
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
32. நீச மனோபாவம்
கங்கா ஸ்நானம் செய்துவிட்டுப் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தாள், தங்கம். மத்தாப்பின் சிவப்பு ஒளி அவள் சிவந்த கன்னங்களை மேலும் சிவப்பாகக் காட்டியது: மாங்காய்க்கரை போட்டு ரோஜா வர்ணத்தில் சாதாரண நூல் புடைவையை உடுத்தியிருந்தாள் அவள். ரகுபதிக்கு அப்பொழுது இருந்த தாராளத்தில், சாவித்திரிக்காக அவன் வாங்கி வந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடைலையைக்கூடத் தங்கத்திடம் எடுத்துக்கொடுத்து விட்டிருப்பான். ஊரிலே அம்மாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகட்டான சேலையைப் பார்த்தாலே தங்கம் பயந்து போவாள்! ஒரு தடவை அதைப் பெட்டியிலிருந்து அவன் வெளியே எடுத்துக் காண்பித்தபோதே தங்கம், “அப்பா!” என்று கண்களைப் பொத்திக் கொண்டாள். ”அப்படியே கண்ணைப் பறிக்கிறதே, இது!” என்று வேறு சொன்னாள். எல்லோர் வீட்டிலும் கங்கா ஸ்நானம் நடக்கிறது என்பதற்கு அடையாளமாக, கிணற்றிலிருந்து ஜலம் இழுக்கும் போது ராட்டினங்கள் ‘நொய், நொய்’ என்று சத்தமிட்டன. ஒவ்வொருவர் வீட்டுப் புறக்கடையிலிருந்தும் வெந்நீர் அடுப்புப் புகை சுருள் சுருளாக எழுந்தது. குதித்துக் கொம்மாளம் போட்டுக்கொண்டு குழந்தைகள் பட்டாசு சுட்டனர். தலை தீபாவளி நடக்கும் வீடுகளிலெல்லாம் நாதஸ்வரத்தின் இன்னொலி பரவி இருந்தது. ரகுபதி தெருவிலே நின்று கொண்டு இந்தக் காட்சிகளைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான்.
அவன் அருகில் நின்றிருந்த தங்கம் மத்தாப்பு கொளுத்துவதைத் திடீரென்று நிதுத்திவிட்டுத் எதிர் வீட்டுக்கு ஓடினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் கையில் செவேல் என்று காணும் ஆரத்தி நீரைக் கொண்டுவந்து தெருக்கோலத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் உள்ளே போனாள். மறுபடியும் வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் வெளியே வந்தாள். ரகுபதி சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்த்தான். பிறகு, “என்ன? காலையில் வரும்படி பிரமாதமாக இருக்கிறது?” என்று கேட்டான்.
தங்கம் கைகளை விரித்துக் காண்பித்தாள். வெற்றிலைப் பாக்கின் நடுவில் வெள்ளி அரை ரூபாய் ’பளபள’வென்று மின்னி யது. புன்சிரிப்புடன், “அவர்கள் வீட்டில் தலை தீபாவளி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஆரத்தி எடுப்பதற்கு அங்கே யாரும் இல்லை. என்னைக் கூப்பிட்டார்கள். போயிருந்தேன். வரும்படி வந்தது. நீங்கள் தான் தீபாவளிக்கு ஊருக்குப் போகாமலும், என்னையும் அழைத்துப் போகாமலும் ஏமாற்றிவிட்டீர்களே! போங்கள் அத்தான்! சாவித்திரி மன்னி உங்களை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள்?” என்று கேட்டாள் தங்கம்.
ரகுபதி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அசட்டுப் பிசட்டென்று தீபாவளிக்கு வேட்டகம் போகாமல் கிராமத்தில் வந்து உட்கார்ந்திருப்பது ரகுபதிக்கே ஆச்சரியமாகவும், பயமாகவும் இருந்தது. ஊரிலே அம்மாவுக்குத் தெரிந்தால் அவனை லேசில் விடமாட்டாள். ஸரஸ்வதியைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் தங்கத்தை வர்ணித்து ஸரஸ்வதிக்குக் கடிதம் போட்டுவிட்டான்? அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் ஏற்படும்.
