இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

31. அழைக்காத விருந்தாளி

மைசூர் ராஜ்யத்தில் பார்க்க வேண்டிய இடங்களை அநேகமாகப் பார்த்து முடித்து விட்டாள் ஸரஸ்வதி. கோபாலதாஸர் வசித்து வந்த வீடும், அதன் சுற்றுப்புறங்களும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. சர்க்கார் அலுவலாக வந்திருந்த அவள் தகப்பனார், தம் வேலைகளை முடித்துக்கொண்டு விட்டார். தன் சகோதரியின் குடும்ப நிலையை இதற்குள் அவர் ஒருவாறு ஸரஸ்வதி சொல்லித் தெரிந்து கொண்டிருந்தார். அவர்களிடம் இனிமேல் ஸரஸ்வதி தங்கியிருக்க இயலுமா என்றும் கவலை அடைந்தார் அவர். ஆகையால் அவர் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு, “ஏனம்மா! நீயும் என்னோடு வந்து விடுகிறாயா? வெளி நாடுகளெல்லாம் பார்த்தாற்போல் இருக்கும்” என்று கூப்பிட்டார்.

ஸரஸ்வதி சிறிது நேரம் யோசித்துவிடு. “தீபாவளிப் பண்டிகைக்கு அத்தான் வேட்டகம் போயிருக்கிறான். அநேகமாக மனைவியை அழைத்து வந்து விடுவான். அத்தையிடம் சொல்லிக் கொள்ளாமல் எப்படியப்பா வந்து விடுவது?” என்று கேட்டாள். அதுவும் வாஸ்தவந்தான் என்று தோன்றியது அவருக்கு. மகளைப் பிரிந்து செல்லும்போது அன்புடன் அவள் தலையை வருடிக் கொண்டே, “அம்மா! எல்லாவற்றிலும் நீ புத்திசாலியாக இருக்கிறாய். உன்னிடம் ஒரே ஒரு அசட்டுத்தனம் இருக்கிறது. என் குடும்பத்தின் விளக்கே நீ ஒருத்திதான். இந்த விளக்கால் என் குடும்பம் ஒளிபெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். இந்த ஒரு விளக்கிலிருந்து பல தீபங்களை ஏற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். உன் மனசுக்குப் பிடித்தவனாக யாரைச் சொல்லுகிறாயோ அவனை நான் ஏற்பாடு செய்கிறேன், ஸரஸ்வதி!” என்று உருக்கமாகக் கூறினார்.

ஸரஸ்வதியின் பளிங்குக் கன்னங்களில் கண்ணீர் உருண்டு வழிந்தது. ஆர்வத்துடன் தகப்பனாரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டாள் ஸரஸ்வதி. பிறகு உதடுகள் உணர்ச்சியால் துடிக்க, “அப்பா! நான் என்றுமே இப்படிக் கன்னியாக இருந்து விடுவேன் என்று கவலைப்படுகிறீர்களா? அப்படி யெல்லாம் நான் விரதம் ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. லட்சியப் பாதையில் செல்லுகிறவர்கள் வகுத்துக் கொள்ள வேண்டிய இல்லறமே வேறு. அத்தான் ரகுபதி ஒரு லட்சிய வாதி. இசை என்றால் ஆசைப்படுகிறவன். அவன் ஆரம்பித்த கபவாழ்வு இனிமையாக இல்லை. அவன் லட்சியம் ஈடேற அவன் மனைவி அவனுடன் ஒத்துழைக்க மறுக்கிறாள். அவனாவது தன் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவளாவது அவன் வழிக்குத் திரும்ப வேண்டும். ஆகையால், நான் விவாகம் செய்து கொள்வதற்கு முன்பு யோசித்துத்தான் செய்து கொள்ள வேண்டும். அன்று கூறியதுபோல் நான் ஆண்டாளாக மாறி விடுவேன் என்று வருத்தப்படாதீர்கள். அவ்வளவு பக்தியும், மனத்தெளிவும் சாதாரணப் பெண்ணாகிய எனக்கு இல்லை” என்றாள் அவள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் வான வெளியில் ஊர்ந்து செலலும் விமானத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி. ‘அப்பா வந்தார். அவருடன் ஒரு வார காலம் பொழுது சென்றதே தெரியாமல் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அத்தானும், சாவித்திரியும் தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்பி விடுவார்கள். அத்தையும் நாட்டுப் பெண்ணைப்பற்றிய களிப்பில் என்னை மறந்துபோய்விடுவாள்’ என்று சிந்தனை படர்ந்து சென்றது. இவ்வளவு பெரிய உலகில் தான் தனியாக நிற்பதாக ஒருவித பிரமை அவளுக்கு ஏற் பட்டது.

“குழந்தை! வீட்டிற்குப் போகலாமா?” என்று கோபால தாஸர் அவளை அழைத்தபோது தான் அவள் சுய உணர்வை அடைந்தாள். இருவரும் நதிக்கரை ஓரமாகவே நடந்தார்கள். அடிக்கடி ஸரஸ்வதி பெருமூச்சுவிடுவதையும், கண்களைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்த நண்பர், ”ஏனம்மா! வருத்தப்படுகிறாயா என்ன? அன்று எனக்குப் பலமாக உபதேசித்த நீயா இப்படிக் கண்ணீர் விடுவது? வீட்டிற்குப் போய் நான் எழுதிய ‘குழலோசை’ என்கிற கவிதையைப் படித்துச் சொல்கிறேன். கேட்டு ஆறுதல் அடையலாம். வா அம்மா!” என்று அன்புடன் கோபால தாஸர் அழைத்தார் ஸரஸ்வதியை.

வீட்டை அடைந்ததும் அன்று காலைத் தபாலில் கடிதம் ஒன்று வந்திருந்தது. ரகுபதி கிராமத்திலிருந்து எழுதிய கடிதம் அது. பொழுது விடிந்தால் தீபாவளி. மனைவியின் வீட்டிற்குச் செல்லாமல், கிராமத்தில் அத்தான் என்ன செய்கிறான் என்று ஆச்சரியம் அடைந்தாள் ஸரஸ்வதி. உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சிறிது முன்பு தகப்பனாரைப் பிரிந்ததற்கு வருந்திய ஸரஸ்வதி, இப்பொழுது அத்தானின் போக்கைக் கண்டு வருந்தினாள். குழலோசைக் கவிதைப் புஸ்தகத்தை எடுத்து வந்த கோபால தாஸர் ஸரஸ்வதியின் சிவந்த முகத்தைக் கண்டு பயந்து விட்டார். கையில் பிரித்த கடிதத்துடன் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்ததும் காவியங்களில் தோன்றும் கண்ணகியும், திரௌபதியும் அவர் அகக்கண் முன்பு காட்சி அளித்தனர்.

“ என்னம்மா, விஷயம்?” என்று கேட்டார் அவர்,

“இது ஒரு பெரிய ராமாயணம் மாமா. ஆதியோடு அந்தமாக இதைச் சொல்லி முடியாது. என்னுடைய அத்தான் இருக்கிறானே அவன் மனைவியுடன் தீபாவளி கொண்டாட வில்லை. இரண்டுங்கெட்டானாக யார் வீட்டிலேயோ அழைக்காத விருந்தாளியாகப் போய் உட்கார்ந்திருக்கிறான். மனிதன் வாழ்க்கையில் ஏமாறுவது சகஜந்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவன் ஒழுங்கான பாதையிலிருந்து விலகிச் செல்வது தவறு அல்லவா? மனைவி உதாசீனம் செய்கிறாள் என்றால், கணவன் பதிலுக்கு அவளை உதாசீனம் செய்யவேண்டும் என்பது சரியல்ல” என்று கூறிவிட்டுக் கடிதத்தை மறுபடியும் உரக்கப் படித்தாள்:

” அன்புள்ள ஸரஸ்வதிக்கு, ரகுபதி அநேக ஆசீர்வாதம். உன் மைசூர் பிரயாணமெல்லாம் முடிந்து எப்பொழுது நீ ஊருக்குத் திரும்பி வரப்போகிறாய்? உன்னுடன் ஒன்றாக ரெயிலடி வரையில் வந்த நான், என் தீர்மானத்தைத் தகர்த்தெறிந்து விட்டேன். மதிக்காத மனைவியைத் தேடிப் போவதைவிட, மதித்து என்னைத் தன் ஊருக்கு வரும்படி அழைத்த தங்கத்தின் வீட்டில் இப்பொழுது நான் இருக்கிறேன். நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி. தீபாவளியும் இங்கேதான். அத்தை அலமு உனக்காக ரொம்பவும் பயப்படுகிறாள். ‘ நீ இங்கே விருப்பது தெரிந்தால் அந்தப் பெண் ஸரஸ்வதி என்னைப் பொசுக்கி விடுவாள்’ என்று அடிக்கடி சொல்கிறாள்.

தங்கம் ‘ஸரஸு அக்கா’வை மறக்களில்லை. உன்னிடம் கற்றுக்கொண்ட ‘சின்னஞ்சிறு கிளியே- கண்ணம்மா’வைத் தினம் பாடுகிறாள். அந்தப் பெண்ணுக்குத்தான் என்ன சாரீரம் என்கிறாய், ஸரஸு! இறைவன் சிலருக்குத் தான் இந்த பாயத்தை அளிக்கிறான் போலும். தங்கத்துக்கு நிகமாகவே பூட்டிக்கொள்ள உடம்பில் தங்க நகைகள் இல்லையே தவிர, அவள் பசும் பொன் என்பதில் சந்தேகம் இல்லை.

மது நிறைந்திருக்கும் மலர்களைத்தான் வண்டு தேடிக் கொண்டு போகும். மதுவில்லாததும், வாசனை இல்லாததுமான மலர் இங்கே யாருக்கு வேண்டும்?”

ஸரஸ்வதியின் கண்கள் கோபத்தால் சிவந்தன; “அழகாக இருக்கிறது தங்கத்தைப் பற்றிய வர்ணனை! பாவம், பேதைப் பெண்!” என்றாள் ஸரஸ்வதி.

செந்தமிழை நன்றாகப் புரிந்துகொள்ள முடியாத கோபால தாஸர் கவலையுடன், “என்னம்மா இதெல்லாம்? ஊரிலே எல்லோரும் சௌக்கியந்தானே?” என்று விசாரித்தார்.

“சீக்கிரத்தில் நான் ஊருக்குப் புறப்படுகிறேன், மாமா! கொஞ்சம் என் அத்தானுக்குச் சித்தப்பிரமை ஏற்பட்டிருக்கிறது. அதைப்போய்த் தெளியவைக்க வேண்டும்” என்றாள் ஸரஸ்வதி. அந்த அதிசயப் பெண்ணைப் பார்த்துக் கோபால தாஸர் மனத்துக்குள் வியந்தார்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *