இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

22. தங்கத்துடன் ரகுபதி

அடுத்த நாள் அலமுவும், தங்கமும் ஊருக்குப் புறப்படுவதாக இருந்தார்கள். வீட்டைச் சுற்றிச் சுற்றி வளைய வரும் தங்கம் ஊருக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும். தெருவில் முத்து முத்தாக யார் கோலம் போடுவார்கள்? பூஜைக்கு விடியற் காலை யார் மலர் கொய்து வைப்பார்கள்? ஸரஸ்வதி அவ்வேலைகளைச் செய்தாலும், தங்கம் செய்வதில் தனியான தொரு அழகைக் கண்டு ரசித்தான் ரகுபதி. “அத்தான்! உங்களுக்கு மிளகு வடை என்றால் ஆசையாமே” என்று கரகரவென்று அந்தப் பலகாரத்தைச் செய்து தட்டில் வைத்துக் கொண்டுவந்து வைத்தாள் தங்கம், ஒரு நாள். எல்லோருடைய மனதையும் தான் கவர வேண்டும்; எல்லோருக்கும் தான் இனியவளாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசையுடன் அனைவரும் மெச்சும்படியாக நடந்து கொண்டாள் அவள்.

“பாவம்! நல்ல இடமாகப் பார்த்துக் கொடுத்தால் – பெண் சௌக்கியமாக வாழ்வாள். அவசரப்பட்டு எங்காவது பாழுங் கிணற்றில் தள்ளுகிற மாதிரி தள்ளி விடாதீர்கள்”. அலமு என்று ஸ்வர்ணம் தன் நாத்தனாரிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தாள்.

அன்று நடு மத்தியான்னத்தில் மாடியில் நாற்காலியில் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரகுபதி. இன்று இல்லாவிடில் நாளை வருவாள் அல்லது கடிதமாவது எழுதுவாள் என்று தினம் தினம் எதிர்பார்த்து ஏமாந்து போகவே, ரகுபதியின் மனத்தில் ஒருவித அசட்டு எண்ணம் – சபல புத்தி தலை எடுக்க ஆரம்பித்தது. சர்க்கரையைவிட்டு இனிப்பை எப்படிப் பிரிக்க முடியாதோ, அம்மாதிரி தாம்பத்திய அன்பினால் இருவரின் உள்ளங்களும் பிரிக்க முடியாதபடி ஒன்றிய நேசம், சாவித்திரிக்கும், ரகுபதிக்கும் ஏற்படவில்லை. மிக மிகக் குறுகிய காலத்துக்குள் அவனுடைய வாழ்க்கை சுசந்து வழிந்தது. ‘இளம் மனைவியுடன் ஆனந்தமாக வாழ்க்கை நடத்தப்போகிறோம்’ என்று: அவன் கட்டிய கோட்டை தகர்ந்து விழுந்தது. அதனால், மனம் ஓடிந்து போயிருந்த அவன் மனக்கண் முன்பு தங்கம் தோன்றி மறைந்துகொண்டிருந்தாள். அவளிடம் அவனுக்கு அலாதியான ஒருவித பாசம் ஏற்படுவதை உணர்ந்தான். ‘நாளைக்கு அவள் இங்கிருந்து போய்விடுவாள். நானும் அவளுடன் கிராமத்துக்குப் போய்விடுகிறேன். பிறகு?’ என்று யோசித்தான் ரகுபதி, ’பிறகு என்ன? அந்தக் கர்வம் பிடித்தவளுக்குப் படிப்பினையாக ஆடம்பரமில்லாமல், ஒருவருக்கும் சொல்லாமல் தங்கத்தைக் கல்யாணம் செய்து கொண்டுவிடுகிறேன். என்னை யார் என்ன செய்யமுடியும்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டான்.

கீழே ஸரஸ்வதி பைரவி ராகத்தில் அருணாசலக் கவியின் ‘யாரோ இவர் யாரோ’ என்கிற கீர்த்தனத்தில் சரணத்தைப் பாடிக்கொண்டிருப்பது கேட்டது. ‘அந்த நாளில் சொந்தம் போல உருகினார்’ – சாதாரணமாக இந்த இடத்தை – ஸரஸ்வதி நான்கைந்து தடவைகள் பாடினாள். ரகுபதிக்கு மிகவும் பிடித்தமான பாட்டுதான். ஆனால் இன்றோ அவனுக்கு ஸரஸ்வதியின் பேரில் கோபம் வந்தது. சாவித்திரிக்கும், அவனுக்கும் இந்த ஜன்மத்தில் மட்டும் இல்லை; அந்த நாளில், கடந்த பிறவிகளிலிருந்தே தொடர்பு இருக்கிறது என்பதை ஸரஸ்வதி பாட்டின் மூலம் எச்சரிக்கிறாளோ என்று தோன்றியது!

‘சட்! இவள் யார் என் சொந்த விஷயத்தில் தலையிட’ என்று முணு முணுத்தான் ரகுபதி. இதற்குள் மாடிப்படிகளில் ’தடதட’ வென்று தங்கம் இரைக்க இரைக்க ஏறி ஓடி வந்தாள். நிதானமாக ஸரஸ்வதி அவள் பின்னால் வந்து நின்றாள். தங்கம் ஸரஸ்வதியைத் திரும்பிப் பார்த்து. “அக்கா! நான் கேட்கட்டுமா?” என்று கேட்டாள்: “கேளேன். யார் கேட்டால் என்ன?” என்றாள் ஸரஸ்வதி சிரித்துக்கொண்டே.

“போ அக்கா! எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீயே கேட்டுவிடு” என்றாள் தங்கம் லஜ்ஜையுடன்.

”என்ன கேட்பதற்கு இவ்வளவு பீடிகை?” என்று ரகுபதி அவர்களை வினவிவிட்டு, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“ஒன்றுமில்லை அத்தான். தங்கம் பாட்டுக் கச்சேரியே அதிகம் கேட்டதில்லையாம். டவுனில் இன்று ஏதோ கச்சேரி இருக்கிறதாக நேற்றுச் சொன்னாயே; அதற்கு அவளும் வருகிறாளாம். இவ்வளவு தான் விஷயம்” என்றாள் ஸரஸ்வதி.

”அப்பா! இவ்வளவுதானா? என்னவோ சுயம்வரத்துக்கு ஏற்பாடு பண்ணுகிறமாதிரி அல்லவா வெட்கமும், நாணமும் நடுவில் வந்து விடுகிறது? என்னவோ என்று பார்த்தேன். வரட்டுமே. நீயுந்தான் வாயேன்” என்று அழைத்தான் ரகுபதி இருவரையும்.

தங்கம் சந்தோஷ மிகுதியினால் மறுபடியும் மாடிப்படிகளில் ’தடதட’ வென்று வேகமாக இறங்கினாள். இடுப்பின் கீழே புரளும் பின்னல், இப்படியும் அப்படியும் ஆடி அசைவதையே கவனித்துக் கொண்டிருந்தான் ர்குபதி.

“என்ன அத்தான் பார்க்கிறாய்? தங்கம் இப்படி ஓடுகிறாளே என்றுதானே பார்க்கிறாய்? அந்தப் பெண் எதையும், எந்த வேலையையும் இப்படித்தான் ஓடி ஓடிச் செய்கிறாள். பாவம்” என்று ஸரஸ்வதி கூறிவிட்டு அங்கிருந்து கீழே சென்றாள்.

சாயந்தரம் நாலு மணிக்கு மூவரும் கச்சேரி கேட்பதற்கு நகரத்துக்குப் புறப்பட்டார்கள். ஸரஸ்வதி ஆரஞ்சு வர்ணப் புடைவையும். கறுப்பு ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள். தங்கம் மருதாணிச் சிவப்பில் ஸரஸ்வதியின் பட்டுப் புடைவையை உடுத்தி இருந்தாள். சங்கு போன்ற கழுத்தில் கரியமணிச்சரம் இரட்டை வடம் பூண்டு, நெற்றியில் பிறை வடிவத்தில் திலகமிட்டிருந்தாள் தங்கம், கைகளில் ‘கலகல’ வென்று ஒலிக்கும் சிவப்புக் கண்ணாடி வளையல்கள். தேர்ந்த ஓவியனின் சித்திரத்திலிருந்து உயிர் பெற்று வந்த பாவையாகத் தோன்றினாள் அவள். ‘அதிக அழகு அதிருஷ்டத்தைக் குறைத்துவிடும்’ என்று யாரோ சொல்லியிருப்பதை நினைத்துப் பார்த்தான் ரகுபதி. ‘அதான் இந்தப் பெண் இப்படி ஏழ்மையில் வாடிப்போகிறாளோ’ என்றும் எண்ண மிட்டான்!

“ஜாக்கிரதையாகப் போய் வாருங்கள்” என்று ஸ்வர்ணம் கூறியதும் ஸரஸ்வதி, “என்ன அத்தான்! நீ ‘ரெடி’ தானே?” என்று கேட்டாள்.

இதுவரையில் தங்கத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ரகுபதி திடுக்கிட்டுத் திரும்பி, “ஓ!” என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.

“போகிறபோது நடந்து போய் விடலாம். வரும்போது இருட்டிவிடும். பஸ் பிடித்துதான் ஆகவேண்டும். என்ன சொல்கிறாய் தங்கம்?” என்று கேட்டான் ரகுபதி.

“ஐய்ய! உன் யோசனை பலமாக இருக்கிறதே! வியர்க்க விறுவிறுக்க வேர்வை சொட்டி வழிய வெயிலில் நடந்து போய்த் தான் சங்கீதத்தை அனுபவிப்பார்களோ? வருகிறபோது நடந்து வரலாம் அத்தான். ‘ஜிலு ஜிலு’ வென்று குளுமையாக இருக்கும், சிரமமும் தெரியாது” என்று அவன் கூறியதை ஆட்சேபித்தாள் ஸரஸ்வதி.

“உன் யோசனை அதைவிட அருமையாக இருக்கிறது. இரவு வேளையில் தனியாகச் சிறிசுகளை அழைத்துக்கொண்டு நடந்து வருகிறதாவது? அதுவும் உன் கால் இருக்கிற வலுவுக்கு நீ நடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறாயே, ஸரஸு?” என்று ஸ்வர்ணம் கோபித்துக்கொண்டாள். ஆகவே, மூவரும் பஸ்ஸில் போய் வருவது என்று தீர்மானித்துப் புறப்பட்டார்கள்.

அன்று கச்சேரிக்குச் சென்றிருந்த மூவரின் உள்ளங்களும் வெவ்வேறு கற்பனையில் மூழ்கி இருந்தன. ரகுபதியின் மனம் ஓர் இடத்திலும் நிலைக்காது அலை பாய்ந்து கொண்டிருந்தது.’அங்கு வந்திருக்கும் தம்பதிகளைப் பார்த்துப் பெருமூச்செறிந்தான். அவன் மட்டும் எத்தனை காலம் தனிமையை அனுபவிப்பது? இந்தக் கேள்வி அவன் மண்டையைக் குடைந்து எடுத்து அவன் தலையை வலிக்கச் செய்தது. சங்கீதம், நாத ரூபமாக இறைவனை வழிபடும் சாதனம் என்பதை அவன் அந்த நிமிஷம் மறந்து விட்டான். பாடகி பாடும் ஒவ்வொரு பாட்டும் அவனுக்குப் போதையை உண்டு பண்ணியது. ‘ஆறுமோ ஆவல், ஆறுமுகனை நேரில் காணாது’ என்று பாடகி பாடும்போது அவன் மது அருந்தியவனின் நிலையை அடைந்துவிட்டான். மேடையில் அமர்ந்து பாடும் பாடகி தங்கமாக மாறினாள். கச்சேரிக் கூடம் அவன் வீடாக மாறியது. அந்த வீட்டில் தங்கம் ஒருத்தி உட் கார்ந்து பாடுவதாகவும், அதை அவன் மட்டும் ரஸிப்பதாகவும் கற்பனை செய்து கொண்டான் ரகுபதி!

தங்கம் சிறிது நேரம் பாட்டை ரஸித்தாள். பிறகு அங்கே கூடியிருக்கும் பெண்மணிகளின் நடை, உடை, பாவனைகளைப் பெரிதும் கவனிக்க ஆரம்பித்தாள். வயலிலே கிராமத்தில் வேலை செய்யும் பெண்கள் போட்டுக்கொள்ளும் சொருக்குக் கொண்டையைக்கூட அல்லவா இந்த நகரத்தில் நாகரிகமாகப் போற்றுகிறார்கள் என்று நினைத்தாள். ஒய்யாரமாக ஒருத்தி வந்தாள். அடர்ந்த கூந்தலை அள்ளி வளைத்து உச்சந்தலையில் கொண்டை போட்டுக் கொத்துக் கொத்தாக ரோஜா மலர்களைச் செருகி இருந்தாள். கழுத்திலே நாலைந்து முத்துச் சரங்கள். காதில் மாங்காய் வடிவத்தில் செய்த தோடுகள். தோளில் சரிந்து விழும் உயர்ந்த மைசூர் ‘ஜார்ஜெட்’ புடைவை. தங்கம் வாயைப் பிளந்து கொண்டு அவளையே பார்த்தாள். மற்றொரு பெண் வந்தாள், அடக்கமாகத் தலையைக் குனிந்து கொண்டு. காஞ்சீபுரம் பட்டுப் புடைவை உடுத்தி, ஜடைக் குஞ்சலம் ஊசலாட, வைரங்கள் மின்ன, அமரிக்கையாய்த் தலைப்பைப் போர்த்திக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். பல ரகங்களில் உடை அணிந்து வரும் பெண்களைப் பார்ப்பதில் தான் தங்கம் பெரிதும் தன் பொழுதைக் கழித்தாள் எனலாம். ஸரஸ்வதி ஆடாமல், அலுங்காமல் பாடகியின் இசை இன்பத்தில் மூழ்கி இருந்தாள். வேறு எதிலும் அவள் மனம் செல்லவில்லை. இத்தகைய தெய்வீகக் கலைக்குத் தன் வாழ்நாளை அர்ப்பணம் செய்வதைவிட வேறு பயன் தரக்கூடியது ஒன்றுமில்லை என்று நினைத்து ஆனந்தப்பட்டாள் அவள்.

அவள் சிந்தனையைக் கலைத்து மெதுவான குரலில் ரகுபதி, “ஸரஸு! எனக்கு உடம்பை என்னவோ செய்கிறது. வீட்டுக்குப் போகலாம் வருகிறாயா?” என்று கூப்பிட்டான். மூவரும் எழுந்து வெளியே வந்தார்கள்.

“உடம்பு சரியில்லை என்றால் ‘டாக்ஸி’ வைத்துக்கொண்டு போகலாமே, அத்தான்” என்றாள் ஸரஸ்வதி. பயத்தால் அவள் முகத்தில் முத்துப்போல் வியர்வைத் துளிகள் அரும்பி இருந்தன.

“அப்படி பயப்படும்படி ஒன்றுமில்லை ஸரஸு. லேசாகத் தலையை வலிக்கிறது.. உன்னை பஸ்ஸில் ஏற்றிவிட்டு நானும் தங்கமும் காற்றாட நடந்து வருகிறோம். அம்மாவைக் கவலைப்பட வேண்டாம் என்று சொல்” என்றான் ரகுபதி.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *