இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

27. தங்கத்துக்கு அர்ப்பணம்

கடலலைகள் போல் ஓயாமல் பொங்கிக்கொண்டிருந்த ஸ்வர்ணத்தின் மனம், மகனின் பதிலைக் கேட்டு ஆறுதல் அடைந்தது. தீபாவளிக்கென்று மகனிடம் கொடுத்தனுப்ப சாவித்திரிக்கு விலையுயர்ந்த புடைவையை எடுத்தாள். பல வர்ணங்களில் ரவிக்கைத் துண்டுகள் வாங்கினாள். கட்டு வெற்றிலையும், வாசனைப் பாக்கும், சீப்புப் பழமும், மணக்கும் கதம்பமும் வாங்கிக் கூடையை நிரப்பினாள். “மனைவியிடம் நல்ல மாதிரி பேச வேண்டும். பரிவாக நடந்து கொள்ள வேண்டும். ‘தஸ், புஸ்’ ஸென்று உன் கோபத்தைக் காட்டாதே” என்றெல்லாம் புத்திமதிகள் கூறினாள் ஸ்வர்ணம். “வேட்டகத்தில் பெரியவர்கள் ஏதாவது சொன்னாலும் பொறுத்துக்கொள், அப்பா!” என்றுவேறு மகனுக்குச் சொன்னாள். ரகுபதி எல்லா வற்றிற்கும் மௌனமாகவே தலையை அசைத்தான். மைசூர் பிரயாணத்துக்காகப் பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஸரஸ்வதி, ஸ்வர்ணம் கூறுவதை முழுவதும் கேட்டுவிட்டு, “எல்லா புத்திமதிகளையும் சொன்னாயே அத்தை. முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டாயே” என்றாள்.

“என்ன?” என்று ஸ்வர்ணம் அவளைத் திருப்பிக் கேட்டதும், அவள், ”எல்லோரிடமும் சரிவர நடந்து கொண்டு திரும்பி வரும்போது சாவித்திரியையும் அழைத்து வந்து விடு என்று சொல்ல வேண்டாமா?” என்று கேட்டு விட்டு பெருமை பொங்கும் முகத்துடன் ரகுபதியைத் திரும்பிப் பார்த்தாள்,

“அதற்குத்தான் நீ அவனுடன் போய் எல்லாவற்றையும் பொறுமையுடன் நடத்திக்கொண்டு வருவாய் என்றிருந்தேன். திடீரென்று நீதான் யாத்திரை கிளம்பி விட்டாயே!” என்று நிஷ்டுரமாகப் பதிலளித்தாள் ஸ்வர்ணம்.

தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பே ரகுபதியும். ஸரஸ்வதியும் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ரெயில் நிலையம் வரையில் இருவரும் ஒன்றாகச் சென்று வெவ்வேறு வண்டிகளில் ஏறினார்கள். “அத்தான்! நான் திரும்பி வரும்போது நீ தனியாக இருக்கக்கூடாது. கட்டாயம் சாவித்திரியை அழைத்து வந்து விடு” என்று உண்மையான அன்புடனும் அநுதாபத்துடனும் ஸரஸ்வதி கூறி அவனை ரெயில் ஏற்றினாள். ரகுபதியின் வண்டி புறப்பட்டுச் சென்ற பிறகு அரை மணி கழித்துத்தான் ஸரஸ்வதியின் ரெயில் கிளம்ப வேண்டும். ரெயில் சென்ற திசையைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு நிறைந்த மனத்துடன் ஸரஸ்வதி பெருமூச்சு விட்டாள்.

தீபாவளி கொண்டாடிவிட்டு மனைவியுடன் ரகுபதி ஊருக்குத் திரும்பி விட்டான் என்று அறிந்தால், அவள் சமீபத்தில் ஊருக்குத் திரும்பக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டாள். ரெயிலில் ஒரு மூலையில் உட்கார்ந் திருந்த ரகுபதி சிறிது நேரம் வரையில் அங்கு என்ன நடைபெறு கிறது என்பதைக் கவனிக்கவில்லை. பித்துப் பிடித்தவன் போல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். இரவின் அமைதியைக் கலைத்துக்கொண்டு வனப் பிரதேசத்தில் ’தட தட’ வென்று ரெயில் சென்றுகொண்டிருந்தது. அத்துடன் குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. தாயார் கொஞ்ச நேரம் சமாதானம் செய்து பார்த்தாள். பிறகு தகப்பனார் சீராட்டிப் பார்த்தார். அழுகை ஓய்ந்தபாடில்லை. இருவரும் மனம் சலித்தவர்களாக, “சனியனே! என்ன தான் வேண்டுமென்று சொல்லித் தொலையேன்” என்று இரைந்து கோபித்துக் கொண்டார்கள் குழந்தையை! குழந்தை அழுது கொண்டு தன் மழலை மொழியில், “நீ ஆண்டாம் போ…. பாட்டிதான் வேணும். பாட்டிகிட்டே தாச்சுக்கணும் போ” என்றது.

‘அப்பாடா’ என்று பெற்றோர் பெருமூச்சு விட்டனர். ஓடுகிற ரெயிலில் ஊரிலிருக்கும் பாட்டியை எப்படி வரவழைப்பது என்று புரியாமல் திகைத்தனர். இருவரும் படும் சிரமத்தைப் பார்த்து ரகுபதி கூடையை அவிழ்த்து அதிலிருந்து இரண்டு பெரிய ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான்.

”இந்தா பாப்பா! பாட்டியிடம் காலம்பற போகலாம்”, என்று கூறி அவைகளை குழந்தையிடம் கொடுத்தான். தங்க நிறத்தில் பளபளவென்று உருண்டு விளங்கும் பழங்களைத் தன் குஞ்சக் கரங்களால் குழந்தை வாங்கிக்கொண்டு சமாதானம் அடைந்தது. இந்தக் காட்சியை ரசித்த பெரியவர் ஒருவர். ”இதைத்தான் குழந்தை மனம் என்கிறது, ஸார்! நம்மால் லேசில் திருப்தியடைய முடியாத விஷயங்கள் பல இருக்கின்றன. அகங்காரமும், மமதையும் தலை தூக்கி நம்மை நசுக்கிவிடுகின்றன. லேசிலே மனம் பணியமாட்டேன் என்கிறது. குழந்தைகள் அப்படி இல்லை. ஒன்று வேண்டுமென்று ஹடம் பிடிப்பார்கள். வீம்பு பண்ணுவார்கள். ஆனால், அதையே நீடித்து நினைவு வைத்து கொள்ள மாட்டார்கள். சட்டென்று மறந்து போவார்கள்” என்று கூறினார்.

ரகுபதி மனைவியைப் பார்த்து வருவதற்காகத்தான் கிளம்பி இருக்கிறான். அவளிடம் எப்படியெல்லாம் ‘பவ்யமாக’ நடந்து கொள்ளவேண்டும் என்று தாயார் வேறு உபதேசம் செய்து அனுப்பி இருக்கிறாள். ஸரஸ்வதி ரெயில் நிலையத்தில் கூட ‘சாவித்திரியை அழைத்து வந்துவிடு’ என்று உத்தரவு போட்டிருக்கிறாள். ஆனால் அவன் அந்தராத்மா இருக்கிறதே அது லேசில் மசிந்து போகத் தயாராக இல்லை. படுக்கை அறையில், “உன்னை அடித்துவிட்டேன் என்று கோபமா சாவித்திரி?” என்று அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு கெஞ்சியபோது, அவள் தன் கைகளை ஆங்காரத்துடன் உதறி விடுவித்துக்கொண்ட சம்பவத்தை அவன் மனம் மறக்கவில்லை. சாதாரண சிறாய்ப்புக் காயமாக இருந்தால் சீக்கிரம் குணமாகிவிடும். ஆழப்பதிந்து போன வெட்டுக் காயமாக அல்லவா ஏற்பட்டிருக்கிறது?

புகை வண்டி பெரும் வேகத்தில் போய்க்கொண்டிருந்தது. அதன் வேகத்தைப்போல் ரகுபதியின் மனோ வேகமும் அதிக மாயிற்று. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் மனைவியை நாடிப் போகிறான்? மறுபடியும் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகமாட்டாள் என்பது என்ன நிச்சயம்? சிந்தனைச் சுழலில் ஜன்னலின் மேல் தலை வைத்துக்கொண்டே கண்ணயர்ந்து விட்டான் ரகுபதி. விடியற்காலை சில்லென்று காற்றுப் பட்டவுடனேயே விழிப்பு ஏற்பட்டது. ரெயிலும் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு நிலையத்தில் நின்றிருந்தது. ஊரின் பெயரை உற்றுக் கவனித்தான். ‘ஆ! தங்கம் இங்கேதானே அருகில் கிராமத்தில் இருக்கிறாள்’ என்று நினைத்தான். “சாவித்திரி மன்னியோடு எங்கள் ஊருக்கு வாருங்கள்!’ என்று அழைத்துவிட்டுப் போனாளே! மன்னியும் வேண்டாம், பொன்னியும் வேண்டாம். நான் மட்டுந்தான் போகிறேனே. தங்கத்தின் ஊரில் தீபாவளி கிடையாதா என்ன? கூடை நிறைய இருக்கும் கதம்பம் தங்கத்தின் கருங்கூந்தலுக்குத் தான் அர்ப்பணம் ஆகட்டுமே! பெட்டியிலே வைத்திருக்கும் வாணங்கள், பட்டாசுகளைத் தங்கந்தான் வெடித்து ரசிக்கட்டுமே?” ரகுபதி பெட்டியையும், கூடையையும் அவசரமாக இறக்கிவிட்டுத் தானும் கீழே இறங்கினான். ரெயிலும் அவன் அறியாமையைக் கண்டு சீறுவது போல் ‘புஸ்’ ஸென்று பெருமூச்சு விட்டுக் கொண்டு கிளம்பிவிட்டது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *