
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
11. வீணையும் கண்ணீரும்
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை. பூஜை அறையில் வழக்கம் போல் சுடர்விளக்கு ஏற்றிய பிறகு ஸரஸ்வதி வீணை வாசிக்க உட்கார்ந்தாள். இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடாமல் கிடந்த வீணை ‘டிரிங்’ கென்ற நாதத்துடன் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அத்துடன் ஸ்வர்ணம் அன்று காலையில் ஸரஸ்வதியைப் பார்த்து, “அம்மா ஸரஸு! சங்கீதம் என்பது சாமான்ய வித்தையல்ல. தெய்வ கடாக்ஷத்தால் சித்திக்கும் அபூர்வக் கலை அது. அத்தெய்வீகக் கலையை ஒருத்தருக்காக உதாசீனம் செய்வது நல்லதில்லை. நீ வீணையைத் தொட்டு மாதக்கணக்கில் ஆகிறதே. சாயங்காலம் விளக்கேற்றிய பிறகு இரண்டு பாட்டாவது வாசி கேட்கலாம்” என்று கூறினாள்.
‘வாஸ்தவந்தாள்! சாவித்திரிக்குப் பிடிக்காவிட்டால் அவளுக்காக நமக்குத் தெரிந்த கலையை உதாசீனம் செய்வானேன்?’ என்று எண்ணமிட்டாள் ஸரஸ்வதி. ஆகவே, அன்று மாலை தூசுபடிந்து கிடந்த வீணையைத் துடைத்து எடுத்து வைத்துக்கொண்டு ஸ்ருதி சேர்க்க ஆரம்பித்தாள் ஸரஸ்வதி. சாவித்திரியும், ஸ்வர்ணமும் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். படங்களுக்குப் போட்டிருந்த மல்லிகை மாலைகளின் மணமும், ஊதுவர்த்தியின் சுகந்தமும் சேர்ந்து அந்த இடத்தில் ஒரு தெய்வீகக் களையை ஏற்படுத்தின. நீர் ஊற்றுப்போல் கிளம்பும் நாத வெள்ளம் எல்லோரையும் மெய்மறக்கச் செய்தது. காம்போதி ராகத்தை விஸ்தாரமாக ஆலாபனம் செய்து தானம் வாசித்த பிறகு, ‘ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே’ என்கிற கிருதியை ஸரஸ்வதி வீணையில் வாசித்து, மதுரமான குரலில் பாடினாள். இதுவரையில் அவள் பாட்டிலேயே லயித்துப்போய் உட்கார்ந்திருந்த ஸ்வர்ணம், “ஸரஸு! உன் அத்தான் இன்று இந்தப் பாட்டைக் கேட்க இங்கே இல்லையே? நேற்று கூட, ‘ஏனம்மா! ஸரஸ்வதி இப்பொழுதெல்லாம் பாடுகிறதேயில்லை’ என்று என்னிடம் கேட்டான்” என்றாள்.
புன்னகை ததும்பும் முகத்துடன் ஸரஸ்வதி பாட்டை முடித்துவிட்டு வேறு நீர்த்தனம் தன்றை ஆரம்பித்தாள். ஸ்வர்ணம் ஆசையுடன் நாட்டுப்பெண்ணின் பக்கம் திரும்பி, ”சாவித்திரி! உன்னைப் பாடர் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாட்களாக எண்ணம். எல்லோரும் சங்கீதத்தை முறைப்படி கற்காவிட்டாலும், சாதாரணமாக நாலு பாட்டுகள் பாடத் தெரிந்து கொண்டே இருப்பார்கள். எனக்குக்கூடப் பாடத் தெரியும். மார்கழி மாதத்தில் விடியற்காலம் ஸ்நானம் செய்து விட்டு, ‘மாயனை மன்னு வட மதுரை மைந்தனை’ என்று எதையாவது பாடிக்கொண்டே வீட்டு வேலைகள் செய்வேன். புளியையும் உப்பையும் போட்டுச் சமைத்துச் சமைத்து அலுத்துப்போன மனசுக்கு எதையாவது பாடிக்கொண்டே வேலை செய்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறமாதிரி தோன்றும்.
” ஆராரோ ஆரரிரோ” என்று தாலாட்டுப் பாடுகிறோம். ராகமும், தாளமும் தெரிந்துவைத்துக்கொண்டா பாடுகிறோம்?. குழந்தை அந்தப் பாட்டைக் கேட்டுத் தூங்கவில்லையா? ஸரஸு பாடி முடித்ததும் உனக்குத் தெரிந்தது ஏதாவது பாடு பார்க்கலாம். ரகுபதியும் ஒரு சங்கீதப் பைத்தியம்!” என்றாள்.
சாவித்திரியின் முகத்தில் சொல்லொணாத துக்கமும், பொறாமையும் நிரம்பியிருந்தன. சாவித்திரி தன் பிள்ளையின் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஸ்வர்ணம் விரும்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்வர்ணத்துக்குச் சாவித்திரி பதில் எதுவும் கூறாமல் தலையைக் குனிந்து தரையில் விரலால் கீறிக்கொண்டிருந்தாள்.
இதற்குள்ளாக வெளியே சென்றிருந்த ரகுபதி அழகிய வீணையுடன் ஸரஸ்வதி பாடும் இடத்துக்கு வந்து வீணையைப் படத்தருகில் வைத்துவிட்டு ஸரஸ்வதியின் எதிரில் உட்கார்ந்தான், சிறிது நேரம் அங்கு ஒருவரும் பேசவில்லை. பாட்டு முடிந்ததும் ஸ்வர்ணம் ரகுபதியைப் பார்த்து, “ரகு! ஸரஸு ஏன் பாடுகிறதில்லை என்று கேட்டாயே? அவள் பாடும்போது நீ இல்லையே என்று நினைத்துக் கொண்டேன். சமயத்தில் வந்துவிட்டாய்” என்று அன்புடன் கூறினாள்.
ஸரஸ்வதி தன்னுடைய வீணையை உறைக்குள் போட்டு மூடிவிட்டுப் புது வீணையை ஸ்ருதி சேர்ப்பதற்காக அதைக் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனக்கும், அந்த வீட்டில் நடக்கும் விஷயங்களுக்கும். எவ்வித சம்பந்தமும் இல்லை போல் பாவித்திருக்கும் சாவித்திரி, வீணையைப் பார்த்துக் கொண்டிருந்த ஸரஸ்வதியின் பக்கம் திரும்பி அவளை வெட்டுவது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மறுபடியும் நிலத்தில் கோலமிட ஆரம்பித்தாள். யாராவது ஒருவர். ‘இந்த வீணை எதற்கு வாங்கினாய்?” என்று கேட்பார்கள் என்று ரகுபதி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அந்த வீணை எதற்காக, யாருக்காக வாங்கப்பட்டது என்கிறதை அவனாகவே சொல்லித்தான் ஆகவேண்டும் என்கிற நிலைமை ஏற்பட்டவுடன் ரகுபதி தன் தாயைப் பார்த்து, ” அம்மா! இன்று நல்ல நாளாக இருப்பதால் டவுனுக்குப்போய் இந்த வீணையை வாங்கி வந்தேன், சாவித்திரிக்கு இருக்கட்டு மென்று. வெள்ளிக்-கிழமையாகவும் இருக்கிறது. இன்றே பாடமும் ஆரம்பிக்கலாம். என்ன ஸரஸு?” என்று ஸரஸ்வதியைப் பார்த்துக் கேட்டுவிட்டுத் தன் மனைவியை நோக்கிப் புன்னகை புரிந்தான்.
சாவித்திரி கோபம் பொங்கும் முகத்துடன் கணவனைத் ’துரு துரு’ வென்று விழித்துப் பார்த்துவிட்டு அசட்டையுடன் முகத்தைத் திருப்பிக்கொண்டு பதில் எதுவும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். கையில் வைத்திருந்த வீணையைக் கீழே வைத்து விட்டு ஸரஸ்வதி நிதானமாக, “இன்றைக்கே என்ன அவசரம் அத்தான்? ஆகட்டுமே; இன்னொரு நாள் ஆரம்பித்தால் போகிறது” என்றாள்.
“அவசரம் ஒன்றுமில்லை. நாள் நன்றாக அமைந்திருக்கிறது. நான் கேட்பதற்கு முன்பே கடைக்காரர்களும், ‘புதுசாக வீணை தஞ்சாவூரிலிருந்து வந்திருக்கிறது, ஸார்; வேண்டுமானால் எடுத்துப் போங்கள்’ என்று கையில் கொடுத்தார்கள்” என்று கூறிவிட்டுத் தன் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் முகத்தை மறுபடியும் பார்த்தான் ரகுபதி.
ஏதோ அலுவலாகச் சற்றுமுன் சமையலறைக்குச் சென்று காய்ச்சிய பாலை இறைவனுக்குப் படைப்பதற்காக எடுத்து வந்த ஸ்வர்ணம், மகன் கூறுவதைக் கேட்டுவிட்டு, “அவன் இஷ்டப்படி தான் இன்றைக்குப் பாட்டு ஆரம்பியேன். இதற்குப்போய் இவ்வளவு தர்க்கம் வேண்டியதில்லையே! யாராவது ஒருத்தர் தாழ்ந்து போய்விட்டால் ஆயிற்று” என்று கூறிவிட்டுப் பாலைக் கீழே வைத்துவிட்டு உட்கார்ந்தாள்.
இதுவரையில் பேசாமல் ஏதோ முழுகிவிட்டது போல் உட்கார்ந்திருந்த சாவித்திரி சரேலென்று எழுந்து, “எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு பிடித்தமில்லை என்று முன்னாடியே சொல்லி இருக்கிறேனே. வெறுமனே இதென்ன வீண் தொந்தரவு?” என்று கூறி அறையைவிட்டுப் போக எத்தனித் தா…..
ஸ்வர்ணத்துக்கும் கோபம் வந்தது. நாட்டுப்பெண்ணைப் பார்த்து அதட்டும் குரலில், “நீ செய்கிறதும், பேசுகிறதும் நன்றாகவே இல்லை, சாவித்திரி. அவன் இஷ்டப்படி தான் கேட்டு வையேன், இதிலே என்ன குறைந்துவிடப்போகிறாய்? அவன் கிழக்கே பார்க்கச் சொன்னால் நீ மேற்கே பார்த்துக் கொண்டு நிற்கிறாயே, சுத்தமாக நன்றாக இல்லையே நீ செய்கிறது!” என்றாள் ஸ்வர்ணம்.
“ஆமாம்… . நன்றாகத்தான் இல்லை. அதுவும் என்னுடைய இஷ்டம்” என்று வெடுக்கென்று கூறிவிட்டு ‘திடுதிடு’ வென்று படுத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள் சாவித்திரி.



