இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

30. சாவித்திரியின் உள்ளம்

தீபாவளி பட்சணத்திற்காக மாவு அரைப்பதற்குத் தகர டப்பாக்களில் சாமான்களை நிரப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் மங்களம். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வரும் வீட்டில் நிலவ வேண்டிய உற்சாகம் அங்கே காணோம். தீபாவளி அழைப்பு அனுப்பியதைப்பற்றிச் சந்துருவும், சீதாவும், மங்களமும் மட்டும் அறிந்திருந்தனர். முன் ஜாக்கிரதையாக விருந்துக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வைத்துவிட்டாள் மங்களம்.

“வருஷா வருஷம் வருகிற பண்டிகைதானே? மாப்பிள்ளை வந்து சவரணையாகத் தலை தீபாவளி கொண்டாடுகிறது பாழாகத் தான் போகிறது! எதற்கு இப்படி ஒரேயடியாகச் சாமான்களை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறாயாம்?” என்று பாட்டி மங்களத்தைக் கேட்டாள். பாட்டியின் வார்த்தைகள் மங்களத்துக்குச் சுரீரென்று தைத்தன. “எதையாவது அச்சான்யமாகச் சொல்லிக்கொண்டு இருப்பதுதான் இந்தக் கிழத்துக்கு வேலை. வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து. ‘அது எதற்கு; இது என்ன?’ என்று ஓயாமல் கேட்டுத்தான் என்ன பலனை அடையப் போகிறாளோ?” என்று மனத்துக்குள் மாமியாரை வெறுத்துக் கொண்டாள்.

தீபாவளி நெருங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாக அவ்வப்போது வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. புடைவைக் கடைகளில் கூட்டம் நெரிந்தது. அசல் நெய்யுடன் மட்ட நெய்யைக் கலந்து புத்துருக்கு நெய் என்று வியாபாரிகள் பீற்றிக் கொண்டனர். பட்டாசுக் கடைகளில் சிறுவர் சிறுமியரின் கூட்டம். குடும்பத் தலைவருக்கு ஒரே தலைவலி, எப்படி ‘ பட்ஜெட்’டைச் சமாளிக்கப் போகிறோம் என்று.

குதூகலம் நிரம்பியிருக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துச் சாவித்திரி பெருமூச்செறிந்தாள். ‘சௌம்யமான மனத்தைப் படைத்தவர், ஸ்ரீராமர். குற்றமுள்ளவரிடத்தும் நன்மையைச் செய்கிறவர். நன்றியுள்ளவர். சத்தியம் தவறாதவர்’ என்றெல்லாம் வால்மீகி ராமாயணத்தில் வரும் வர்ணனையைச் சீதா உரக்கப் படித்துக் கொண்டிருப்பதைச் சாவித்திரி கேட்டாள். கவியின் அமர சிருஷ்டியாகிய ஸ்ரீ ராமசந்திரனின் கல்யாண குணங்களைக் கேட்டவுடன் சாவித்திரியின் உள்ளம் பாகாய் உருகியது. சிறு விஷயத்துக்காக ஏற்பட்ட இவ்வளவு மனஸ்தாபத்தையும், அதைத் தீர்ப்பதற்குத் தெரியாமல் தான் படும் அவஸ்தையையும் நினைத்து அவள் மனம் வருந்தியது. ரகுபதி உயர்ந்த குணங்களைப் படைத்தவன், ஏதோ சில விஷயங்களில் தவிர, பிறர் மனத்தை நோக வைக்கும் குணம் அவனிடமில்லை. தான் செய்த குற்றத்தை உணர்ந்து அவளிடம் நேராகத் தைரியமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அசட்டுக் கௌரவம் என்பது அவனிடம் லவலேசமும் இல்லை. இத்தகைய குணவானைக் கணவனாக அடைந்தும் அவனிடம் ஒத்து வாழ முடியாமல் போனது எதனால் என்று சாவித்திரி சாவதானமாக இப்பொழுதுதான் ஆராய ஆரம்பித்திருந்தாள். தீபாவளிக்குக் கணவன் வரவேண்டும். பரம சாதுவாகிய தன் மாமியார். பிள்ளையை அனுப்பி வைப்பார் என்றும் நினைத்துக் கொண்டாள், சாவித்திரி.

முற்றத்தில் காகம் உட்கார்ந்து கத்தும் போதெல்லாம், ‘ ஹோ! அவர் வருகிறார் போல் இருக்கிறது!’ என்று நினைத்து உவகை எய்துவாள்.

அன்று ராஜமையர் காரியாலயத்திலிருந்து திரும்பி வரும் போது கையில் பெரிய துணி மூட்டையுடன் வந்து சேர்ந்தார். காப்பி அருந்தி சற்று இளைப்பாறிய பின்பு மூட்டையைப் பிரித்து, “இது சாவித்திரிக்கு. இது சீதாவுக்கு, இது சந்துருவுக்கு. இது உனக்கு” என்று துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து மேஜை மீது வைத்தார்.

எலோருக்கும் போக ஒரு ஜதை சரிகை வேஷ்டி மிகுந் திருந்தது. சீதா குறும்புத்தனமாக அதைப் பார்த்துக் கொண்டே, * அப்பா! மாப்பிள்ளையை மறக்கவில்லை போல் இருக்கிறதே! ஜம்மென்று சரிகை – போட்டுப் பிரமாதமாக வாங்கியிருக்கிறீர்களே!” என்று கூறிச் சிரித்தாள். மாப்பிள்ளை வருவான் என்று ராஜமையரும் எதிர்பார்த்துத் தான் ஜவுளி எடுத்திருந்தார்.

“அடியே! இரண்டு பவுனில் கைக் கடியாரத்துக்குச் சங்கிலி பண்ணச் சொல்லி இருக்கிறேன். கையோடு இருக்கட்டுமே ஒன்று” என மங்களத்தைப் பார்த்துக் கூறினார் அவர்.

“அழைக்காத விட்டுக்குச் சம்பந்தியாக வரமாட்டானோ, உங்கள் மாப்பிள்ளை! ரொம்பத் தெரிந்தவர், நீங்கள்! உங்கள் தலை தீபாவளிக்கு என் அப்பா எப்படி-யெல்லாம் உபசாரம் பண்ணி இருந்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். ஒரு மாசத்துக்கு முன்பே கடிதங்களில் உங்களை வரச்சொல்லி எழுதி இருந்தாரே” என்று சமயத்தை விடாமல் மங்களம் இடித்துக் காட்டினாள்.

”ரகுபதியோடு ஸரஸ்வதியும் வருவாள் அம்மா. அவளுக்கு நாம் ஏதாவது தீபாவளிப் பரிசு கொடுக்க வேண்டாமா?” என்று சந்துரு கேட்டான்.

“ஒரு நிமிஷங்கூட ஸரஸ்வதியை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறதே! உன் வியாச புஸ்தகம் பூராவும் ஸரஸ்வதி நாம ஸ்மரணையாக இருக்கிறதே! இந்த ஸ்துதியைக் கேட்டு சாக்ஷாத் ஸ்ரீ ஸரஸ்வதியே பிரசன்னமாகி விடுவாள்; இல்லையா அண்ணா?” என்று சீதா தமையனைச் சமயம் பார்த்துத் தாக்கினாள்.

வெட்கத்தால் பதில் ஒன்றும் கூறாமல் சந்துரு மென்று விழுங்கினான். அந்த வீட்டில் ஒவ்வொருவரும் ரகுபதி வர வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். சந்துரு யாருக்கும் தெரியாமல் நடராஜரின் சித்திரம் ஒன்றை வாங்கி வைத்திருந்தான். சாதாரணப் புடைவையும், ரவிக்கையும் உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமான ஸரஸ்வதிக்கு அளிப்பதற்குத் தகுதி உள்ளவைகளாக இல்லை. ஸரஸ்வதியைத் தீபாவளியின் போது சந்தித்தால் இந்தக் கலைப் பரிசை அவளுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தூய காதல் ஈடேற தில்லையம்பலத்து இறைவன் அருள் புரிவான் என்றும் நம்பினான்..

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *