இருளும் ஒளியும்
சரோஜா ராமமூர்த்தி

19. ‘ நந்தகோபாலனோடு நான்’

ஸரஸ்வதியின் இன்னிசைக் கச்சேரியின் அரங்கேற்றத்துடன் திறப்புவிழா இனிது முடிந்தது. சாவித்திரி வராமலேயே வைபவம் குறைவில்லாமல் நடந்துவிட்டது. அன்று காலைவரையில் தெருவில் போகிற வண்டியைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனாள் ஸ்வர்ணம்! ஊரில் தெரிந்தவர்கள் கேட்பதற்குப் பதில் சொல்லியே அவளுக்குச் சலித்துப்போய்விட்டது. முதல் நாள் அலமு, ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லிய செய்திகள் வேறு அவள் மனத்தை அரித்தன.

“நீதான் ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாது என்று மூடி மூடி வைத்திருக்கிறாய். உன் நாட்டுப்பெண்ணின் பாட்டி இருக்கிறாளே, அவள், நாம் தான் அவள் பேத்தியைப் பாடாய்ப் படுத்தி வைக்கிறோம் என்று தம்பட்டம் அடித்து வருகிறாள். அதற்கு என்ன பண்ணப்போகிறாய் மன்னீ?” என்று அலமு ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டாள்.

ஸ்வர்ணத்துக்கு வியப்பும், கோபமும் ஒருங்கே ஏற்பட்டன. ‘புருஷனுக்கும், மனைவிக்கும் ஏதோ சில்லறை மனஸ்தாபத்தால் பிறந்தகம் போயிருக்கும் பெண் கிளப்பிவிட்டிருக்கும் வதந்தி எவ்வளவு அபாண்டமாக இருக்கிறது? சாவித்திரியிடம் நான் எவ்வளவு அன்புடன் இருந்தேன்? இரண்டு வேளைகளிலும் தலை வாரிப் பின்னிப் பூச் சூட்டுகிறதும், பரிந்து பரிந்து சாதம் போடுகிறதுமாக இருந்தவளையே எப்படித் தூற்றிவிட்டாள் பார்த்தாயா?’ என்று நினைத்து நினைத்து வருந்தினாள்
ஸ்வர்ணம்,

“என்ன அம்மா அப்படியே அசந்து நின்றுவிட்டாய்? சொல்லிவிட்டுப் போகட்டும் போ” என்று ரகுபதி தாய்க்கு ஆறுதல் கூறினான்.

தங்கமும், ஸரஸ்வதியும் விழாவில் குதூகலத்துடன் பங்கெடுத்துக்கொண்டார்கள். . எப்படிக் கூப்பிடுவது? என்ன உறவு என்று சொல்வது என்று கவனியாமல் தங்கம், ஸரஸ்வதி அழைப்பது போல், “அத்தான்!” என்று ஆசையுடன் ரகுபதியை அழைத்து ஓடி ஓடி வேலைகளைச் செய்தாள்.

” உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள். இதோ ஒரு நிமிஷத்தில் தயார்!” என்று சிரித்துக்கொண்டே பேசி அவன் மனத்தைக் கவர்ந்துவிட்டாள் தங்கம். ”உனக்குப் பாடத் தெரியுமா?” என்று ரகுபதி அவளை விளையாட்டாகக் கேட்டபோது. “ஓ!” என்று தலையை ஆட்டினாள் தங்கம். “பாடுவேன். ஆனால், ஸரஸு அக்கா மாதிரி தாளம் கீளம் போட்டுக்கொண்டு சுத்தமாகப் பாடத் தெரியாது. கிராமத்துக்கு வரும் சினிமாவிலிருந்து எவ்வளவு பாட்டுகள் கற்றுக்கொண்டிருக்கிறேன் தெரியுமா? மாட்டிற்குத் தீனி வைக்கும் போது பாடுவேன். கோலம் போடும் போது பாடுவேன்; ஸ்வாமிக்கு மலர் தொடுக்கும்போது பாடுவேன்; கிணற்றில் ஜலம் இழுக்கும்போது பாடுவேன்; மாடு கறக்கும் போதும், தயிர் கடையும்போதும் பாடுவேன். என் பாட்டைக் கேட்டு ரசிப்பவர்கள் மேற்கூறியவர்கள்தாம், அத்தான்! நான் பாடுவதைக் கேட்டுப் பசு மெய்ம்மறந்து கன்றை நக்குவதற்குப் பதிலாக என் முகத்தையே பார்த்துக் கொண்டு
நிற்கும். ”

கிண்கிணியின் நாதம்போல் படபட வென்று தங்கம் பேசிக் கொண்டு போனாள்.

“சரி, அப்படியானால் ஸரஸ்வதியிடம் நாளைக்குள் கடவுள் வாழ்த்துப் பாடுவதற்கு ஏதாவது பாட்டு கற்றுக்கொள்’. நாளைக்கு நீதான் பாடவேண்டும்” என்றான் ரகுபதி திடீரென்று.

“ஆ….” என்று வாயை ஆச்சரியத்துடன் திறந்தாள் தங்கம்.

‘ஏறக்குறைய ஆயிரம் பேர்களுக்கு எதிரில் தான் பாடுவதா? ஐயோ! தொண்டை எழும்பவே எழும்பாதே. எனக்கு. பாடத் தெரியும் என்று இவரிடம் சொன்னதே ஆபத்தாக முடிந்துவிட்டதே’ என்று பயந்து கொண்டே தயங்கினாள் தங்கம். ஆகவே, சிறிது அச்சத்துடன் ரகுபதியைப் பார்த்து, “முதலிலேயே பெரிய பரீக்ஷை வைத்துவிட்டீர்களே! யாரும் இல்லாத இடத்தில் என்னவோ வாய்க்கு வந்ததைப் பாடுவேன் என்று சொன்னால், விழாவுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடு என்கிறீர்களே அத்தான். நன்றாக இருக்கிறதே!” என்று கன்னத்தில் வலது கையை ஊன்றிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே கூறினாள்.

“மனம் போனபடி பாடுபவர்களுக்குத்தான் தைரியம் உண்டு. விழா மண்டபத்தைக் கிராமத்தின் மாட்டுத் தொழுவமாக நினைத்துக்கொண்டுவிட்டால் ஆயிற்று. எல்லாவற்றிற்கும் மனம் தானே காரணம், தங்கம்? அரண்மனையையும், குடிசையையும் சமமாகப் பாவிக்கும் மகான்கள் பிறந்த சத்தில் கொஞ்ச மாவது நாம் சமதிருஷ்டியோடு இருக்கவேண்டாமா? ஏதோ ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம். பிறகு சொல்கிறேன், உனக்குப் பாட வருமா, வரதா என்று?” என்றான் ரகுபதி. சிறுது பொழுது தங்கம் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். பிறகு மெதுவான குரலில், ‘நந்தகோபாலனோடு நான் ஆடுவேன்’ என்கிற பாட்டை பல பிழைகளுடன் பாட ஆரம்பித்தாள். பிழைகள் மலிந்திருந்தபோதிலும், அவள் பாட்டில் உருக்கம் இருந்தது. அவள் மனத்தில் கண்ணனின் உருவம் நிறைந்திருப்பதும் அவள் அதை அனுபவித்துப் பாடுகிறாள் என்பதும் புரிந்தது. அவளுடைய அகன்ற விழிகளிலிருந்து தானர தாரையாகக் கண்ணீர் பெருகியது. உடனே உதடுகள் படபடவென்று துடித்தன. மெல்ல மெல்ல பாட்டின் ஒலி அடங்கிவிட்டது. விம்மலின் ஒலிதான் அதிகமாயிற்று. தங்கம் இரண்டு கைகளாலும் கண்களைப் பொத்திக்கொண்டு தேம்பினாள்.

ரகுபதி திடுக்கிட்டான். சற்றுமுன் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக் கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று என்ன வந்துவிட்டது என்று நினைத்து வாஞ்சையுடன் அவள் தலையை வருடி, “தங்கம்! இதென்ன அம்மா! ஏன் அழுகிறாய்? உன்னை யாராவது ஏதாவது சொன்னார்களா?” என்று கேட்டான்.

தங்கம் மெதுவாக ‘இல்லை’ என்று தலையசைத்தாள். பிறகு அழுகையின் நடுவில் சிரித்துக்கொண்டே, “நான் பாடியது நன்றாக இருக்கிறதா அத்தான்? என் குரல் நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டாள். அழுகையின் நடுவில் பளிச்சென்று தன் முத்துப்போன்ற பற்கள் தெரிய நகைக்கும் அந்தப் பெண்ணின் முகவிலாசத்தை உற்றுக் கவனித்தான் ரகுபதி. வானவெளியில் சஞ்சரிக்கும் கார்மேகத்தைக் கிழித்துக்கொண்டு
களை சுடர் விட்டது.

“நீ நன்றாகப் பாடுகிறாய். உன் குரலும் இனிமையாக இருக்கிறது. ஸரஸ்வதியிடம் கொஞ்சகாலம் சங்கீதம் பயின்றால் பேஷாகப் பாடலாமே. ஆமாம்…. நீ ஏன் அழுதாய்?” என்று திரும்பவும் கேட்டான் ரகுபதி.

அவள் மிருந்த சங்கோஜத்துடன் அவனைப் பார்த்து, “ஒரொரு சமயம் என்னைப்-பற்றியே எனக்குப் பலத்த சந்தேகம் வந்துவிடுகிறது. ஒரு வேளை என்னைத்தான் பிடிக்கவில்லையோ என்று நினைக்கிறேன். என்னைக் கல்யாணம் செய்து கொள்ள அதற்காகப் பெண் பார்க்க எங்கள் வீட்டுக்கு இதுவரையில் ஏழெட்டுப் பேர்கள் வந்தார்கள். அம்மா கடன் வாங்கியாவது பஜ்ஜியும், ஸொஜ்ஜியும் செய்துவைப்பாள். வருகிறவர்கள் முதலில் நாங்கள் வசிக்கும் ஓட்டு வீட்டைப் பார்ப்பார்கள். பிறகு எங்கள் வீட்டில் புழங்கும் சாமான்களின் தராதரத்தை மதிப்பிடுவார்கள். அப்புறம் என்னைப் பாடச் சொல்லுவார்கள். இவ்வளவையும் செய்துவிட்டுப் பெண்ணைப் பிடித்திருக்கிறது; பணங்காசுதான் குறைவு’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். எப்படியோ ஆயிரம் ரூபாய் செலவழித்து ஒரு நாள் கல்யாணம் பண்ணிவிடுவாள், அம்மா. ஆனால் அவர்கள் கேட்கும் வெள்ளிப் பாத்திரங்களும், சீர் வரிசைகளுந்தான் அம்மாவைப் பயமுறுத்துகின்றன அத்தான்!”

’இருக்கிறவர்கள் தாராளமாகக் கொடுக்கட்டும். வாங்கு பவர்கள் தாராளமாக வாங்கிக்கொள்ளட்டும். ஆனால், பணத்தையும், தங்கத்தையும் ஒப்பிட்டு மதிப்புப் போடுவது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்று ரகுபதி நினைத்தான். “அழகில் சிறந்தவளாகக் குடித்தனப் பாங்குடன் இருக்கும் ஒரு பெண்ணை இந்தச் சமூகம் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறதென்றால் சமூகம் சீர்திருந்திவிட்டது என்று கூறமுடியுமா? பாரதி பாடல்களைப் பாடும் வாலிபர்கள் மனம்தான் சீர்திருத்தி இருக்கிறதென்று சொல்லமுடியுமா?’

முகவாயில் கையை ஊன்றி யோசனையில் ஆழ்ந்திருந்த ரகுபதிக்கு முன்னால் ஸரஸ்வதி வந்து, “அத்தான்! நாளைக்குக் கடவுள் வாழ்த்து யார் பாடுகிறது?” என்று கேட்டாள்.

‘தங்கத்துக்கு ஏதாவது சிறிய பாட்டாகக் கற்றுக் கொடு ஸரஸு. அவள் அழகாகப் பாடுகிறாள். நீ இதுவரையில் கேட்கவில்லையே. பாவம்-” என்றான் ரகுபதி. ஸரஸ்வதி ‘அப்படியா தங்கம்? ஆனால் வா போகலாம்” என்று அவள் கைகளைப் பற்றி அழைத்துப்போனாள்.

இந்த புத்தகம் பிடித்திருந்தால்....

மதிப்பிட நட்சத்திரத்தைச் சொடுக்கவும்!!!

சராசரி மதிப்பீடு 0 / 5. வாக்கு எண்ணிக்கை: 0

இந்தப் பதிவிற்கு மதிப்பீடு அளிக்கும் முதல் நபராக இருங்கள்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *