
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
16. சந்துருவும் சாவித்திரியும்
அன்று காலை தபால்காரன் கொண்டுவந்து கொடுத்த “அழைப்பிதழ்’, ராஜமையர் வீட்டில் மேஜை மீது கிடந்தது. கையில் நூலும், ஊசியும் வைத்துக்கொண்டு சீதா சவுக்கம் பின்னிக்கொண்டிருந்தாள்.. நொடிக்கொருதரம் அவள் கண்கள் அழைப்பிதழை நோக்கி மலர்ந்தன. ‘ஸ்ரீமதி சரஸ்வதி வாய்ப் பாட்டும், வீணையும்’ என்று தங்க நிற எழுத்துக்களில் அச்சடித்திருக்கும் வார்த்தைகளைத் திருப்பித் திருப்பிப் படித்தாள் சீதா. சாவித்திரி மட்டும் ஒற்றுமையுடன் அவர்களிடையே இருந்தால் இன்று சீதா அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டுத் துள்ளிக் குதித்திருப்பாள். கட்டாயம் சென்று ஸரஸ்வதியின் இன்னிசையைக் கேட்க வேண்டும் என்று வீட்டில் ஆர்ப்பாட்டம் செய்திருப்பாள். காலையில் கடிதம் வந்ததும் காரியாலயத்துக்குப் போவதற்கு முன்பு ராஜமையர் அதை அலட்சியத்துடன் பார்த்து விட்டு, மேஜைமீது ‘பொத்’ தென்று வீசி எறிந்தார். அவருக்கு மாப்பிள்ளையிடம் ஏற்பட்டிருந்த கோபத்தை ஒருவாறு புரிந்து கொண்டாள் சீதா. அவருக்குப் பிரத்தியேகமாக ரகுபதி எழுதி இருந்த கடிதத்தைப் படித்தபோது அவர் முகம் ‘கடுகடு’ வென்று மாறியது.
“இந்தத் திறப்பு விழாவுக்குத் தாங்கள் வந்திருந்து அவசியம் நடத்திவைக்க வேண்டும். அங்கு எல்லோரும் சௌக்கியம் என்று நம்புகிறேன்.”
சாமர்த்தியமாக எழுதப்பட்ட கடிதம் என்றுதான் அவர் நினைத்தார்: சாவித்திரியைப் பற்றி விசாரித்து ஒன்றும் எழுத வில்லை. அவள் எப்பொழுது வரப்போகிறாள் என்றும் கேட்க வில்லை. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் பெண்ணைப் பெற்றவரிடமே பெண்ணைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பிரஸ்தாபியாமல் அவளுக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணத்தை விளக்காமல்–வருமாறு அழைத்திருப்பான் என்று அவர் உள்ளத்தில் அனல் கனன்றது:
பயந்து கொண்டே மங்களம் கணவனின் அருகில் வந்து என்று விசாரித்தாள்.
”அது என்ன கடிதம்? யார் எழுதி இருக்கிறார்கள்?” என்று விசாரித்தாள்.
“உன் அழகான மாப்பிள்ளை எழுதியிருக்கிறான்! சங்கீத மண்டபம் கட்டித் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறானாம். நான் வந்து அவனுடன் இருந்து நடத்திவைக்க வேண்டுமாம். உடனே ஓட வேண்டியது தான் பாக்கி!” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு காரியாலயத்துக்குப் புறப்பட்டார்.
“சாவித்திரியை அழைத்து வரும்படி எழுதி இருக்கிறதா?”” என்று கவலையுடன் விசாரித்தாள் மங்களம்.
“அட சீ. . . . நீ ஒன்று!” ’சாவித்திரிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்கிற தோரணையில் அல்லவா கடிதம் எழுதி இருக்கிறான் அவன்? இன்னும் கொஞ்ச காலம் போனால் ‘சாவித்திரி யார்?’ என்றே கேட்டு விடுவான் போல் இருக்கிறது! “ஹும்” என்று கூறிவிட்டுச் சற்றுக் கோபம் அடங்கியவராகத் தன் முகவாயைத் தடவிக்கொண்டே யோசித்தார் ராஜமையர்.
“நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். விரோதத்தை வளர்த்துக்கொண்டே போனால் அப்புறம் குழந்தையின் கதி என்ன ஆகிறது? யோசித்துப் பாருங்கள். நாளைக்கே சந்துருவுக்குக் கல்யாணம் ஆகவேண்டும். அப்புறம் சீதா வளர்ந்துவிட்டாள். அவளுக்கும் உடனே கல்யாணம் பண்ணி ஆகவேண்டும். கணவனுடன் வாழ வேண்டிய பெண் பிறந்த வீட்டில் இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்குமா? இந்தச் சந்தர்ப்பத்தையே ஒரு சாக்காக வைத்துக்கொண்டு சாவித்திரியை அழைத்துக்கொண்டு போங்கள். அவர்கள் சரக்கை அவர்களிடம் ஒப்பித்துவிட்டு வந்துவிடுங்கள். அப்புறம் எல்லாம் சரியாகிவிடும்’- மங்களம் இவ்விதம் கூறி விட்டு, ஆவலுடன் கணவன் முகத்தைப் பார்த்தாள்.
“மனைவியை ஏதோ கோபத்தில் அடித்துவிட்டான். நான் கூட உன்னை அடித்திருக்கிறேன் அந்தக் காலத்தில்! இவளும் கோபித்துக்கொண்டு வந்துவிட்டாள். என்னை மதித்து எப்போது வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறானோ, எனக்கு இதைப் பற்றி அவன் ஏதாவது எழுத வேண்டுமோ இல்லையோ? அவ்வளவு கர்வம் பிடித்தவனிடம் என்னைப் போய்ப் பல்லைக் காட்டச் சொல்லுகிறாய். ”உம்மைத்தானே வரச் சொன்னேன்? இவளை ஏன் கூட்டி வந்தீர்?’ என்று கேட்டால் முகத்தை எங்கே திருப்பிக்கொள்கிறதடீ?”
கோபத்தில் இப்படி இரைந்துவிட்டு அவசர அவசரமாக வெளியே போய்விட்டார் ராஜமையர், மங்களம் கண்களில் நீர் தளும்ப பிரமித்துப்போய் நின்றிருந்தாள். வெளியே செல்வதற்காக அங்கு வந்த சந்துரு தாயின் குழப்பமான நிலையை அறிந்து, அவள் அருகில் வந்து நின்று. ” என்னம்மா விஷயம்?” என்று கேட்டான். மேஜைமீது கிடந்த அழைப்பிதழில் கொட்டை எழுத்துக்களில், ‘ஸ்ரீமதி ஸரஸ்வதி-வாய்ப்பாட்டும் வீணையும்’ என்று எழுதி இருந்தது பளிச்சென்று தெரிந்தது.
“அம்மா! ஸரஸ்வதி முதன் முதலாகக் கச்சேரி செய்யப் போகிறாளாமே. நன்றாகப் பாடுவாள் அம்மா” என்றான் சந்துரு சந்தோஷம் தாங்காமல்.
ஸரஸ்வதியின் பெயரைக் கேட்டாலே அகமும் முகமும் மலர்ந்து நிற்கும் சந்துருவின் மனதை ஒருவாறு புரிந்து கொண்டாள் மங்களம். இருந்தாலும் அதை வெளிக்குக் காட்டிக்கொள்ளாமல், “எல்லாம் ரொம்ப விமரிசையாகத்தான் நடக்கும்போல் இருக்கிறது. நாம்தான் ஒன்றுக்கும் கொடுத்து வைக்கவில்லை” என்றாள் மங்களம்.
இதுவரையில் தோட்டத்தில் ஏதோ அலுவலாக இருந்த சாவித்திரி உள்ளே வந்தபோது, தாயாரும், தமையனும், தங்கையும் ஏதோ கூடிப் பேசுவதைக் கவனித்துவிட்டு அருகில் வந்து நின்று, “என்ன அது பிரமாதமான ரகசியம்? கூடிப் பேசுகிறீர்களே?” என்று கேட்டாள்.
சந்துரு அவளுக்குப் பதில் கூறாமல் மேஜைமீது கிடந்த அழைப்பிதழை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
சாவித்திரியின் முகம் க்ஷண காலத்தில் வெளுத்து வாடியது. பிறகு சரேலென்று ‘ஜிவு ஜிவு’ வென்று சிவந்தது. ஆத்திரத்துடன் கடிதத்தை எடுத்துச் சுக்கு நூறாகக் கிழித்துப்போட்டு, “பூ! இவ்வளவுதானா? கச்சேரி செய்ய வேண்டியது ஒன்று தான் பாக்கியாக இருந்தது. அதுவும் ஆரம்பமாகி விட்டதாக்கும்!” என்று அதைத் தூள் தூளாகக் கிழித்து எறிந்தாள் எரிச்சலுடன்.
அழகிய எழுத்துக்களில் ‘ஸ்ரீமதி ஸரஸ்வதி’ என்று எழுதி இருந்த வார்த்தைகள் துண்டு துண்டாகச் சிதறிக் கூடத்தில் இறைந்து கிடப்பதைப் பார்க்க மனம் சகிக்காமல் சந்துரு சாவித்திரியைக் கோபத்துடன் விழித்துப் பார்த்து விட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.



