரசன்; தன் அருளாட்சியிலே உலகம் நிகழும்படி கோல் செலுத்துகிறவன். நாதன்-யாவர்க்கும் தலைவன்; “நாதன் தாள் வாழ்க” என்று சிவபுராணத்தில் பாடுகிறார் மணிவாசகர். ஆதிமூர்த்தி: இறைவனே எல்லாப் பொருள்களுக்கும் மூல முதல்வன்; அவன் அடியார் கண் காணும்படி மூர்த்தீகரித்து நிற்கிறான். பங்கன் – பக்கத்தில் உள்ளவன்; அடியவர்கள் பக்கம் சார்ந்து அவர்களுக்கு நலம் புரிபவன். என்று என்று- என்று பல காலும் சொல்லிச் சொல்லி; ஏகாரம்: அசை; பிரி நிலையாக வைத்து, வேறு ஏதும் சொல்லாமல் இவற்றையே சொல்லி என்றும் பொருள் கொள்ளலாம். பரவி புகழ்ந்து. திகழ்மலர் – எந்த மலர்களுக்கும் இல்லாத எழிலும் தண்மையும் மணமும் உடையதாக விளங்கும் மலரைப் போன்றதாக உள்ள. காண்பான் – தரிசிக்கும் பொருட்டு. அலந்து போனேன் – ஏங்கிச் செயலிழந்து போனேன்.

முன்பெல்லாம் ஒருமையாகச் சொல்லி இறுதியில் வீரட்டனீரே என்று பன்மையாகச் சொன்னார். ஆர்வம் பொங்கப் புகழும்போது இவ்வாறு மாறி மாறிப் பேசுதல் இயல்பு.

செம்பொனே, பவளக்குன்றே என்பவை இறைவனை விளித்துச் சொல்லத் தொடங்கியவை. நம்பனே என்ப முதல் பரமயோகி என்பதுவரை உள்ளவை அவனைப் புகழும் வகையைச் சொன்னபடி.

திருவடி தரிசனத்தைப் பெறும்படி செய்ய வேண்டு என்பது குறிப்பு.)

இது, நான்காம் திருமுறையில் 26-ஆம் பதிகத்தில் உள்ள முதல் பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *