இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

34. பிரார்த்தனை

பொழுது விடிந்தால் ஸரஸ்வதி ஊருக்குப் புறப்பட வேண்டும். மைசூர் ராஜ்யத்தில் பல இடங்களில் அவள் கச்சேரிகள் நடைபெற்றன. கோபாலதாஸர் அக்கறையுடன் அவளைக் கவனித்துக் கொண்டார். அதிகமாகப் புகழும், பொருளும் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையைவிட, கலை மூலமாக – நாதோபாஸனையின் மூலமாக– உள்ளத்தைத் தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆசைதான் ஸரஸ்வதியிடம் மேலோங்கி இருந்தது. அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் காலையிலேயே ஸரஸ்வதி கோபாலதாஸருடன் சாமுண்டிமலைக்குப் புறப்பட்டாள். பனி போர்த்த மைசூர் நகரம் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. ‘சிலு சிலு’ வென்று நடுக்கும் குளிரில், ஸரஸ்வதி காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு மலைக்குப் புறப்பட்டு விட்டாள். மலை அடிவாரத்தை அடைந்ததும் கோபாலதாஸர் அவளைக் கனிவுடன் பார்த்து, “குழந்தை! உன்னால் மலை ஏற முடியுமா? இல்லாவிடில் ‘டாக்ஸி’ வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்.

“வேண்டாம் மாமா! மெதுவாக நடந்து இயற்கைக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே போகலாம். நாம் யந்திர யுகத்தில் வசிப்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே. தெய்வ சந்நிதானத்தில் கூடவா நம் அவசரத்தைக் காண்பித்துக் கொள்ள வேண்டும்?’ என்று கூறிப் படிகளின் வழியாக ஏற ஆரம்பித்தாள்.

மைசூர் நகரம் அமைதிக்கு இருப்பிடம். அங்கு அமைதியாகப் பெருகி ஓடும் காவிரியே அதற்குச் சாட்சியாக விளங்குகிறாள். நவராத்திரிகளில் கோலாகலம் நிரம்பியிருக்கும் இந்த அழகிய நகரத்தில், மற்ற நாட்களில் அமைதியைக் காணலாம். மலை மேல் உயர்ந்து நிற்கும் கோபுரத்தைப் பார்த்ததுமே ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. ஜகன்மாதா என்று அழைக்கப்படும் தேவி இங்கு ரௌத்ராம்சத்தில் வீற்றிருக்கிறாள். தாயின் அன்பில் கோபத்தையும், கண்டிப்பையும் காணமுடிகிறதே. அப்படி லோகமாதாவின் அன்பிலே கோபம் பொங்கி வழிகிறது. ’அதர்மத்தைப் பொறுக்கமாட்டேன்’ என்று கர்ஜித்து கோரரூப மெடுத்து அதைச் செயலிலும் காட்டி இருக்கிறாள் ஈஸ்வரி.

சந்நிதியின் முன்பு கூப்பிய கரங்களுடன் ஸரஸ்வதி நின்றிருந்தாள். கண்களிலிருந்து அருவிபோல் நீர்பெருக, “ஜய சங்கீத ரஸிகே!” என்கிற சியாமளா தண்டக ஸ்லோகத்தில் ஒரு வரியைத் திருப்பித் திருப்பி வாய்க்குள் பாடிச்கொண்டாள் அவள்.

“உன்னத லட்சியங்களுக்கு இருப்பிடமாகவும், மனத் தூய்மையுடனும், உன்னிடம் மாறாத பக்தியைச் செலுத்துபவளாகவும் என்னை வைத்திரு. தாயே!” என்று உள்ளம் உருகப் பிரார்த்தித்தாள் ஸரஸ்வதி.

கோவிலைவிட்டுக் கீழிறங்கி ஸ்ரீரங்கப் பட்டணத்தை அடைவதற்குள் ஸரஸ்வதியின் மனம் தூய்மை பெற்றுவிட்டது எனலாம். சில நாட்களாகவே அவள் உள்ளம் சந்துருவை அடிக்கடி நினைக்க ஆரம்பித்திருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், இடையில் தன் உறுதி தளர்ந்து போவதை அவள் விரும்பவில்லை. சந்துருவைத் தான் மணந்து தான் ஆக வேண்டும் என்கிற அவசியமும் ஒன்றும் இல்லை. அந்த உறுதி வலுப்பெற ஸ்ரீ சாமுண்டீச்வரி அவளுக்கு அருள் புரிந்தாள். சமீபத்தில் விவாக பந்தத்தில் சிக்கவேண்டாம் என்றும் தீர்மானித்துக் கொண்டாள் ஸரஸ்வதி.

அதற்கு அநுசரணையாகக் கோபாலதாஸர் வழி நெடுக ஸரஸ்வதியைப் பார்த்து, ”திருச்செந்தூர் பார்த்திருக்கிறாயா? பழனிக்குப் போய் இருக்கிறாயா? மதுரையில் மீனாக்ஷியை வணங்கி இருக்கிறாயா? கண்ணனின் வேய்ங்குழல் நாதத்தால் புனித மாக்கப்பட்ட பிருந்தாவனம், வட மதுரைக்குப் போய்ப் பாரம்மா. கோகுலத்தில் அவன் திவ்யரூபத்தை நீ வணங்க வேண்டும். பக்தை மீராவின் பாடல்களைக் கேட்க வேண்டும். ’தாஸ மீராலால கிரிதர’னின் புகழைக் கேட்க வேண்டும். உலகம் உன்னுடைய அத்தையையும், அத்தானையும், சாவித் திரியையும் மட்டும் கொண்டதல்ல. உலகம் பரந்தது. அதில் எல்லோரும் உன் நண்பர்கள், உறவினர்கள் என்கிற மனப் பான்மையை நீ வளர்க்க வேண்டும். எப்பொழுதாவது இல்லறத்தில் நீ ஈடுபட்டாலும் ஆண்டவனிடம் பக்தி செலுத்து வதை மட்டும் மறக்காதே. இறைவனின் திவ்ய ரூபத்தை உன் மனசில் பிரதிஷ்டை செய்து கொள் அம்மா. உனக்கு ஒரு குறைவும் வராது!” என்று பல விஷயங்களைக் கூறி ஆசீர்வதித்தார்.

ரெயில் நிலையத்துக்கு வழி அனுப்ப வந்திருந்தார் கோபால தாஸர். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே ஸரஸ்வதி அவரை வணங்கினாள். “மாமா! எனக்குத் தெரியாத பல விஷயங்களைத் தெரிய வைத்தீர்கள். என் அத்தானையும், சாவித்திரியையும் ஒன்று சேர்த்த பிறகு அத்தையுடன் நான் வட நாட்டுக்குப் புறப்படுகிறேன். ஒன்று சேர்ந்த தம்பதிகளிடமிருந்து சில நாட்கள் நாங்கள் பிரிந்து தான் இருக்க வேண்டும். கட்டாயம் பக்தை மீரா வசித்த புனித ஸ்தலத்துக்குப் போகிறேன். அவள் அழகிய பாடல்களைக் கற்றுக்கொள்கிறேன். துளசிதாஸரின் அருமையான ராமாயணக் கவிதைகளைப் படிக்கிறேன், வங்கத்துக்குச் சென்று மகாகவி தாகூரின் உபதேசங்களைக் கேட்கிறேன். ராஜகட்டத்துக்குப் போய் அண்ணல் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துகிறேன். என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள்!” என்று அவரை வேண்டிக்கொண்டாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *