
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
39. கிருகப் பிரவேசம்
மறுபடியும் ஸ்வர்ணம் தன் நாட்டுப் பெண்ணை வரவேற்க. ஆடி ஓடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அடுத்த நாள் கார்த்திகைப் பண்டிகை. சமையலறை-யிலிருந்து ’படபட’ வென்று நெல் பொரியும் சத்தம் கேட்டுக்கொண்டே யிருந்தது. பாகீரதி அம்மாமிதான் மறுபடியும் ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்ய வந்திருந்தாள். காலம் மாறிப்போய்விடும். குழந்தைகள் பெரியவர்களாகிறார்கள். வாலிப வயதுடையவர்கள் நடுத்தர வயதை அடைகிறார்கள். பிறகு கிழத்தன்மையை அடைகிறார்கள். மனிதர்கள் உருவத்தில் மாறுதல் ஏற்படலாம். குணத்திலே மாறுதல் அடையக்கூடாது. நேற்றுவரை சகஜமாகப் பழகியவர்களிடம் இன்று ‘நீ யார்? உன்னால் எனக்கு என்ன ஆகவேண்டும்?’ என்கிற தோரணையில் பழகக்கூடாது. பாகீரதி அம்மாமி என்றும், எப்பொழுதும் ஒரே சுபாவத்தையுடையவள். ரகுபதி மனைவியை அழைத்து வருகிறான் என்று கேள்விப்பட்ட வுடனேயே ஸ்வர்ணத்திடம் வந்தாள். ‘பண்டிகைக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்’ என்று கூறினாள். இவள் சாதாரணமாகத்தான் படித்திருக்கிறாள். கோர்வையாக நாலு வார்த்தைதள் கூடப் பேசத் தெரியாது. படித்த பெண்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களே; சற்றுமுன் பார்த்தவர்களை மறந்துபோய் விடுகிறார்கள்! நாமாகப் பேச முயன்றாலும் தங்களுக்கு அவசர ஜோலி இருப்பதாக ஓடிப்போய்விடுவார்கள். இது ஒரு அசட்டு நாகரிகம்!
வெல்லப் பாகின் வாசனை ‘கம்’ மென்று வீசிக்கொண்டிருந்தது. வேலைக்காரப் பெண் நெற்பதரையும், பொரியையும் பிரித்து எடுத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். முறத்தி லிருந்த பொரியைப் பாத்திரத்தில் கொட்டிவிட்டு ஸ்வர்ணத்தைப் பார்த்து அவள். “ஏனம்மா! சின்ன அம்மா வந்தால் திருப்பிக் கோவிச்சுகினு பிறந்த வூட்டுக்குப் போயிடுமா என்ன?” என்று கேட்டாள்.
“யார் பேரிலே அவள் கோபித்துக்கொள்ளப் போகிறாள்? நானும், ஸரஸ்வதியுந்தான் வெளியூருக்குப் போகப்போகிறோமே. கோபமோ, – சமாதானமோ இதில் தலையிட இங்கே யாரும் இருக்கப்போவதில்லை” என்றாள் ஸ்வர்ணம்.
“இந்த வீட்டுக்கு உன் சின்ன அம்மா தான் எஜமானி. இத்தனை வருஷ காலம் அதன் எஜமானியாக இருந்தது போதும். அத்தையம்மாவின் இடுப்புச் சாவி இடம் மாறப் போகிறது. வீட்டைச் சின்ன அம்மா பாத்துக்குவாங்க” என்றாள் ஸரஸ்வதி.
“பாத்துக்குவாங்க! அவ்வளவு இருந்தா இவங்களைப் பிடிக்க முடியாதம்மா. வாய்க்கு ருசியா புருசனுக்குச் சமைத்துப் போடத் தெரியாட்டியும் இதிலே ஒண்ணும் குறைச்சல் இல்லை போங்க!”
ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் ஊருக்குப் போகப் போகிறார்கள் என்பதை நினைத்து வேலைக்காரப் பெண் கண் கலங்கினாள். புது எஜமானி எப்படி இருப்பாளோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.
கார்த்திகைச் சீருடன் சாவித்திரியும், ரகுபதியும், சந்துருவும், மங்களமும் வந்து சேர்ந்தார்கள். ஸரஸ்வதி முன்னைப் போல் ஆரத்தியுடன் ஓடிச் சாவித்திரியை வரவேற்கவில்லை! மனத்தில் தாக்கிய காயம் ஆழமாகப் போய்விட்டது. அதன் வலியை எவ்வளவு தான் அவள் மறக்க முயன்றாலும் அது வலித்துக்கொண்டேதான் இருந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிளவுக்கே தான் காரணமானவள் என்று நினைத்து ஸரஸ்வதி ஒதுங்கிவிட்டாள். அவளுடன் வந்திருந்த தங்கம் சிரித்த முகத்துடன் ஆரத்தியைக் கொண்டுவந்தாள்.
“ஏதோ, கிழக்குப் பக்கமாக நில்லுங்கள்” என்றாள். “கௌரீ கல்யாணமே வைபோகமே” என்று பாடினாள். எல்லோரும் சிரித்தார்கள். எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ, மனத்தில் திருப்தியான இன்ப அலைமோத இந்தப் ‘புனர் கிருகப் பிரவேசம்’ நடைபெற்றது.
அன்பு கனிந்த பார்வையுடன் ஸரஸ்வதியைத் தேடிய மங்களம் அவளுடன், பேசச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண் டாள். “ஸரஸ்வதி! எங்கள் ஊருக்கு வரக்கூடாதென்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாயா? தீபாவளிக்கு வருவாய் என்று நினைத்திருந்தேன். உன் அத்தானுடன் வருவாய் என்று நினைத்து ஏமாந்தேன். இப்பொழுது நானாகவே உன்னைப் பார்ப்பதற் கென்று வந்துவிட்டேன். ஏனம்மா வரவில்லை?” என்று விசாரித்தாள்.
“வராமல் என்ன மாமி? எனக்கு எல்லோரும் ஒன்றுதான். தாயன்புக்காக ஏங்கியவள் நான். உடன் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையே என்று பார்க்கும் பெண்களை எல்லாம் என் சகோதரிகளாகவே நினைக்கிறேன். கணவன் – மனைவிக்குள் ஆயிரம் இருந்தாலும், சாவித்திரி என்னை அழைத்திருக்க வேண்டாமா? அவளுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?-“
ஸரஸ்வதி கண்ணீர் விட்டு அழுது யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. கஷ்டத்திலேயே வளர்ந்து, தாயை இழந்து அவதிப்பட்டவள் அவள். பிறருடைய துன்பங்களை உணர்ந்தவள். அவள் மனம் புண்ணாகித்தான் அழுதிருக்க வேண்டும்.
சந்துருவின் மனம் வாடிப்போய்விட்டது. ரகுபதி முகம் சோர, வேறுபக்கம் திரும்பிக் கொண்டு விட்டான். ஸ்வர்ணம் அங்கு நிற்கவேயில்லை. சாவித்திரி தலை குனிந்து உள்ளேபோய் விட்டாள். மனச்சாட்சி என்பது ஒன்று உண்டென்றால் அவள் தவறுகளுக்கு அதுவே பதில் கூறும்.
அமைதியாக இருந்த கூடத்துக்குத் தங்கம் உள்ளிருந்து ஓடி வந்தாள். “பாகிலே பொரியைப் போடுவதா? பொரியிலே பாகை ஊற்றுவதா, அக்கா? எது சரி சொல் பார்க்கலாம்?” என்றாள் சிரித்துக்கொண்டு.
ஸரஸ்வதியின் முகம் மலர்ந்துவிட்டது.
“நீதான் சொல்லேன். எனக்கு இதெல்லாம் தெரிந்து என்ன ஆகவேண்டும் சொல். நான் என்ன வீட்டுக்குள் பொரி உருண்டையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறேனா? உனக்குத்தான் கல்யாணம் நடக்கப்போகிறது. எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்” என்றாள் அவள்.
இதைக் கேட்ட சந்துருவின் முகம் வாடிப்போய்விட்டது. ‘ஸரஸ்வதி என்ன சொல்கிறாள்? தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளா? இது என்ன ஏமாற்றம்?’
சாப்பிடும் கூடத்தில் மங்களமும், ஸ்வர்ணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். “அவள் சம்மதப்படுவாள் என்று எனக்குத் தோன்றவில்லை அம்மா. அவள் போக்கே விசித்திரமாக இருக்கிறது. வட நாட்டுக்கு யாத்திரைக்கல்லவா கிளம்பி இருக்கிறாள்? கல்லை அசைத்தாலும் அசைக்கலாம். அவள் உறுதியை அசைக்க முடியாது” என்றாள் ஸ்வர்ணம்.
சந்துரு மனசைத் திடப்படுத்திக்கொண்டான். ‘ஆகட்டும். ஸரஸ்வதியையே கேட்டுவிடுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டான். ஆனால் ஸரஸ்வதியைத் தனியாகவே அவனால் சந்திக்க முடியவில்லை. எப்போதும் அவள் பின்னால் தங்கம் ‘அக்கா, அக்கா’ என்று அழைத்துக்கொண்டிருந்தாள். ‘ அந்தப் பெண் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். கேட்டுவிடுவது’ என்று தீர்மானித்துக்கொண்டு அவர்களிருவரும் இருந்த இடத்தை நாடிச் சென்றான்.
ஸரஸ்வதி புஷ்ப மாலை கட்டிக்கொண்டிருந்தாள். சந்துரு வந்து நிற்பதை ஏறிட்டுப் பார்த்த தங்கம் வெட்கத்தால் குன்றிப் போனாள். “அக்கா! அவர் வந்திருக்கிறார்” என்றாள். சந்துரு சிரித்துக்கொண்டே, ‘ஒரு முக்கியமான விஷயம். நானும் அம்மாவும், சாவித்திரியைக் கொண்டுவந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் வரவில்லை-“
“நீங்கள் வந்திருக்கும் சமாசாரம் எனக்குத் தெரியுமே! என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாகச் செய்வதற்கு வந்திருக்கிறீர்கள்; அவ்வளவு தானே-” என்று கூறிவிட்டு ஸரஸ்வதி யோசித்தாள். பிறகு தைரியத்துடன் நிமிர்ந்து சந்துருவைப் பார்த்து, “நண்பரே! சிறந்த குணசாலியான பெண்ணை மணக்க ஆசைப்படுகிறீர்கள். கலை ஆர்வத்தில் மூழ்கியிருக்கும் நான், உங்களுடைய அருமை மனைவியாக இருக்க முடி யாது. என்னுடைய வழியே அலாதியானது. லட்சியப் பாதையில் செல்பவர்கள் லட்சியவாதிகளைத் தாம் மணந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படி இராமல் போனால் ரகுபதியும். சாவித்திரியும் போலத்தான் இருக்க வேண்டும். வீட்டின் ஒளியாக, கிருஹலக்ஷ்மியாக, சகதர்மிணியாக இருக்க வேண்டிய பெண், கலை ஆர்வம் கொண்டவளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்முடைய ஹிந்து சமுதாயம் வகுத்திருக்கிற அரிய விஷயங்களைத் தெரிந்தவளாக இருந்தால் போதும். கணவனிடம் அன்பு காட்டத் தெரிந்தால் போதும். பெற்ற குழந்தைகளை வளர்க்கத் தெரிந்தால் போதும். வீட்டை ஒளி யுடன் வைத்துக்கொள்ளத் தெரிந்தால் போதும். சங்கீதம் தெரிந்த வித்வாம்சினியாகவோ, எழுதத் தெரிந்த எழுத்தாளி யாகவோ, ஆடத் தெரிந்த அதிசயப் பெண்ணாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குணத்தில் சிறந்த பெண் திலகங்கள் நிறைந்த தமிழ் நாடு இது. இதிலே எந்தக் கன்னிகையாவது உங்களைக் கட்டாயம் மணக்க வருவாள். இதோ! இந்தப் பெண் ஏழை என்கிற காரணத்தால் வாழ்வு கிடைக்குமா என்று ஏங்குகிறாள். நீங்கள் மனம் வைத்தால் அவளை வாழவைக்கலாம். தங்கம் எல்லாவிதத்திலும் சிறந்தவள். என்னைவிடச் சிறந்தவள். எனக்காவது பாடத் தெரியும் என்கிற எண்ணம் உண்டு. அவள் மனசிலே ஒரு விதமான அகம் பாவமும் இல்லை.”
ஸரஸ்வதி கொஞ்சநேரம் பிரசங்கம் புரிந்தாள். தங்கம் ஆத்திரத்துடன் ஸரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “அக்கா! அக்கா! என்ன இப்படிப் பேசுகிறாயே?” என்று அதிசயப்பட்டாள்.
சந்துருவின் மனத்தில் புதைந்து கிடந்த பிரச்னைக்கு விடை கிடைத்துவிட்டது. ஸரஸ்வதி லட்சியப் பெண். உன்னதப் பாதையில் நடக்கிறவள். சாமானிய வாழ்விலே அவள் சிக்கி உழலமாட்டாள் என்பதும் தெரிந்து போயிற்று.
அவன் ஒரே வார்த்தையில் பதில் கூறினான். “ஆகட்டும் ஸரஸ்வதி! உன் விருப்பப்படியே தங்கத்தின் பெரியம்மாவைக் கண்டு பேசுகிறேன்” என்றான்.
அவன் அங்கிருந்து சென்ற பிறகு தங்கம் ஸ்ரஸ்வதியின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள்.
“அக்கா!” என்று தேம்பினாள்.
“என்னை விட்டுவிடு அசடே. உனக்குத்தான் அர்ச்சுனன் கிடைத்துவிட்டானே. நான் எதற்கு?” என்று ஸரஸ்வதி
தங்கத்தின் கண்ணாடிக் கன்னங்களில் லேசாகத் தட்டினாள்.



