
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
29. வரவேற்பு
முற்றத்தில் துளசி மாடத்தின் முன்பு மணிக்கோலமிடும் தங்கத்தின் எதிரில் ரகுபதி அதிகாலையில் வந்து நின்றான். தலைப் பின்னல் முன் பக்கம் சரிந்து விழ, முதுகில் புரளும் மேலாக்கு நழுவ அவள் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கைகள் ‘சரசர’ வென்று புள்ளிகளை வைத்தன; புள்ளிகளைச் சேர்த்து அழகிய கோலமாக்கின. கோலத்தை முடித்துவிட்டுத் தலை நிமிர்ந்த போது தான் அவள் சற்றும் எதிர்பாராத விதமாக ரகுபதி காட்சி அளித்தான் அங்கே! தங்கம் தன் அழகிய கண்களால் அவனைப் பார்த்துக் கொட்டக் கொட்ட விழித்தாள். பிறகு வழக்கமான சிரிப்புடன், ”ஓ! அத்தானா! வாருங்கள், வாருங்கள், எங்கே இப்படி? ஓஹோ! தீபாவளிப் பிரயாணமோ?” என்று கேட்டாள்.
“அத்தானேதான்! சாட்சாத் ரகுபதி தான். நீ ஊருக்கு வரும்போது யாரிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தாயோ, அவனே தான்! தீபாவளி கொண்டாடத்தான் இங்கே வந்திருக்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, கூடையைப் பிரித்துக் கட்டுக் கதம்பத்தையும், பழங்களையும் எடுத்து அவளிடம் கொடுத்தான்.
‘இதற்குள்ளாக உள்ளிருந்து வியப்புடன் அலமு அத்தை பரபரவென்று முற்றத்துக்கு வந்தாள். “வந்தாயாடா, ரகு! வா அப்பா. இப்பொழுதாவது வழி தெரிந்ததே உனக்கு!” என்று அவனை வரவேற்று உபசரித்தாள். தீபாவளி இன்னும் இரண்டு நாட்கள் தாம் இருக்கின்றன என்பதற்கு அறிகுறியாக அவ்வீட்டிலிருந்து ‘கம கம’ வென்று பலகாரங்களின் வாசனை வீசியது. துளசி மாடத்துக்குக் கோலமிட்டு முடித்தவுடன் தங்கம் கொல்லைப்புறம் சென்றாள். தவிடும், பிண்ணாக்கும் கலந்து பிசைந்து ஆசையுடன் கறவைப்பசுவுக்கு வைத்தாள். ‘தக தக’ வென்று தேய்த்து அலம்பிய பித்தளைச் செம்பில் நுரை பொங்கும் பாலைக் கறக்க ஆரம்பித்தாள். ‘சொர், சொர்’ரென்று பால் பாத்திரத்தில் விழ ஆரம்பித்தது. ரகுபதி, கையில் பல் துலக்கும் ‘பிரஷ்’ஷுடன் கொல்லைப்பக்கம் வந்தான். பாலைக் கறந்துகொண்டே தங்கம் அவனைப் பார்த்து. “அத்தான்! கையில் என்னவோ வைத்திருக்கிறீர்களே. அது என்னது? விலை ரொம்ப இருக்குமோ?” என்று கேட்டாள்.
“தூ பிரமாதம்! அதன் விலை ஒரு ரூபாயிலிருந்து இரண்டு ரூபாய்களுக்கு மேல் போகாது” என்றான் ரகுபதி.
தங்கம் ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு அவனைப் பார்த்து. “அத்தான்! நான் சொல்கிறேனே என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். நம் பண்ணைக் குடியானவன் கிட்டே ஒரு வார்த்தை சொன்னால் ஒரு கட்டு வேப்பங் குச்சிகளைச் சீவி ஒழுங்கு படுத்தித் தருவான், விலை, கிலை ஒன்றும் நீங்கள் தர வேண்டாம். ஊருக்குப் போகும்போது எடுத்துப் போங்கள்!” என்றாள்.
ரகுபதி ‘கட கட’ வென்று சிரித்து விட்டான். அவன் இம்மாதிரி மனம் விட்டுச் சிரித்து எவ்வளவோ காலம் ஆயிற்று. கிணற்றிலிருந்து ஜலம் இழுத்துக் கைகால்களை அலம்பிக் கொண்டே , ”அது போகட்டும். காலையில் எழுந்தவுடன் துளசி மாடத்துக்குக் கோலம் போடுவது. அதன் பிறகு மாட்டிற்குத் தீனி வைத்துப் பால் கறப்பது. அதன் பிறகு?” என்று அவளைக் கேட்டான் ரகுபதி.
“அதன் பிறகு ஏரிக்குப் போய்த் துணிகளைத் துவைத்துக் குளிப்பது” என்று ஒய்யாரமாகப் பதிலளித்தாள் தங்கம்.
“இப்படியே நாள் பூராவும் ஒரு வேலை மாற்றி இன்னொன்று என்று செய்து கொண்டிருப்பாயாக்கும்! வேறு பொழுது போக்கு எதுவும் இல்லையா?” என்று மேலும் கேட்டான் ரகுபதி.
தங்கம் அவனுக்கு மறுமொழி கூறுவதற்கு முன்பே உள்ளிருந்து அலமு அவளைக் கூப்பிட்டாள். பால் பாத்திரத்துடன் உள்ளே சென்ற தங்கம், தட்டில் இட்லிகளுடனும், கையில் மணக்கும் காப்பியுடனும் கூடத்துக்கு வந்து. ரகுபதியின் முன்பு அவைகளை வைத்துவிட்டுத் தாழ்வாரத்திலிருந்த துணிகளை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டாள். இடுப்பில் குடத்தை ஒய்யாரமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, “ஏரிக்குப் போய்விட்டு வருகிறேன், அத்தான்! வந்த பிறகு அதற்கு அடுத்தாற்போல் என்ன வேலை என்பதையும் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டாள்.
சூரியன் வானத்தில் மேலே வந்து விட்டான். சமையலறை யிலிருந்து கீரைக் குழம்பு ‘கம கம’ வென்று மணக்க ஆரம்பித்தது. வெறுமனே கூடத்தைச் சுற்றிச் சுற்றி வர ரகுபதிக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, ‘வெளியே போய் வரலாம்’ என்று கிளம்பி, அலமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். வழியெல்லாம் ஓலை வேய்ந்த குடிசைகள். அவைகளை அடுத்து மரகத வண்ணத்தில் வயல் வெளிகள். அவைகளில் படிந்து ‘சல சல” வென்று ஓடும் நீரின் ஓசை. ஈர மண்ணிலிருந்து எழும் ஒருவித வாசனை. வழக்கமாக நகரவாசிகளில் பலர் அத்தர், சந்தணத் தின் மணத்தையே உணர்ந்தவர்கள். சுக போகத்திலேயே திளைப்பவர்கள். காலில் மண் ஒட்டிக் கொண்டால் முகத்தைச் சுளிப்பவர்கள்: இவர்களுக்கு, முழங்கால்கள் வரையில் சேற்றில் அழுந்தப் பாடுபடும் ஏழைக் குடியானவர்களைப்பற்றிச் சிந்திப்பதற்கே பொழுது இருப்பதில்லை. ஈர மண்ணிலிருந்து எழும் வாசனை யை நுகர்ந்து அநுபவிப்பதற்கும் பாக்கியம் செய்ய வில்லை
ரகுபதி சிறிது தடுமாற்றத்துடனேயே வரப்புகளின் மீது நடந்து சென்றான். அங்கே மனத்துக்கு ரம்யமான காட்சி ஒன்றைக் கண்டான். இசையும், கலையும். ஆடலும், பாடலும் நகரங்களில் மட்டும் இல்லை. சேறும், சகதியும், உழைப்பும், பலனும் நிறைந்திருக்கும் கிராமங்களிலும் அவை இருக்கின்றன என்பதை ரகுபதி உணர்ந்து கொண்டான். உடல் கட்டுடன் விளங்கும் இளமங்கை ஒருத்தி வயல்களுக்கு மடை கட்டிக்கொண்டிருந்தாள். சற்று எட்டி, ஏற்றக் கிணற்றிலிருந்து ஓர் ஆடவன் ஏற்றம் இறைத்துக்கொண்டே,
“வண்டி கட்டி மாடு கட்டி- ஏலேலமடி ஏலம்
மீனாக்ஷி அம்மை கூண்டு கட்டி – ஏலேலமடி ஏலம்”
என்று உர்த்த குரலில் பாட ஆரம்பித்தான். தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பெண், கணவனை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு கண்களில் காதல் கனல் வீச அவனைப் பார்த்துக் கொண்டே, ‘ அட! உனக்குத்தான் பாடத் தெரியுமோ?’ என்கிற பாவனையில் தலையை அசைத்துவிட்டு,
“கூண்டுக்குள்ளே போற பெண்ணே – ஏலேலமடி ஏலம்
அட! கூப்பிட்டாலும் கேட்கலையோ? – ஏலேலமடி ஏலம்”
என்று சவால் விடுப்பது போல் தீங்குரலில் பாடினாள்.
ரகுபதி அப்படியே அயர்ந்துவிட்டான். பாட்டிலேதான் என்ன இனிமை! எவ்வளவு அர்த்த பாவம்! மாட்டு வண்டி கட்டிக் கொண்டு காதலியும். காதலனும் எங்கோ பயணப்படு கிறார்கள். சாதாரண வண்டியல்ல. மதுரையம்பதியில் அரசு செலுத்தும் அங்கயற்கண்ணியின் வண்டி, ஸ்ரீ மீனாட்சியின் கூண்டு வண்டி!
அவன் உள்ளத்திலிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. மெதுவாக ஒன்றும் தோன்றாமல் மேலே நடக்க ஆரம்பித்தான் அவன். எதிரில் தங்கம் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். உடம்பிலே ஈரப்புடைவை. தோளில் துவைத்த துணிகளின் சுமை. இடுப்பில் நீர் வழியும் குடம். தேர்ந்த எழுத்தாளனாக இருந்தால், அவளைக் குறைந்த பட்சம் இரண்டு பக்கங்களாவது வர்ணித்து விடுவான்? வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் எட்டாத அழகு அது. ஆகவே, அவன் வாயடைத்து அவளுடன் வீடு திரும்பி வந்து சேர்ந்தான்.



