
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
18. ‘அந்தப் பெண் யார்?’
திறப்பு விழாவுக்கு இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பு ரகுபதியின் அத்தை அலமேலு ‘திடு திப்’ பென்று கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தாள். ஒற்றை மாட்டு வண்டியில் மூட்டை முடிச்சுகள் -கிதம் அவள் வந்து இறங்கியதுமே ஸரஸ்வதிக்கு ’அலமு அத்தை வெறுமனே வரவில்லை; வெறும்வாயை மெல்லுகிறவளுக்கு ஒரு பிடி அவல் கிடைத்த சமாசாரமாக வம்பை அளக்க வந்திருக்கிறாள்’ என்பது புரிந்துவிட்டது. “அத்தை! அத்தை ! உன் நாத்தனார் வந்திருக்கிறாரே. இனிமேல் நீ இதுவரையில் ஒருத்திக்கும் பயப்படாமல் இருந்த மாதிரி இருக்க முடியாது! வீட்டு விஷயங்களை மூடி மூடி ரகசியமாகவும் வைத்துக்கொள்ள முடியாது. அலமு அத்தை இருப்பது கிராமமாக இருந்தாலும் ’ஆல் இந்தியா ரேடியோ’வுக்குச் செய்திகள் எட்டுவதற்கு முன்பே அவளுக்கு எட்டிவிடும் தெரியுமா?” என்று பின் கட்டுக்கு விரைந்து விஷயத்தை அறிவித்தாள் ஸ்ரஸ்வதி. ஸ்வர்ணம் ஸரஸ்வதியின் கன்னத்தில் லேசாகத் தட்டி, “அடி பெண்ணே ! இன்னும் நீ குழந்தையா என்ன? வாயைத் திறக்காமல் தான் கொஞ்சம் இரேன். வாயும் கையும் ‘பர பர’ வென்று ஏன் தான் இப்படி இருக்கிறாயோ?” என்று கடிந்து கொண்டே நாத்தனாரை வரவேற்கக் கூடத்துக்கு வந்தாள்.
வண்டியிலிருந்து இறங்கிய நாலைந்து தகர டப்பாக்கள், புடைவையில் கட்டப்பட்ட மூட்டை ஒன்று, – சிறிய பிரம்புப் பெட்டி இவைகள் புடைசூழ அலமு காலை நீட்டிக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்து சாவித்திரியும் – ரகுபதியும் கல்யாணத்தின் போட்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நடையில் கதவுக்கு அருகில் சற்று ஒதுங்கி பயத்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை அதுவரையில் யாரும் கவனிக்கவில்லை. அலமு அத்தை வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமேதான் ஸரஸ்வதி பின்கட்டுக்கு விஷயத்தை அறிவிக்க ஓடிவிட்டாளே? தயக்கத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்து ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும், “உள்ளே வாயேன் அம்மா” என்று அழைத்தார்கள். அவர்கள் அழைத்ததைக் கேட்டவுடன் அலமு முகத்தைத் திருப்பி நடைப்பக்கம் பார்த்துவிட்டு, “இதென்னடி இது அதிசயம்? உள்ளே வாயேன் தங்கம். கல்யாணப் பெண் மாதிரி ஒளிந்து கொண்டு நிற்கிறாயே!” என்று அதட்டலுடன் அவளைக் கூப்பிட்டாள். பதினாறு பதினேழு வயது மதிக்கக்கூடிய அந்தப் பெண் பயந்து கொண்டே உள்ளே வந்து அத்தை அலமுவின் பக்கம் உட்கார்ந்து கொண் டாள். அலமு அத்தை சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்து கண்களை ஒரு சுழற்றுச் சுழற்றி ரகுபதியின் மனைவி எங்கே இருக்கிறாள் என்று அறிவதற்காகக் கூடத்தை ஒரு கோடியிலிருந்து மறு கோடிவரைக்கும் ஆராய்ந்தாள். சாவித்திரி புக்ககத்தில் கோபப்பட்டுக்கொண்டு பிறந்தகம் சென்றிருக்கிறாள் என்பதும் அவளுக்கு அரைகுறையாக எட்டியிருந்தது.
“உன் நாட்டுப்பெண்ணை எங்கே காணோம்?” என்று கேட்டுக்கொண்டே மூட்டை முடிச்சுகளைப் பிரித்து எடுக்க ஆரம்பித்தாள்.
“பிறந்தகத்துக்குப் போயிருக்கிறாள். எழுந்திருங்களேன்.. ஸ்நானம் செய்து சாப்பிடலாம்” என்று ஸ்வர்ணம் பேச்சை மாற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். ஸரஸ்வதியைத் தனியாகப் பார்த்து, “ஏண்டி அம்மா! நான் என்ன செய்வேன்? இந்தமாதிரி திடும் என்று வீட்டுச் சமாசாரங்களைத் துப்புத்துலக்க வந்துவிட்டாளே?”என்று கவலையுடன் கேட்டாள்.
“எல்லாம் தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறாள் அத்தை. அந்தப் பெண் யாரென்பது உனக்குத் தெரியுமா? பரம சாதுவாக இருக்கும்போல் இருக்கிறதே!” என்று விசாரித்தாள் ஸரஸ்வதி.
“யரோ என்னவோ? அலமுவுக்கு உறவினர் ஆயிரம் பேர்கள் இருப்பார்கள்! எல்லோரையும் உறவு கொண்டாடுவது அவள் வழக்கம். இன்றைக்கு ஒருத்தர் நல்லவராக இருப்பார்கள். நாளைக்கே அவர்களைக் கண்டால் அலமுவுக்குப் பிடிக்காது. அது ஒருமாதிரி சுபாவம்” என்றாள் ஸ்வர்ணம்.
இதற்குள் ஊரிலிருந்து வந்தவர்கள் சாப்பாட்டை முடித்து விட்டு வெளியே வந்தார்கள். சாயம்போன பழைய சீட்டிப் புடைவையையும், பல இடங்களில் தைக்கப்பட்ட ரவிக்கையையும் தங்கம் உடுத்துயிருந்தாலும், பருவத்துக்கு ஏற்ற பூரிப்பு அவள் உடம்பில் பளிச்சிட்டது. பல வாசனைத் தைலங்களாலும், ‘ஷாம்பூ’ க்களாலும் அடைய முடியாத அடர்ந்த கூந்தலை அந்தப் பெண் பெற்றிருந்தாள். புளித்த பழைய அமுதும், ஓரொரு சமயங்களில் கேழ்வரகுக் கூழுமாகச் சாப்பிட்டதே அவள் கன்னங்களுக்குக் காஷ்மீரத்து ஆப்பிள் பழத்தின் நிறத்தை அளித்திருந்தன. சலியாத உழைப்பும், பரிசுத்தமான உள்ளமும் அவள் பெற்றிருந்ததால் கபடமற்ற முகலாவண்யத்தையும், வனப்பு மிகுந்த உடலமைப்பையும் பெற்றிருந்தாள்.
ஸரஸ்வதி அழகு தான். மேட்டூர் அணையில் தேக்கி சிறிது சிறிதாக வெளியே வரும் காவிரியின் கம்பீரமும் அழகும் ஸரஸ்வதியிடம் நிறைந்திருந்தன. ‘தலைக்காட்’டில் உற்பத்தியாகிப் பிரவாகத்துடன் பொங்கிப் பூரித்துவரும் காவிரியைத் தங்கத்தின் அழகோடு ஒப்பிடலாம். காட்டு ரோஜாவிலிருந்து வீசும் ஒருவித நெடியைத் தங்கத்தின் அழகில் உணரமுடியும். பன்னீர் ரோஜாவின் இனிமையான சுகந்தத்தை ஸரஸ்வதியின்
அடக்கமான அழகு காட்டிக்கொண்டிருந்தது.
வைத்த விழி வாங்காமல் கதவைப் பிடித்துக்கொண்டு தன்னையே உற்று நோக்கும் ஸரஸ்வதியைத் தங்கம் பார்த்து விட்டு, பயத்தோடும், லஜ்ஜைரோடும் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
“எதற்காக இந்தப் பெண் இப்படி என்னைப் பார்த்துப் பயப்படுகிறாள் அத்தை?” என்று ஸரஸ்வதி கேட்டுவிட்டு, “தங்கம்! இங்கே வந்து உட்கார் அம்மா. நாங்களும் உனக்குத் தெரிந்தவர்கள்தாம். பயப்படாமல் இப்படி வா” என்று அன்புடன் அழைத்தாள். அதற்குள் அலமு அத்தை ஸரஸ்வதி யைப் பார்த்து. “பயப்படவும் இல்லை, ஒன்றுமில்லை. நீ பெரிய பாடகி. கச்சேரியெல்லாம் பண்ணப்போகிறாயாம். உன்னைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள். அழைத்துவந்தேன். கொஞ்சம் பழகிவிட்டால் ‘லொட லொட’ வென்று பேச ஆரம்பித்து விடுவாளே” என்றாள்.
‘ஓஹோ! நான் கச்சேரி செய்யப்போவதைத் தெரிந்து கொண்டுதான் அலமு அத்தை வந்திருக்கிறாளோ!” என்று ஸரஸ்வதி மனத்துக்குள் வியந்து கொண்டே, ”அப்படியா?” என்று தன் மகிழ்ச்சியை அறிவித்துக்கொண்டாள்,
தங்கமும், ஸரஸ்வதியும் சில மணி நேரங்களில் மனம் விட்டுப் பழகிவிட்டார்கள். ‘அக்கா, அக்கா’ என்று அருமையாகத் தன்னைக் கூப்பிடும் அந்தப் பெண்ணிடம் ஸரஸ்வதிக்கு ஏதோ ஒருவிதப் பாசம் விழுந்துவிட்டது. வெளியே சென்றிருந்து திரும்பிய ரகுபதிக்கு முதலில் தன் அத்தையைப் பார்த்ததும் தூக்கி வாரிப்போட்டது.
“ஏண்டா இப்படி இளைத்துவிட்டாய் ரகு?” என்று உள்ளூற ஆதங்கத்துடன் தான் செய்து வந்த பொரிவிளாங்காய் உருண்டையையும், முறுக்கையும் தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு விசாரித்தாள் அலமு. வீட்டில் உருக்கிய நெய்யில் செய்த முறுக்கை ரசித்தபடியே ரகுபதி ஸரஸ்வதியுடன் உட்கார்ந்து பூத்தொடுக்கும் பெண்ணையும் கவனித்தான். சற்று முன் பழைய சீட்டிப் புடைவையைக் கட்டிக்கொண்டிருந்த தங்கம், இப்பொழுது அழகிய பூப்போட்ட வாயல் புடைவையை உடுத்திருந்தாள். “சீ. சீ, இது ஒன்றும் நன்றாக இல்லை. இந்தா, இதை உடுத்திக்கொள்” என்று ஆசையுடன் ஸரஸ்வதி கொடுத்த மருதாணிச் சிவப்பு வாயல் தங்கத்தின் தங்க நிற மேனிக்கு மிகவும் அழகாக இருந்தது.
‘சரசர’ வென்று விரல்கள் மல்லிகையைத் தொடுப்பதில் முனைந்திருந்தன. சில நிமிஷங்களுக்குள் மல்லிகைச் சரம் தொடுத்துவிட்டாள். அதை அழகிய மாலையாக வளைத்துக் கட்டிவிட்டு அவள் நிமிர்ந்தபோது கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து தன்னையே கவனிக்கும் ரகுபதியின் கண்களைத் தங்கம் சந்தித்தாள்.
“ஸரஸ்வதியின் பாட்டைக் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினாள். அவள் யாரென்று தெரிகிறதாடா உனக்கு? மறந்து போயிருப்பாய் நீ” என்று அலமு ஆரம்பித்து, “என் கல்யாணத்தின் போது உனக்கு ஆறு வயசு இருக்கும். நம் கிராமத்துக்கு வந்திருந்தாயேடா. தொட்டிலில் கிடந்த தங்கத்தைப் பார்த்து விட்டு, இந்தப் பாப்பா அழகாக இருக்கிறது அத்தை. அப்பா! எவ்வளவு பெரிய கண்கள் அத்தை. இந்தப் பாப்பாவை நான் எடுத்துக்கொண்டு போகிறேன் விளையாட” என்றெல்லாம் சொல்லுவாயே. தங்கத்தின் அப்பா- அதுதான் என் மைத்துனன்கூட வேடிக்கையாக, ”டேய் பயலே! உனக்கே அவளைக் கொடுக்கிறேண்டா” என்று சொல்லுவான். நீதான் புது சம்பந்தமாக எங்கேயோ போய்க் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாய். ஸரஸ்வதியைவிட்டு நீ வேறு இடத்தில் பெண் தேடியதே எங்களுக்கு ஆச்சரியந்தான்!” என்று கூறி முடித்தாள்:
‘கள்ளமற்ற பிள்ளைப் பருவத்தில் நான் சந்தித்த பெண்களை எல்லாம் மறந்துவிட்டு, சாவித்திரியை ஏன் மணந்துகொண்டேன்? ஏன்….?’ என்று மெதுவாகத் தன் மனத்தையே கேட்டுக்கொண்டான் ரகுபதி.



