அப்பர் தேவார அமுது
கி. வா. ஜகந்நாதன்

25. சிவநெறி அனைத்தும் ஆனார்

இந்த உலகத்தில் வாழும் மக்கள் தம் ஆயுட் காலம் முடிந்தவுடன் இறந்துபோகிறார்கள். அவர்களுக்கு முன்பு பிறந்தவர்களும் இறந்து போனார்கள். இந்த மக்களுக்கு முன்பே இருந்து பின்பும் வாழ்கிறவர்கள் தேவர்கள். அவர்களுக்கும் இறுதிக்காலம் உண்டு. தோன்றுவதும் மறைவதுமாகிய இரண்டும் உலக மக்களுக்கு இருப்பது போலவே அவர்களுக் கும் உண்டு. ஆனால் கால நீட்சியில் வேறுபாடு உண்டு. நமக்கு ஓர் ஆண்டு தேவர்களுக்கு ஒரு நாள். அவர்கள் தங்கள் காலம் முடிந்தவுடன் மறைவார்கள், அவர்களில் இந்திரன் நெடுநாள் வாழ்வான். பிரமன் அவனைவிட நீண்ட காலம் வாழ்பவன். தேவர்கள் தோன்றுவதற்கு முந்தியே பிரமன் தோன்றி யிருப்பவன். தேவர்களுக்கு முந்தியவன் பிரமன். அவனுக்கு முந்தியவர் திருமால். இவ்வாறு முந்தியுள்ள அனைவருக்கும் முந்தி உள்ளவர் சிவபெருமான்.

முந்தையார் முந்தி உள்ளார்.

பிரமன் தோன்றியபோது தனக்கு முன்பே திருமால் தோன்றியிருப்பதை அறிவான். இப்படியே ஒவ்வொருவருக்கும் முன்பே தோன்றியவர் இருப்பார். தமக்கு முன் தோன் றியவர் யாரும் இல்லாமல், முன்பு தோன்றியவர்கள் யாவருக்கும் முற்பட்டு ஆதி மூர்த்தியாக இருப்பவர் இறைவர்.

பிரமா, விஷ்ணு, ருத்திரன் என்று சொல்லும் மூன்று மூர்த்திகளுக்கும் முன்பே இருந்து அவர்களுக்கு முதல்வராக இருப் பவர் அவர்.

மூவர்க்கும் முதல்வர் ஆனார்.
சிவநெறி அனைத்தும் ஆனார்

பல தெருக்கள் கூடும் சந்திகளில் அவர் இருக்கிறார். “சதுக்கமும் சந்தியும்” முருகன் உறையும் இடங்களிற் சில என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது.

அந்தி மாலையில் அவர் தோற்றம் அளிப்பார். பிரதோஷ காலமாகிய அந்த நேரத்தில் ஆடல் புரிபவர் அவர்.

சந்தியார்; அந்தி உள்ளார்.

எம்பெருமான் தவக் கோலத்தோடு எழுந்தருளியிருக்கிறார். தோலாடையும் சடை முடியும் தவம் செய்பவர்களுக்குரிய சின்னங்கள். சிவபிரானிடம் அந்தச் சின்னங்களைக் காணுகிறோம். அவர் தவநெறிக்குரிய கோலத்தைத் தரித்து நிற்கிறார்.

தவநெறி தரித்து நின்றார்.

தம்மையே மனத்தில் வைத்துத் தியானிப்பவர்கள் உள்ளத்தில் அவர் தம் காட்சியைக் காட்டி எழுந்தருளியிருப்பார். எல்லாருடைய உள்ளத்திலும் அவர் இருந்தாலும் அவ்வாறு இருப்பது அவர்களுக்கே தெரியாது. தம்மை நினைப்பவர்கள் உள்ளத்திலே விளக்கமாக அவர்களுக்குக் காட்சி அளிப்பதனால் அவ்விடத்தில் மட்டும் உள்ளவரைப் போலத் தோன்றுவார்.

நிலத்துக்கு அடியில் எங்கும் நீர் இருந்தாலும் நமக்குத் தெரிவதில்லை. கிணறு வெட்டினால் அந்தக் கிணற்றிலிருந்து நீரை எடுக்கலாம். அதைக் கிணற்றுநீர் என்று சொல்கிறோம். பூமிக்கடியில் உள்ள நீரேயானாலும் கிணற்றிலே நாம் காணும்படி இருக்கிறது. அதுபோல எல்லார் உள்ளங்களிலும் இருக்கும் இறைவன் தம்மைத் தியானிப்பவர் உள்ளத்தில் காட்சி தருவதனால் அங்கு மட்டும் உள்ளவரைப் போலத் தோன்றுவார்.

சிந்தையார் சிந்தை உள்ளார்.

எம்பெருமானை அடைவதற்குரிய மார்க்கங்கள் பல அவையெல்லாம் அவரை அடையும் நெறிகள்:சிவநெறிகள். மற்றவை யாவும் அவநெறிகள். இறைவரை அடைவதையே லட்சியமாகக் கொண்டு கடைப்பிடிக்கும் நெறி எதுவாக இருந்தாலும் அந்த நெறியிலே அவர் நின்று துணை செய்வார். அவரே அந்த நெறிகள் அனைத்துமாக இருப்பார். மவுண்ட் ரோடு என்பது நீண்டிருக்கிறது. சென்னையை அடையும் வரையில் அது சென்னைக்குப் புறம்பானது. அது ரோடாக இருந்தாலும் சென்னையை அடைந்த பிறகு அது சென்னையின் பகுதியாகவே ஆகிவிடுகிறது. அது போலச் சிவநெறிகள் யாவும் ஒரு நிலையில் அவராகவே ஆகிவிடுகின்றன.

சிவநெறி அனைத்தும் ஆனார்.

அவரே நமக்கெல்லாம் தந்தையார். தந்தை தன் மகனை நல்வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணி வேண்டிய வற்றை அளித்தும், சிறிய தவறு செய்தால் பொறுத்தும். பெரிய தவறு செய்தால் ஒறுத்தும் வழிப்படுத்துவது போல எம்பெருமானும் செய்கிறார்.

எந்தையார்.

அவரே உயிருக்குத் தந்தை.

அடியார்களுக்கு வேண்டியவற்றை வழங்கியருளும் பர மோபகாரி அவர். வேறு யாராலும் கொடுப்பதற்கரிய முத்திச் செல்வத்தையே அடியார்களுக்குத் தருவார்.

எம்பிரானார்.

இத்தகைய எம்பிரான் சோழ நாட்டிலுள்ள திருவிடை மருதூரில் கோயில் கொண்டு நித்திய வாசம் செய்கிறார்.

இடைமருது இடம் கொண்டாரே.

அன்பர்களின் உள்ளத்திலே வெளிப்பட்டு நிற்கும் அவர் மற்றவர்களும் புறக்கண்ணால் தரிசித்து அன்பராகும்படி திருக் கோயிலில் கோலம் காட்டிக் கொண்டு எழுந்தருளியிருக்கிறார்.

இடைமருதாகிய குறிப்பிட்ட ஓரிடத்தில் எழுந்தருளியிருந்தாலும் அவர் எல்லோருக்கும் முந்தியுள்ளவர்; திரிமூர்த்திகளுக்கும் முதல்வர்; சந்தியிலும் அந்தியிலும் உள்ளவர்; சிவ நெறியாய் நிற்பவர்; அடியார்களுக்குத் தந்தையாகவும் சிறந்த உபகாரியாகவும் விளங்குபவர்.

முந்தையார் முந்தி உள்ளார், மூவர்க்கும் முதல்வர் ஆனார் சந்தியார்; சந்தி உள்ளார்; தவநெறி தரித்து நின்றார்; சிந்தையார் சிந்தை உள்ளார்; சிவநெறி அனைத்தும் ஆனார்; எந்தையார், எம்பிரானார், இடைமருது இடங்கொண்டாரே;

எல்லோருக்கும் முற்பட்டவர்கள் என்று சிறப்பிக்கும் யாவர்க்கும் முற்பட்டிருப்பவர், திரிமூர்த்திகளுக்கும் முன் உள்ள முதல்வரானவர், சந்திகளில் இருப்பவர், அந்தி மாலையில் கோலம் காட்டி ஆடுபவர், தவக் கோலத்தைத் தாங்கி நின்றவர், தம்முடைய சிந்தையில் எண்ணுவாருடைய உள்ளத்தில் விளக்கமாக உள்ளவர், சிவநெறிகள் அனைத்துமானவர், எமக்குத் தந்தையாராக உள்ளவர், எம்முடைய பரமோபகாரியாக உள்ளவர்; அத்தகைய சிவபெருமான் திருவிடை மருதூர்த் திருக்கோயிலைத் தமக்கு இடமாகக் கொண்டு எழுந் தருளியுள்ளார்.

[முந்தையார் – முன்பு உள்ளவர்கள். மூவர்க்கும்: உம்மை, முற்றும்மை. மூவர்க்கும் மேற்பட்டு முதல்வராக இருப்பவர். சந்தி- தெருக்கள் கூடும் இடம். அந்தி – அந்தி மாலை. தவ நெறி- தவவழியிற் செல்வோர்.கொள்ளும் கோலம்; ஆகு பெயர். சிந்தையார் – தம்மைத் தியானிக்கும் சிந்தையை உடைய அன்பர்களுடைய. சிவநெறிகள் பல; அவை அனைத்துமாக உள்ளவர் அவர். பிரான்-உபகாரி; தலைவன் எனலும். ஆம்.

முந்தியுள்ளாரும், முதல்வரானாரும், சந்தியாரும், அந்தி யுள்ளாரும், தவநெறி தரித்து நின்றரும், சிந்தையுள்ளாரும், சிவநெறி ஆனாரும், எந்தையாரும், எம்பிரானாருமாகிய சிவ பெருமான் இடங்கொண்டார் என்க. முந்தியுள்ளார் முதலிய அனைத்தும் ஒருவரையே குறித்து அடுக்கி வந்த எழுவாய்கள்.]

இந்தத் திருப்பாட்டு நான்காம் திருமுறையில் 35-ஆம் பதிகத்தில் இரண்டாவதாக உள்ளது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *