அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

10. மெய்ந்நின்றவர்க்கு மெய்யர்

இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா? அப்படி இருந்தால் எல்லோரும் அவனைத் தெரிந்து கொண்டிருக்க வேண் டுமே! எல்லாருக்கும் பொதுவாகத் தோன்றி வெயில் வீசும் கதிரவனைக் காணாதார் யார்? கண் இல்லாதவர்களும் அவனுடைய கிரணங்களின் வெம்மையை உணர்வார்களே! அப்படி இருக்க, எல்லாரினும் மேம்பட்டவனும் எல்லாருக்கும் பொதுவானவனும் எல்லாச் செயல்களுக்கும் காரண பூதனுமாக நிற்பவன் யாவருக்கும் விளங்காதவனாக, சிலரே அவன் இருக்கிறான் என்று சொல்லும் நிலையை உடையவனாக இருப்பது பொருந்துமா?

இயற்கை என்ற நியதி ஒன்று இருக்கின்றது. அதுவே எல்லாச் செயல்களையும் நிகழ்த்துகிறது. மனிதன் பிறப்பதும். வாழ்வதும் சாவதும் அந்த இயற்கையின் நியதியே. வித்திலிருந்து மரம் முளைப்பதும் அந்த மரம் மீண்டும் பல வித்துக்களை உண்டாக்குவதும் இயற்கையின் நியதியே.

இவ்வாறு வாதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். எல்லாரையும் இயக்கும் ஒருவன் யாவருக்கும் புலப்படுபவனாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.

நம்முடைய உடலில் இரத்த ஓட்டம் நிகழ்கிறது. இதயத்திலிருந்து இரத்தம் எங்கும் பரவுகிறது. சில சமயங்களில் சிலருக்கு இதய நோய் வருகிறது. இதயம் அவருக்கே உரியதானாலும் அதன் செயல் முறைகள் அவருக்குத் தெரிவதில்லை. இதய நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுகிருர். அவர் பரி சோதித்து இன்ன குறை என்று சொல்கிறார்.

நம் இதயத்தின் குறையோ, முறையோ நமக்கே தெரிவதில்லை. நம் பெட்டியில் நாம் பல பொருள்களை வைக்கிறோம் எடுக்கிறோம். அதில் என்ன வைத்திருக்கிறோம் என்று நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த இதயம் நம்முடையதாக இருக்கும்போது இதன் நிறைகுறைகள் நமக்குத் தெரிவதில்லை நமக்கே உரிய இதயமாக இருந்தாலும் இதன் செயற்பாடுகளை அறியும் உணர்வு நமக்கு இருப்பதில்லை.

இனி, பொதுவாக எல்லாருக்கும் உரிய சிலவற்றைப் பார்க்கலாம். நாம் குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கிறோம். அந்தக் காலமும் இடமும் நமக்கு நன்றாகப் புலனாகின்றன. ஆனால் அந்தக் காலம் எப்போது தோன்றிற்று ? காலத்தின் முதல் நாள் எது? நமக்குத் தெரிகிறதா? தெரியவில்லை. நாம் வாழும் இடம் விரிந்த பிரபஞ்சத்தில் ஏதோ சிறிய புள்ளி போல இருக்கிறது. நமக்கு அந்த இடத்தின் பரப்பு முழுவதும் தெரிவதில்லை, இப்படி நம் உணர்வுக்கு அகப்படும் காலம், இடம் என்பனவற்றின் எல்லையையே நாம் உணர முடிவதில்லை. நமக்கு உரிய இதயத்தின் இயல்பை உணர முடிவதில்லை. பல சமயங்களில் மருத்துவர்களின் சோதனைக்கும் அகப்படுவதில்லை. ஏதோ ஒன்று இவற்றையெல்லாம் இயக்குகிறது என்பது மட்டும் தெரிகிறது. அந்த நியதிமையே இயற்கையென்று சிலர் சொல்கிறார்கள்.

இயற்கை என்றவுடன் எல்லாவற்றையும் இயக்கும் நியதியை மாத்திரமா நாம் எண்ணுகிறேம்? புல், பூண்டு, பறவை, விலங்கு, மனிதன் ஆகிய எல்லாச் சீவர்க்கங்களும் அந்த நியதியின் வரம்புக்குள் இருந்து தொழிற்படுகின்றன.

எதை இயற்கையென்று சொல்கிறார்களோ, அதன் இயல்பை இன்னதுதான் என்று வரையறுத்துச் சொல்ல முடிவதில்லை. இதுதான் இயற்கை, இப்படித்தான் நடைபெறும் என்று திட்டமாகச் சொல்ல முடிவதில்லை. மனிதன் பிறந்து வாழ்ந்து மூப்படைந்து இறப்பது இயற்கையென்று வைத்துக் கொள்வோம். ஆனால் சில குழந்தைகள் செத்துப் பிறக்கின்றன; சில பிறந்தவுடன் இறக்கின்றன; சில காலம் வாழ்ந்து இறந்து விடுகின்றன. இவை யாவும்இயற்கையின் வேறுபாடுகள் என்று சொல்லலாம், காலமோ இடமோ இன்ன தன்மையதுதான் என்று சொல்லமுடிவதில்லை. இவ்வாறு நமக்குள் இருக்கும் இதயத்தையும் நமக்குப் புறம்பே இருக்கும் இயற்கையையும் இக்தகையவைதாம் என்று நம்மால் வரையறுக்க முடிவதில்லை. நம் இதயத்திலுள்ள குறைபாடுகளை இதய ஆராய்ச்சி நிபுணரிடம் சென்று காட்டித் தெரிந்து கொள்கிறோம்.

இவ்வாறே, நாம் அறியாத பலவற்றைத் தாம் அறிந்து சொல்லும் நிபுணர்கள் இருக்கிறார்கள். உலக நியதியையும் அதை நிகழ்த்துகின்ற ஒரு மாபெரும் சக்தியையும் அவர்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையே நாம் ஞானிகள் என்று சொல்கிறோம். அவர்கள், இறைவன் என்பவனே எல்லாவற்றையும் இயக்கும் மாபெரும் சக்தி என்று அறிகிறார்கள்; நமக்கும் அறிவிக்கிறார்கள். அவனைப் பற்றிய உணர்வு உண்டாகவேண்டுமானால் அதற்காக முயற்சி செய்ய வேண்டும். நிலையாத பொருள்களே நிரம்பிய உலகத்தில் எது நிலைபெற்றது, எது நிலையற்றது என்று தெரிந்து கொள்ள முயல வேண்டும். இந்த ஆராய்ச்சியில் புகுந்தால் மெல்ல மெல்லப் பொய்யெல்லாம் நழுவிப் போக மெய் புலனாகும்.

அந்த மெய்யான பொருள் பேராற்றல் உடையது; எல்லாவற்றையும் இயக்குவது; தன் அன்பர்களுக்கு வடிவம் காட்டி உள்நின்று ஒளிர்வது.

அந்தப்பொருளையே தம்முடைய சாதனைக்கு ஏற்ப உள்ளே கண்டு உணர்ந்து அநுபவிக்கிறார்கள், மெய்யன்பர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அந்தப் பொருள் தோற்றம் அளிக்கிறது. அந்தப் பொருளின் அருள் ஆட்சிக்குள் அகப்பட்டவர்கள் வெவ்வேறு வகையில் சாதனை செய்யப் புகுந்தவர்களானாலும் முடிவில் அடைகின்ற இன்ப அநுபவம் ஒன்றுதான்.

ஆற்றிலுள்ள நீரைக் குடித்தாலும் குளத்திலுள்ள நீரைக் குடித்தாலும் குடத்தில் உள்ளதைப் பருகினாலும் தாகம் தீர்வது என்பது பொதுவான அநுபவம்.

இறைவன் அவ்வாறே வெவ்வேறு அன்பர்களுக்கு வெவ்வேறு நிலையில் தோற்றமளித்து அருள் புரிகிறான். ஒருவருக்குச் சிவபெருமானாக வந்தருளுவான்; மற்றொருவருக்குத் திருமாலாக வந்து அருள்புரிவான்.

ஒரே ஆற்றிலிருந்து பலர் தண்ணீர் கொண்டு வந்து வீட்டில் வைக்கிறார்கள். குடத்திலும் பானையிலும் கூஜாவிலும் கிண்ணத்திலும் அந்த நீரை நிரப்புகிறார்கள். கூஜாத்தண்ணீரைக் குடிக்கிறவன் அதைக் கூஜாத் தண்ணீர் என்பான், பானை நீரைப் பருகிறவன் அதைப் பானைத் தண்ணீர் என்பான். இருக்கும் பாத்திரங்கள் வேறுபடுகின்றனவேயன்றி நீர் வேறுபடுவதில்லை. அவ்வாறே சிவபெருமான் என்றாலும் திருமால் என்றாலும் வேறு வகையில் சொன்னாலும் பரம் பொருள் ஒன்றுதான். அதன் வடிவத்தைக் கண்டு, இது வேறு, அது வேறு என்பவர்கள் மெய்ப்பொருளை உணராதவர்கள்.

அப்பர் சுவாமிகள் அந்தப் பரம்பொருளைச் சிவபெரு மானாகக் கண்டு அருள் பெற்றவர். அவருக்குப் பரம்பொருள் என்றால் சிவபெருமானே நினைவுக்கு வருகிறார். பானைத் தண்ணீரைக் குடித்தே பழகியவனுக்குத் தண்ணீரை நினைக்கும் போதெல்லாம் பானையே நினைவுக்கு வருவது போல, உபாசகர்கள் பரம்பொருள் என்றால் தாம் வழிபடும் கடவுள் வடிவத்தையே நினைப்பார்கள்.

திருநாவுக்கரசர் தாம் உணர்ந்த பரம்பொருளின் வடிவத்தைச் சொல்கிறார். அவர் பரம்பொருளைச் சிவபெருமானாகக் கண்டவர், பரம்பொருள் எப்படி இருக்கும் என்று அவரைக் கேட்டால் தாம் தரிசித்த வடிவத்தையே அடையாளம் காட்டுகிறார்.

அந்தப் பரம்பொருள் அவருக்கு எவ்வாறு காட்சி அளித்தது? அவர் சொல்வதைக் கேட்கலாம்.

சிவபெருமானாகக் காட்சி அளித்த அந்தப் பரம்பொருள் ஒரே சிவப்பு நிறம் படைத்தது.

செய்யர்.

அந்த வடிவத்தின் திருமார்பில் வெண்ணூல் இலங்குகிறது.

வெண்ணூலர்.

அவர் தம் திருக்கரத்தில் கரிய மான்குட்டியை ஏந்தியிருக்கிறார். அது துள்ளிக் கொண்டு காட்சி அளிக்கிறது.

கருமாள் மறி துள்ளும் கையர்

வெண்ணூலைச் சொன்னவுடன் அதற்கு மாறாகக் கருநிறம் கொண்ட மான்மறி நினைவுக்கு வருகிறது. இரண்டுக்கும் பளிச்சென்று வேறுபாடு தெரியும் அல்லவா?

அந்த வடிவத்தின் கையைப் பார்த்தவர் பிறகு தாம் புகல் புகுவதற்குரிய திருவடியைக் காண்கிறார், பல வீரச் செயல்களைப் புரிந்த அந்தத் திருவடியில் அதற்கு அடையாளமாக ஒலிக்கும் வீரக்கழல் தோன்றுகிறது.

கனை கழல் கட்டிய காலினர்.

இப்படித் தோற்றம் அளிக்கிறவர் அந்தத் தோற்றம் மறைந்தால் அவரும் மறைந்து விடுவாரா? மனிதன் உடம்பு போனால் மறைவது போல மறைவாரா? இல்லை. அவர் என்றும் உள்ள பொருள். நாம் காணும் பிரபஞ்சப் பொருள்கள் நிலையில்லாமல் மறைந்து போகின்றன. யாவும் மறைந்து அழிந்தாலும் அந்தப் பரம்பொருளாகிய சிவபெருமான்

மறைவதில்லை, அழிவதில்லை. எல்லாம் அழிந்து போனாலும் தாம் அழியாமல் நிலைத்து நிற்கும் மெய்ப்பொருள் அவர்.

மெய்யர்.

இது யாருக்குத் தெரியும்? எது உண்மை என்று ஆராய்ச்சி செய்பவர்களுக்கு இது புலனாகும். உடம்போடு உலாவும் மனிதன் இறந்தால் அந்த உடம்பு அழிகிறது. இப்படியே ஒரு காலத்தில் பிரபஞ்சம் முழவதும் அழிந்து விடும். ஆனால் யாவும் அழிந்தாலும் தான் அழியாமல் நிற்பது அந்தப் பரம்பொருள்தான். உண்மையை ஆராயம் புகுந்து அந்த நெறியில் நின்றவர்களுக்கு இந்தக் கருத்துப் புலனாகும்.

மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு.

கண்ணால் காணமுடியாவிட்டாலும் காற்றை நாம் உணர முடிகிறது. ஒலியைக் கேட்க முடிகிறது. ஒரு பொறிக்குத் தெரியாவிட்டாலும் மற்றொரு பொறிக்குத் தட்டுப்படும் பொருள்கள் உண்டு. மணத்தைக் கண்ணோ காதோ உணர முடிவதில்லை, ஆனால் நாசி உணர்கிறது. இவ்வாறே பஞ்சேந்திரியங்களுக்கு அப்பாற்பட்டதை மனத்தால் நினைக்க முடிகிறது. மனத்தால் உணரமுடியாததை மெய்ஞ்ஞானத்தால் உணரமுடியும். மெய்ந்நெறியில் நின்று ஞானம் பெற்றவர் களுக்கு அந்தப் பரம்பொருளின் உண்மை புலனாகும்.

மெய்யர் மெய்ந்நின் றவர்க்கு.

மற்றவர்கள் இதை நம்புவதில்லை. கடலைப் பார்க்காதவனுக்குக் கப்பல் கடலில் செல்லும் என்பது தெரியாது. பார்த்தவனுக்குத் தெரியும். அவ்வாறு உண்மையை உணரப்புகும் ஆராய்ச்சியில் தலைப்பட்டு அந்த மெய்ந்நெறியில் நிலைபெற்று நின்றவர்க்குப் பரம்பொருள் சத்தியமானது என்ற உண்மை புலனாகும். அல்லாதவர்களுக்கு இது தெரியாது. உணவை உண்ணப் புகுவாருக்கு அதன் சுவை தெரிவது போலச் சத்தியத்தைத் தேடி ஆராய்ச்சி செய்பவர்களுக்கு, சன்மார்க்கத்தில் நிற்பவர்களுக்கு, அந்தப் பரம்பொருள் உண்மையானது, நிலையானது என்பது புலனாகும். அல்லாதவர்களுக்கு அது பொய் என்றே தோன்றும். மலையைப் பாராதவனுக்கு அது வானுற ஓங்கி நிற்பது விளங்காத்து போல மெய்ந்நெறியில் நின்று தேடப்புகுபவர்கள் அல்லாதவர்களுக்கு அந்தப் பரம்பொருள் இல்லாததென்றே தோன்றும்.

சிறிய கல்லைக் குளத்தில் போட்டால் அது உடனே உள்ளே ஆழ்ந்துவிடும். பெரிய கல் ஒன்று குளத்தின் மேல் மிதக்கிறது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்தக் கல்லை மிதக்கும் கட்டையின் மேல் வைத்துக் குளத்தில் இட்டால் அது கட்டையோடு சேர்ந்ததனால் நீரில் ஆழாமல் இருக்கும். மெய்ந்நெறியாகிய கட்டையில் சேர்ந்த அறிவு அறியாமை யென்னும் குளத்தில் ஆழாது. பரம்பொருள் மெய்ந்நெறியில் நின்றவர்களுக்கு மெய்யாகத் தெரிவது போல, அல்லாதவர்க்குப் பொய்யாகவே இருக்கும். கண் இல்லாத குருடனுக்குக் காட்சிப் பொருள் தெரியாதது போல அகக்கண் இல்லாதவர்களுக்கு மெய்ப்பொருள் தெரியாது. அதைப் பற்றிச் சொன்னால் அது பொய் என்றுதான் சொல்வான். மெய்ந்நெறியில் நில்லாதவர்களுக்குப் பரம்பொருள் பொய் யென்றே தோன்றும்.

அல்லாதவர்க்கு என்றும் பொய்யர்.

இந்த எண்ணம் திருப்புகலூர் இறைவனைத் தரிசித்த அப்பருக்குத் தோன்றுகிறது. புரிகளாக விரிந்த சடையை உடையவராக விளங்கும் புகலூர்ப் பெருமானைப் பரம்பொருளாகவே பார்க்கிறார். பானையில் உள்ள நீரைப் பார்ப்பவனும் உண்டு. பானையைப் பார்ப்பவனும் உண்டு. நீரைப் பார்ப்பவனே தாகத்தைத் தீர்த்துக் கொள்ள முயல்வான். திருப்புகலூரில் புரிந்த சடை உடையவராக எழுந்தருளியிருக்கும் இறைவர் வடிவத்தில் மெய்ப்பொருளாகிய நித்தியமான கடவுளையே கண்டவர் அப்பர். ஆகவே அவர்,

மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு;
அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர், புகலூர்ப் புரிசடையாரே

என்று

பாடுகிறார். புரிசடையாராகத் தோற்றம் கொண்டு புகலூர் என்னும் தலத்தில் எழுந்தருளியிருப்பவர் எங்கும் நிறைந்த மெய்ப் பொருளே என்ற உணர்வு அவருக்கு உண்டாகி விடுகிறது. பானை நீரைக் குடிப்பவன் அது ஆற்று நீர் என்ற எண்ணம் கொள்வதைப் போன்ற உணர்வு அது.

செய்யர் வெண்ணூலர், கருமாள் மறிதுள்ளும்
கையர், களைகழல் கட்டிய காலினர்,
மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு

என்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.

திருப்புகலூரில் புரிந்த சடையுடன் கோலங்காட்டி எழுந் தருளியிருக்கும் சிவபெருமான், செம்மேனி உடையவர்; வெண்மையான முப்புரி நூலை அணிந்தவர்; கரிய மான் குட்டி துள்ளும் திருக்கரத்தை உடையவர்; ஒலிக்கின்ற வீரக்கழலைக் கட்டிய திருவடியை உடையவர்; மெய்யை ஆராய்ந்து செல்லும் நெறியில் நின்றவர்க்கு மெய்ப்பொருளாக இருப் பவர்; அவ்வாறு இல்லாமல் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றுள்ளவர்களுக்கு என்றும் அறியப்படாத மெய்ப்பொருளாக இருப்பவர்.*

[செய்யர்: இறைவர் செம்பவளத் திருமேனியுடையவர்; “சிவனெ னும்பெயர் தனக்கே உரியசெம் மேனியெம்மான்” என்பது தேவாரம். சிவபெருமானை அந்தணன் என்று சொல்வதனால் அதற்குரிய அடையாளமாகிய வெண்மையான முப்புரி நூலை அணிந்திருக்கிறார்.

தாருகாவனத்து முனிவர்கள் விட்ட கரிய மானைப் பிடித்துத் தம் கையில் ஏந்திக்கொண்டிருக்கிறார். அது முன் கால்கள் இரண்டையும் தூக்கிக் கொண்டு துள்ளுகிறது. அதனால், ‘மறி துள்ளும் கையர்’ என்கிறார். நம்முடைய மனமாகிய மான் பிரபஞ்ச வாசனையில் அகப்பட்டுத் துள்ளிக் கொண்டிருக்கிறது. அது இறைவன் வசப்பட்டு விட்டால் அது துள்ளினாலும் அவனுடைய தொடர்பு அறாமலே இருக்கும் என்பதை இது புலப்படுத்துகிறது.

கனை கழல்-ஒலிக்கும் வீரகண்டை. வீரர்கள் தம் வீரச் செயல்களுக்கு அறிகுறியாக முழங்காலுக்குக் கீழே கழலை அணிவார்கள். சிவபெருமான் பல வீரச்செயல்கள் புரிந்தவராதலின், கனை கழல் கட்டிய காலினராக இருக்கிறார். மெய்ந்நின்றவர்க்கே என்ற ஏகாரம் தொக்கது. அல்லாதவர்- மெய்ந்நெறியில் நில்லாதவர்கள்; பொய்ந்நெறியில் செல்கிறவர்கள். ”பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி” என்பது திருவாசகம். புகலூர்ப் புரிசடையார்: எழுவாய்.)

அப்பர் சுவாமிகள் பாடிய இந்தத் திருப்பாடல் நான்காம் திருமுறையில் 16-ஆவது பதிகத்தில் உள்ள முதற் பாடல்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *