இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

13. பிறந்த வீட்டுக்கு

அடுத்த நாள் அதிகாலையில் சாவித்திரியை ரெயில் எற்றுவதற்காக அரை மனத்துடன் ரகுபதி அவளுடன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். பெரிய நகரமாக இருந்தால் ஒருவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை இன்னொருவர் அவ்வளவாகக் கவனிக்கமாட்டார்கள். அந்த ஊர் சற்றுக் கிராமாந்தரமாக இருக்கவே அண்டை அயலில் இருக்கும் பெண்கள் வாசலில் கோலமிட வந்தபோது அதிசயத்துடன் கோலத்தைப் பாதியில் நிறுத்திவிட்டு ஸ்வர்ணத்தின் வீட்டு வாசலில் வண்டி நிற்பதைக் கவனித்தார்கள். சாவித்திரியும் ரகுபதியும் வண்டி ஏறுவதற்கு முன்பு கசமசவென்று ஏதோ பேசப்படுவதையும் கேட்டார்கள்.

திடுமென்று நாட்டுப்பெண் ஊருக்குப் போவதை ஸ்வர்ணம் துளிக்கூட விரும்பவில்லை. “எங்கள் நாளில் இப்படியா இருந்தோம்? புருஷன் ஏதோ கோபித்துக்கொண்டு அடிக்கிறதும் உண்டு. இரண்டு நாள் புருஷனோடு பேசாமல் இருப்போம். அப்புறம் சமாதானம் ஆகிப் பேசுகிறதில் எவ்வளவு இன்பம் என்பதைச் சொல்லவே முடியாது. அதையெல்லாம் பாராட்டலாமா?” என்று சொல்லி மாய்ந்து போனாள்.

“புருஷன், மனைவியை அடிக்கிறது தவறு அத்தை ! உனக்கு, இந்தக் காலத்து விஷயமே தெரியவில்லை. நீ என்னவோ அந்த நாளைப்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறாயே!” என்று ஸரஸ்வதி கோபித்துக்கொண்டாள்.

கணவனும், மனைவியும் ரெயில் நிலையத்தை அடையும் வரையில் ஒருவரோடொருவர் பேசவில்லை. ரெயில் நிலையத்தினுள் அதிகக் கூட்டமில்லாமல் இருக்கவே ரகுபதி சாவித்திரியின் அருகில் நெருங்கி, ‘இப்பொழுதாவது கோபம் தணிந்து விட்டதா? திரும்பி வீட்டுக்குப் போய்விடலாமா? இல்லை, டிக்கெட் வாங்கித்தான் வர வேண்டுமா?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான்.

“இது என்ன விளையாட்டு? அழுகிற குழந்தைக்கு மிட்டாய் வாங்கித்தருகிற மாதிரி குழைந்து குழைந்து என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? ரெயில் வந்துவிட்டால் நம் தர்க்கத்தை ரத்துக் கொண்டு நிற்காது! பேசாமல் போய் டிக்கெட் வாங்கி வாருங்கள்” என்று சாவித்திரி கோபத்துடன் பொரித்து தள்ளினாள்.

ரகுபதியின் மனத்தை ஊசியால் ‘நறுக்’கென்று குத்துவது போல் அவள் வார்த்தைகள் தைத்தன. அவன் வேறெதுவும் பேசாமல் டிக்கெட்டை வாங்கி வந்து அவளிடம் கொடுப்பதற்கும் ரெயில் வருவதற்கும் சரியாக இருந்தது. கணவன், மனைவி என்கிற பந்தம் எவ்வளவு நெருங்கியதாக இருந்தாலும் சாவித்திரிக்கும் ரகுபதிக்கும் ஏற்பட்டிருந்த பிளவு அசாதாரண மாகத்தான் இருந்தது. ஜன்னலின் மீது கையை ஊன்றி முகத்தைச் சாய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் சாவித்திரியின் வெகு சமீபத்தில் பெட்டிக்கு வெளியேதான் ரகுபதி நின்றிருந்தான். இருந்தாலும் அவர்கள் இருவரின் மனங்களும் வெவ்வேறு துருவங்களைப் பார்த்துக்கொண்டிருந்தன. ரெயிலின் ‘கார்டு’ தன் ஊதலை எடுத்து ஊதிக் கொடியைப் பறக்கவிட்டு ஆட்டினார். திக்கித் திணறி ரகுபதி, “ஊருக்குப் போனதும் கடிதம் போடு” என்றான். சாவித்திரி மௌனமாகத் தலையை அசைத்தாள்.

மனைவியை ரெயில் ஏற்றிவிட்டுக் கால் நடையாகவே திரும்பி பாகுபதி வீட்டுக்கு வரும்போது பலமுறை அவன் மனம் அவனையும் அறியாமல் சாவித்திரியையும், ஸரஸ்வதியையும் ஒப்பிட்டுப் பார்த்தது. இப்பொழுது நடந்தது மாதிரி இருந்தது அவனுக்கு அந்தச் சம்பவம். ஒரு நாள் ஸரஸ்வதியை – அவ ளுக்குப் பன்னிரண்டு வயசாக இருக்கும் போது – ஏதோ ஒரு பாட்டைப் பாடச் சொல்லி வற்புறுத்தினான் ரகுபதி. ஓடி விளையாடும் பருவத்தில் மணிக்கணக்காக உட்கார்ந்துப் பாடிப் பாடி அலுத்துவிட்டது அவளுக்கு. ஆகவே சற்றுக் கோபத் துடன், “போ அத்தான்! உனக்கு இது ஒரு பைத்தியம்! என்னாலே இனிமேல் பாட முடியாது போ” என்று கூறி எழுந்து சென்ற ஸரஸ்வதியின் பறக்கும் மேலாக்கைப்பற்றி ரகுபதி’ இழுத்தபோது அது கிழிந்து போய்விட்டது.

“புத்தப் புதுசையெல்லாம் கிழித்து விடுகிறாயே அத்தான்!” என்று இரைந்தாள் ஸரஸ்வதி.

“கத்தாதே இப்படி ராக்ஷசி மாதிரி!” என்று அவள் கொவ்வைக் கன்னங்களை அழுத்திக் கிள்ளிவிட்டான் ரகுபதி. உதடுகள் துடிக்க அவனை நீர் மல்கும் விழிகளால் பார்த்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள் ஸரஸ்வதி:

“ஐயோ பாவம்! தாயில்லாக் குழந்தை! முரட்டுத்தனமாகக் கிள்ளிவிட்டோமே. பார்த்து ஆறுதல் கூறவேண்டும்” என்று அவளைத் தேடி. ரகுபதி சென்ற போது அவளாகவே வலுவில் எதிரில் வந்து. “அத்தான்! காப்பி சாப்பிடாமல் மறந்து போய் விட்டாயே இன்றைக்கு. ஆறிப்போகிறதே” என்று சுடச்சுட காபியை எடுத்துவந்து அவன் கையில் கொடுத்தாள். ரோஜாக் கன்னம் இன்னும் சிவந்துதான் இருந்தது. “கிள்ளி விட்டேனே. வலிக்கிறதா?” என்று கேட்க அவனுக்கு வெட்கம்.

” நீதான் கிள்ளினாயே!” என்று மறுபடியும் அந்த சம்பவத்தை நினைவு படுத்த அவளும் வெட்கினாள்.

நேற்று ரகுபதி மனைவியின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, “அடித்து விட்டேனே” என்று மனம் வருந்தியபோது சாவித்திரி அதைப் பாராட்டவில்லை அல்லவா? ‘ அடிப்பதை அடித்தாயிற்று. தோரணையில் உதாசீனமாகத்தானே பேசினாள்?

ரகுபதி சாம்பிய மனத்துடன் வீட்டை அடைந்தான். யந்திரம்போல ஒருவருடனும் பேசாமல் தன் வேலைகளைக் கவனித்துக்கொண்டான். ஸ்வர்ணமும், ஸரஸ்வதியும் அவனுடன் ஒன்றுமே பேசவில்லை. ‘அவனாகவே ஏதாவது பேசட்டும்’ என்று ஸ்வர்ணம் நினைத்தாள். அத்தானிடம் ஏதாவது வலுவில் பேசி அவன் மனப் புண்ணைக் கிளறக்கூடாது என்று ஸரஸ்வதி மௌனமாகவே இருந்துவிட்டாள். இந்த அசாதாரணமான சாந்தம் அவன் நெஞ்சைப்பிடித்து உலுக்கியது. ஏன் ஒருவரும் தன்னுடன் பேசவில்லை – என்று அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. ஒரு வேளை சாவித்திரியை அடித்தது ஒரு மாபெரும் குற்றம் என்று எல்லோரும் கருதுகிறார்களோ? குற்றமாக இருந்தாலும், பிறகு அவளை எவ்வளவு முறை சமாதானப்படுத்த முயன்றான்? ’மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நான் கெஞ்சினேன்’ என்று ஒருவனுக்கு பெற்ற தாயிடம் மட்டும் சொல்லிக்கொள்ள லஜ்ஜையாக இராதா என்ன? உடன் பிறந்தவளைப்போல் ஸரஸ்வதி பழகினாலும் இந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் வாய்விட்டுச் சொல்ல முடியுமா? ‘ ஒருவனுக்கு ஏற்படும் சில உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு ‘அந்த ஒருத்தி’ தான் தேவையாகவிருக்கிறது.

தாயாக இருந்தாலும், உடன் பிறப்பாக இருந்தாலும், தோழனாக இருந்தாலும் மற்றவர்களால் பகிர்ந்து கொள்ள முடியாத சில உணர்ச்சிகளை சகதர்மிணி ஒருத்தியால்தான் வாழ்க்கையில் பகிர்ந்துகொள்ள முடியும். இதையொட்டித்தான் பெரியவர்கள் மனைவியைச் ‘சகதர்மிணி’ என்று பெயரிட்டு அழைக்கிறார்களோ’ என்று நினைத்து ரகுபதி மனம் வருந்தினான்.

இப்படியே நாலைந்து தினங்கள் ஓடிவிட்டன. பிள்ளையின் இந்த அசாதாரணமான மௌனத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து. “ஏண்டா! சாவித்திரி எப்பொழுது வருகிறேன் என்று சொன்னாளடா? கேட்டாயோ அவளை?” என்று கவலையுடன் விசாரித்தாள். இந்த நாலைந்து தினங்களுக்குள்ளாகவே ஊரில், சாவித்திரி திடீரென்று பிறந்தகம் சென்றதைப்பற்றியே பேச்சாக இருந்தது.

“நேற்றுக்கூட ஸ்வர்ணத்தைக் கோவிலில் பார்த்தேன். நாட்டுப்பெண் ஊருக்குப் போகிறதைப்பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே” என்று அவயம் ஆச்சரியப்பட்டாள்.

“வர வர ஸ்வர்ணம் முன்னைப்போல் இல்லையடி. எந்த விஷயத்தையும் பூட்டிப் பூட்டி வைத்துக்கொள்கிறாளே பத்திரமாக!” என்று பாகீரதி அம்மாமி முகத்தைத் தோளில் இடித்துக் கொண்டு அவயம் கூறியதை அப்படியே ஆமோதித்தாள். இப்படி கோவிலிலும், குளக்கரையிலும், நடுக்கூடங்களிலும் ஸ்திரி ரத்தினங்கள் பேசுவதை அரை குறையாகக் கேட்ட ஸ்வர்ணம், மனக்கஷ்டம் தாங்காமல் பிள்ளையை மேற்கூறியவிதம் விசாரித்தாள்.

“எப்படிப் போனாளோ அப்படி வந்து சேருகிறாள். இங்கே யாராவது அவளைப் போகச்சொன்னோமா என்ன?” என்று தாயின் மீது சீறிவிழுந்தான் ரகுபதி.

“அவள் தான் முரடாக இருக்கிறாள் என்றால் நீயாவது தணிந்து போகமாட்டாயா அப்பா? ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக்கொண்டு நின்றால் நன்றாக இருக்குமா?” என்றாள் ஸ்வர்ணம்.

அதற்குப் பதில் எதுவும் கூறாமல் எழுந்து சென்ற ரகுபதியை மாடிப்படிகளில் சந்தித்த ஸரஸ்வதி கனிவுடன், “அத்தான்! சாவித்திரியிடமிருந்து ஊர்போய்ச் சேர்ந்ததைப்பற்றி கடிதம் ஏதாவது வந்ததா?” என்று கேட்டாள்.

“வெறுமனே அதைப்பற்றிப் பேசிப் பேசி என் மனத்தை என் எல்லோரும் நோக அடிக்கிறீர்கள், ஸரஸ்” என்று பரிதாப மாகக் கூறிவிட்டு மேலே விரைந்து சென்றுவிட்டான் ரகுபதி.

’கல்யாணமாகி வாழ்க்கை நடத்த ஆரம்பித்த இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இவ்வளவு மனக் கசப்பும், வெறுப்பும் என் அத்தானுக்கு ஏற்பட்டுவிட்டதே’ என்று நினைத்து வரஸ்வதி மனம் வருந்தினாள். ஒருவேளை அது அவளால் ஏற்பட்டதோ என்பதை நினைத்துப்பார்க்கையில் மலரினும் மெல்லியதான அவள் மனம் ‘திக்’கென்று அடித்துக்கொண்டது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *