அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

3. இறைவன் வடிவங்களும் திருநாமங்களும்

இறைவன் எத்தகையவன் என்ற கேள்விக்கு உலகத்திலுள்ள சமயங்கள் பல பல விதமாக விடை அளிக்கின்றன. அவன் உருவம் உடையவன் என்றும் உருவம் இல்லாதவன் என்றும் சொல்லும் சமயங்கள் இருக்கின்றன. உருவம் உடையவன் என்பவர்கள் தத்தமக்கு ஏற்றபடி அந்த உருவத்தை வருணிக்கிறார்கள். உருவம் இல்லாதவன் என்றே பல சமயங்கள் சொல்கின்றன.

இந்து சமயம் இரண்டையும் சொல்கிறது. உருவம் உடையவன் என்றும் உருவம் இல்லாத அருவம் உடையவன் என்றும் சொல்கின்றது. இது முரண்பாடாகத் தோன்றுகிறது அல்லவா?

ஆனால் அந்த முரண்பாட்டைத் தெளிவாக்க என்ன செய்வது?

அவன் இயல்பாகத் தனக்கென்று உருவம் உடையவன் அல்லன்; ஆனால் கருணையினால் வடிவங்களை எடுத்துக் கொள்கிறவன். அவன் தானே விரும்பி உருவத்தை எடுத்துக் கொள்கிறவனாதலின் வெவ்வேறு உருவங்களை எடுத்துக் கொள்கிறான். காலத்திற்கும் இடத்திற்கும் அன்பர்களின் இயல்புக்கும் ஏற்ற படி அவன் மூர்த்தீகரித்து எழுந்தருளுகிறான். அதனால் அவன் மேற்கொள்ளும் வடிவம் ஒன்றல்ல; பல.

அருவமும் உருவும் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்

என்று கந்த புராணம் சொல்கிறது. இந்த அடியிலும் முரண்பாடு இருப்பதுபோலத் தோன்றுகிறது. அவன் அருவம் உடையவன்; ஆனால் பல உருவங்களை எடுப்பவன். அவன் ஒன்றாக. இருப்பவன்; ஆனால் புதிய பல தோற்றங்களை அவ்வப்போது எடுத்துக் கொள்கிறவன். ஆனாலும் அவன் ஒருவன்தான்.. “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்று வேதம் சொல்கிறது. “உண்மைப் பொருள் ஒன்றே; ஆனால் அதை அறிந்தவர்கள் பலவாகச் சொல்கிறார்கள்” என்பது பொருள். ஆகவே, அவனுடைய பலவகைத் தோற்றங்களுக்குக் காரணம் அவனை வழிபட்டுப் பக்தி செய்பவர்களின் மனநிலையே என்று சொல்லி விடலாம்.

சிலருக்கு இறைவனைக் குழந்தையாகப் பார்ப்பதில் விருப்பம் மிகுதி, அவர்களுக்கு அவன் குழந்தைக் கண்ணனாக, இளமுருகனாகக் காட்சி அளிக்கிறான். சிலருக்குத் துறவியாக, ஞானமூர்த்தியாக எண்ணும் இயல்பு இருக்கிறது. அவர்களுக்கு அவன் தட்சிணாமூர்த்தியாகக் கோலம் காட்டுகிறான். சிலர் அவனை அன்னையாக எண்ணி அன்பு செய்கிறார்கள். அவர்களுக்கு அவன் தாயாக, அன்னை பராசக்தியாகத் தரிசனம் தருகிறான்.

இவ்வாறு அன்பர்களின் விருப்பப்படி வடிவங் கொள்ளும் அவனை எப்படி வருணிப்பது? அவனுக்கு எத்தனை திருவடிகள் என்று சொல்வது? இரண்டு திருவடி என்றால் ஏக பாத மூர்த்தி என்று சிவபெருமானுடைய கோலங்களில் ஒன்று ஒற்றைக் காலோடு காட்சிஅளிக்கிறது. இரண்டுகால்களுக்கு மேல் இல்லை என்றால் வேதம் அவனுக்கு ஆயிரங்கண், ஆயிரம் பாதங்கள் (ஸஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ர பாத்) என்று கூறுகிறது.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது அவனுடைய வடிவத்தில் காணும் உறுப்புக்களுக்குக் கணக்கு வழக்கே இல்லை யென்று தோன்றுகிறது. பக்தர்களுடைய கணக்கை வரை யறுக்க முடிந்தால் அவன் வடிவத்தையும் வரையறுக்கலாம். இரண்டையும் வரையறுப்பது என்பது இயலாத காரியம்.

அவனுடைய வடிவங்கள் பல, உறுப்புகள் பல என்று சொல்லிவிட்டால் எல்லாம் அடங்கிவிடும். இத்தனை என்ற வரையறை தெரியாதபோது பல என்று சொல்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.

ஆயிரம் என்று சில சமயங்களில் சொல்கிறோம். அது வரையறையாக ஆயிரம் என்ற எண்ணைக் குறிப்பதல்ல, பலபல என்ற பொருளையே தரும். “ஆயிரம் வகையில் பிழைக்கலாம்” என்றால் ஏதோ கணக்கெடுத்துத் திட்டமாக ஆயிரம் என்ற எண்ணுக்குள் அடக்கிச் சொல்வதாகக் கொள்ளக்கூடாது.பல பல வகை என்பதையே ஆயிரம்வகை என்று சொல்வது வழக்கில் இருக்கிறது.

இறைவனுக்கு எத்தனை திருவடிகள்? ஒன்று என்றும் பல வென்றும் சொல்லலாம். பலவென்பதே பொருந்தும்.பல என்பதையே ஆயிரம் என்று சொல்வது வழக்கு என்று பார்த்தோம். அந்த வகையில் அப்பர் சுவாமிகள் இறைவனை வருணிக்கப் புகுகிறார்.

அவனுக்குப் பல பல திருவடிகள் உண்டு. அவை யாவும் தாமரை போலச் சிவந்து தண்மையை உடையனவாய் விரிந்து நிற்கும்.

ஆயிரம்தாமரை போலும்
ஆயிரம் சேவடி யானும்.

இறைவனுடைய வடிவத்தை நினைக்கப் புகுந்த மெய்யன்பர்களுக்கு அவனுடைய திருவடி நினைவே முதலில் தோன்றும், அவனுடைய அருட்பெருவடிவம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், தன் அன்பர்களுக்குத் திருவருள் பாலிக்க அவன் திருவடியை நிலம் பதித்து நடந்து வருகிறான்; அதை எளிதில் அன்பர்கள் பற்றிக் கொள்ளும்படி காட்சி அளிக்கிறான். ஆகவே இறைவன் வடிவத்தைச் சொல்லப் புகுந்த அப்பர் சுவாமிகள் அவனுடைய திருவடிகளையே முதலில் நினைக்கிறார்.

ஆயிரம் தாமரை போலும்
ஆயிரம் சேவடியானும்.

இப்போது அப்பர் சுவாமிகள் தம் கண்களை நிமிர்த்திப் பார்க்கிறார். இறைவனுடைய திருத்தோள்கள் காட்சி அளிக்கின் றன. அவை பொன்னிறம் பெற்றுப் பொலிந்து தோன்றுகின்றன; பொன்மலையே தோளாக வடிவெடித்து அமைந்ததோ என்று எண்ணும்படி திண்மையனவாகவும் அழகுடையனவாகவும் இலங்குகின்றன.

ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரம் தோள் உடையானும்.

தாளும் தோளும் கண்ட திருநாவுக்கரசர் இப்போது அவனுடைய முடிகளைக் காண்கிறார். அடி, நடு, முடிவு என்ற முறையில் அவர் உண்முகப் பார்வை செல்கிறது. சேவடியாகிய அடிநிலையையும் தோள்களாகிய இடை நிலையையும் தரிசித்தவர் இப்போது முடிநிலையாகிய திருமூடிகளில் தம் கண்களைப் பதிக்கிறார். திருமுடியைக் கண்டாலும் அதன் எல்லையைக் காண முடிவதில்லை. தலையின் மேல் அணிந்திருத்தலால் முடி தெரிகிறது.ஆனால் அதை முடியக் காணலாம் என்று முயன்றாலோ அது நீண்டு கொண்டே போகிறது. சூரியனைப் போல ஒளி வீசும் அந்த முடியின் முடிவைக் காண யாரால் முடியும்?

போதார் புனைமுடியும் எல்லாப்
பொருள்முடிவே

என்பது திருவாசகம். கதிரவனைப் போல ஒளிவிட்டு விளங்கினாலும் அதை முற்றும் காண முடிவதில்லை. அப்பாலுக்கு அப்பாலாக இருக்கும் முடிகள் அவை. அவன் ஆயிரம் திருவடிகளும் ஆயிரம் திருத்தோள்களும் கொண்டது போல ஆயிரம் தலைகளும் உடையவனாக இருக்கிறான்; ஆயிரம் முடிகளை அணிந் திருக்கிறான்.

ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும்.

அடி, தோள், முடி என்று அவனுடைய திருவுருவத்தின் மூன்று எல்லைகளைப் பற்றிச் சொன்ன சுவாமிகள் இப்போது அவன் திருநாமங்களை எண்ணிப் பார்க்கிறார். ஒரு வடிவம் உடையவனே பல பெயர்களுடன் உலவுவதை உலகில் பார்க்கிறோம். அளவுக்கு அகப்படாத வடிவமுடையவனுக்கு நாமங்களும் அளவுக்கு அகப்படாமல் உள்ளன. உருவம் பல எடுத்துக் கொண்டருளுவதைப் போலவே திருநாமங்கள் பலவற்றையும் அவன் ஏற்றுக் கொண்டிருக்கிறான்; இன்னும் புதிய புதிய திருநாமங்களை அன்பர்கள் படைத்துச் சொன்னாலும் அவற்றையும் ஏற்றுக்கொள்கிறான். தனக்கென்று ஒரு வடிவம் இல்லாமையால் பல வடிவங்களை மேற்கொள்வதைப் போல, தனக்கென்று ஒரு நாமம் இல்லாமையால் பல பல திருநாமங்களை ஏற்றுக் கொள்கிறான்.

ஒரு நாமம் ஓருருவம்
ஒன்றும் இலாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம்
தெள்ளேணம் கொட்டாமோ

என்று பாடுவார் மணிவாசகர்.

இறைவனுக்கு அருச்சனை செய்யும்போது அஷ்டோத்தரம் என்றும் சகசிரநாமம் என்றும் அருச்சனை செய்வதுண்டு. ஒவ்வொரு மூர்த்திக்கும் தனித்தனியே சகசிரநாமம் இருக்கிறது. ஒரே மூர்த்திக்கு வெவ்வேறு சகசிரநாமங்களும் உண்டு. பெரிய தலங்களில் எழுந்தருளியுள்ள மூர்த்திகளுக்குத் தனித் தனிச் சகசிரநாமங்கள் வழங்குகின்றன. கணபதிக்குப் பொதுவாக ஒரு சகசிரநாமம் உண்டு; அதையல்லாமல் ககார சகசிர நாமம் என்று ஒன்று தனியே இருக்கிறது. இப்படி உள்ளவற்றைப் பார்த்தால் பல சகசிர நாமங்கள் இருப்பது தெரியவரும். அவற்றையெல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.

ஆயிரம் பேர் உகந்தானும்.

இவ்வாறெல்லாம் இறைவனுடைய பல அங்கங்களையும் பல திருநாமங்களையும் எண்ணி வியந்து நிற்கும் நிலை அப்பர் சுவாமிகளுக்குத்திருவாரூரில் உள்ள தியாகராசப் பெருமானைத் தரிசித்தபோது உண்டாகிறது. அங்கே அப்பெருமான் அமர்ந்த படி காட்சியளிக்கிறான். இருந்தபடியே நடனமாடுவதால் அவனுக்கு இருந்தாடழகன் என்ற திருநாமம் அமைந்தது. அவ்வாறு ஆரூரில் அமர்ந்த அம்மானைத் தரிசிக்கும் போது எம்பெருமானுடைய பல திருவுருவங்களையும் பல திருநாமங்களையும் எண்ணி, ”இவ்வாறெல்லாம் அளவு காண முடியாத எம்பெருமான், தன் அளவற்ற திருக்கருணையினால் அடியார்கள் தரிசித்து இன்புறும்படி, இங்கே அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறானே!” என்று வியந்து பாராட்டுகிறார்.

ஆயிரம் தாமரை போலும்
ஆயிரம் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும்
ஆயிரம் தோள்உடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும்
ஆயிரம் நீள்முடி யானும்
ஆயிரம் பேர்உகந் தானும்
ஆரூர் அமர்ந்தஅம் மானே

திருவாரூரில் இருந்த கோலத்தில் எழுத்தருளியிருக்கும் இந்தப் பெருமானே, ஆயிரம் தாமரை மலர்களைப் போன்ற ஆயிரம் சிவந்த திருவடிகளை உடையவனும், ஆயிரம் பொன் மலைகளைப் போன்ற ஆயிரம் திருத்தோள்களை உடையவனும், ஆயிரம் கதிரவர்களைப்போல ஆயிரமாக உயர்ந்த திருமுடிகளை உடையவனும், ஆயிரம் திருநாமங்களை உவந்து ஏற்றுக் கொண்டவனும் ஆவான்.

[ஆயிரம்,பல என்பதைக் குறித்த வாசகம்; இதை அனந்த வாசி என்பர்.தாமரை தண்மை, எழில், செம்மை, தேனுடைமை ஆகியவற்றைப் பெற்றிருப்பது போல, இறைவன் திருவடி தன்பால் புக்கவர்களின் தாபங்களைப் போக்கிக் குளிரவைக்கும். தண்மையும், பேரெழிலும், செவ்வண்ணமும், அருளென்னும் தேனும் உடையது. பொன்வரை-மேரு; திண்மையும் பொலிவும் மதிப்பும் உடைமையால் பொன்வரை உவமையாயிற்று

இறைவன் திருமேனி செம்பொன் வண்ணம் உடையதாதலின் திருத்தோளும் அவ்வண்ணம் உடையதாயிற்று, “பொன்வண் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்” என்பது பொன்வண்ணத்தந்தாதி.

நீண்ட முடியின் ஒளிக்கு ஞாயிறு உவமை. ஆரூர் அமர்ந்த அம்மான் சேவடியானும், தோளுடையானும், நீள்முடி யானும் ஆவான் என்று முடிக்க.]

நான்காம் திருமுறையில் நான்காம் பதிகத்தில் எட்டாவது பாட்டு இது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *