அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

20. ஐவரோடும் வைத்தார்

தம்மை ஆட்கொண்ட திருவதிகை வீரட்டப் பெருமானைப் பலபடியாகப் பாடி மகிழ்பவர் அப்பர் சுவாமிகள், அந்தப் பெருமானை மனத்தால் தியானித்தும் வாக்கினால் பரவிப் பாடியும் உடம்பால் வணங்கியும் தொண்டு பூண்டவர்; இறைவருடைய இயல்பை யெல்லாம் உணர்த்தவர். அவர் பாடும் ஒரு பாடலை இப்போது பார்ப்போம்.

எம்பெருமானைப் பலகால் தரிசித்துத் தரிசித்து வழிபடுபவர்கள் அவரை அகத்துள்ளே கண்டு மகிழ்வார்கள். நாம் ஒரு முறை ஒரு பொருளைக் கண்டதோடு நின்று விட்டால் அதை மீண்டும் நினைக்கும்போது அது நம் மனத்தில் தட்டுப் படாது. பல காலம் பார்த்துப் பழகும் நம் மனைவியின் வடிவத்தைக் கூடத் தனியே இருந்து நினைத்தால் அந்த வடிவம் முற்றும் தெளிவாக நம் மனத்தில் தோன்றுவதில்லை. அன்பர்கள் இறைவரைப் பலகால் தரிசனம் செய்து உண் முகத்தே அவருடைய காட்சியைக் காண முயல்வார்கள். நாளடைவில் அந்த வடிவத்தை அகத்திலே காணும் நிலை வரும்.

இவ்வாறு பழகாவிட்டால் பெருமானை அகத்தில் காணுவதரிது. பலகாலும் தரிசித்தவர்களுக்கே உண் முக தரிசனம் அரிது என்றால் அவரைக் காணாமலே பொழுது போக்குவார் அவரை எப்படி நினைக்க முடியும்? அத்தகைய இயல்புடையவர்கள் கருத்தில் அவர் நிற்கமாட்டார்.

இறைவரைத் தரிசித்துப் பழகினாலும் மனத்தில் பல பல எண்ணங்களை உடையவர்கள் அவரை உண்முகத்தே காண முடியாது. உள்ளத்தை மாசு மறுவற்றதாக்கித் திருத்தியவர்கள் அங்கே அவரைக் காண முடியும். மனம் பலபடியாகச் சென்று அலையும் இயல்புடையது. இந்த இயல்பை மாற்றிச் சித்த விருத்திகளை அடக்கி மனத்தைப் பளிங்கு போல வைக்கும் அன்பர்கள் உள்ளத்தே அவர் வருவார். அவ்வாறு உள்ளத்தைத் திருத்துவதையே யோகம் என்று சொல்வர்.

யோக: சித்தி வ்ருத்தி நிரோத:’

என்பது யோக சூத்திரம். இந்த யோகம் கைவரப் பெற்றவர் களுக்கல்லாமல் அவருடைய அகமுகக் காட்சி கிடைக்காது.

காணிலார் கருத்தில் வாரார்;
திருத்தலார் பொருத்தல் ஆகார்.

மனத்தைத் திருத்தமாக வைக்கும் ஆற்றலில்லாதவர்கள் எவ்வளவு முயன்று வருந்தினாலும் தம்முடைய உள்ளத்தில் அவரைப் பொருத்தியிருக்கும்படி செய்ய முடியாது.

இறைவருக்குப் பல வடிவங்கள் உண்டு. எல்லா வடிவங்களையும் எண்ணித் தியானம் செய்வதென்பது இயலாத காரியம். அவருடைய வடிவங்கள் எல்லாவற்றையும் நினைக்க முடியாது. நம் மனத்தில் பதியும் வகையில் எந்தத் திருவுருவம் இருக்கிறதோ அதையே மீட்டும் மீட்டும் தியானித்து உள்ளத் தில் பொருத்திக்கொள்ள வேண்டும்.

அவர் எல்லையிறந்தவராதலின் அவரை முழுவதும் நம் உள்ளத்தில் அடக்க முடியாது.

ஏண் இலார்.

[ஏண் எல்லை]

காவிரியில் நீராடி அதன் நீரை எடுத்து வருகிறவர்கள் காவிரி நீர் முழுவதையும் கொண்டு வருவது என்பது சாத்தியமன்று. தாம் கொண்டு சென்ற பாத்திரத்தை நிரப்பிக் கொண்டு வரலாம். அப்படியே, எல்லையிறந்த அவரை முழுவதும் உள்ளத்தே அடைத்து விடுவது என்பது யாராலும் முடியாத காரியம். நம் மனம் முழுவதும் அவர் வடிவம் நிரம்பி நிற்க, வேறு எண்ணங்களே எழாமல் செய்து விடலாம்.

அந்தப் பெருமான் அருள் கிடைத்து விட்டால் நமக்கு இறப்பும் பிறப்பும் இல்லாத பேரின்ப வாழ்வு கிடைக்கும். அவர் இறப்பும் இல்லாதவர்; பிறப்பும் இல்லாதவர்.

இறப்பும் இல்லார், பிறப்பு இலார்.

அன்பர்கள் அவரை மறந்து வாழமாட்டார்கள். காலம் எண்ணி எண்ணிப் பயின்றவர்களாதலின் அவர்களால் அவரை மறக்க முடியாது. அவர்களால் அவரைத் துறந்து வாழ முடியாது. அவர்கள் துறக்க எண்ணினாலும் அவர்களுடைய அன்பிலே கட்டுப்பட்ட பெருமான் துறக்கமாட் டார்.

துறக்கல் ஆகார்.

நம்மிடம் ஐந்து பொறிகளை வைத்திருக்கிறார். இந்தப் பஞ்சேந்திரியங்களும் வெவ்வேறு திசையில் நம்மை இழுத்தடிக்கின்றன. ஒரு முறை ஒரு பொருளை அவாவி நுகர்ந்து அதனால் இன்பம் சிறிது நேரம் கிடைக்கும், பிறகு அது துன்பத்தையே தருவது நம் அநுபவம். தூண்டிற் புழுவை விரும்பி அதை உண்ணப் போய்த் தூண்டில் முள்ளில் மாட்டிக் கொள்ளும் மீன்களைப் போல அல்லற்படுகிறோம். இந்திரிய சுகங்கள் எல்லாம் முதலில் இன்பம் தருவன போல இருந்தாலும், நம்மை உலகியலிலே மாட்ட வைத்து, அவாவை அதிகமாக்கி, மீட்டும் மீட்டும் பிறந்தும் இறந்தும் திரியும்படி வைத்துவிடும். ஒரு முறை துன்பம் பெற்றோமே என்று எண்ணாமல், அப்போது பெற்ற தோல்விக்கு நாணாமல், மீட்டும் மீட்டும் அவற்றை அவாவிச் செல்லும் இயல்புடையவை நம்முடைய பொறிகள். அவற்றோடு கலந்து நாம் வாழ்கிறோம். அவற்றை அடக்கி நம் வசப்படுத்தாவிட்டால் அவை நம்மை அடக்கித் தம்வசம் ஆக்கிவிடும். அவ்வாறு நம்மோடு கலந்து நின்று நம்மை உழலச் செய்யும் ஐவரோடும் நம்மை விரவும் படி இறைவர் படைத்திருக்கிறார்.

நாண் இலார் ஐவரோடும்
இட்டு எனை விரவ வைத்தார்.

அந்த ஐம்பொறிகளையும் நம்முடைய பாதுகாப்புக்குள் வைக்கும் ஆற்றல் நமக்குக் கிடைத்துவிட்டால் பிறகு அவா அற்று விடும். அதனால் பிறப்புத் துன்பத்தை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு ஞானம் உதவும்.

உரன்என்னும் தோட்டியால் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்புக்கோர் வித்து

என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

எம்பெருமான் எப்படி இருக்கிறார்? அவர் எல்லை இறந் தவர். இதுதான் அவர் வடிவம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சிவபெருமான், திருமால், முருகன் என்ற மூர்த்தி களாய் ஆண் வடிவம் கொண்டு வருவார். அதைக் கொண்டு அவர் ஆண் என்று தீர்மானித்து விட முடியாது.

ஆண் அலார்.

பராசக்தியாக எழுந்தருள்பவரும் அவரே, சக்தி பேதங்கள் பல, அம்பிகையை உபாசிக்கிறவர்கள் அந்தப் பேதங்களை அறிவார்கள். எப்போதும் அன்னை, இராஜராஜேசுவரி, திரிபுர சுந்தரி என்று சொல்வார்கள். அதைக்கொண்டு பரம்பொருள் பெண் வடிவுடையது என முடிவுகட்ட இயலாது.

பெண்ணும் அல்லர்.

ஆணாக வருவார். ஆனால் அதுவே அவருடைய இயற்கை உருவம் அன்று. பெண் வடிவம் ஏற்று அன்பர்களுக்குக் காட்சி தருவார். அந்த வடிவந்தான் அவருடைய இயல்பான திருவுருவம் என்று வரையறுக்க முடியாது. எல்லாமாய் இருந்தும் அவர் அவற்றைக் கடந்து நிற்பவர்.

“எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை” என்று பரஞ்சோதியார் பாடுவார்.

இவ்வாறு, இன்னபடி இருப்பார் என்று ஒரு வரம்புக்குள் அடக்க முடியாதவர், அன்பர்கள் தரிசித்து உய்யும்பொருட்டுத் திருவதிகை விரட்டத்தில் வடிவம் காட்டிக் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். அவரைத் தரிசித்து உள்ளத்திலே வைத்துத் தியானித்துப் பொறிகளை ஒரு முகப்படுத்திச் செயலற்று நிற்ப வர்களுக்கு அவர் எல்லையிறந்த பெருமான் என்ற உண்மை புலனாகும்.

நாம் ஓர் எல்லைக்குள் நின்று அவரைப் பணிந்து வழி பட்டுத் தியானித்துப் பொறிகளின் வசப்படாமல் நின்றால், எல்லையிறந்த இன்பத்தை அடையலாம்; எல்லையிறந்த பரவெளியின் எல்லைக்குள்ளே புகுந்து ஆனந்த வாரியில் மூழ்கலாம்.

சொல்லுகைக்கு இல்லைஎன்று
எல்லாம் இழந்துசும் மாஇருக்கும்
எல்லையுட் செல்ல எனைவிட்டவா!”

என்று இத்தகைய அநுபவத்தில் திளைத்த அருணகிரியார் சொல்கிறார்.

இறைவருடைய நிலைகளை உணர்ந்த அப்பர் சுவாமிகள் பாடுகிறார்.

காணிலார் கருத்தில் வாரார்;
திருத்தலார் பொருத்தல் ஆகார்;
ஏண்இலார்; இறப்பும் இல்லார்;
பிறப்புஇலார்; துறக்கல் ஆகார்;
நாணிலார் ஐவ ரோடும்
இட்டுஎனை விரவ வைத்தார்;
ஆண்அலார்; பெண்ணும் அல்லார்;
அதிகைவீ ரட்ட னாரே.

திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர், தம்மைத் தரிசனம் செய்யாதவர்களின் கருத்துக்குள் வந்து நிற்கமாட்டார்: தம் உள்ளத்தைத் திருத்தும் ஆற்றல் இல்லாதவர்கள் பொருத்திக் கொள்ள ஆகாதவர் ; முன்னைய அநுபவத்தால் துன்புற்றாலும், பழிபாவம் வருமே என்னும் நாணம் இல்லாத ஐந்து பொறிகளோடும் என்னை இட்டு வைத்து அவற்றோடு கலசி அல்லற்பட வைத்தார்; அவர் ஆண் அல்லாதவர்; பெண்ணும் அல்லாதவர்.

[காணிலார் தரிசிக்காதவர்கள்; காண் – காணுதல்; முதல்நிலைத் தொழிற்பெயர். திருத்தலார் – திருத்தும் செயல் இல்லாதவர்கள்; உள்ளத்தைத் திருத்தித் தூய்மை செய்யாதவர்கள். பொருத்தல் – உள்ளத்தே பொருந்தியிருக்கச் செய்தல். பொருத்தல் ஆகார் – பொருத்த முடியாதவர். ஏண்- எல்லை. இறப்பும்: உம்மை எதிரது தழீஇய எச்சவும்மை; பிறப்பும் இலார் என்ற உம்மை தொக்கது. நாண்-முன்பு பட்ட அநுபவங்கள் துன்பத்திலே ஆழ்த்திவிட்டனவே, இனி அத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற நாணம். ஐவர்-ஐம்பொறிகள்; தொகைக் குறிப்புச் சொல், உயர்திணை யாகச் சொன்னது இழிவுக் குறிப்பு. இட்டு-என் வசமின்றி என் வினைக்கு ஈடாக இட்டு வைத்து; குற்றம் செய்தவரைப் பிற குற்றவாளிகளோடு சேர்த்துச் சிறையில் இட்டு வைத்தது போல வைத்தார் என்றபடி. விரவி-விரவ; எச்சத்திரிபு. ஐவரோடும் ஈடுபட்டு நான் பொறிகளினின்றும் வேறுபட்டவன் என்பதை உணராமல் அவரோடு ஒட்டிக் கிடக்கச் செய்தார். பெண்ணும்; உம்மை, இறந்தது தழீஇய எச்சம். அதிகை வீரட்டனார்; எழுவாய்.]

இறைவரைத் தரிசித்துத் தியானம் செய்து வழிபட்டால் பஞ்சேத்திரியங்களை வென்று இறப்பும் பிறப்பும் இல்லாத பேரின்ப வாழ்வைப் பெறலாம் என்ற கருத்துக் குறிப்பாற் பெறப்பட்டது.

இது நான்காம் திருமுறையில் 27-ஆம் பதிகத்தில் உள்ள 8-ஆவது திருப்பாட்டு.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *