
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
21. குமுறும் ஹிருதயம்
தபால் இலாகாவினருக்குச் சிரமம் வைக்காமல் செய்திகள் மின்னல் வேகத்தில் சாவித்திரியின் ஊருக்கு எட்டின. சாவித்திரிக்குப் பழைய சலுகைகள் அவ்வளவாக இப்பொழுது பிறந்த வீட்டில் இல்லை. கல்யாணத்துக்கு முன்பு தன்னோடு ஒட்டிக் கொண்டு, தான் கோபம் அடைந்தாலும் பாராட்டாத சீதா இப்பொழுது வேற்று மனுஷியாகக் காட்சி அளித்தாள். அவளுக்கு மட்டற்ற வேலைகள் கிடந்தன. ஹிந்தி வகுப்புக்குப் போக வேண்டும். பிறகு சங்கீதம் பயிலவேண்டும்; கலாசாலைக்குப் போக வேண்டும்; வீட்டில் அம்மாவுக்கு உதவியாக ஏதாவது செய்து முடித்தாக வேண்டும். சகோதரியிடம் மனம்விட்டுப் பேச என்ன இருக்கிறது? சாவித்திரியைவிட நான்கைந்து வயது சிறியவளான சீதா ஏன் அப்படி ஒதுங்கிச் செல்கிறாள்? சந்துரு, சாவித்திரியுடன் அதிகம் பேசுவதேயில்லை. ஆதியிலிருந்தே இருவருக்கும் ஒத்துக்கொள்கிறதில்லை. இருவரும் எதையாவது குறித்துத் தர்க்கம் செய்ய ஆரம்பித்தார்களானால் மணிக்கணக்கில் ஓயமாட்டார்கள்.
இதனிடையில் பாட்டி, தினம் தினம் ஏதாவது ஒரு புதுச் செய்தியைக் கொணர்ந்து தெரிவிப்பாள்.
“ஏண்டி! என்னவோ விழா நடத்தினானாமே உன் ஆம்படையான்? அமர்க்களப் பட்டதாம். அவள் இருக்கிறாளே ஒருத்தி, ஸரஸ்வதியோ, லக்ஷ்மியோ? பாட்டுக் கச்சேரி செய்தாளாம்! திறந்த வாய் மூடாமல் உன் கணவன் அவள் எதிரில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்தானாம். போதாக்குறைக்கு ஊரிலே யிருந்து ஒரு பெண் வந்திருந்ததாம். நேற்று அங்கிருந்து வந்த கோபு வீட்டு ராமு என்னிடம் சொன்னான். உன் அம்மா காதில் விழுந்தால் சண்டைக்கு வருவாள். என்னாலேயே நீ கெட்டுப் போய் விட்டாயாம். அவள் தான் அதை வாய்க்கு வாய் சொல்லுகிறாளே” என்று பாட்டி யாரும் அருகில் இராத சமயம் பார்த்துச் சாவித்திரியிடம் தெரிவித்தாள்.
அன்று காலைப் பத்திரிகையில் வெளியாகி இருந்த செய்தியும் அதுவேதான். விழாவில் ஸரஸ்வதி கச்சேரி செய்யும் புகைப் படம், பிரமாதமாக வெளியாகி இருந்தது. ஒலிபெருக்கியின் முன்பு புதுப் பெண் ஒருத்தி நின்று தன் பவளவாய் திறந்து பாடிக்கொண்டிருந்தாள். ரகுபதி தலைவரைக் கைகூப்பி வணங்கி அழைத்துவரும் காட்சி மற்றொரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. சாவித்திரி, படங்களையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோது தான் பாட்டி வந்து மேற்கூறிய விதம் தெரிவித்தாள். பத்திரிகையில், நடந்தது நடந்தபடி வெளியாகி இருந்தது. அத்துடன் கூட்டியோ குறைத்தோ செய்திகளை வெளியிடும் சாமர்த்தியம் அதைக் கவனித்த நிருபருக்கு இல்லை! ஆனால், பாட்டிக்கு அந்தச் சாமர்த்தியம் அபாரமாக அமைந்திருந்தது. திறந்த வாய் மூடாமல் பாட்டை ரகுபதி ரஸித்தான் என்று கூறினாள். மனம் சரியில்லாமல் ரகுபதி விழா மண்டபத்துக்குள்ளே பெரும்பாலும் நிற்கவில்லை. இடையிடையே ஸரஸ்வதி அபூர்வ சங்கதிகளைப் பாடும் போதோ, ஆலாபனம் செய்யும்போதோதான் அவன் சற்று நின்று அவைகளை ரஸித்தான். பாதிக் கச்சேரியில், மனக் கோளாறினால் ஏற்பட்ட அயர்வைத் தாங்காமல் காரியதரிசி யிடம் பொறுப்பை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான். ஒன்றுக்குப் பத்தாகப் பேசுவது சிலருடைய இயல்பு. கண்ணால் கண்டதை வெளியிடவே சிலர் தயங்குவார்கள்.
பொங்கிவரும் அழுகையைச் சமாளிக்க முடியாமல் சிறிது நேரம் திகைத்துப்போய்க் கண்களில் பெருகும் நீருடன் உட்கார்ந்திருந்தாள் சாவித்திரி. ஒரு க்ஷணம் அவளுக்கு கணவனிடம் கோபித்துக்கொண்டு வந்ததே தவறோ என்று கூடத் தோன்றியது. ‘தவறு என்ன? நான் அங்கே இருக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்?’ என்று சற்று உரக்க வாய்விட்டுப் பேசிக்கொண்டாள்.
“என்ன சொல்லிக் கொள்கிறாயடி அம்மா?” என்று கேட்டுக் கொண்டே பேத்தியின் அருகில் வந்து நின்று அவள் முகத்தை உற்றுக் கவனித்தாள் பாட்டி. பிறகு, “நன்றாக இருக்கிறதே நீ இப்படி மாலை மாலையாகக் கண்ணீர் வடிக்கிறது? இப்படி அழுதால் உடம்புக்கு ஆகுமாடி சாவித்திரி? அசடுதான் போ” என்று கூறினாள்.
இவர்கள் இருவரின் பேச்சையும் சற்றுத் தொலைவில் மேஜை அருகில் உட்கார்ந்து காலேஜ் பாடங்களை எழுதிக்கொண்டிருந்த சீதா கவனித்தாள். பாட்டியின் அநுதாபத்தைக் கண்டதும் அவளுக்குக் கோபம் பற்றி எரிந்தது. ’இல்லாததையும், பொல்லாததையும் வந்து சொல்லிவிட்டு இப்பொழுது என்ன இழையல் வேண்டி யிருக்கிறது’ என்றுதான் சீதா கோபம் அடைந்தாள். ஆகவே, அவள் சாவித்திரியைச் சிரிக்க வைப்பதற்காகப் பாட்டியைப் பார்த்து. “ஏன் பாட்டி! பாட்டைக் காதால்தான் கேட்பார்கள். அத்திம்பேர் திறந்த வாய் மூடாமல் எப்படிப் பாட்டைக் கேட்க முடியும்?” என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டாள்.
“அடி அம்மா! நீ இங்கே இருக்கிறதை நான் பார்க்கவே இல்லையே. ஒன்றும் பாதியுமாகப் போய் உன் அம்மாவிடமும், அண்ணாவிடமும் கலகம் பண்ணி வைக்காதே. நான்பாட்டுக்கு எங்கேயோ விழுந்து கிடக்கிறேன். நீ சண்டையைக் கிளப்பி விடாதேடி அம்மா. உனக்குப் புண்யம் உண்டு!” என்று பாட்டி சீதாவைப் பார்த்து.
“ஆமாம். . . . . . ஆமாம். . . . . .பாட்டி, இதையெல்லலாம் நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள்! அதான் இவ்வளவு வக்கணையாகச் சொல்கிறாள். அதைக் கேட்டுவிட்டு நீயும் அழுகிறாய்!” என்று சாவித்திரியைக் கேலியாகப் பார்த்துக் கொண்டு கூறினாள் சீதா.
“ஆமாமடி பாட்டி ரெயிலேறிப்போய் இதெல்லாம் பார்த்துவிட்டு வருகிறாள்! வேறு வேலையே இல்லை பார் அவளுக்கு? உன் அத்திம்பேர் விஷயந்தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே…”
சீதாவுக்கு அங்கே பேசிக் கொண்டு நிற்கப் பொழுதில்லை. காலேஜுக்கு நேரமாகி விட்டதால் அவள் புறப்பட்டுவிட்டாள்.
சீதா காலேஜுக்குப் போன பிறகு, ஊர் வம்புகளை ஒப்பிக்கும் வழக்கமான வேலையைப் பாட்டி நிர்ப்பயமாக நடத்தினாள். அவள், சாவித்திரியின் அருகில் வந்து, நேற்று கோவிலுக்குப் போயிருந்தேன். ராமுவைப் பார்த்தேன். அவன் உன்னைப் பற்றி விசாரித்தான். ”ஆமாண்டா அப்பா! சாவித்திரி இங்கே தான் இருக்கிறாள். அவளைக் கொண்டுவந்து விடும்படி சம்பந்தி வீட்டார் ஒரு வரிகூட எழுதவில்லையே. நீ அந்தப் பக்கம் போயிருந்தாயோ?” என்று கேட்டேன். ‘போயிருந்தேன் பாட்டி! அவர்கள் வீட்டிற்குப் போக வேண்டும் என்று நான் கிளம்பவில்லை. தற்செயலாக வழியிலேயே மாப்பிள்ளைப் பையனைச் சந்தித்தேன். ‘ஏண்டா அப்பா! நீ செய்கிறது நன்றாக இருக்கிறதா?’ என்று கேட்போம் என்று பார்த்தால் அங்கே ஏகப்பட்ட அமர்க்களம். அவன் தான் திறந்த வாய் மூடாமல் பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கிறானே. அவனை என்னத்தைக் கேட்கிறது?’ என்று ராமு சொன்னான். அவன் பொய்யா சொல்லப் போகிறான்?”
“சரி, சரி, போதும். இனிமேல் நீ யாரிடமும் எதையும் விசாரிக்க வேண்டாம். நடக்கிறபடி நடக்கட்டும் போ” என்று அலுப்புடன் கூறிவிட்டுச் சாவித்திரி அங்கிருந்து எழுந்து விட்டாள். எழுந்தவள் நேராகத் தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு காகிதத்தையும், பேனாவையும் எடுத்தாள். மளமளவென்று கணவனுக்குக் கடிதம் எழுத ஆரம்பித்தாள். கோபத்தாலும், ஆங்காரத்தாலும் அவள் கைகள் நடுங்கின. பேனாவிலிருந்து அங்கங்கே இரண்டு சொட்டுகள் மசியும் காகிதத்தில் விழுந்தன. கடிதம் எழுதி முடித்ததும் அதை வாசிக்க ஆரம்பித்தாள்.
அன்புள்ள கணவருக்கு என்றோ, ஆருயிர்க் காதலருக்கு என்றோ கடிதம் ஆரம்பிக்கப் படவில்லை.
“நமஸ்காரம். பத்திரிகைகளில் வெளியாகி இருந்த புகைப் பட்டங்கள் மிகவும் அபாரம்! கட்டிய மனைவி ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்துவிட்டு உங்களுடைய கலை வேஷம் நன்றாக இருக்கிறது! அந்த இன்னொரு பெண் யார் என்பதை எனக்குத் தெரிவிப்பீர்களா?”
கடிதம் பைத்தியக்காரத்தனமாக எழுதப்பட்டது. ஆத்திரத்தில், அவசரத்தில் என்ன எழுதுகிறோம் என்பதைக் கவனியாமல் எழுதப்பட்டது. சாவித்திரிக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. ‘நாம் ஏன் அவருக்குக் கடிதம் எழுதவேண்டும்? கடிதம் எழுதி அவர் சொந்த விஷயங்களில் தலையிட நமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இருவரையும் பலமாகப் பிணைக்கும் கணவன்-மனைவி என்கிற பந்தத்தைத் தவிர வேறு என்ன உரிமையுடன் அவரைக் கேட்க முடியும்?’ என்று ஒன்றும் புரியாமல் கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்துக் கீழே போட்டாள் சாவித்திரி. குமுறும் ஹிருதயத்தைக் கையில் அழுத்தியவாறு தேம்பித் தேம்பி அழுதாள் அவள். இந்த நிலையில் பிரமை பிடித்தது போல் அவள் வெகுநேரம் உட்கார்ந்து இருந்திருக்க வேண்டும்.
அறைக் கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள். சாவித்திரி எழுந்து கதவைத் திறந்ததும் மங்களம் வாயிற்படியில் நின்றிருந்தாள். “சாப்பிடாமல் மணி பன்னிரண்டு அடிக்கப் போகிறதே!” என்று அன்புடன் அவளை அழைத்தாள் மங்களம். அழுது ரத்த மெனச் சிவந்திருக்கும் மகளின் கண்களைப் பார்த்ததும் அந்தத் தாயுள்ளம் பாகாய்க் கரைந்தது. கையைப்பற்றி ஆசையுடன் அழைத்துப்போய் சமையலறையில் உட்கார்த்தி அன்புடன் உணவைப் பரிமாறினாள் மங்களம்.



