இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

24. முள்ளின் வேதனை

பரிவுடன் மகனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டுக் கீழே சென்ற ஸ்வர்ணத்திற்கு வருத்தம் தாங்கவில்லை. சங்கீத விழாவுக்கு நாட்டுப்பெண் வராத விஷயம் ஊராருக்குத் தெரியும். நல்லதோ கெட்டதோ எதுவும் ஊராருடைய அபிப் பிராயத்துக்கு இணங்கித்தான் நடக்க வேண்டியிருக்கிறது. இது உலக இயல்பு. ”இருந்து, இருந்து ஒரே பிள்ளை. வீட்டிலே லக்ஷணமாக நாட்டுப்பெண் இராமல், வந்ததும் வராததுமாகப் பிறந்த வீட்டில் போய் மாசக் கணக்கில் உட்கார்ந்து கொண்டிருப்பது அழகாக இருக்கிறது!” என்று நாத்தனார் அலமு வேறு எப்போதும் ஸ்வர்ணத்திடம் கூறி அவள் மனத்தை வாட்டிக்கொண்டிருந்தாள்.

சாவித்திரி வருவதற்கு முன்பாவது வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலவி இருந்தன. தினம் தவறாமல் ஸரஸ்வதி விடியற்காலமும், சாயந்தரமும் பாட்டைச் சாதகம் செய்து வந்தாள். இப்பொழுதெல்லாம் எப்பொழுதோ அத்தி பூத்தாற் போல் பாடுவது என்று வைத்துக்கொண்டுவிட்டாள் ஸரஸ்வதி. பூஜை அறையை மெழுகும்போதும், கோலம் போடும் போதும், இறைவனுக்கு மாலை கட்டும்போதும் மட்டும் மெதுவாக மனதுக்குள் பாடிக்கொள்வாள். பிறவியிலேயே அவளுடன் கலந்து விட்ட அந்த இசை இன்பம் அவள் மனத்தைவிட்டு ஒரு கணமும் அகலவில்லை. வாயைத் திறந்து பாடினால் தான், பாட்டா? ஊர் ஊராகச் சென்று கச்சேரிகள் செய்தால்தான் சங்கீதமா? நித்திரையிலும் விழிப்பிலும் அவள் மனம் இசை இன்பத்தை அநுபவித்துக்கொண்டே யிருந்தது.

ஸரஸ்வதியின் பரந்த மனத்திலும் ஒருவிதத் துயர் குடிகொண்டிருந்தது. அவளால்தான் வீட்டில் இவ்வளவு சச்சரவுகளும் நேர்ந்துவிட்டதாகக் கருதினாள். இசை விழாவின்போது, தான் கச்சேரி செய்ய ஒப்புக்கொண்டதே தவறு என்று நினைத்தாள். சாவித்திரியின் ஊருக்குச் சென்று அவளை அழைத்துவந்து ரகுபதியிடம் சேர்த்து விடுவது என்று கூட யோசித்துப் பார்த்தாள். ஆனால், அங்கு அவளுக்கு எந்த விதமான வரவேற்பு கிடைக்குமோ? இதற்குள் ஊர் வதந்திகள் ஒன்றுக்குப் பத்தாக இறக்கை கட்டிக்கொண்டு எப்படி எல்லாம் பறந்து சென்றிருக்கின்றனவோ? அத்தான் ரகுபதி கல்யாணம் பண்ணிக் கொண்டவுடனேயே அவள் அந்த வீட்டிலிருந்து விலகிச் சென்றிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யப் புகுந்த கதையாக இப்பொழுது நினைத்து வருந்துவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? இவ்விதம் நினைத்து வருந்திக்கொண்டே ஸரஸ்வதி, ரகுபதி கச்சேரியிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்பே தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டு விட்டாள். ரகுபதி வந்ததும், அவன் யாருடனும் அதிகம் பேசாமல் மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டதையும் அறிவாள். ஸ்வர்ணம் மாடியிலிருந்து கீழே வந்ததும் வருத்தம் தாங்காமல் கண்ணீர் பெருக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். எவ்வளவோ சகிப்புத் தன்மையை அடைந்திருந்த அத்தை அழுவதைப் பார்த்து ஸரஸ்வதி கவலையுடன் அவள் அருகில் வந்து உட்கார்ந்து, “ஏன் அழுகிறாய் அத்தை? அத்தானுக்கு உடம்பு ஒன்றும் இல்லையே?” என்று விசாரித்தாள்.

இதற்குள்ளாக அலமு ஊருக்குப் புறப்படுவதற்காக மூட்டைகளைக் கட்டிவைத்துவிட்டு, “அவசரப்பட்டுக்கொண்டு முன்னே பின்னே விசாரியாமல் புது சம்பந்தம் செய்தாயே மன்னி; இப்பொழுது படுகிறாய் சேர்த்துவைத்து!” என்று ஆத்திரத்துடன் இரைந்து பேசினாள். ஸ்வர்ணத்துக்கு அடங்கி இருந்த துக்கமெல்லாம் பொங்கி வந்தது.

“இந்தாடி அம்மா! பெண்ணை நான் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வரவில்லை. உன் மருமானும் தான் வந்தான். அவன் மனசுக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிந்துதான் கல்யாணம் நடந்தது.”

“அந்தச் சவரணைதான் தெரிறெதே!” என்றாள் அலமு.

மறுபடியும் ஏதாவது சண்டை ஆரம்பித்துவிடப்போகிறது என்று நினைத்த ஸரஸ்வதி, அதட்டும் குரலில், “அத்தை! அத்தானுக்கு ஒரே தலைவலி என்றானே. அவன் தூங்குகிற சமயமாக நீங்கள் இங்கே சண்டைக்கு ஆரம்பிக்கிறீர்களே. பாவம், அவனைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. போதும்; உங்கள் பேச்சை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, ‘விர்’ ரென்று எழுந்து கூடத்தில் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்த விளக்கை அணைத்துவிட்டுத் தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

கூடத்து மூலையில் மங்கலாக எரியும் சிறு விளக்கின் வெளிச்சத்தில், அதற்கு மேல் பேச்சை வளர்த்த இஷ்டப்படாமல், அலமு கோபத்துடன் படுக்கையில் ‘பொத்’ தென்று சாய்ந்து படுத்துக்கொண்டுவிட்டாள்.

மாடியில் படுத்திருந்த ரகுபதிக்கு மனப்பாரம் சற்றுக் குறைந்தது. நிசப்தமான இரவில் நீல வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே வெகுநேரம் வெளியில் நின்றிருந்தான் அவன். மறுபடியும் தன் அறைக்கு வந்து அவன் படுக்கும் போது ஸரஸ்வதியின் அறையைக் கவனித்தான். லேசாக வீசும் நிலவொளியில் ஸரஸ்வதிக்கு அருகாமையில் தங்கம் படுத்திருந்தாள். அவளுடைய அழகிய கைகள் ஸரஸ்வதியின் கழுத்தை வளைத்துக் கட்டிக்கொண்டிருந்தன. மங்கிய வெளிச் சத்தில் தங்கம் நன்றாக விழித்துக்கொண்டு படுத்திருப்பது தெரிந்தது. ‘ஆமாம்… ஸரஸ்வதியும் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள். மெல்லிய குரலில் இருவரும் ஏதோ பேசுகிறார்கள். தங்கம் இவ்வளவு அந்தரங்கமாக என்ன பேசப்போகிறாள்? அன்று மாலை கச்சேரியிலிருந்து திரும்பும்போது நான் அசட்டுப் பிசட்டென்று அவளிடம் நடந்துகொண்டதை ஸரஸ்வதியிடம் வெளி யிடுகிறாளோ? பொழுது விடிந்தால் தங்கம் ஊருக்குப் போய் விடுவாள். ஆனால், ஸரஸ்வதிக்கு என் அசட்டுத்தனம் தெரிந்த பிறகு. அவளிடம் . எதிரில் நின்று பேசவே வெட்கமாக இருக்குமே!’ என்று நினைத்து ரகுபதி வெட்கமடைந்தான். ஸரஸ்வதி பேசுவதைக் கேட்டுவிட்டுத் தங்கம் அந்த நள்ளிரவிலும் ‘கலீ’ரென்று சிரித்தாள்.

“போடி அசடே! அத்தை விழித்துக்கொண்டுவிடப் போகிறாள். கதையைக் கேட்டுவிட்டு இப்படியா சிரிப்பார்கள்?” என்று தங்கத்தை அதட்டிவிட்டு ஸரஸ்வதி திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

ரகுபதி நீண்ட பெருமூச்சு விட்டான். ‘நல்லவேளை! கதை பேசிக்கொள்கிறார்களா? என்னவோ என்று பயந்து போனேனே’ என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக் கொண்டே அறைக்குள் சென்றான்.

இரவு தூங்குவதற்கு நேரமாகவே ரகுபதி விடியற்காலம் அயர்ந்து தூங்கிவிட்டான். அவன் எழுந்திருக்கும்போது பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சமையலறையில் ஸரஸ்வதி, ஸ்வர்ணத்துக்கு உதவியாக வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றிவரும் தங்கமும், அலமுவும் விடியற்காலையிலேயே ஊருக்குப் போய்விட்டதால் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து தன் மேலாக்கு பறக்க வீசி வீசி ஊஞ்சலாடும் தங்கம், அவனிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் ஊருக்குப் போய்விட்டாள்.

“அத்தானிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்று வேகமாக மாடிப்படிகளில் ஏறிய தங்கத்தின் கைகளை ஸரஸ்வதி பற்றி இழுத்தாள்.

“இந்தாடி அசடே! கொஞ்சங்கூட நாகரிகமே தெரிய வில்லையே உனக்கு? நீ இன்று ஊருக்குப் போவதைத்தான் ஆயிரம் தரம் சொல்லியாயிற்றே. நேற்றெல்லாம் உடம்பு சரியில்லையே அவனுக்கு. இப்போது போய் அவனைத் தொந்தரவு செய்வானேன்?” என்று உரிமையுடன் அதட்டி அவள் மாடிக்குப் போவதைத் தடுத்தவள் ஸரஸ்வதிதான்.

“எனக்குப் பதிலாக நீயே சொல்லிவிடு , அக்கா” என்று தங்கம் சிரித்துக்கொண்டே கூறிச் சென்றிருந்தாள்.

ரகுபதி தீவிரமாக யோசித்தான். ‘கொத்துக் கொத்தாக ரோஜாச்செடியில் மலர்கள் குலுங்குகின்றன. ‘பறிக்கவேண்டும்; முகர்ந்து பார்க்கவேண்டும்; அதன் மெல்லிய இதழ்களை வருடவேண்டும்’ என்று ஒவ்வொருவரும் ஆசைப்படுவது இயற்கைதான். அதுபோல் அழகிய தங்கம் வந்தாள். முல்லைச் சிரிப்பால் என் மூடிய மனதை மலர வைத்தாள். பட்டுப் பூச்சி வர்ண ஜாலங்களை வீசுவதைப்போல், நொடிக்கொரு பேச்சும், நாழிக் கொரு வார்த்தையுமாக வளைய வந்தாள். மலர் செறிந்த ரோஜாச் செடியில் மலரைக் கிள்ளும்போது, ‘சுரீர்’ என்று தைக்கும் முள்ளைப்போல, ‘ஊருக்குப் போகிறேன்’ என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் மனதைக் குத்திவிட்டு ஓடிப்போய்விட்டாள். மலரின் மென்மையை மெச்சுவதுபோல் முள்ளின் வேதனையையும் மெச்சித்தான், ‘சபாஷ்’ போடவேண்டும். நேற்று இரவு ஸ்ரீராமபிரான் கோவில் முன்பு கைகூப்பி வணங்கி வேண்டிக் கொண்டதை யெல்லாம் மனம் மறந்துவிட்டது. மறுபடியும், ‘தங்கம், தங்கம்’ என்று ஜபிக்க ஆரம்பித்துவிட்டதே! இது என்னடா, தொந்தரவு?’ என்று ரகுபதி மண்டையைக் குழப்பிக் கொண்டான்.

சமையலறையிலிருந்து ஸரஸ்வதி கூடத்துக்கு வந்தாள். கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு பித்துப் பிடித்தவன் போல் நிற்கும் ரகுபதியைப் பார்த்து, “அத்தான்! தலைவலி எப்படி இருக்கிறது? கீழே வந்து பல் தேய்த்துவிட்டுக் காப்பி சாப்பிடுகிறாயா? இல்லை, மாடிக்கே நான் வெந்நீரும், காப்பியும் கொண்டு வரட்டுமா?” என்று விசாரித்தாள்.

“வேண்டாம் ஸரஸு! நானே வருகிறேன். அலமு அத்தையும், தங்கமும் ஊருக்குப் போய்விட்டார்களா? நன்றாகத்தான் தூங்கிவிட்டேன் போல் இருக்கிறது. என்னை எழுப்பக்கூடாதோ?” என்று கேட்டான் ரகுபதி,

“தங்கம் உன்னிடம் சொல்வதற்குத்தான் மாடிக்கு வந்தாள். நான் தான் உன்னைத் தொந்தரவு செய்யக்கூடா தென்று தடுத்துவிட்டேன். பாவம்! கபடமில்லாத பெண் அவள். . அவள் இல்லாமல் எனக்குக்கூட பொழுது போகாதுபோல் இருக் கிறது” என்றாள் ஸரஸ்வதி.

ரகுபதி மாடிப்படிகளில் மன நிம்மதியுடன் இறங்கினான். “தங்கம் என்னிடம் சொல்லிவிட்டுப் போகத்தான் நினைத்தாள்”: இது அவனுக்கு எவ்வளவோ ஆறுதலை அளித்தது. தங்கம் மாடிக்கு வந்து என்னை எழுப்பி இருந்தால் தொந்தரவு ஏற்பட்டுவிடும் என்று ஸரஸ்வதி தடுத்துவிட்டாளாமே? இது என்ன விந்தை! விந்தைதான்! கட்டவிழ்த்துவிட்ட குதிரை மாதிரி மனதுக்கு, ‘எது நல்லது. எது கெட்டது’ என்பதைத் தெரிய வைக்க ஸரஸ்வதியைப்போன்ற ஒருத்தி தேவைதான்! தங்கம் மாடிக்கு வந்திருந்தால் நிஜமாகவே ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருக்கலாம்.’ – விவேகியான ரகுபதியின் மனம் ஸரஸ்வதிக்கு மானசிகமாகத் தன் நன்றியைச் செலுத்தியது.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *