
இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி
20. ‘தை பிறந்தால் வழி பிறக்காதா?
ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்குமேல் கூடியிருந்த அந்த மண்டபத்தில் சபைக் கூச்சம் எதுவும் ஏற்படாமல் தங்கம்: ‘கணி’ ரென்று பாடினாள். அவளுக்குத் துணையாக ஸரஸ்வதியும் மெதுவான குரலில் பாடவே அவளுக்கு அச்சம் எதுவும் ஏற்படவில்லை. தந்தப் பதுமைபோல் நின்று அவள் பாடிய அழகே அங்கு, வந்திருந்தவர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. ஸரஸ்வதி வருஷக்கணக்கில் சங்கீதம் பயின்றவள். அவள் முதல் கச்சேரியே மிகவும் தரமாக அமைந்துவிட்டது. அன்று அவள் பாடிய சங்கராபரணமும், தோடியும் வெகு நேரம் வரை எல்லோர் காதுகளிலும் ரீங்காரம் செய்துகொண்டிருந்தன. பேருக்கும் புகழுக்கும் ஆசைப்படாமல் எங்கும் நிறைந்த பரப்பிரும்மத்தை நாத ரூபமாக வணங்கினாள் ஸரஸ்வதி.
ரகுபதிக்கு அன்று, தான் விழாவில் கலந்து கொண்டிருக்கும் உணர்ச்சியே ஏற்படவில்லை. கானவெள்ளத்தில் : எல்லோரையும் இழுத்துச் செல்லும் ஸரஸ்வதியும், தன்னடக்கமாக அவன் வார்த்தைக்கு மதிப்பு வைத்து ஒரு நாளைக்குள் சிறிய பாட்டைப் பாடம் செய்து கச்சிதமாகப் பாடிய தங்கமும் மாறி மாறி அவன் அகக் கண்முன்பு தட்டாமாலை ஆடினர். குழந்தைப் பருவத்திலிருந்து பார்த்த ஸரஸ்வதியாக அன்று அவள் அவன் கண்களுக்குத் தோன்றவில்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் நாவுகளின் புகழுக்குப் பாத்திரமாகிவிட்டாள் அல்லவா? அவள் இனிமேல் சாதாரண விஷயங்களில் மனதைச் செலுத்தவும் மாட்டாள். தங்கம் அப்படியில்லை. வாழ்க்கையில் தனக்கு இனியனாக ஒருவன் கிடைக்க மாட்டானா என்று ஏங்கி நிற்பவள். பாட்டும், கதையும் தெரிந்து கொண்டிருந்தாலாவது கல்யாண ‘மார்க்கெட்’டில் விலை பெறுவோமா என்று காத்திருப்பவள். அவளை முன்பாகவே சாவித்திரியைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்கு முன்பாகவே பார்த்திருந்தால் தங்கத்தையே மணந்திருக்கலாம்.
“தங்கம்! என் துணிகளைத் துவைத்து வை” என்று உத்தரவு இடலாம். அதை அவள் சிரமேற்கொன்டு செய்து முடிப்பாள். “தங்கம்; ஏதோ உனக்குத் தெரிந்த பாட்டு இரண்டு பாடு மனசு என்னவோபோல் இருக்கிறது” என்றால் ஏதோ பாடியும் வைப்பாள். கலகலவென்று சிரிப்பாள். கோபம் வந்தாலும் உடனே தீர்ந்துவிடும். இப்பொழுது? அது தான் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்களே, ” அவசரமாக மணமுடித்து, சாவதானமாக யோசிப்பது” என்று. அந்த நிலைக்கு ஏறக்குறைய ரகுபதியின் நிலை வந்துவிட்டது.
விழாவில் நண்பர்கள் அவனைக் கேலி செய்தார்கள்.
“என்ன அப்பா! மனவியை இந்த மாதிரி சமயத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டாய். சகதர்மிணியோடு சேர்ந்து செய்கிற காரியத்துக்கே பலன் அதிகம் என்று சொல்லுவார்களே” என்று கேட்டு அவன் மனத்தைப் புண்ணாக்கினார்கள்.
” வேறு ஏதாவது விசேஷமோ?” என்று நண்பர் ஒருவர் குறும்புச் சிரிப்புடன் அவனைக் கேட்டார்.
“மாஸ்டர் ரகுபதி வரப்போகிறான் போலிருக்கிறது. விசேஷம் இருக்கிறது ஸார்!” என்றார் இன்னொருவர்.
“அதெல்லாம் ஒன்றுமில்லையப்பா” என்று மேலுக்குச் சிரித்து மழுப்பினான் ரகுபதி.
மேலும் அங்கு உட்கார்ந்திருந்தால் பேச்சை வளர்த்துவார்கள் என்று தோன்றியதால் வெளியே சென்றுவிட்டான் அவன். மறுபடியும் அவன் வீட்டுக்கு வந்தபோது தங்கமும், எரஸ்வதியும் கூடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். அலமு அத்தை தன் கையில் நாலைந்து மிளகாயையும், உப்பையும் வைத்து அவர்கள் இருவருக்கும் சுழற்றி உள்ளே எரியும் அடுப்பில் போட்டாள். திருஷ்டி தோஷம் ஏற்பட்டுவிடுமாம்!
”கட்டாயம் சுற்றிப்போடு அத்தை, என் கண்ணே பட்டு விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். ‘சாதாரணமாகத்தான் பாடுவேன்’ என்று சொல்லிவிட்டு ஜமாய்த்துத் தள்ளி நட்டாளே தங்கம்!” என்று தன் அதிசயத்தையும், சந்தோஷத்தையும் வெளியிட்டான் ரகுபதி.
“அவளுக்கு என்ன தெரியாது என்று நினைக்கிறாய்? பத்துப் பேர்களுக்குப் பேஷாகச் சமைத்துவிடுவாள். மணி மணியாகக் கோலங்கள் போடுவாள். வயலிலே போய்க் கதிரடிக்கச் சொல்; சேலைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டு குடியானப் பெண் சருடன் கதிரடிப்பாள், குளத்திலே முழுகி நீச்சலடிப்பாள். ஆனால், அவளுக்கு ஆங்கிலம் படிக்க வராது. உடம்பு தெரிய இருளும் ஒளியும் உடைகள் உடுத்திக்கொண்டு உதட்டுக்குச் சாயம் பூசிக் கொள்ளத் தெரியாது” என்று அலமு ஆரம்பித்துவிட்டாள்.
“ஓஹோ !” என்றான் ரகுபதி. “உனக்கு நீந்தத் தெரியுமா? பலே! நான் கிராமத்துக்கு வந்தால் எனக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பாயா தங்கம்?” என்று கேட்டான் ரகுபதி.
“போங்கள் அத்தான்! இந்தப் பெரியம்மாவுக்கு என்ன வேலை? எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பாள்!” என்று சிரித்துக்கொண்டே தங்கம் ஓடி மறைந்து விட்டாள்.
ஸரஸ்வதி ரகுபதியைப் பார்த்து, ” என்ன அத்தான்! –கிராம யாத்திரை ஏதாவது போவதாக யோசனையோ?” என்று கேட்டாள்.
“வரட்டுமே இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறானாம்? பெண்டாட்டிதான் கோபித்துக்கொண்டு ஊரிலே போய் உட்கார்ந்திருக்கிறாள். இவன் போய் அவளை வேண்டி அழைத்துவர வேண்டுமாக்கும்! நன்றாக இருக்கிறது ஸ்திரீ சுதந்தரம்?” என்று அலமு சற்று இரைந்து கோபத்துடன் கூறினாள்.
“அப்பொழுது தங்கத்தையும் உங்களோடு அழைத்துட் போய் விடுவீர்களா என்ன?” என்று கேட்டாள் ஸரஸ்வதி.
“ஆமாம். அவள் இங்கே எதற்காக இருக்க வேண்டும்? உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள், அழைத்து வந்தேன்” என்றாள் அலமு.
