
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
10. ‘வானம்பாடி’
அந்த இரவுக்கு அப்புறம் கணவனும் மனைவியும் பல முறைகள் தனிமையில் சந்தித்திருக்கிறார்கள். ஆனால், மனம் விட்டுப் பேசவோ, அளவளாவவோ அவர்களுக்கு முடியவில்லை. கணவனுக்கு உணவு பரிமாறும் போது சாவித்திரி அவன் முகத்தைப் பார்க்காமல் யாரோ அன்னியனுக்குப் படைப்பது போல் கலத்தில் பரிமாறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு வெளியே சென்று விடுவாள். அவன் அவளை நிமிர்ந்து பாராமல் உண்டு விட்டுப் போய்விடுவான். ஒரு தினம் தலை வாரிக்கொள்ள சாவித்திரியை அழைத்து சீப்புக் கேட்டபோது அவன் எதிரில் மேஜை மீது ‘பட்’ டென்று சீப்பு வந்து விழுந்தது! ‘இந்தத் துணிகளை இன்று சோப்புப் போட்டுத் துவைக்க வேண்டும்’ என்று அவன் தயங்கிக் கொண்டே யாரோ மூன்றாவது மனிதரிடம் சொல்லுவது போல் கூறிவிட்டு வெளியே போவான். மாலை வீடு திரும்பும் போது ஒவ்வொரு தினம் அவை துவைத்து அழகாக மடித்து வைக்கப்பட்டு இருக்கும். பல நாட்கள் அவை அவன் அறையில் ஒரு மூலையில் கேட்பாரற்றும் கிடப்பது உண்டு.
“அத்தான்! மாடியில் உன் அறைப்பக்கம் போனேன்: துவைப்பதற்குத் துணி இருக்கவே துவைத்து மடித்து வைத்தேனே பார்த்தாயோ?” என்று ஸரஸ்வதி அவனைக் கேட்ட பிறகுதான் அவைகளைத் துவைத்தது யார் என்பதும் அவனுக்குப் புரியும்.
படுக்கை அறையில் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மீது தூசு படிந்து கிடக்கும். படங்களில் மலர் மாலைகள் வாடிக் கருகித் தொங்குவதைக் கவனிப்பதற்கு யாரும் இல்லை. பெரியவர்கள், ‘ஆணுக்குப் பெண் துணை’ என்றும் ‘ பெண்ணுக்கு ஆண் துணை’ என்றும் ஏன் ஏற்படுத்தியிருக்கிறார்கள்? உடல் இன்பத்திற்காக என்றால் புனிதமான தாம்பத்ய உறவு அவசியம் இல்லை. ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உத்தியோக நிமித்தம் சென்றிருக்கும் கணவனின் சுக வாழ்வுக்காக மனைவி ஊரில் அவனையே நினைத்துத் தவங்கிடந்து நோன்புகள் செய்வானேன்?
தாம்பத்ய உறவில் உள்ளம் இரண்டும் ஒன்று சேர்ந்து உறவாடுவதுதான் இன்பம். சாவித்திரி தினம் இரவு நேரத்தில் பால் டம்ளருடன் படுக்கை அறைக்குள் நுழைவாள். ‘நக்’ கென்று அதை மேஜை மீது வைத்துவிட்டுப் படுக்கையில் ‘ பொத்’ தென்று சாய்ந்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்து விடுவாள்.
ரகுபதி ஒரு சங்கீதப் பித்தன். இரவில் நகரத்தில் சங்கிதக் கச்சேரி கேட்டுவிட்டு வீடு திரும்பும்போது பொழுதாகிவிடும். வீடு திரும்பும் கணவனை மலர்ந்த முகத்துடன் சாவித்திரி வரவேற்க மாட்டாள். கூடத்தில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் ஸ்வர்ணத்தை எழுப்புவதற்கு ரகுபதிக்கு மனம் வராது. ஸரஸ்வதியைக் கூப்பிட இனி, அவள் யார்? அவன் யார்? தளர்ந்த மனத்துடன் ரகுபதி, மாடிக்குப் போய்ச் சாவித்திரியை அழைக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் படி களில் ஏறும்போது தடதடவென்று சாவித்திரி மாடிப் படிகளில் இறங்கி வேகமாக அவனைத் தாண்டிச் செல்வாள். அப்ப! ஒரு ஸ்திரீக்கு அகங்காரமும், கோபமும் ஏற்படும் போது உண்டாகும் வேகம் ஓர் அணு குண்டுக்குக்கூட இருக்காது என்று சொல்லலாம்! அடுத்தாற்போல சமையலறைக் கதவைப் ‘பட்’ டென்று திறந்து சாப்பிடும் தட்டை ‘நக்’ கென்ற ஓசையுடன் வைத்து விட்டு உறுமும் பெண் புலியைப்போல் காத்து நிற்பாள் சாவித்திரி. ‘உங்களுக்குச் சாதம் போடும் வேலை ஒரு கடன்’ என்று சொல்லுகிற மாதிரி இருக்கும் அவள் செய்கைகள் எல்லாம்! குமுறும் எண்ணங்களை வார்த்தைகளில் கொட்டித் தீர்த்துவிட்டாலும் பரவாயில்லையே! எண்ணங்கள் மனத்துள் குமுறக் குமுற, எழப்போகும் அனல் விபரீதமாக அன்றோ இருக்கும்? குமுறும் எரிமலையை எவ்வளவு காலந்தான் அடக்கி வைக்க முடியும்?
ரகுபதி சாப்பிட்டு முடித்தவுடன் குடிப்பதற்கு ஜலம் தேவை யென்று டம்ளரைச் சற்று நகர்த்தி வைப்பான். அதை கவனியாதவள் போல் சாவித்திரி ‘விர்’ ரென்று மாடிப் படிகளில் ஏறி அறைக்குள் சென்றுவிடுவாள். வேதனையும், கோபமும் நிறைந்த மனத்துடன் ரகுபதி அறைக்குள் சென்று ஏதாவது புஸ்தகத்தை எடுத்து வைத்துக்-கொண்டு படிக்க ஆரம்பித்துவிடுவான்.
இப்படியே பேலும் இரண்டு மாதங்கள் சென்றன. இல்வாழ்க்கை ஆரம்பமானவுடன் பாலில் சொட்டுப் புளி விழுந்ததுபோல் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே எழுந்த மனஸ்தாபம் சிறிது சிறிதாக நாளடைவில் வளர்ந்துவிட்டது. கணவனுக்காகப் பிடிவாத குணமுடைய சாவித்திரி தன் போக்கை மாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. மனைவியைத் தன் கொள்கைக்கு இணங்கி வரும்படி வற்புறுத்த வேண்டாம் என்கிற பிடிவாதத்தையும் ரகுபதி தளர்த்தவில்லை.
இவர்கள் இருவருடைய மனஸ்தாபத்துக்கும் இடையில் சரஸ்வதி மிகவும் குழப்பம் அடைந்திருந்தாள். வலுவில் அவளாகவே சென்று சாவித்திரியுடன் பேசினாலும் முகத்தைத் திருப்பிக்கொண்டு சாவித்திரி போய்விடுவாள். ஒரு தவறும் செய்யாத தன்னிடம் சாவித்திரிக்கு என்ன கோபம் ஏற்பட்டிருக்கும் என்பது ஸரஸ்வதிக்குப் பல நாட்கள் வரையில் புரியவே இல்லை.
நாளாக நாளாக, சாவித்திரியின் கோபம் தன்மீது மட்டும் ஏற்பட்டிருக்கவில்லை, அது தன் அத்தான் மீதும் பாயத் தொடங்கி இருக்கிறது என்பதையும் ஓரளவு ஸரஸ்வதி ஊகித்துக் கொண்டாள். ‘நிலவு பொழியும் இரவுகளை, இளம் மனைவியைப் படைத்திருக்கும் அத்தான் ரகுபதி, திறந்த வெளியில் சாய்வு நாற்காலியில் தனியாகக் கழிப்பானேன்?’ என்று தன் மனத்தையே கேட்டுப் பார்த்தாள் ஸரஸ்வதி. அவளுக்கு அதற்கும் விடை புரியவில்லை. ஆகவே, ஒரு தினம் ஸரஸ்வதி கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கீதை படிக்கும் தன் அத்தை ஸ்வர்ணத்தினிடம் சென்று நெருங்கி உட்கார்ந்து கொண்டு, “அத்தை” என்று மெதுவாகக் கூப்பிட்டாள். இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனதை லயிக்கவிட்டிருந்த ஸ்வர்ணம் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து. “நீ இங்கேயா அம்மா இருக்கிறாய்? மாடியில் சாவித்திரியுடன் இருப்பதாக அல்லவோ நினைத்துக்கொண்டிருந்தேன்?” என்று வியப்புடன் கூறினாள்.
“சாவித்திரி தூங்குகிறாள் அத்தை. அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் இங்கு வந்தேன்” என்றாள் ஸரஸ்வதி. அவள் குரலில் ஏமாற்றமும், ஏக்கமும் நிரம்பி இருந்தன.
ஸ்வர்ணம் மெதுவாகச் சிரித்துக்கொண்டே, ‘உனக்கு மத்தியான்ன வேளைகளில் தூக்கமே வராதே. எதையாவது. ”கொடை, கொடை’ன்னு குடைந்துண்டே இருப்பாயே குழந்தையிலிருந்து! ஒரு தரம் உங்கம்மா இருக்கும் போது ….” என்று ஸ்வாதீனமாகப் பழைய கதை ஒன்றை ஆரம்பித்தாள்.
“உஸ். . . . உஸ்” என்று ஸரஸ்வதி வெகு ஸ்வாதீனமாக அத்தையின் வாயைப் பொத்திக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே, “அம்மா இருக்கும் போது நான் செய்த விஷமங்களைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போய்விட்டது! அதெல்லாம் பழைய விஷயங்கள்! புது விஷயமாக – ஒன்று சொல்லப்போகிறேன்” என்றாள் ஸரஸ்வதி.
“சொல்லேன்! அதற்கு இவ்வளவு பீடிகை வேண்டுமா என்ன?” என்று கேட்டாள் ஸ்வர்ணம்.
ஸரஸ்வதியின் முகத்தில் சிறிது முன்பு நிலவிய குறும்புச் சிரிப்பும் குறுகுறுப்பும் திடீரென்று மறைந்தன. நிலத்தைக் காலால் கீறிக்கொண்டே தரையைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பிறகு நீர் நிறைந்த கண்களுடன், அத்தை ஸ்வர்ணத்தை ஏறிட்டுப் பார்த்து, ”அத்தை! என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு. நான் அவருடனேயே இனிமேல் இருந்துவிடுகிறேன்” என்றாள், பொங்கி வரும் துயரத்தை அடக்கிக்கொண்டு.
ஸ்வர்ணத்தின் கையில் இருப்பது கீதையானாலும், அவள் இதுவரையில் கண்ணனின் உபதேச மொழிகளில் மனத்தை லயிக்க விட்டிருந்தாலும், அவள் ஒரு சாதாரண அஞ்ஞானம் நிரம்பிய பெண்மணி என்பதை அவள் வேதனை படரும் முகம் தெள்ளெனக் காட்டியது. ‘என்னை அப்பாவிடம் அனுப்பிவிடு’ என்னும் வார்த்தைகள் அவள் மனத்தில் வேல் போல் பாய்ந்தன. அளவுக்கு மீறிய துயரத்துடன் ஸரஸ்வதியின் முகவாயைத் தன் கையால் பற்றிக்கொண்டு, “ஏன் அம்மா ஸரஸு?” என்று கேட்டாள் ஸ்வர்ணம். கையில் தாங்கி இருக்கும் ஸரஸ்வதியின் முகத்தில் பல வருஷங்களுக்கு முன்பு இறந்துபோன தன் மதனீயின் பரிதாபமான முகம் தோன்றி மறைவதுபோல் இருந்தது ஸ்வர்ணத்துக்கு.
தங்கப் பதுமைபோல் மாலையும், கழுத்து மாய் ஸரஸ்வதியின் தாய் நேற்றுதான் ஸ்வர்ணத்தின் தமையனைக் கைப்பிடித்து வீட்டில் நுழைந்தது போல் இருக்கிறது. அதற்குள்ளாக ஒரு. பெண்ணைப்பெற்று, திக்கில்லாமல் விட்டுவிட்டுப் போய் விட்டாள். அவளுக்குத்தான் ஸ்வர்ணத்தினிடம் எவ்வளவு அன்பு! நாத்தனாரும் மதனியும் கூடப்பிறந்த சகோதரிகள் மாதிரி இருந்தார்கள். அவள் மறைவுக்குப் பிறகுதான் ஸ்வர்ணத்தின் தமையன் மனம் வெறுத்து எங்கோ இருக்கிறான். பெற்ற பெண்ணைப்போல் வளர்த்த ஸரஸ்வதியைப் பிரிந்து ஸ்லர்ணத்தால் இருக்க முடியுமா?
ஸ்வர்ணம் ஆழ்ந்த யோசனைக்கு அப்புறம் பெருமூச்சு விட்டாள். பிறகு அங்கு நிலவி இருந்த அசாதாரணமான அமைதியைக் கலைத்துக் கனிவுடன், “உனக்கு இங்கே என்ன கஷ்டம் ஸரஸு?” என்று கேட்டாள் ஸரஸ்வதியைப் பார்த்து.
“கஷ்டம் ஒன்றுமில்லை அத்தை. எனக்கும் வெளி ஊர்களெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. கொஞ்ச காலம் அப்படித்தான் பார்த்துவிட்டு வருவோமே என்று தோன்றுகிறது” என்று வெகு சாமர்த்தியமாக மனக் கஷ்டத்தை மறைக்க முயன்றாள் ஸரஸ்வதி.
ஸ்வர்ணத்தின் இளகிய மனதால் அதற்குமேல் நிதானமாக இருக்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் பெருக ஸரஸ்வதியைச் சேர்த்து அணைத்துக்கொண்டு, ”அம்மா! திடீரென்று ஊருக்குப் போகிறேன் என்று சொல்லுகிறாயே, உன்னை அனுப்பி விட்டுத் தனியா இந்த வீட்டில் எப்படி இருப்பேன் சொல்?” என்றாள் ஸ்வர்ணம். ஸரஸ்வதி அத்தையின் கைகளை ஆசை யுடன் பற்றிக்கொண்டு, “நீயும் அத்தானும் அடிக்கடி என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடியும் குடித்தனமுமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்களே! கல்யாணம் ஆன பிறகு புக்ககம் போக வேண்டாமா அத்தை? இதற்கே இப்படிப் பிரமாதப்படுத்துகிறாயே நீ?” என்று கண்ணைச் சிமிட்டிக் குறும்புத்தனமாகப் பார்த்துக்கொண்டே அத்தையைக் கேட்டாள்.
“அசட்டுப் பெண்ணே! அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று திகைப்புடன் தன்னைப் பார்க்கும் அத்தையிடம், ஸரஸ்வதி ரகசியம் பேசும் குரலில், “என்னால் அத்தானுக்கும் சாவித்திரிக்கும் ஏதாவது சச்சரவு வந்துவிடும். நான் நன்றாகப் பாடுகிறேன் என்று சாவித்திரிக்குப் பொறாமை போலிருக்கிறது. அதனால் அவர்கள் ஒருவருக்கொருவர் மனஸ்தாபப் படுகிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் சந்தோஷமாக இல்லாவிட்டால் உன் மனம் நிம்மதியாக இருக்குமா அத்தை?” என்று கேட்டாள்.
ஸ்வர்ணத்திற்கு க்ஷணப்பொழுதில் எல்லாம் விளங்கிற்று. ஸரஸ்வதி அந்த வீட்டில் இருப்பதனால் சாவித்திரியும் ரகுபதியும் மனஸ்தாபப்படுகிறார்களா? இதென்ன விந்தை? கபடமற்ற இந்தப் பேதைப் பெண்ணைப் பார்த்துச் சாவித்திரிக்கு இரக்கம் தோன்றாமல் பொறாமை ஏற்பட்டிருப்பதும் ஆச்சர்யந்தான். ஸ்வர்ணம் கண்ணீர் பெருகச் செயலிழந்து உட்கார்ந்திருந்தாள். அத்தையின் தோளில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு ஸரஸ்வதி கண்ணீர் உகுத்தாள்.
வானவெளியில் மனம் போனபடி ஆடிப் பாடிப் பறந்து செல்லும் வானம்பாடியைப் பிடித்து யாரோ கூட்டில் அடைத்துச் செய்யுளும், இலக்கணமும் கற்றுக்கொடுக்கும் கட்டுப்பாடான நிலையை அடைந்து ஸரஸ்வதியின் மனம் வேதனையுற்றது. ஒருவருக்காக அவள் தன் சங்கீதக் கலையை அப்யாசிக்காமல் விட்டு விடவும் மனம் ஒப்பவில்லை.



