
அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்
15. எப்போதும் உறங்கும் தொண்டர்
நாமெல்லாம் பகலில் பல வேலைகளைப் பார்த்து விட்டு இரவில் படுத்து உறங்குவோம். உலக இயலில் ஈடுபட்ட நமக்கு உலக நினைவு இருப்பது ஜாக்கிரம் என்றும் அதை மறந்து உறங்குவது சுழுத்தி என்றும் சொல்கிறோம். உலகப் பொருள்களைக் கண்டு கொண்டிருப்பதுதான் நம்முடைய விழிப்பு நிலை. நம்முடைய தூக்கம் உலகையும் உடம்பையும் மறந்த தூக்கம். பெரும்பாலும் இரவில் இந்த உறக்கத்தை அடைகிறோம்.
எப்போதும் தூங்குகிறவர்கள் யாராவது உண்டா? கும்பகர்ணன் கூடப் பல காலம் உறங்கினாலும் சில காலம் விழித்துக் கொண்டிருப்பான். அதனால் தானே அவன் போர் செய்ய முடிந்தது?
ஆனால் எப்போதும் உறங்குபவர்கள் சிலர் இருக்கிறார்கள். கண்முன் உள்ள பொருள்களைக் காணாமல் கண்ணை மூடிக் கொண்டு நாம் உறங்குகிறோம். அவர்கள் கண்ணைத் திறந்து கொண்டே உறங்குவார்கள். அது எப்படி முடியும் என்று கேட்கலாம்.
சில சமயம் நாம் எதையோ நினைத்துக் கொண்டிருப்போம். அந்த நினைவில் ஆழ்ந்திருக்கும்போது நம் கண் விழித்திருந்தாலும் எதிரே நடப்பது தெரியாமல் இருக்கும் நிலையும் உண்டு. உண்முகமான நோக்கிலே ஆழ்ந்திருக்கும் போது புறப்பார்வை சுருங்கும். கவலையோடு யோசனையில் ஆழ்ந்திருப்பவர்களைப் பாருங்கள். அவர் முன் நாய் போயிற்று, நரி போயிற்று என்றால், “அதைக் கவனிக்கவில்லை” என்பார்கள். கண் விழித்துக் கொண்டிருந்தாலும் கவனம் வேறிடத்தில் இருப்பதால் முன்னாலே சென்றதைப் பார்க்க வில்லை.
கண் திறந்திருந்தாலும் எல்லாக் காலத்திலும் உண்முக நோக்கமுடையவர்களுக்கு உலகமே தெரியாது. அவர்கள் கண் திறந்தவாறே உறங்குபவர்கள். எக்காலத்திலும் அகத்திற் கண் கொண்டு இறைவனை நோக்குபவர்களாதலின் அவர்கள் எப்போதும் உறங்குபவர்களைப் போன்றவர்களே. அவர்களுடைய தூக்கம் தூங்காத தூக்கம்.
எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவோர்க்கு.
இவ்வாறுள்ளவர்களை ‘விழித்துறங்கும் தொண்டர்’ என் றும், ‘விழித்த கண்குருடாத் திரி வீரர்’ என்றும் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இரவும் பகலும் உண்முக நாட்டம் கொண்டு, புற உலக நாட்டமற்று விழித்துறங்கும் தொண்டர்களின் மனத்துக்குள்ளே ஒருவர் வந்து புகுவாராம். எல்லாரும் தம்மை மறந்து உறங்கும் வீட்டிலே திருடன் புகுவது போல, புறக் கண் பார்வை தோன்றாமல் இருக்கும் அத்தகைய தொண்டர்களின் உள்ளத்துக்குள்ளே அவர் புகுவார். தம்மையே எண்ணிப் பொருந்தியிருப்பவர்கள் அவர்கள் என்பதை உணர்ந்து அவர்களின் உள்ளத்துக்குள்ளே புகுந்து அதையே தாம் நித்திய வாசம் செய்யும் கோயிலாக ஆக்கிக் கொள்வார்.
எல்லியும் பகலும் எல்லாம்
துஞ்சுவோர்க்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்
புக்கனர்.
உண்முக நாட்டம் கொண்ட மெய்ஞ்ஞானியர்கள் தம் உள்ளத்தில் மாசு மருவில்லாதவர்கள். காமம் முதலிய ஆறு பகைகளுக்கும் அங்கே இடம் இல்லை. வேறு எந்த உணர்வும் இல்லாமையால், இதுதான் யாரும் புகாத இடம், இதுவே நமக்கு ஏற்றது என்று அவர் புகுந்து தங்கிவிடுவார்.
அவர் எத்தகையவர்? அவருடைய தொண்டர்கள் காமத்தைத் துறந்தவர்கள். அவர்களிடம் காமனுடைய ஜபம் பலிக்காது. அவர்களே அத்தகைய இயல்பு பெற்றிருக்கும்போது அவர்களை ஆட்கொண்டவரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
ஒரு சமயம் காமன் தன் கரும்பு வில்லினோடும் ஐந்து மலரம்புகளோடும் அவர்முன் வந்தான். ஒரு கணம் நின்றான். அவர்மேல் அம்பு எய்ய வந்தவன் அவன். அவர் அவனை எதிர்க்கவில்லை. அவனை அவர் சும்மா பார்த்தார். அவ்வளவு தான். உடனே அவன் வெந்து பொடி சாம்பலாய் உதிர்ந்து விட்டான்,
காமன் என்னும்
வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார்.
எல்லோரையும் தன் கணையினால் எய்து காமம் கொள்ளும் படி செய்து பழகிய அவன் அந்த ஒருவர்முன் ஒன்றும் செய்ய முடியவில்லை; சாம்பலாகி விட்டான்.
இப்படிச் செய்தவர் தம் அன்பர்கள் தரிசித்து மகிழும்படி உலகத்தில் பல தலங்களில் மூர்த்தீகரித்து எழுந்தருளியிருக்கிறார். திருவதிகை வீரட்டம் என்ற தலம் ஒன்று உண்டு. அப்பர் சுவாமிகள் அருள்பெற்ற திருத்தலம் அது. அங்கே நிலவளமும் நீர்வளமும் மிகுதியாக உண்டு. அல்லி மலர்கள் வயல்களில் மலர்ந்து அழகுற விளங்கும். திருவதிகையைச் சுற்றி எல்லை கோலினாற் போல இந்த வயல்கள் இருக்கும். அங்கே எழுந்தருளிய வீரட்டனாரே இத்தகையவர். திரு வதிகை வீரட்டம் என்பது திருக்கோயிலின் பெயர். அட்ட வீரட்டங்களில் ஒன்று அது.
அல்லியம் பழன வேலி அதிகை வீரட்டனாரே.
சிவபெருமான் தொண்டர்களின் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குபவர். அவர் அருள் சார்ந்த இடத்தில் காமனுடைய அம்பு புகாது. இந்தக் கருத்துக்களை இந்தப் பாட்டில் காணலாம்.
எல்லியும் பகலும் எல்லாம்
துஞ்சுவோர்க்கு ஒருவர் வந்து
புல்லிய மனத்துக் கோயில்
புக்கனர்; காமன் என்னும்
வில்லிஜங் கணையி னானை
வெந்துக நோக்கி யிட்டார்;
அல்லிஅம் பழன வேலி
அதிகைவீ ரட்ட னாரே.
இரவிலும் பகலிலும் எல்லாக் காலத்திலும் புறநோக்கம் இன்றி உண்முகப்பட்டு உறங்கும் அன்பர்களிடம் ஒருவர் வந்து தம்மைத் தியானித்துத் தழுவிய அவர்களுடைய மனமாகிய கோயிலில் புகுந்தனர்; அவரே காமன் என்னும் கரும்பு வில்லையுடையவனும் ஐந்து மலரம்புகளை உடையவனுமாகியவனைச் சாம்பலாக வெந்து உதிரும்படி தம் திருக்கண்களால் பார்த்தார். அவர் யார் என்னின், அவரே அல்லி மலர்கள் சூழ்ந்த அழகிய வயல்களை எல்லையாக உடைய திருவதிகை வீரட்டம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருப்பவர்.
[எல்லி -இரவு. துஞ்சுவோர்க்கு – உறங்குபவர்களிடம்; உருபு மயக்கம். அவ்வாறு உறங்குவோரிடம் இறைவர் தாமே வந்து அவர் மனத்துட் புகுந்தார். புல்லிய – தழுவிய; இடைவிடாது தியானித்ததைக் குறித்தபடி; தழுவுதலாவது சார்ந்து நிற்றல். மனத்துக் கோயில் – மனமாகிய கோயில்; அத்து, வேண்டாவழிச் சாரியை. வில்லி – கரும்பு வில்லையுடையவன். வில்லியாகிய கணையினானை. வெந்து உக – எரிந்து பொடியாக உதிரும்படி. நோக்கியிட்டார் -நோக்கினார்; இடு: பொருளற்ற துணைவினை. அல்லி – அல்லி மலர். வேலி எல்லை. ஏகாரம், ஈற்றசை.]
இந்தப் பாசுரம் நான்காம் திருமுறையில் 25-ஆம் பதி கத்தில் 8-ஆவதாக உள்ளது.



