
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
25. மங்களத்தின் நம்பிக்கை
சாவித்திரியின் பிறந்தகத்தில் முன்னைப்போல உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கவில்லை. சிந்தனையும் கவலையும் உருவாக மங்களம் அவ்வீட்டுக் கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அவள் உள்ளம் சோர்ந்து நைந்து போய்விட்டது. தளிர்த்துச் செழித்து வளரும் மரத்தைக் கோடறி கொண்டு வெட்டுவதுபோல் தழைத்துப் பெருக வேண்டிய குடும்பத்திற்குத் தடங்கலாகப் புக்ககத்தில் வாழாமல் பிறந்தகம் வந்திருக்கும் சாவித்திரியைப் பற்றியும், அவள் வருங்காலத்தைப் பற்றியும் – எல்லோரும் கவலை அடைந்தார்கள். வழக்கமாகக் காணப்படும் இரைச்சலோ, உற்சாகமோ அந்த வீட்டில் அப்பொழுது நிலவவில்லை. குடும்பத்துக்கு வேண்டியவற்றைக் கவனித்துச் செய்வதற்கு அக்கறை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்? சீதாவுக்கு அவ்வளவு அநுபவம் போதாது. விளையாட்டுச் சுபாவம் படைத்த அவள் தான் தற்சமயம் குடும்பப் பொறுப்பை நிர்வகித்து வந்தாள். வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரும் தன் பேரில் பழி சொல்வதாக நினைத்து சாவித்திரி, அதை அந்நிய இடமாகவே பாவித்தாள். இஷ்டமிருந்தால் யாருடனாவது பேசுவாள், இல்லாவிடில் அதுவும் இல்லாமல் தன் அறையிலேயே அடைபட்டுக் கிடப்பாள் அவள்.
தேக வலிமையும், சலியாமல் உழைக்கும் திறனுமுடைய தன் தாயார் உடல் மெலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதைப் பார்த்த சந்துரு. தன் சகோதரியை மனத்துக்குள் வெறுத்தான். மனைவியின் தேக நிலையைக் கண்ணுற்ற ராஜமையருக்கு மாப் பிள்ளை ரகுபதியின் மீதே கோபம் அதிகமாயிற்று.
மங்களம் தன் பெண்ணின் பிடிவாத குணத்தைக் கண்டு ஆறாத் துயரத்தை அடைந்தாள். சிறு வயதிலிருந்தே பரம சாதுவாகவும், யார் எதைச் சொன்னாலும் சகித்துக்கொள்ளும் சாமர்த்தியமும் பெற்றிருந்த அவளுக்கு சாவித்திரியின் மனப்போக்கு ஒரு புதிராகவே இருந்தது. சீதாவுக்கும் கல்யாண வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அடுத்தாற்போல் சந்துரு வுக்கும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான். ஆனால், புக்ககத்தில் வாழவேண்டிய பெண் கோபித்துக்கொண்டு. பிறந்தகத்தில் இருக்கிறாள் என்பதை நினைக்கையில், சீதாவுக்கு வரன் தேடவோ, சந்துருவுக்குப் பெண் கொள்ளவோ யாருக்கும் தைரியம் ஏற்படவில்லை.
படுக்கையில் கவலையே உருவமாகப் படுத்திருக்கும் தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். அன்புடன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, ”அம்மா! உனக்கு வியாதியே ஒன்றுமில்லையாம். மன நிம்மதி இல்லாமல் உடம்பு கெட்டுப் போயிருப்பதாக டாக்டர் சொல்லுகிறார். உற்சாகமான மனம், அதற்கேற்ற சூழ்நிலை அமையவேண்டும் என்று அவர் கருதுகிறார். நீயோ கொஞ்சமாவது மனசுக்கு ஆறுதலைத் தேடிக்கொள்ள மாட்டேன் என்கிறாய். சதா கவலையும் கண்ணீருமாக இருந்தால் உன் உடம்பு எப்படியம்மா சரியாகும்?” என்று ஆசையுடன் விசாரித்தான் தாயை.
“கவலைப்படாமல் எப்படியப்பா இருக்கமுடியும்; மானத்தோடு கௌரவமாக வாழ்ந்த குடும்பம் ஆயிற்றே, நம் குடும்பம்? ஏதாவது பேச்சை ஆரம்பித்தால் உன் அப்பா சீறி விழுகிறார். பெண்ணை ‘நர்ஸு’கள் பள்ளியில் சேர்க்கப்போகிறாராம்! * படித்து விட்டு உத்தியோகம் செய்து சாப்பிடுகிறாள்! அவள் ஒருத்தரிடமும் கைகட்டி நிற்க வேண்டாம்’ என்கிறாரே. இந்த நாளில் இது ஒரு வழக்கம் ஆரம்பித்து இருக்கிறதே!” என்று கூறிவிட்டு, வியாதியால் மெலிந்து வெளுத்துப்போன உதடுகளை நெளித்து வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள், மங்களம்.
சந்துரு அலட்சியத்துடன் ‘ஹும்’ என்றுவிட்டு, “இவளுக்கு இருக்கிற பொறுமைக்கு ‘நர்ஸ்’ உத்தியோகம் ஒன்றுதான் குறைச்சலாக இருக்கிறது. பொறுமையிலே சாக்ஷாத் பூமிதேவி தான் நம் சாவித்திரி” என்றான்.
“மாப்பிள்ளையாகட்டும், அவன் அம்மாவாகட்டும் பரம சாதுக்கள். இவள்தான் புருஷனுக்கும் மாமியாருக்கும் சற்றுப் பணிந்து நடந்தால் என்ன? பணிவதால் என்ன முழுகியா விடும்?” என்றாள் மங்களம்.
பணிவைப்பற்றியும், அடக்கத்தைப்பற்றியும் ஓயாமல் பேசி அவ்விதமே பல வருஷங்கள் நடந்து கொண்ட மங்களத்தினாலேயே மகளின் மனத்தைப் பணியவைக்க முடியவில்லை என்றால் பிறகு யாரால் முடியப்போகிறது? சந்துரு யோசித்து விட்டு, “ஏனம்மா! தீபாவளிப் பண்டிகைக்குப் பத்துத் தினங்கள் கூட இல்லையே. தலை தீபாவளியாயிற்றே. மாப்பிள்ளையை அழைக்கவேண்டாமா? அப்பா, ரகுபதிக்கு ஏதாவது கடிதம் போடுவதாகச் சொன்னாரா?” எனக் கேட்டான்.
மங்களம் வருத்தத்துடன் தலையை அசைத்துவிட்டு, “அதையெல்லாம் அவர் காதிலே போட்டுக்கொள்வதே யில்லை. நான் சொன்னதற்குத் ‘தலையும் இல்லை காலும் இல்லை’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். சந்துரு! நீதான் மாப்பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதேன். அதிலே என்ன தவறு இருக் கிறது? அவசியம் தீபாவளிக்கு வரவேண்டும் என்று எழுதப்பா, அவர் கட்டாயம் வருவதானால் நான் எப்படியாவது சமாளித்து சீர்வரிசைகள் செய்துவிடுகிறேன்” என்றாள் குரல் தழுதழுக்க. நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் மங்களம் கேட்பதைச் சந்துருவால் தட்ட முடியவில்லை. ‘மனைவி ஊரிலிருந்து வந்த பிறகு ஒருவரி கடிதம் கூடப் போடவில்லை. மாமனார் ஏனோ தானோ வென்று ஒன்றும் தெரியாதவர்போல் இருக்கிறார். மைத்துனன் அழைப்பு அனுப்பி மாப்பிள்ளை தலை தீபாவளிக்கு வந்த மாதிரிதான்’ என்று நினைத்த சந்துரு, தாயைத் திருப்தி செய்யவேண்டி, காகிதமும், பேனாவும் எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
சோர்ந்துபோயிருந்த மங்களத்தின் மனத்தில் நம்பிக்கை ஊற்றெடுத்தது. ரகசியமாகப் பிள்ளையின் காதில், “சந்துரு! குடும்பச் செலவிலிருந்து சேர்த்த பணம் நூறு ரூபாய்க்குமேல் பெட்டியில் இருக்கிறது. சரிகை வேஷ்டியும், புடைவையும் வாங்கி வந்து உன் பெட்டியில் வைத்து வை. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியவேண்டாம்” என்றாள்.
‘ஆகட்டும்’ என்று தலையை அசைத்துவிட்டு கையிலிருந்த காகிதத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு யோசனையுடன் உட்கார்ந்திருந்தான் சந்துரு. ‘தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை மட்டும் வருவது சம்பிரதாயமில்லை அல்லவா? ரகுபதியுடன் வரக்கூடியவர்கள் அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்? ஸரஸ்வதி வருவாளா? இதற்குள்ளாக அவள் மனம் நம்மைப்பற்றியும், நம் குடும்பத்தைப்பற்றியும் என்ன அபிப்பிராயம் கொண்டு விட்டதோ? அவசியம் ஸரஸ்வதியையும் அழைத்து வரச்சொல்லி எழுதுகிறேன். தவறாக இருந்தாலும் இருக்கட்டும். சரியாக இருந்தாலும் இருக்கட்டும்’ என்று துணிவுடன் கடிதத்தை எழுதி முடித்தான். அவன் சாவித்திரியைப் புக்ககத்துக்கு அழைத்துப் போனபோது ஸரஸ்வதியுடன் பேசுவதற்குப் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டான். சுருக்கமாகவும் நிதானமாகவும் இரண்டொரு வார்த்தைகளில் ஸரஸ்வதி பதிலளித்துவிட்டுச் சென்று விடுவாள்.
அவன் அங்கிருந்த நான்கு தினங்களில் ஒரு தினம், அதி காலையில் ஸரஸ்வதி தோட்டத்தில் பூஜைக்காக மலர்கள் பறிக்கும்போது சந்துருவும் அங்கிருந்தான். ரோஜாச் செடியிலிருந்து மலரைப் பறிக்கையில் அருகிலிருந்த முள் ஒன்று அவள் விரலில், ‘சுரீர்’ என்று குத்தவே, முத்துப்போல், அந்த இடத்தில் செக்கச் செவேல்’ என்று ஒரு பொட்டு ரத்தம் கசிந்தது. ஸரஸ்வதி கையை உதறிக்கொண்டாள். “த்ஸொ … த்ஸொ … முள் குத்திவிட்டதுபோல் இருக்கிறதே. ஆழமாகக் குத்திவிட்டதா என்ன?” என்று கவலையுடன் விசாரித்தான் சந்துரு. அவள் பட்டுப்போன்ற கையைப் பார்த்துக்கொண்டே. “இல்லை…..ஆமாம் குத்திவிட்டது. கொஞ்ச நேரத்தில் சரியாகப் போய்விடும்” என்றாள் ஸரஸ்வதி.
மேலே என்ன கேட்பது, எதைப்பற்றிக் கேட்பது என்று புரியாமல் சிறிது நேரம் அவள் முகத்தையே ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சந்துரு. ஸரஸ்வதி ‘சர சர’ வென்று மலர்களைப் பறித்துக் கூடையில் நிரப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
மறுபடியும் அன்று மாலையே ஒரு சந்திப்பு. மங்களம் வெகுவாகக் கேட்டுக் கொண்டதன் பேரில் ஸரஸ்வதி பாடுவதற்கு உட்கார்ந்தாள். சில பாட்டுகளைப் பாடிய பிறகு, ஸரஸ்வதி வீணையை உறையிலிடுவதற்கு ஆரம்பித்தபோது மங்களம் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்:
“ஷண்முகப் பிரியா” ராகத்தை நீ வாசித்தால் அற்புதமாக இருக்கிறது. கல்யாணத்தின் போது வாசித்தது என் மனத்தை விட்டு அகலவே இல்லை. மறுபடியும் இன்று அதைக் கேட்க ஆசைப்படுகிறேன், ஸரஸ்வதி” என்று முறுவலுடன் கேட்டுக் கொண்டான் சந்துரு.
உறையிலிட்ட வீணையை வெளியே எடுத்து, ‘ஷண்முகப் பிரியா’வை அழகாக வாசித்தாள் ஸரஸ்வதி. ஆவலுடன் அவளையே கவனிக்கும் சந்துருவை அவள் ஒரு முறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.’
பழைய சம்பவங்களை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் சந்துரு. ஸரஸ்வதியின் மனம் ஒரு புதிர். வாக்தேவியின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமாக இருக்கும் அந்தப் பெண், ஒரு தெய்விகப் பிறவி என்பதாக நினைத்துச் சந்துரு வியப்பும், மகிழ்ச்சியும் எய்தினான். கடிதத்தை உறையிலிட்டு நிறைந்த மனத்தினனாக அதைத் தபாலில் அன்றே சேர்த்து விட்டான்.