”ஸரஸ்வதிக்கு என்ன வேலை? எல்லோரும் பார்த்துச் செய்த கல்யாணந்தான் இவ்வளவு அழகாக இருக்கிறதே, அவள் ஓயாமல் தர்மத்தைப்பற்றியும், நியாயத்தைப்பற்றியுந்தான் பேசுவாள். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டமாதிரிதான்! ‘சர்க்கரை’ என்று சீட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்குமா, அல்லது சர்க்கரையை அள்ளித் தின்றால் அதன் சுவை தெரியுமா? ’சாவித்திரி, சாவித்திரி’ என்று ஜபித்துக் கொண்டிருந்தால் என் வாழ்க்கை இனித்தமாதிரி தான்” என்று ரகுபதி அலுத்துக்கொண்டான்.
பொழுது நன்றாக விடிந்துவிட்டது. எதிர் வீட்டுக் காமரா அறையில் ஓர் அழகிய காட்சியைக் கண்டான் ரகுபதி. இளம் பெண் ஒருத்தி தட்டில் பலகாரங்களும், காப்பியும் வைத்து எடுத்து வருகிறாள். லேசாகத் திறந்திருந்த கதவை அழுத்தி மூடிவிட்டு, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி மேஜைமீது வைத்து விடுகிறான் கணவன், தட்டிலே நாவில் ஜலம் ஊறச் செய்யும் பலகாரங்கள் இருக்கின்றன. ஆவி பறக்கும் காப்பி ’கமகம’ வென்று மணக்கிறது. அவைகளிலெல்லாம் கணவனுக்கு ஒரு விசேஷமும் தென்படவில்லை. பசி ஏப்பக்காரன் முன்பு அல்லவா அவைகளை வைக்கவேண்டும்? பலகாரங்களுக்காகவும், ’ஸ்ட்ராங்’ காப்பிக்காகவும் காதங்கடந்து அவன் வந்திருக்க வேண்டியதில்லை. மனைவியின் மெல்லிய கரங்களைப் பற்றித் தன் கைகளுக்குள் சேர்த்துக்கொள்கிறான்.
ரகுபதிக்கு மேலும் தான் அங்கே நிற்பது அசம்பாவிதம் என்று தோன்றியது. அறைக்குள் சென்று உட்கார்ந்து விட்டான். லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து கொண்டு தங்கம் பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள். தட்டைத் தானாகவே மேஜை மீது வைத்தாள். பிறகு, ‘காப்பி கொண்டு வருகிறேன்’ என்று வெளியே புறப்பட்டாள். ரகுபதி எழுந்தான். இரண்டடி முன்னே சென்றான். தங்கத்தின் புடைவை மேலாப்பு காற்றில் பின்புறம் பறந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுவிட்டான். ஆனால், எங்கிருந்தோ ஒரு குரல் கண்டிப்பாக அவனை எச்சரித்தது! மெல்லிய காற்றில் காலையில் ஏரிக்கரையிலிருந்து வந்த குரல் அது.
‘லோக நாயகனாகிய ஸ்ரீராமன், ஏகபத்தினி விரதத்தை அனுஷ்டிப்பவன்; சதா சீதையை நினைத்து அவளிடம் மனத்தைச் செலுத்துபவன்; சொன்ன சொல்லைக் கடவா தவன் சத்தியசந்தன்.’ இப்படிப்பட்ட ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்’ என்று பொருள் செறிந்த கவிதை ஒன்றைப் பாடிக்கொண்டே வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் வீதி வழியே வந்து கொண்டிருந்தார்.
தங்கம் காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவில்லை. பாடிக்கொண்டு செல்லும் அந்தணருக்குப் பிக்ஷை அளித்து விட்டுக் கீழே விழுந்து அவர் பாதங்களில் நமஸ்கரித்தாள்.
ரகுபதி இடியால் தாக்குண்டவன் போல் அயர்ந்து போய், கவிதையை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டான்; அவன் செய்கை அவனுக்கே வெறுப்பை அளித்தது. ‘சீ, சீ! என்ன நீச மனோபாவம்? மனிதன் வாழ்க்கையில் ஏமாற்றமடைந்து விட்டால் தான் என்ன? இப்படியா என் புத்தி பேதலிக்க வேண்டும்?’ என்று வருந்தினான் அவன்.
அத்தை அலமு காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தாள். “ஏண்டா அப்பா! தீபாவளிக்குப் போகாமல் இங்கேயே தங்கிவிட்டாயே. உன் அம்மாவுக்குத் தெரிந்தால் வீண் மனஸ்தாபம் ஏற்படுமே. ஸரஸ்வதி என்னை வெறுமனே விட மாட்டாளே, அப்பா!” என்றாள் அவள்.
ரகுபதி அவளுக்கு மறுமொழி கூறாமல் காப்பியை அருந்தி விட்டு வெளியே போய் விட்டான்.