சாவித்திரி புக்ககத்துக்கு வந்தாள். வந்து இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஊருக்குப் போய்விட்டாள். மறுபடியும் ஸரஸ்வதியின் வாழ்க்கை தனியாகவே கழிந்தது. திடீரென்று தங்கம் வந்தாள், பெயரைப்போல் ஒளியை வீசிக்கொண்டு! சாவித்திரியைப்போல் இல்லாமல் கபடமற்றுப் பழகினாள். ஸரஸ்வதியுடன் பாடினாள். “ஸரஸு அக்கா!” என்று சகோதர பாவம் கொண்டாடி அருமையாக அழைத்தாள்! ஸரஸ்வதியின் மனத்தில் இடமும் பிடித்துக்கொண்டாள். பத்தரைமாற்றுப் பசும் பொன்னை உருக்கி வளைப்பது போல் தங்கத்தைப் பலவிதங்களிலும் சீர்திருத்தி சமூகத்தில் உயர்ந்தவளாகச் செய்ய முடி.யும் என்று ஸரஸ்வதி கருதினாள். அவளிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்குக் கொண்டுவரமுடியும் என்று நினைத்தாள்,
ஆனால் தங்கம் ஊருக்குப் போகப்போகிறாள். கிராமத்திலே இருண்ட ஓட்டு வீட்டின் மூலையில் ’மினுக் மினுக்’ கென்று எரியும் அகல் விளக்கைப்போல் அவளும் கிராமத்திலே இருண்ட வீட்டில் மங்கிய வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டு இருப்பாள். இந்தப் பெண்-சமூகத்தில் எல்லா நலங்களையும் பெற்று வாழ வேண்டிய தங்கம் – யாராவது ஒரு வயோதிகனுக்கோ, வியாதிக் காரனுக்கோ, தன் கழுத்தை நீட்டி, விவாகம் என்கிற பந்தத்தைப் பிணைத்துக் கொள்ளாமல் – இருக்கவேண்டுமே! அரும்பு வெடித்து மலர்வதற்கு முன்பே கசக்கி எறியப்படாமல் இருக்க வேண்டுமே! அப்படி – அவளைக் காப்பாற்ற யார் வரப் போகிறார்கள்?
ஸரஸ்வதியின் மென்மையான மனம் புண்ணாக வலித்தது. ‘இன்று அவள் அந்த வீட்டுக் கூடத்தில் கண்ட தங்கத்தைப் போல் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆயிரம் ‘தங்கங்கள்’ அவதிப்படுகிறார்கள். ஏழைப் பெண்கள் என்கிற காரணத்தினால் நசுக்கப் படுகிறார்கள் என்பதை நினைத்தபோது, ஏனோ அவள் மனத்தை ஆயிரம் ஊசிகளால் குத்தும் வேதனையை அடைந்தாள். மனத்தில் குமுறும் வேதனையுடன் ஸரஸ்வதி அங்கிருந்து சென்று தங்கம் உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு வந்தாள். அவள் கரங்களைப் பற்றிச் சேர்த்துத் தன் கைகளில் பிணைத்துக்கொண்டு, “தங்கம்! நீ ஊருக்குப் போகிறாயாமே தங்கம்? ஏன், உனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லையா என்ன?” என்று கேட்டாள்.
தங்கத்தின் கண்களிலும் கண்ணீர் தளும்பி நின்றது.
“பிடிக்காமல் என்ன அக்கா? இருந்தாலும், எத்தனை நாளைக்கு நான் இங்கே இருக்க முடியும்? தை பிறந்தால் எனக்கும் ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கிக் காத்திருக்க வேண்டாமா நான்? அத்துடன், என் ஊரில் எனக்கு ஏற்படும் இன்பம் மற்ற இடங்களில் ஏற்படுவதில்லை அக்கா. ‘தங்கம்மா’ என்று கபடமில்லாமல் அழைக்கும் அந்தக் கிராமவாசிகளின் அன்பை எனக்கு இங்கே காணமுடியவில்லை. இங்கேயும் உன் னைத் தேடி அநேகம் பெண்கள் வருகிறார்கள். உன்னுடைய அருமைத் தோழிகள் என்று சொல்லிக்கொள்கிறாய். ஆனால், அவர்கள் பகட்டாகப் பேசுகிறார்கள். மனம் விட்டு நீங்கள் எதுவும் பேசுவதில்லை. அன்று ஒரு பெண்ணைப் பார்த்து நீ கேட்டாயே, ‘ உன் கணவரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறதா? சௌக்யமாக இருக்கிறாரா?’ என்று. அதற்கு அவள் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டுத் தலையை மட்டும் ஆட்டிவிட்டாள். எங்கள் ஊரிலேயானால் கொள்ளை விஷயங்களைச் சொல்லி விடுவாளே அந்த மாதிரி ஒரு பெண்! உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவதை அநாகரிகமாகக் கருதுகிறார்களோ என்னவோ உன் தோழிகள்!
“தங்கம்! நீ ரொம்பவும் புத்திசாலி. சேற்றிலே மலரும் தாமரையைப்போல உன்னை நினைக்கிறேன் தங்கம். ஏதாவது அசட்டுப் பிசட்டென்று பயந்து கொண்டு செய்துவிடாதே. உனக்குப் பிடிக்காதவரை மணந்து கொள்ளாதே. தெரியுமா?” என்று விரலை ஆட்டிக் கண்டிப்புடன் எச்சரித்தாள் ஸரஸ்வதி.



