இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

17. ‘நினவிருக்கிதா ?’

திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருந்தன. ஆவலுடன் ஒவ்வொரு நாளும் மனைவியின் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் ரகுபதி. கோபத்தைப் பாராட்டாமல் கடிதமும், அழைப்பும் அனுப்பிய பிறகு வராமல் இருக்கமாட்டார்கள் என்றும் நினைத்தான். ஸ்வர்ணம் மட்டும் அடிக்கடி, “அவர்கள் என்ன பண்ணப்போகிறார்களோ? வருகிறதானால் கடிதம் ஏதாவது போட-மாட்டார்களா?” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

நண்பர்கள் எல்லோரும் வருவார்கள். ”எங்கேயடா உன் மனைவி?” என்று துளைப்ப ஆரம்பித்து விடுவார்கள். கல்யாணமாகி வந்த புதுசிலேயே நண்பர்கள் சாவித்திரியைத் தத்தம் வீடுகளுக்கு அழைத்து வரும்படி ரகுபதியைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பேர் ரகுபதியின் வீட்டைத் தேடியே வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். இவர்களுக்குப் பதில் சொல்லுவதற்குப் போதுமென்று ஆகிவிடும்.

தெருவில் வண்டி ஏதாவது போனால் கூட ஸ்வர்ணம் கைக் காரியத்தைப் போட்டுவிட்டு வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் போவாள். ‘வருகிறார்களோ இல்லையோ’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வதில் அவளுக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. ரகுபதியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. சாவித்திரியுடன் முதலில் யார் பேசுவது என்பது புரியாமல் மனத்தைக் குழப்பிக்கொண்டான் அவன். வலுவில் அவன் தான் அவளுடன் பேசவேண்டும் என்பதையும் அவன் நன்குணர்ந்திருந்தான். பிடிவாதக்காரியுடன் வேறென்ன செய்ய முடியும்?

யோசித்தவண்ணம் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி இளமுறுவலுடன், “அத்தானுக்கு என்னவோ பலமான யோசனை!” என்று சொல்லிக்கொண்டே தட்டில் சிற்றுண்டியைக் கொண்டுவந்து வைத்தாள்.

“என்ன யோசனை இருக்கப்போகிறது? எல்லோருக்கும் அழைப்பு அனுப்பியாகி விட்டதா என்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேறொன்றும் இல்லை!” என்று சலிப்புடன் பதிலளித்தான் அவன்.

“போ, அத்தான். உன் மனசில் இருக்கிற ஏக்கந்தான் முகத்திலேயே தெரிகிறதே. நான் என்ன பச்சைக் குழந்தையா?”” என்று அவளும் வருத்தம் தொனிக்கக் கூறினாள்.

‘தான் சந்தோஷப்படும் போது அவள் பார்த்துச் சந்தோஷப்படவும், தான் வருந்தும்போது அவள் வருந்தவும் ஸரஸ்வதிக்கும் தனக்கும் அப்படி என்ன பந்தம் இருக்கிறது?’ என்று ரகுபதி யோசித்தான். ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு, எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்த கூந்தலைப் பின்னிவிடாமல், முதுகில் புரளவிட்டுக் கண்களில் கரைந்து இமைகளில் சற்று அதிகமாகவே வழியும் மையுடன் அவனைப் பார்த்து முறுவலித்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி.

ஆர்வத்துடன் அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்துக் கொண்டே ரகுபதி, “உனக்குத்தான் எப்படியோ பிறத்தியாருடைய மனசில் இருப்பதைக் கண்டு பிடிக்கத் தெரிந்து இருக்கிறதே! என் மனசில் இருப்பதைத் தெரிந்து கொண்டே எதற்கு.
என்னைக் கேட்கிறாய் ஸரஸு?” என்றான்.

ஸரஸ்வதி வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். பிறகு சட்டென்று விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்து. ”உன்னைவிட அத்தைதான் நாட்டுப்பெண் இன்னும் வந்து சேரவில்லையே என்று கவலைப்படுகிறாள். நல்ல வேளை! நான் சமையலறையில் இராமல் இருந்தால் ரவா சொஜ்ஜியில் உப்பை அள்ளிப் போட்டிருப்பாள்! ஆனால் உனக்கு அதுவும் தெரிந்திருக்காது. இது ஏதோ புதுமாதிரி பட்சணம்போல் இருக்கிறது என்று நினைத்துக்கொள்வாய். அத்தான்! அன்றொரு நாள் சாவித்திரி பொரிச்ச கூட்டு என்று சமைத்து வற்றல் குழம்பை உன் இலையில் பரிமாறினாளே; நீயும் அதைப் ‘பேஷ்’ என்று சொல்லி ஆமோதித்துச் சாப்பிட்டாயே; நினைவிருக்கிறதா உனக்கு? ‘புருஷன், மனைவி வியவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும்’ என்று நான், பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு வெளியே போய்விட்டேன்” என்றாள் ஸரஸ்வதி. பொங்கி வரும் சிரிப்பை அடக்க முடியாமல் அவள் ’கலகல’ வென்று சிரித்தபோது அந்தச் சிரிப்பின் ஒலி யாழின் இசை போலும், வேய்ங்குழலின் நாதம் போலும் இருந்தது ரகுபதிக்கு.

”வர வர உனக்கு வாய் அதிகட்கிவிட்டது. நான் இருக்கிற சவரணைக்கு என்னைப் பார்த்துப் பரிகாசம் பண்ணுகிறாயே. சாவித்திரி என்னுடன் இருந்ததே ரொம்பக் காலம்! அதிலும் அவள் எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று என் மனத்தை அறிந்து உபசாரம் செய்தது அதைவிட அதிகம்! சமையலறையி பருந்து அம்மாவோ நீயோ காய்ச்சி வைத்த பாலை எனக்குக் பாலைக் கொண்டு வந்து மேஜைமீது மூடாமல் வைத்துவிட்டுப் போர்வையை இழுத்துப் படுத்துக்கொள்ளத்தான் தெரியும் அவளுக்கு. இன்பமும், ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டிய அறையில் அழுகையின் விம்மலும், ‘படபட’ வென்று பொரிந்து வெடிக்கும் கடுஞ்சொற்களையும்தான் கேட்கலாம். என் படுக்கை அறைச் சுவர்களுக்கு வாய் இருந்தால். நான் ரசித்த காட்சியை அவைகளும் வர்ணிக்குமே, ஸரஸு!” என்ற ரகுபதியின் கண்கள் கலங்கிவிட்டன. ஸரஸ்வதியின் நெஞ்சைப் பிளந்து கொண்டு விம்மலின் ஒலி எழுந்தது.

‘பிறர் துன்பத்தைத் தன்னுடைய தாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ஸரஸ்வதிக்குத் தன் அத்தானின் துன்பத் துக்கு எப்படிப் பரிகாரம் தேடுவது, அதைத் தான் எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பதே புரியவில்லை. சிறிது நேரம் அவள் யோசித்துவிட்டு மெதுவாக, “அத்தான்! நான் ஒன்று சொல்லுகிறேன் கேட்கிறாயா? ஒருவருக்கும் தெரியாமல் நீ போய் சாவித்திரியை அழைத்து வந்துவிடு. அத்தைக்குக்கூடத் தெரிய வேண்டாம். என்ன இருந்தாலும் அவள் அந்த நாளைய மனுஷி. ஏதாவது சொல்லுவாள்” என்றாள்.

ரகுபதியின் கலங்கிய கண்களில் வைராக்கியத்தின் ஒளி வீசியது.

“அழகாகப் பேசுகிறாயே ஸரஸு? தவறு செய்தவன் நானாக இருந்தாலும் அதற்காக அவளிடம் மனம் வருந்தி இங்கிருந்தபோதே அவளைப் போகவேண்டாம் என்று தடுத்துப் பார்த்தேன். ஊருக்குப் போன பிறகு கடிதம் போடும்படி வற்புறுத்திச் சொன்னேன். எனக்கு யார் பேரிலும் வருத்த மில்லை என்று தெரிவிக்க என் மாமனாருக்கு அழைப்பு அனுப்பிக் கடிதமும் போட்டிருக்கிறேன். இனியும் நான் போய் அவளை வேண்ட வேண்டுமென்று விரும்புகிறாயே. மனிதனுக்குச் சுய மரியாதை என்பது இல்லையா?” என்று சற்றுக் கோபத்துடன் கூறினான் ரகுபதி.

அதற்குமேல் ஸரஸ்வதியால் ஒன்றும் பேச முடியவில்லை. ஏதோ ஒருவித ஏக்கம் மனத்தைப் பிடித்து அழுத்த அவள் அங்கிருந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள். கற்றைக் கூந்தல் காற்றில் பறக்க மெதுவாக அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி, பெருமூச்செறிந்தான். அவள் உள்ளே சென்ற பிறகுதான், அவள் திறப்பு விழாவுக்கு என்ன பாடப் போகிறாள் என்று கேட்காமல் போனதற்கு வருந்தினான் ரகுபதி. அவள் எதிரில் தான் உற்சாகம் குறைந்து இருந்தால், அவள் மனமும் வாடிப் போகுமே என்றும் நினைத்தான். வாடிய உள்ளத்திலிருந்து கிளம்பும் பாட்டும் சோகமாகத்தானே இருக்கும்? இப்பொழுதெல்லாம் ஸரஸ்வதி அதிகமாகப் பாடுவதே யில்லை. ஏன் பாடுவதில்லை? ஒருவேளை அவன் வருத்தமாக இருக்கிறான் என்று நினைத்துப் பாடுவதையே விட்டுவிட்டாளோ? சீ… இனிமேல் அவள் எதிரில் ரகுபதி உற்சாகத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். மெதுவாகத் தனக்குள் அவன், ‘குழலோசை கேட்குதம்மா- கோபால கிருஷ்ணன் குழலோசை கேட்குதம்மா-‘ என்று பாடுவதை ஜன்னல் வழியாக அறைக்குள்ளிருந்து இரு கமலநயனங்கள் பார்த்தன.

“நன்றாகப் பாடுகிறாயே அத்தான். உனக்குப் பாட்டைக் கேட்கத்தான் தெரியும் என்று நினைத்திருந்தேன். பாடவும் தெரிந்திருக்கிறதே” என்று ஸரஸ்வதி தன் மகிழ்ச்சியை உள்ளிருந்தே அறிவித்துக்கொண்டாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *