
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
38. ‘இன்னும் கோபமா?’
அழகே உருவமாக இருந்த சாவித்திரி சில மாதங்களில் எப்படித்தான் மாறி விட்டாள்? கண்களைச் சுற்றிக் கருமை படர்ந்திருந்தது. ‘கொழு கொழு’வென்று இருந்த கன்னங்கள் ஓட்டி உலர்ந்து போயிருந்தன. அவளுடைய சிவப்புக்கூட மாறி விட்டதாக வீட்டில் எல்லோரும் சொல்லிக்கொண்டார்கள். மகளைப் பார்த்துப் பார்த்து மங்களம் தனிமையில் கலங்கினாள். ஒவ்வொரு தினம் இரவில் சாப்பிடாமலேயே போய்ப் படுத்து விடுவாள் சாவித்திரி. நொடிக்கு ஒருதரம் ஆழ்ந்த பெருமூச்சு விடுவாள். மனக் கஷ்டத்தை யாரிடமாவது கொட்டி அழுது விடலாம் என்றால் அநுதாபத்துடன் யார் கேட்கப் போகிறார்கள்? சீதா இன்னும் விளையாட்டுப் பெண்ணாகவே இருக்கிறாள். ஒரு நொடியில் விஷயத்தைச் சொல்லித் தம்பட்டம் அடித்து விடுவாள். அப்பாவிடம் போய் ‘என்னை உங்கள் மாப்பிள்ளையிடம் அனுப்பி விடுங்கள்’ என்று எப்படிச் சொல்வது? சந்துருவின் எதிரில் நிற்கவே அவளுக்குப் பயமாகவும், வெட்கமாகவும் இருந்தது. தப்பித் தவறி ஏதாவது சொல்லிவிட்டால், ‘உன்னை யார் போகவேண்டாம் என்கிறார்கள்? புறப்படு போகலாம்’ என்று மூட்டை கட்ட ஆரம்பித்துவிடுவான்.
சந்துரு ஊருக்குப் புறப்பட்டுப் போன பிறகு சாவித்திரி காரணமில்லாமல் மகிழ்ச்சி யடைந்தாள். ஒரு சமயம் கலங்கினாள். ‘அவர் வந்துவிடுவார்’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். ‘வராமல் இருந்துவிட்டால் நானே போய்விடுகிறேன். பிறந்த வீட்டில் எல்லோராலும் உதாசீனம் செய்யப்படுவதை விட.. அவர் கால்களில் விழுகிறேன்’ என்று வைராக்கியத்துக்கு மனசைத் தயார் செய்தாள்.
மங்களம், வெந்நீர் அடுப்பு ‘பூ’ என்று ஊதினால் கூட, மாப்பிள்ளை வந்துவிடுவான் என்று நம்பி மகிழ்ந்தாள். ‘அடுப்பு ஊதுகிறது. உன் அகமுடையான் வந்து விடுவான் – சாவித்திரி’ என்று பெண்ணைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொன்னாள். பெற்ற மனம் பித்துக் கொண்டது என்பதற்கு அவள் ஓர் உதாரணம்.
“காக்கை கத்துகிறது. அத்திம்பேர் வரப்போகிறார்” என்று சொல்லி ஆனந்தப்பட்டாள் சீதா. அந்த வார்த்தைகளை மறுபடியும் அவள் சொல்லிக் கேட்கவேண்டும் போல் சாவித் திரிக்குத் தோன்றியது.
“ஏண்டி சாவித்திரி! அத்திம்பேர் வரும் போது நீ எந்தப் புடைவையைக் கட்டிக் கொள்ளப் போகிறாயடி? கல்யாணத்துக்கு முன்பு உடுத்திக்கொண்டாயே முதன் முதல் கனகாம்பர வண்ணப் புடைவை, அதைத்தானே?” என்று அக்காவைக் கேட்டாள் சீதா.
” போடி! அது ஒன்றும் வேண்டாம். அதைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை. உனக்கு அதைக் கொடுத்துவிடுகிறேனடி அம்மா” என்றாள் சாவித்திரி மகிழ்ச்சி பொங்கும் குரலில்.
“ஏனோடி அம்மா! ரொம்ப ‘ ஆகி’வந்த புடைவையோ இல்லையோ? அவசியம் எனக்கு வேண்டியதுதான். அதைக் கட்டிக்கொண்டு என் சுயம்வரத்துக்கு நான் நிற்க வேண்டியதுதான் பாக்கி!” என்றாள் சீதா.
சகோதரிகள் இருவரும் ‘கலகல’ வென்று சிரித்தார்கள்; சாவித்திரி இப்படிச் சிரித்து எத்தனை மாதங்கள் ஆயின? காகம் கத்தியது வீண்போகவில்லை. மனித உணர்ச்சிகளை அறியாத அடுப்பு ஊதியதும் பொய்க்கவில்லை. சந்துருவும், ரகுபதியும் வந்து சேர்ந்தார்கள். சாவித்திரி காமரா அறையிலிருந்து திருட்டுத்தனமாகக் கணவனைப் பார்த்தாள். துடிக்கும் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். ‘வந்துவிட்டாரே’ என்று மெல்ல வாய்க்குள் சொல்லிக்கொண்டாள். நிலைக் கண்ணாடி முன்பு நின்று விரலின் நுனியைமைச் சிமிழில் தோய்த்துக் கண்களுக்கு மை தீட்டிக்கொண்டாள். வாசனை வீசும் கதம்பத்தைத் தலையில் வைத்துக்கொண்டாள். புருவத்தின் இடையில் திலக மிட்டுக்கொண்டு, கோணல் சிரிப்புடன் கண்ணாடியில் தன் அழகைக் கவனித்தாள் சாவித்திரி. ‘கட்டாயம் என் கருவிழிகளைக் கண்டு அவர் மயங்கவேண்டும். சிரிக்கும் உதடுகளைக் கண்டு பரவசமடைய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் என் அன்பினால் அவரை வெல்லவேண்டும்; அடிமைப்படுத்த வேண்டும். அது ஒன்றுதான் சிறந்த வழி!’ என்று உவகை எய்திய சாவித்திரி ஆசை தீரக் கணவனை ஜன்னல் வழியாகவே பார்த்துக் களித்தாள்.
அன்று, வழக்கமாகக் கூடத்தில் காணப்படும் மங்களத்தின் படுக்கையைக்கூடக் காணோம். மறுபடியும் மாப்பிள்ளை வந்து ‘டானிக்’ கொடுத்து அவளைப் பிழைக்க வைத்துவிட்டான்!
தினசரி படிப்பதில் முனைந்திருந்த ராஜமையர் தம் மூக்குக் கண்ணாடியை நிதானமாகக் கழற்றி வைத்தார். பிறகு நிமிர்ந்து பார்த்து. “வா அப்பா ரகுபதி. அம்மா வரவில்லையா? ஸரஸ்வதி எங்கே?” என்று அழைத்தார். மாப்பிள்ளை மீது அவருக்கு ஏற்பட்டிருந்த கோபம் ஒரு நொடியில் மறைந்து போனது ஆச்சரியந்தான். வயதிலும், அனுபவத்திலும் பெரியவராகிய அவர் மாறியது ஒன்றும் வியப்பில்லை. யர் மாழு விட்டால் மங்களம் அவரை லேசில் விடமாட்டாள்.
“அத்திம்பேரே! நிஜமாகவே வந்து விட்டீர்களே! தீபாவளிக்கு வந்திருந்தால் ஒற்றை வரும்படி. அப்படி வராமற் போனதற்கு இப்பொழுது இரட்டிப்பாக வரும்படி தரப்போகிறீர்கள். தீபாவளிச் சீருடன், கார்த்திகைச் சீரும் சேர்ந்து கிடைக்கப் போகிறது” என்று கேலியாகச் சீதா கூறிச் சிரித்தாள்.
இவர்கள் பேச்செல்லாம் மங்களத்துக்கு ரசிக்கவில்லை. “ஒருவரை-ஒருவர் பிரிந்து மாதக் கணக்கில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவோ பேசவேண்டி இருக்கும். ‘தொண தொண’ வென்று இவர்களுக்கு என்ன வேலை’ என்று நினைத்தாள் அவள்.
ரகுபதி எழுந்து சற்று வெளியே போனபோது. “இந்தாருங்கள்! எல்லாச் சமாசாரங்களையும் ஆற அமரக் கேட்டுக் கொள்ளலாம்; ஒன்றும் கொள்ளை போய்விடாது. அவன் பெண்டாட்டியோடு அவனைப் பேசவிடுங்கள்” என்று கூறிவிட்டு விருந்து தயாரிப்பதற்குச் சமையலறைக்கு விரைந்தாள்.
கூடத்துக்கு வேலையாக வந்த சீதா குறும்புத்தனமாகச் சிரித்து, ”அத்திம்பேரே! அதோ உங்கள் சிறை இருக்கிறது. காவல்காரியும் அங்கேதான் இருக்கிறாள்!” என்று கூறிவிட்டுப் போய்விட்டாள்.
தனியாக விடப்பட்ட ரகுபதி, சீதா காட்டிய அறையைப் பார்த்தான். பிறகு துணிவுடன் எழுந்து அறைக்குள் சென்றான். சாவித்திரிக்கு ஒரு கணம் தன் கால்களின் கீழ் இருக்கும் பூமி நடுங்குவதுபோல் இருந்தது. கட்டிலைக் கையால் பிடித்துக் கொண்டாள். அவனை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினாள். ரகுபதியின் மனம் அன்பு நிறைந்தது அல்லவா? “சாவித்திரி! இன்னும் என் மேல் உனக்குக் கோபமா?” என்று கேட்டு அவள் கரங்களைப் பற்றித் தன் கைகளுடன் சேர்த்துக்கொண்டான்.
உதடுகள் துடிக்க அவள், ‘இல்லை’ என்னும் பாவனயாகத் தலை அசைத்தாள். அவன் கரங்களைப் பற்றித் தன் முகத்தை மறைத்துக்கொண்டாள்.
”எல்லாவற்றையும் மறந்து விடுவோம் சாவித்திரி! புதிய வாழ்க்கை தொடங்குவோம்!” என்று ஆர்வத்துடன் அவள் முகத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான் ரகுபதி.
கண்கள் கலந்து உறவாடின. காதலர்களைத் தனியாக விட்டுவிடுவோம்.



