
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
23. சாலை வழியே
நகரத்திலிருந்து ரகுபதியின் வீட்டிற்கு இரண்டு மைல்களுக்குமேல் இருக்கும். சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஓங்கி உயர்ந்து வளர்ந்த அசோக மரங்கள் கப்பும் கிளைகளுமாகத் தழைத்து நின்றன. பகல் வேளைகளில் சூரியனின் வெப்பம் தெரியாமலும், இரவில் நிலாக் காலங்களில் பசுமையான இலைகளின் மீது நிலவின் கிரணங்கள் தவழ்ந்து விளையாடுவதாலும் அச்சாலை பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கட்டப்பட்டிருக்கும் பங்களாக் களிலிருந்து வீசும் மலர்களின் மணமும் சாலையில் லேசாகப் பரவுவதுண்டு. ஸரஸ்வதியைப் பஸ் ஏற்றிவிட்டுத் தங்கத்துடன் திரும்பிய ரகுபதி சிறிது நேரம் வரையில் ஒன்றுமே பேசவில்லை. வளைந்து செல்லும் அந்த அழகிய சாலையில் அவ்வப்போது ஒன்றிரண்டு கார்களும், வண்டிகளும் போய் வந்து கொண்டிருந்தன.
தங்கம் இதுவரையில் ஓர் ஆடவனுடன் தனித்து இரவு வேளையில் எங்கும் சென்றதில்லை. மனம் பயத்தால் ‘ திக் திக்’ கென்று அடித்துக்கொள்ள, ரகுபதியைவிட்டு விலகி நாலடி முன்னாலேயே அவள் சென்றுகொண்டிருந்தாள். ரகுபதிக்கும், அவன் எதற்காகத் தங்கத்தைத் தனியாக அழைத்து வந்தான் என்பதும் புரியவே இல்லை. ‘ஸரஸ்வதி என்ன நினைக்கிறாளோ? வீட்டில் அலமு அத்தையும், அம்மாவும் என்ன சொல்வார்களோ’ என்றும் பயந்தான். மருட்சியுடன் அடிக்கடி அவனைத் திரும்பிப் பார்த்த தங்கம் ஒருவழியாக, “அத்தான்! உங்களுக்குத் தலைவலி குறைந்திருக்கிறதா? என்னையும் ஸரஸு அக்காவுடனேயே அனுப்பி இருக்கலாமே?” என்று கேட்டாள்.
ரகுபதி ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான். ஒருவிதக் களங்கமும் இல்லாமல் விளங்கும் அந்த அழகிய வதனத்தில் உலாவும் இரண்டு பெரிய கண்களைக் கவனித்தான். வில்லைப்போல் வளைந்து இருக்கும் புருவங்களைக் கவனித்தான். எப்போதும் சிரிப்பதுபோல் இருக்கும் அவள் அழகிய அதரங்களைக் கவனித்தான். கானல் நீர் தொலைவில் பளபளவென்று மான்களுக்குத் தெரிவதில்லையா? நெருப்புப் பறக்கும் கடுங் கோடையில் தெளிந்த நீர்ப் பிரவாகம் பொங்கிப் பெருகுகிறது என்று எண்ணித்தானே மான் கூட்டங்கள் அங்கு விரைகின்றன? சாவித்திரி தன் வாழ்வில் ஏற்படுத்திய பள்ளத்தைத் தங்கத்தால் தங்கத்தின் அன்பினால் – நிரவமுடியும் என்று ரகுபதி ஏமாற்றம் அடைந்திருக்க வேண்டும். தன்னையே விழுங்கிவிடுவதைப்போல் கவனிக்கும் ரகுபதியைத் தங்கம் பார்த்தாள்.
“என்ன அத்தான்! அப்படிப் பார்க்கிறீர்களே? என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்தார்களே புமான்கள்! அவர்கள் யாருங்கூட இப்படிப் பார்க்கவில்லையே என்னை! . முதலில் எங்கள் வீட்டுக் கூரையைப் பார்த்தார்கள். பிறகு கீழே அவர்கள் உட்கார விரித்திருப்பது, பழைய ஜமக்காளமா அல்லது விலையுயர்ந்த ரத்தினக் கம்பளமா என்பதைக் கவனித்தார்கள். அப்புறம், எங்கள் வீட்டு ‘டிபனை’க் கவனித்தார்கள். பிறகு, ‘மணப் பெண் வந்திருக்கிறாள். பாருங்கள் ஸ்வாமி! என்று அவர்கள் கவனத்தை என்பேரில் திருப்புவதற்கு நான் ஏதாவது பாடி ஆகவேண்டும். இதுவரையில் கவனிப்பதற்கு அவகாசம் இல்லாமல் இருந்தவர்களுக்குத் திடீரென்று என் மீது கருணை பிறந்துவிடும். ஒரு அம்மாள் என் அருகில் வந்து பரபர வென்று பின்னலிட்டிருக்கும் என் கூந்தலை அவிழ்த்து மறுபடியும் பின்னுவாள். ‘இதென்ன ஆச்சரியம்?’ என்று நான் அதிசயப் பட்டபோது எனக்கு இருப்பது நிஜமான கூந்தலா அல்லது செயற்கையா என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் இவ்வளவும் என்று தெரிந்தது! இதெல்லாம் ஒன்றுமில்லாமல் இருக்கும் போது நீங்கள் எதற்கு அத்தான் என்னை இப்படிப் பார்க்க வேண்டும்?” – இப்படிக் கூறிவிட்டு தங்கம் ‘கலகல’ வென்று சிரித்தாள்.
ரகுபதியின் முதுகில் யாரோ சாட்டையால் அடிப்பது போல் இருந்தது. தங்கத்தின் சிரிப்பொலியைக் கேட்டு. ‘ஒருவேளை தனக்கு ஏற்பட்டிருந்த பலவீனத்தைத் தங்கம் கண்டுபிடித்து விட்டாளோ?’ என்று நினைத்துப் பயந்து போனான். அவன் மெதுவான குரலில் அவள் அருகில் நெருங்கி, “தங்கம்! நாளைக்கு நீ ஊருக்குப் போகிறாயே. ஏன் இப்பொழுதே போக வேண்டுமா? இன்னும் கொஞ்சநாள் இருந்துவிட்டுப் போயேன்” என்றான்.
தங்கம் கபடமில்லாமல் சிரித்துக்கொண்டே, “எதற்காக அத்தான் என்னை இருக்கச் சொல்லுகிறீர்கள்? நான் இருப்பதால் உங்களுக்குச் சந்தோஷம் ஏற்படுகிறதா? ஒருவேளை சாவித்திரி மதனி ஊரிலிருந்து வருகிறாளா? அவளைப் பார்த்து விட்டுப் போகச் சொல்லுகிறீர்களா என்ன?” என்று கேட்டாள்.
ரகுபதி மறுபடியும் திடுக்கிட்டான். ‘என்ன? இந்தப் பெண்ணுக்கு மனோதத்துவம் தெரிந்திருக்கிறதா? இதுவரையில் இன்று வரையில் – நிஷ்களங்கமாக இருந்த மனத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? ஒருவேளை நாம்தான் தத்துப்பித் தென்று நடந்து கொண்டு விட்டோமோ’ என்று ரகுபதி மனத்தைக் குழப்பிக்கொண்டிருந்த சமயம், தங்கம் அவன் அருகில் நெருங்கி, “சாவித்திரி மதனிக்கும் உங்களுக்கும் ஏதோ மனஸ்தாபமாமே? எங்கள் ஊரில் பேசிக்கொண்டார்கள். உங்களிடம் கோபித்துக்கொண்டுதானே மதனி பிறந்தகம் போயிருக்கிறாள்? அப்படித்தானே அத்தான்? போகிறது. கோபத்தையெல்லாம் மறந்துவிடுங்கள். வரப் போகிற தீபாவளிப் பண்டிகைக்கு வேட்டகம் போய் மதனியை அழைத்து வந்துவிடுங்கள். ஊருக்குத் திரும்பும்போது எங்கள் ஊருக்கு வாருங்கள், அத்தான்” என்று அவனை அன்புடன் அழைத்தாள்.
தங்கம் சாதாரணப் பெண் தான். அறிஞர்கள் கற்றிருக்கும் ஜோதிஷ சாஸ்திரமும், மேதாவிகள் படித்திருக்கும் மனோதத்துவமும் அவளுக்குத் தெரிய நியாயமில்லை. வான வெளியைப்போல் பரிசுத்தமானதும், தெளிந்த நீரைப்போன்ற களங்கமற்ற மனத்தைப் படைத்த தங்கம் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்துப் பெண். பெரிய பெரிய சாஸ்திரங்களையும், படிப்புகளையும் அவள் எப்படிக் கற்றிருக்க முடியும்?
மறுபடியும், அமைதியான சாலை வழியாகத் தங்கமும், ரகுபதியும் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ரகுபதியின் மனம் ஒரேயடியாக இருண்டு கிடந்தது. வான வீதியில் எண்ணற்ற தாரகைகள் பளிச்சிட்டன. வளர்பிறை ஆதலால் மூளிச் சந்திரன் மங்கலாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தான். தங்கம் அவன் அருகிலேயே வந்து கொண்டிருந்தாள். அவள் தலையில் சூட்டி இருந்த முல்லைப் புஷ்பங்களின் மணம் ‘கம்’ மென்று வீசியது. தொலைவில் ஊரின் ஆலய கோபுரம் தெரிந்தது. சோர்ந்த மனத்துடன், ரகுபதி எதுவும் பேசாமல் விரைவாக நடந்தான். வீட்டிலே பெரியவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து தங்கமும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
விரைவில் கோயிலுக்கு முன்பாக இருவரும் வந்துவிட்டார்கள். கோயிலின் வாயிற் கதவு திறந்திருந்தது. மூலஸ்தானத்தில் கோதண்டத்துடன் நிற்கும் ஸ்ரீ ராமபிரானின் உருவம் கம்பீரமாகத் தெரிந்தது. பக்கத்திலே என்றும் எப்பொழுதும் இணை பிரியாமல் வசிக்கும் சீதா தேவியைப் பார்த்தான் ரகுபதி. “ஹே பிரபு! என் மனத்தில் ஏற்பட்டிருக்கும் மாசுமருக்களைத் துடைத்துவிடு. பாபத்தில் ஆழ்ந்துவிடுவேனோ என்னவோ பகவானே!’ என்று உள்ளம் உருக வேண்டிக்கொண்டான் அவன். வீட்டை அடைந்ததும் மனத்தின் பாரம் குறையாமல் போகவே, ரகுபதி தளர்ச்சியுடன் நேராக மாடியில் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்ந்துகொண்டான்.
“உடம்பு சரியில்லையா என்ன, ரகு?”” என்று சுடச்சுட பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ஸ்வர்ணம் மகனின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். சில்லென்று இருக்கும் ஐப்பசி மாத்த்து இரவில் ரகுபதியின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன. பாலைத் தாயின் கையிலிருந்து வாங்கி மேஜைமீது வைத்துவிட்டு, அவள் கரங்களைச் சேர்த்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் ரகுபதி.
“அம்மா! என்னால் நீ ஒருவித சந்தோஷத்தையும் அநுபவிக்கவில்லையே. உன்னைப் பலவிதத்திலும் நான் ஏமாற்றி விட்டேன் அம்மா. என்னை மன்னித்துவிடு” என்றான்.
” அசட்டுப் பிள்ளையாக இருக்கிறாயே ரகு? உன் மனசில் இருப்பது எனக்குத் தெரியாதா? தலை தீபாவளிக்கு ஊருக்குப் போய் வந்தால் எல்லாம் சரியாகிவிடும். பாலைச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு” என்று அன்புடன் கூறிவிட்டு ஸ்வர்ணம் கம்பளிப் போர்வையை உதறி ரகுபதிக்குப் போர்த்திவிட்டாள்.



