இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

33. என்னுடைய குற்றம்

தலைத் தீபாவளிக்கு மாப்பிள்ளை வரவில்லை என்கிற ஒரு காரணமே மங்களத்தை மறுபடியும் படுக்கையில் தள்ளி விட்டது எனலாம். எந்த அழைப்பை வைத்துக்கொண்டு மாப்பிள்ளை வருவான் என்று எதிர்பார்த்திருந்தாளோ, அந்த அழைப்பை அவன் லட்சியம் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் மங்களம். இரு குடும்பங்களுக்கும் சௌஜன்ய பாவம் நிறைந்திருந்தால் ஒரு வேளை மாப்பிள்ளை அழைக்காமலேயே வந்திருப்பான்: ஓர் இடத்தில் பிரியமும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் செய்யும் பெரிய குற்றங்களைக்கூட மறந்து விடுகிறோம். அவர்கள் நம்மை ‘வா’ என்று கூப்பிடாததற்கு முன்பே, நாமாகவே வலுவில் அங்கு போகிறோம். அவர்கள் முகங் கொடுத்துப் பேசாமல் இருந்தாலும் பாராட்டாமல் வந்து விடுகிறோம். “அவர்கள் சுபாவம் அப்படி” என்று நம் மனத்துக்கே நாம் தேறுதல் கூறிக் கொள்கிறோம். பிடிக்காத இடமாக இருந்தாலோ, ஒவ்வொரு விஷயத்தையும் தவறாக எடுத்துக்கொண்டு பிரமாதப்படுத்துவது மனித சுபாவம்.

சாதாரண சமயமாக இருந்தால் சந்துரு எழுதிய கடிதமே ரகுபதி வருவதற்குப் போதுமானது. ராஜமையர் வேறு எழுத வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சாவித்திரி தீபாவளிக்கு ஒரு மாசம் முன்பே கணவனுக்கு அன்புக் கட்டளை இட்டிருந்தால் வேறு ஒருத்தருமே கடிதம் போட்டிருக்க வேண்டாம்! ரகுபதி ஓடோடியும் வந்திருப்பான். நிலைமை மாறி இருக்கும்போது இவ்வளவு சரளமான சுபாவத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும், வாதப் பிரதி வாதங்களுமாகச் சேர்ந்து மங்களத்தின் மனத்தை வெகுவாகக் கெடுத்துவிட்டன. சிறு வயதிலிருந்து மரியாதை செலுத்தி வந்த தன் மாமியாரிடம் மங்களத்தின் மனம் கசந்தது. மனஸ்தாபம் முற்றி விடுவதற்கு முன்பே ராஜமையர் தாயாரைத் தம் சகோதரியிடம் அனுப்பிவைத்தார். குடும்பத்துச் செய்திகள் ஒன்றுக்குப் பத்தாக ஊரில் பரவுவதை அவர் விரும்பவில்லை.

‘சாவித்திரியின் மனம் ஒரு பெரிய புதிர். அவளுடைய மனத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறதா? கணவனைப் பார்த்து, அவனுடன் சென்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அவள் ஆசைப்படுகிறாளா?’ என்பதை யாராலும் அறிய முடியவில்லை. பெற்ற தாயிடமும், உடன் பிறந்த சகோதரியிடமுமே அவள் மனத்தை ஒளித்தாள் என்றால் வேறு யார் அவளை அறிய முடியும்? அவள் மனம் உற்சாகமில்லாமல் இருந்து வருவதை மட்டும் சீதா கண்டுபிடித்துவிட்டாள். வீட்டை விட்டு வெளியே எங்கும் போவதில்லை. கூடப் படித்த சிநேகிதிகளிடம் அதிகம் பேசுவதில்லை. அவர்களாகத் தேடி வந்தாலும், அவள் முகங்கொடுத்துப் பேசாவிட்டால் தாமாக விலகிச்சென்று விடுவார்கள்.

அன்று பிற்பகல் கூடத்தில் படுத்திருந்த தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். வாஞ்சையுடன் தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, “ஏனம்மா! தீபாவளிக்கு முன்பு உடம்பு தெம்பாகச் சற்று நடமாடிக்கொண்டிருந்தாயே. மறுபடியும் படுத்துவிட்டாயே!” என்று விசாரித்தான்.

மங்களத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது.

“ஆமாம் அப்பா! ‘மாப்பிள்ளை வருவான், சாவித்திரியை அழைத்துப்போவான்’ என்கிற நம்பிக்கையே ‘டானிக்’ மாதிரி உடம்புக்கு வலுவைத் தந்தது. அவன் வரவில்லை என்றதும் மனம் சோர்ந்துவிட்டது. சந்துரு! இந்த நிலையில் நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. எனக்கு ஒருவரைப் பற்றியும் கவலையில்லை. சீதா புத்திசாலி. பிறர் சுபாவம் தெரிந்து பழகிக்கொள்வாள். கண்டிப்பாகப் புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கிவிடுவாள். நல்ல குணமுள்ள பெண்ணாக நீ கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டாயானால் அவள் உன் தகப்பனாரைக் கவனித்துக் கொள்வாள். குடும்பம் செழித்துப் பெருகும்போதே மஞ்சளும், குங்குமமுமாக நான் போகிறதில் எனக்குக் கவலையில்லை. சாவித்திரி வாழாப் பெண்ணாக இருந்து விடுவாளோ என்று என் ஹிருதயம் அலறித் துடிக்கிறது. கணவனிடம் கண்ணை மூடிக்கொண்டு பக்தி செலுத்தும் என் வயிற்றில் இந்தப் பெண் எங்கேயிருந்து வந்து பிறந்தாள் என்று மனம் கிடந்து தவிக்கிறது” என்று நா தழுதழுக்கக் கூறினாள் மங்களம்.

சந்துரு தாயின் கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ”அம்மா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அப்படிச் செய்கிறேன் அம்மா. ரகுபதியை நேரில் போய்ப் பார்த்துப் பேசுகிறேன். அதற்காக அப்பா என்னைக் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ரகுபதியே என்னை மரியாதைக் குறைவாக நடத்தினாலும் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு நன்மை விகாவதற்காக ஆயிரம் பிழைகளைப் பொறுக்கலாம். அம்மா. உன் மனம் குளிர்வதற்காக நான் அவமானம் அடைந்தாலும் பாதக மில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாட்களாகப் பரம சாதுவாகக் குடும்பத்துக்கே உழைத்து, அதில் காணும் நலன்களைக் கண்டு பெருமைப்படும் உனக்காக நான் இந்தச் சிறு காரியத்தைச் செய்யக்கூடாதா என்ன?” என்றான் உணர்ச்சியுடன்.

காலேஜிலிருந்து திரும்பி வந்த சீதா தமையன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டாள். பிறகு அவனைப் பார்த்து.. ” அண்ணா ! அத்திம்பேர் ஊரில் இல்லையாம். அவருடைய கிராமத்தில் இருக்கிறாராம். ஸரஸ்வதி மைசூருக்குப் போய் இருக்கிறாளாம். ஊரிலே ஸ்வர்ணம் மாமி மட்டும் இருப்பதாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னாள்” என்று தெரிவித்தாள்.

மங்களம் ஆவலுடன் சந்துருவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்து. ஸரஸ்வதியின் விலாசம் தெரிந்தாலாவது, நீ அவளுக்காவது ஒரு கடிதம் போடலாம். இந்தக் காலத்தில் இதிலெல்லாம் தவறு ஒன்றுமில்லையே. விலாசமும் தெரிய வில்லையே. என்ன செய்கிறது இப்போது?” என்று கவலையுடன் கேட்டாள்.

“இனிமேல் நேரில் தான் எல்லா விஷயங்களையும் தீர்க்க வேண்டும் அம்மா. ஸரஸ்வதி இதில் தலையிட்டிருந்தால் இந்த விஷயம் இவ்வளவு முற்றி இருக்காது. அவள் விலகிச் சென்றிருப்பதைக் கவனித்தால் இதில் தலையிட அவளுக்கும் விருப்ப மில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், தன் அத்தானின் குடும்பம் ஒழுங்குபடுவதை அவள் விரும்பாமல் இருக்க மாட்டாள். நானே கிராமத்துக்குப் போய் ரகுபதியைப் பார்த்து வருகிறேன்”, என்று கூறினான் சந்துரு.

” அப்படித்தான் செய்! ஒருவேளை நீ கிராமத்திலிருந்து. திரும்புவதற்கு முன்பே மைசூரிலிருந்து ஸரஸ்வதி வந்து விட்டாளானால் அவளையும் இங்கு அழைத்து வா. அந்தப் பெண்ணின் முகம் என் மனசைவிட்டு அகலவே மாட்டேன் என்கிறது. கடந்த ஏழெட்டு மாசங்களாகத்தான் அவளை எனக்குத் தெரியும். ஆனால், அவளை நான் எப்பொழுதோ எங்கோ பார்த்த மாதிரியே இருக்கிறதப்பா!” என்றாள் மங்களம்.

“அதான் சொல்லிவிட்டேனே, உனக்காக நான் ரகுபதியைப் போய்ப் பார்த்துச் சமாதானம் பண்ணுகிறேன் என்று. நாம் எல்லாரும் நினைக்கிற மாதிரி ரகுபதி அவ்வளவு முரடன் இல்லை. எப்படியும் உன் பெண்ணும், மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்து விட்டார்களானால் எனக்கு என்ன அம்மா தருவாய்?”” என்று சிரித்துக் கொண்டே தாயைப் பார்த்துக் கேட்டான் சந்துரு.

” உனக்குத் தருவதற்கு என்னிடம் என்ன அப்பா இருக்கிறது? பெற்று, வளர்த்து, அறிவு புகட்டிப் பெரியவனாக்குவது வரை என் கடமை தீர்ந்துவிட்டதே. இன்னொன்று பாக்கி இருக்கிறது. நல்ல பெண்ணாகக் கலியாணம் செய்து கொண்டு நீ வாழவேண்டும் என்கிற ஆசியைத்தான் நான் தரமுடியும்!” என்று உருக்கமாகக் கூறினாள் மங்களம்.

சந்துரு வெட்கத்தினால் சிறிது நேரம் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அருகில் கேலிச் சிரிப்புடன் நிற்கும் சீதாவைப் பார்த்து. “என்னவோ சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு நிற்கிறாயே சீதா, சொல்லிவிடேன்” என்றான்.

“இந்தப் பகிரங்க ரகசியத்தை நான் தான் சொல்ல வேண்டுமா அம்மா? சாதாரண ஸரஸ்வதியாக அந்த ஸரஸ்வதி இங்கே வருவதை அண்ணா விரும்பவில்லை. உன் நாட்டுப் பெண்ணாகத்தான் வர வேண்டுமாம். இந்த ரகசியத்தைச் சொன்னதற்கு எனக்கு என்ன பரிசு தரப்போகிறாய் அண்ணா?” என்று குறும்புத்தனத்துடன் கேட்டாள் சீதா.

“தெய்வ சங்கல்பம் இருந்தால் நடக்கட்டுமே அப்பா! என்னைப் பொறுத்தவரையில் உன் மகிழ்ச்சி ஒன்றுதான் எனக்கு முக்கியமானது” என்றாள் மங்களம்.

“இது என்னுடைய ஆசை மட்டுந்தான். ஸரஸ்வதியின் மனசைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.”

“ஏதேது அண்ணா. அஸ்திவாரம் பலமாகப் போட்டு விட்டாயே!” என்று சீதா மறுபடியும் சிரித்தாள்.

“அஸ்திவாரம் போட்டுவிட்டால் கட்டிடம் எழும்பின மாதிரியா சீதா? ஸரஸ்வதியின் மனதைப்பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. எவ்வளவு சரளமான சுபாவமுடையவளாக இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவள் மனம் ஆழமானது. மனத்தில் எழும் உணர்ச்சிகளை லேசில் வெளியிடவே மாட்டாள்!”

“உனக்குச் சம்மதமிருந்து. அவளுக்கும் இஷ்டமிருந்தால் நடக்கட்டுமே. இந்தப் புது சம்பந்தத்தால் நம்முடைய பழைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்” என்றாள் மங்களம்.

கொல்லைப் பக்கத்திலிருந்து வேகமாக வந்த சாவித்திரி கடைசியாகத் தாயார் கூறியதைக் கேட்டாள். ‘நம்முடைய குற்றங்கள் மறைந்த மாதிரியும் இருக்கும்’ என்று கூறியது அவள் செவிகளில் மணி ஓசைபோல் கேட்டுக்கொண்டே இருந்தது.

‘நம்முடைய குற்றம்! நம்முடைய குற்றம்!’ என்று அவள் மனம் உருப் போட்டது. ”நம்முடையது’ அல்ல. சாவித்திரியின் குற்றம். என்னுடைய குற்றம்” என்று சொல்லிக் கொண்டாள் சாவித்திரி, தன் மனத்துக்குள்.

அவரவர்களுடைய குற்றத்தை உணர்வதே ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த குணம். அதை உணர்ந்து மனம் வருந்தினாலே போதும். ‘குற்றங்களையெல்லாம் குணமாகக் கொள்ளும் குணக் குன்றாகிய இறைவன்’ நம்மை மன்னித்து நாம் வாழ வழி செய்வான்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *